நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக.!



             “மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கும்படி வாழ்க்கை இருக்கிறது. துடிப்பும் உயிர்ப்பும் மிக்கதாகவே அவர்கள் மனம் இருக்கிறது. தூண்டப்பட்ட மனமும் சிறகொடிக்கும் வாழ்வும் மனிதர்களுக்கு. சிக்கல்களின் நெரிசல்களுக்கிடையே மனிதர்கள் சதா நோன்பிருப்பது அன்பெனும் சிறு வரத்துக்காகத் தானே!”  இப்படிச் சொல்ல வண்ணதாசன் அன்றி வேறு யாரால் முடியும்?!

                 விதைகள் முளைக்கவும் மொட்டுக்கள் மலரவும் மலர்கள் கனியவும் உள்மறைந்து துணைநின்று ஊக்குவிக்கும் பிரபஞ்ச சக்தியின் மறுவுருவாய், ஒவ்வொரு பெண்ணும் குடும்ப அமைப்பின் ஆணிவேராய்.

                ஆண் என்னும் பித்தளையோ, குடும்பம் எனும் செப்புக் குடமோ, சமூகம் எனும் வெண்கலமோ எதுவானாலும் பெண் எனும் ஈயம் பூசப்பட்டாலன்றி இவை  யாவும் பயன்படுத்த முடியாமல் உபயோகமற்று விடும் என்கிறார் நம் தோழி ஹுசைனம்மா.

பெண்சாதி....

                மனிதர்கள் ஆண், பெண் என இரு சாதியாகிறார்கள்.  ‘இட்டார் பெரியோர்; இடாதோர் இழிகுலத்தோர்'என்ற முன்னோர் வாக்கும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.
                “பெண்ணுக்கு சாதி அமைப்பு வாழ்க்கை முறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பெண் சாதியை ஒரு விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. சாதி, தந்தை சார்ந்து வருகிறது. ஆணுடன் தொடர்பு கொண்ட அமைப்பாக இருக்கிறது. அவனுக்கு பெருமையைத் தருகிறது. கெளரவத்துக்காக பெயருக்குப் பின் சாதிப் பெயர் சேர்ப்பவர்களும் ஆண்களே.பெண் ஒடுக்கப்பட்ட சாதியிலும் மிகக் கீழான நிலையிலும் இருக்கிறாள். இங்கே எல்லாவற்றிலும் தாழ்ந்த சாதி பெண் சாதிதான். இந்த ஆழ்மன உளைச்சலால்தானோ துணிந்து கலப்புத் திருமணம் செய்கிறாள்! பெருகி வரும் கலப்புத் திருமணங்களின் அடிப்படை இந்தப் புள்ளியில் தான் துவங்குகிறது.
                தன் ஆதங்கங்களை காது கொடுத்துக் கேட்கவும் ஆளற்றுப் போய்தான் கோயில்களையும் பலவகை தெய்வங்களையும் பரிகாரங்களையும் பிரார்த்தித்து சுமை குறைக்க அலையாய் அலைந்து தவிக்கிறாள். ஓரறிவு ஈரறிவு உயிர்களைவிடவும் சந்தோஷம் குறைந்தவளாகிறாள்.” நண்பர் சண்முகவேல் சொல்வதையும் நாம் சிந்திக்கத் தான் வேண்டியிருக்கிறது.
               
                “இந்த உலகம் ஆண்களுக்கானது. அதில் பெண்களுக்கான இடம் கழிப்பறை போல... அவர்களின் கடன்களைக் கழிக்க...” தன் சிறுகதையொன்றில் பாரதிக்குமார் சொல்லிச் செல்வது நம் சிந்தையை கிள்ளிச் செல்கிறதல்லவா...!

                பெருகி வரும் விவாகரத்து செய்திகள் ‘பெண்கள் முன்பு போலில்லை' என்ற அங்கலாய்ப்பை முதியோரிடம் ஏற்படுத்தியுள்ளது. ஆம்! உண்மைதான்! கணவனிடம் அடியும் உதையும் வாங்கிக்கொண்டு, சாராயம், சிகரெட் நாற்றத்தையும் பொறுத்துக் கொண்டு குழந்தைகளைக் காரணம் காட்டி வாழ்க்கையை தியாகம் செய்யும் பெண்கள் இன்று இல்லைதான்!
                பணியிடங்களில் ஆண்-பெண் நட்பு விபரீதமாகி விடுகிறது பலநேரங்களில். வக்கிர ஆண்களிடம் சரியான விழிப்புணர்வு இன்றி அல்லல் படும் பரிதாபம் பெண்கள் மட்டும் எதிர்கொள்ளும் சிக்கல். ஆணின் ஆசை நிராசையாகி ஏமாற்றப்படும் போது விளைவுகள் பெண்ணுக்கு எதிரானதாகவே முடிகின்றன. அவதூறு தொடங்கி பலாத்காரம் வரை ஏமாற்றத்தை ஈடு செய்ய வக்கிர மனம் பரிதவிக்கிறது.
       பெண் என்பவள் ஆணுக்காகவே படைக்கப் பட்டவள் என்பதும், திருமணம், குடும்பம், குழந்தை பெறுதல் எனும் தளைகளால் பிணைக்கப் பட்டவள் என்பதும், கணவனை இழந்தால் பின்பற்ற வேண்டிய கொடூர சடங்குகளும் சம்பிரதாயங்களும் எந்தளவுக்கு உறுத்தலாய் இருந்திருக்கின்றன? உடன்கட்டையேறியவர்களையெல்லாம் கேள்விப்படும் நாம் படிப்படியாக கட்டுடைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். வெட்ட வெட்டத் துளிர்க்கும் முருங்கையாய், வேரோடிய அருகு நீர்ப்பசை கண்டதும் துளிர்ப்பதுபோல் கண்ணுக்குப் புலனாக மூக்கணாங்கயிறுகள் கணக்கற்று வெளிக்கிளம்பியபடிதான். மாற்றத்தை ஏற்கிற மனோபாவம் அனைவருள்ளும் உள்ளது. 

     வாழ்க்கை தரும் ஒவ்வொரு வலியும் அந்தந்த நேரத்துக்கான வலியின் ரணம்தான். ஆனால் மிச்சமிருக்கும் வாழ்க்கைக்கான பக்குவம் ஒவ்வொரு வலியிலும் பரிசாகக் கிடைக்கிறது” மேலாண்மை வகுப்புகள் எடுக்கும் மோகன்ஜி  சொல்வதுதான் என் நினைவுக்கு வருகிறது.


                “இன்பங்களை விட துன்பங்களே; செல்வத்தை விட வறுமையே; புகழ்மொழிகளை விட ஏமாற்றங்களே மனித ஆற்றலை வெளிக் கொணர்கின்றன”  சுவாமி விவேகானந்தர் கூட இதைத் தான் சொல்லியிருக்கிறார். மரங்கள் காற்றை சுத்தம் செய்கின்றன. நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது.


      சிறுமை கண்டு பொங்கவும், முதலடி எடுத்து வைக்கவும்  துணிவுதான் வேண்டியிருக்கிறது. பெண்கள் அதிகம் படிக்கிற, அதிகமாக வேலைக்குச் செல்கிற, பொருளாதார ரீதியாக தன்னிச்சையாக வாழ முடிகிற இந்நாட்களில் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், குற்றவியல் நடவடிக்கைகள் பெருகி வருகின்றன. 
     படிப்பும் வேலையும் பெண்ணுக்கு சுய மதிப்பை வழங்கியிருக்கின்றன. இவ்வளவு காலமும் அப்பாவிப் பெண்களின் தியாகத்தில் தான் குடும்பம் என்ற ஒன்று இருந்ததென உணரும் போது சமூகத்தில் நல்ல மாற்றங்கள் வருகின்றன.

     எந்த ஆடும் வயது முதிர்ந்து நோயுற்று இறப்பதில்லை; எந்தப் பெண்ணும் வாழ்நாளெல்லாம் நிம்மதியுடன் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் ஒவ்வொரு காலகட்டத்தில் சிக்கல்கள். நிதானித்து முடிச்சவிழ்ப்பவர்கள் நினைக்கத் தக்கவர்களாகின்றனர். ‘பெண்ணாகப் பிறந்து விட்டால் மிகப் பீழை இருக்குதடி' எனும் வரிகள் அச்சமூட்டினால், ‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' எனும் வரிகள் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.



                ஆறாம் அறிவுடன் பிறந்த நாம் நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை, நிகழ்வுகளை அவதானித்தபடியே வாழ்கிறோம். வாசிக்கும் பழக்கத்தால் பல செய்திகளும் நம்முள் வசப்படுகிறது. மொழியெனும் பெரும் ஊடகத்தால் சக மனிதர்களுடன் அளவளாவி பலவற்றை அறிந்து கொள்ள புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. வாழ்ந்திருக்கும் சொற்ப காலத்தில் உடல் நோயற்றிருக்கவும் மனம் கவலையற்றிருக்கவும் உயிர் பிறருக்கு உதவியாயிருக்கவும் முயலலாம். இதில் ஆணென்ன பெண்ணென்ன? 

      அன்பே அனைவருக்கும் பொது.

# மகளீர்  தின வாழ்த்துக்கள்! 

Share on:

                      
‘கொக்காம் பயிர்’ கவிதைத் தொகுப்புக்கான வாசிப்பனுபவம்

                கட்டுப்பாடற்ற அறிவுத் துறையாகிய இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, புதினம் போன்ற படைப்பிலக்கியத்தின் ஆதார மூலக்கூறுகளான பேசுபொருள், வடிவம், சமூகப் பயன்பாடு மற்றும் கலாச்சாரப் பின்னணி எப்படியாயினும் படைப்பாளியும் படிப்பாளியும் ஒன்றிணையும் புள்ளியான ஒத்த அனுபவத்தை தர வல்லவை காலத்தால் நிலைக்கின்றன.
                படைப்பின் சொற்கள் வர்ணனைகள் குறியீடுகள் படிமங்கள் போன்றவை மொழியின் வழி கற்பனையைத் தூண்டி நம் ஆழ் மனதைப் பாதிக்க அனுமதிப்பதே இலக்கிய வாசிப்பின் ஆகச்சிறந்த பயன்பாடாகிறது.
                புத்தக வாசிப்பு நம் மனவீட்டின் மேலதிகமான சாளரங்களாகி அறிவு வெளிச்சத்தைத் தர வல்லதாகின்றது. ஒவ்வொரு வரியும் சிந்தனைத் திறப்பாகி பலவித தத்துவார்த்தங்களை உணர்த்தி சக மனிதர்களுடன்- சமூகத்துடன் ஆன பிடிவாதங்கள், வக்கிரங்கள், அடாவடிகள் எல்லாம் தணிந்து மனம் பண்பட, அறிவைத் தெளிவாக்கிட  பெரும் துணையாய்  இருக்கிறன.
      நதிநீர் இணைப்புத் திட்டச் சிக்கல்களைத் தாண்டி காலகாலமாய்   சாத்தியமற்ற சில உறவு இணைப்புகள் உண்டு,  உறவுகள் யாவற்றிலும் கண்ணாடிப் பொருளைக் காட்டிலும் கவனமாகக் கையாள வேண்டியிருப்பது மாமியார் மருமகள் உறவே எனலாம். பாதரசம் போன்று பாதுகாத்துப் பயன்பெறத் தக்கது இவ்விணைப்பு என்றும் கொள்ளலாம்.
       இக்கற்பிதத்தை உடைக்கும் விதமாக, கவிதையுலகில் தன் தாயையும் தாரத்தையும் களமிறக்கியுள்ள தோழர் செந்தில்பாலாவை சற்றும் தடுமாறாமல் பின்னொற்றியுள்ளனர் இருவரும்!
                குடும்ப வாழ்வில் இரு தலைமுறைப் பெண்களின் அனுபவங்களை, வலிகளை, புரிதல்களை, மகிழ்தருணங்களை வெளிச்சமிடுகின்றன தொகுப்பின் கவிதை வரிகள். 
      ‘அம்மா சொன்ன கதை'களில் வட்டார மொழியில் அனாயசமாகக் கவிதைபல தந்தவர், அம்மாவின் கவிதைகளை- அவருக்கிணையான மனைவியின் கவிதைகளை ஒரே தொகுப்பாக்கி நமக்குப் படையலிடுகிறார் ஹேவிளம்பி வருடத்து (2018) தைப்பொங்கலில்! சுவை கூட்டும் நெய்யாக விரவியிருக்கின்ற மெல்லிய நகைச்சுவை  வாசிப்பை ருசியாக்குகிறது.

மாமியார் மெனை:
                விவசாயத்தில் களை எடுப்பது, நடவு நடுவது, புடைப்பது, சலிப்பது இன்ன பிறவற்றை பெரும்பான்மைப் பெண்கள் அனாயசமாக செய்தாலும் அறுவடையில் ஈடுபடுவது சிறுபான்மைப் பெண்களே.
                பாலாவின் அம்மா பொழுதுக்கும் நெல் அறுத்து, வீடு வந்து தினை குத்திப் புடைத்து, உலை கூட்டி பின் முருங்கைக் கீரை ஆய்ந்து சமைத்தவர், சாப்பிடாமல் சோர்ந்து படுத்திருக்கிறார். வயிற்றுப் பசியை விஞ்சிய உடல் அசதி! ‘சாப்பிட்டுப் படு' என்பதில் அவரின் மாமியார் அம்மாவாகிறார். எப்படியிருந்தவர் ...?
                80 வயதிலும் முக்கி முணங்கி தள்ளாமையுடன் சமைத்து மகன் வந்தால் தானே பரிமாறிய மாமியார்!
      புகுந்த வீட்டில் தன் சகிப்புத் தன்மையாலும் தளராத உழைப்பாலும், பொறுமையைக் கவசமாக்கி, கல்லையும் கரைக்கும் வல்லமை கொண்ட மருமகள் மாமியாருக்கு மகளாகிவிடும் சூட்சுமம் காட்டும் கவிதையிது.
                ‘விடும்மா தூங்கட்டும். பசிச்சா சாப்பிடப் போறா' என்ற கணவனின் சொல்லைக் கரிசனமாக எடுத்துக் கொள்வதும் பரிவற்றதாக எடுத்துக் கொள்வதும் வாசிப்பவரின் மனப் பாங்கிற்கு ஏற்ப மாறுபடும். ஏனெனில், பெண் தன் சுய உழைப்பில் கிடைத்த நெல்லை கும்பாபிஷேகத்துக்குக் கொடுக்கும் சுதந்திரம் அற்றவள் என்ற கணவனையும், மகனின் வெள்ளாமையில் கடலை பறித்தாலும் தன் கூலி தனி என்றும் எண்ணம் கொண்ட தந்தையையும்  முந்தைய பக்கங்களில் கடந்ததால்.
                முந்தைய தலைமுறைப் பெண்களின் உடல் ஆரோக்கியத்தைப் பதிவிடும் இதே கவிதையில் பொழுதுக்கும் நெல் அறுத்தாலும் தினை பாதி நெல் பாதியாக சமைத்து உண்ணவேண்டிய பொருளாதார நெருக்கடியும் பதிவாகிறது. அவரது தலைமுறையில் நின்றும் குனிந்தும் அமர்ந்தும் தொடர்ச்சியான வேலைகளுக்கிடையே ஓய்வென்பது மாறுபடும் வேலையாக மட்டுமே இருந்திருக்கிறது.  தலைமுறை இடைவெளியில் இட்டு நிரப்பப் படும் இவ்வாறான பல நுட்பங்களும் கவிதைகளில் புதைந்திருக்கின்றன.
                வெத்தல, பொயல வாங்கப் போய் வெத்தல பாக்கு வாங்கிவிடுவதாய் சிரிப்பூட்டி உலகியலை ரசிக்க வைக்கின்றது. ஆயாவும் பேரனும் அடித்து விளையாடும் கவிதை சிரித்துவிட்டு சிந்திக்கத் தூண்டுகிறது கலைவாணர் நகைச்சுவை போல்.
                உடலளவில் தனித்திருக்கும் பல சமயங்களிலும் மனசில் நிறைந்திருக்கும் நேசம் மிக்கவர்களால் தனிமையின் வெறுமையற்றுப் போவதுண்டு நமக்கும். மகனுக்கும் மகளுக்கும் போன் பேசி மனசுக்குள் அவர்களை மடியில் போட்டு தூங்கப் போகும் கவிதையில் தாயன்பின் நெகிழ்வூட்டும் மகத்துவம் இதமானது.
                இருப்பினும் மாமியார் காலத்து மொத்த வாழ்வும் விரல் விடும் சொற்களில் அடங்கிப்போன இராமாயணம். இன்னும் பல பெண்களின் கதையும் அப்படித்தான். இக்கவிதையை சமர்ப்பணக் கவிதையுடன் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டால், ஆண்-பெண் இணைந்த வாழ்வியல்,  சமூக வட்டத்துக்குள் பொதிந்து கொள்ளும் சமச்சதுரமாகிறது. அவர்கள் நமக்காக... நாம் அவர்களுக்காக!

மருமகள் மெனை:
                பிறந்த வீட்டுப் பெருமைகளையும் புகுந்த வீட்டுப் புகார்களையும் தாண்டி கடைசியில் வரும் ஒற்றை ரூபாய், காத்திருக்கும் ஆறடி என்றெல்லாம் தத்துவம் பேசுவதில் வயசுக்கு மீறிய பக்குவம் புரிகிறது. இதன் உச்சமாகவே துணியில் ஒட்டியிருக்கும் மிச்ச அழுக்கை மனசுடன் ஒப்பிடுவது.
                பத்திருபது வரிகளில் ஒற்றைச் சொல் கவித்துவமாவதும் மூன்றே வரியில் சொல்லுக்குச் சொல் விளக்க விளக்க விரிவதும் படைப்பியலின் விந்தை.
                தன் தேவைக்குப் பிறரை யாசிப்பதின் வலி சொல்லுமிரு கவிதையின் உள்ளரசியல் பற்றி பேசப் பேச விரியும்.
                ‘கலர் கலராயிருக்கு' என்றதன் நெரிக்கும் எள்ளலும், ‘நீ மட்டும்தான் வந்தாயா?' என்றதன் பின் வெடித்த அழுகையும் அவ்வாறே.
                ‘கல்லிலிருந்து சிலையாக, சிலையிலிருந்து கல்லாக' என்றது ‘அண்டமே பிண்டம்; பிண்டமே அண்டம்’ என்பதன் சுருக்க விளக்கம். மலையுச்சியில் உடைபட்டு உருண்டு வரும் பாறைச் சிதறல் வழுவழுப்பான கூழாங்கல்லாவது போலல்லவா மானுட வாழ்நிலை!
                அக்காவை விட அதிக மதிப்பெண் பெற்ற கவிதையில் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வைராக்கியம் இதுவே சாதிக்க வைக்கும் என்ற சிறுகுறிப்பு.
                ‘உயிருள்ளது தான் தூங்கும்' என்ற கவிதை சிறு பிள்ளைக்குப் புரியாமலிருக்கலாம். இலைமறை காயாக இருப்பது உரியவர்களுக்குப் புரிந்தால் போதும்.
                இரு மெனைகளையும் நட்டுக் கரையேறிய சாந்தாம்மாவின் மகனாக, ஆதிலட்சுமியின் கணவனாக 'கொக்காம்பயிர்' போட்ட செந்தில்பாலா அறிமுகப்படுத்தப் படும் நாள்,  நம்மை மகிழ்விக்கும் பெருநாள்!
                                                                                                              


Share on:

செந்தமிழ்ச்சாரலின் சொந்தங்களுக்கு கவிஞர் சக்தி அருளானந்தம்

'நான் படிச்சாச்சு... நீங்க?' பகுதியில் 

#இலகுவானதெல்லாம்_இலேசானதல்ல கவிதைத் தொகுப்பின் நயம் பாராட்டல்....

நெய்வேலியைச் சேர்ந்த நிலாமகள் சௌந்தர சுகன் இதழ் வழி அறிமுகமானவர்.சுகன் இதழின் விழா ஒன்றில் கட்டுரை வாசிக்க மேடையேறியபோது நேரில் அறிமுகம்.பிறகு தனலட்சுமி பாஸ்கரனின் நூல் வெளியீட்டு விழாவுக்கு சேலம் வந்தபோது நட்பு நெருக்கமானது.பறத்தல்,பறத்தல் நிமித்தம் நிலாவின் முதல் கவிதைத் தொகுப்பு. இது இவரின் இரண்டாவது தொகுப்பு.

முதல் தொகுப்பை அணுகும் போதும், இரண்டாம் தொகுப்பை அணுகும் போதும் நாம் கொள்ளும் மன நிலை வேறு வேறு
தவழும் குழந்தை எழுந்து நிற்க முயற்சி செய்வது, ஒன்றிரண்டு அடிகள் எடுத்து வைப்பது நம்மைக் கொண்டாட வைத்துவிடுகிறது.ஆனால் இரண்டாம் தொகுப்பு என்னும் போது ஒரு கவிஞருக்கு ஒருவித எதிர்பார்ப்புச் சுமையை ஏற்றிவிடுகிறது.

"முந்தையதில் பல புரிதல்களும்,தெளிதல்களும்,பக்குவங்களும் சாத்தியமாக்கியிருக்கிறது.இவ்வேளையில்" இது நிலாமகளின் இரண்டாம் தொகுப்பின் முன்னுரையிலிருந்து.எனவே அந்தப் புரிதல்,தெளிதல்,பக்குவம் கவிதைகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

கவிதையின் வடிவம் எளிமையாக இருந்தாலும் அதன் உள்ளடக்கம்,அது பேசும் விசயம் எளிமையானதல்ல என்கிற புரிதலுக்கு வருகிறோம். அதைப்போல இந்தத் தொகுப்பு 'இலகுவானதெல்லாம் லேசானதல்ல என்கிறது.
'எதிரிலிருக்கிறாய் நீ
ஊர்தியின் எரிபொருளாகவா
பாய்மரத் துடுப்பாகவா
பஞ்ச பூதங்களிலுமா
தேடுமென்னுள்ளேயா?'

நிலாமகள் எதைத் தேடுகிறார்?தேடுவதை அடைந்தாரா?
அவர் தேடல் முடியவில்லை
"இன்னும் இன்னும்
எத்தனை பிரதட்சயம்
இருக்கிறதோ இறைவசம்!!"

கண்ணுக்கெட்டாத தொலைவு செல்லவேண்டியிருக்கிறது இந்தப் பயணிக்கு.பயணியைக் கடந்து செல்கின்றனர் பலர்.
"காற்றாக சிலர்
கல் நெஞ்சினராக சிலர்
நிழலாக சிலர்
பெருவெளியாக சிலர்
கால் இடறும் நெருஞ்சியாக சிலர்..."
சக பயணிகள் எத்தகையவர்களாக இருந்தாலும்,இந்தப் பயணி பலருக்கும் நிழலாக,குடையாக,உயிர்ப்புடன் இருப்பதுடன்
"வழி நெடுக
மரங்களும் கற்களும் இருக்குமென "
நம்பித் தொடர்கிறார் தன் நீள் பயணத்தை.

வாழ்க்கையின் மீதான,சக மனிதர்களின் மீதான நம்பிக்கையை நிலாமகள் இழக்கவில்லை. தாண்டவமாடிய 'தானே' புயலுக்குப் பின்னும்
"எல்லாம் கடந்தும்
எம் தோட்டத்தில்
தப்பிப் பிழைத்த
செம்பருத்திச் செடியின்
ஒக்றைப்பூ"

கவிஞருக்கு பெரும் பெரும் எதிர்பார்ப்புகளின்றி சிறிய விசயங்களே போதுமானதாயிருக்கிறது.அதிலேயே அவரும் நிறைவு கொள்கிறார்.அதை இந்தத் தொகுப்பின் முன்னிலையிலும் வண்ணதாசனின் மேற்கோளை எடுத்தாண்டிருக்கிறார்.
"#இப்படித்_தான்_இருக்கிறேன்_நான்_இப்படி_இருப்பது_போதும்_எனக்கு".
-வண்ணதாசன்.

'வரவேற்பறையை
தன் வாசத்தால் நிரப்பப்
போதுமானதாயிருக்கிறது
தோட்டத்தில் அரும்பிய
ஐந்தாறு மல்லிகைகளுக்கு"

'யாசி'என்றொரு கவிதை .கேளுங்கள் தரப்படும் என்பதற்கேற்ப யார் யார் என்னென்ன கேட்டார்கள்,என்னென்ன பெற்றார்கள் என்று பட்டியலிடுபவர்
'உன் நேசத்தை யாசிக்குமெனக்கு
புறக்கணிப்பை வழங்குகிறாய்'
என்கிறார் புண்பட்ட மனதுடன்.நேசத்தை யாசிக்கும் இவருக்கு வழங்கப்பட்டதோ புறக்கணிப்பு. புறக்கணிப்பை வழங்குபவருக்கு எதிராக இவர் ஏந்தும் ஆயுதம் அன்பு.
'நீ யோசித்ததுண்டா
அன்பெனும் ஆயுதம் பற்றி?!'
இப்படி அன்பை ஆயுதமாக ஏந்துவதற்கான காரணம் மீண்டும் அன்பு மலருமென்ற நம்பிக்கை.
'நினைவுப் பானை புரண்டெழுந்து
வெந்து தணிகிறது
கடந்தகாலத்துப் பிரியங்களின் ஊர்வலம்
துளிர்க்குமொரு காலமென
நம்பிக்கையில் நகர்கிறது காலம்"

பட்டியலிடும் இன்னொரு கவிதையுண்டு.நிலவின் பயன்பாட்டை நிலா இப்படி சொல்கிறார்.
விளையாட்டு பொம்மை,ஆற்றுவிக்கும் மருந்து,இயற்கையின் வெளிச்சம், அபலையின் வழித்துணை, தணிவிக்கும் தண்ணொளி,ஜொலிக்கும் பெருநட்சத்திரம்...முடிப்பு தான் இதை வேறொன்றாக மாற்றிவிடுகிறது.
'நிலவுக்கும் உண்டு
அரிதாரம் தேவையற்ற
பல அவதாரங்கள் '
'நிலவுக்கும்' என்னும் போது வேறு எது எதற்கு என்று மனம் தேடலைத் துவங்குகிறது.

நிலாமகளின் நுட்ப உணர்வு நுணுக்கமான பலவற்றை அனுமானிக்கிறது.
'பள்ளித் தண்டவாளத் துண்டில்
உள்ளுறைந்திருக்கும்
இரயில்களின் தடதடப்பும்
விழுந்து மாய்ந்த உயிர்களின்
இறுதி ஓலமும் கேட்கிறது'

ஒற்றைக் குயிலின் மென் சோகக் குரல் அவர் மனதுக்குள் உறைந்திருக்கும் வன் சோகத்தை
'அடியாழத்தில்
அமிழ்ந்துபோன
பலப்பலத் துயரங்களை அறுத்து அறுத்து
மேலெழப் போதுமானதாயிருக்கிறது'

நிலாமகள் கவிதைகளில் வெளிப்படும் இன்னொரு அம்சம் தாய்மை. கல்வி நிமித்தம் அவரைப் பிரிந்து சென்றிருக்கும் குழந்தைகள் மீதான பரிவு பசித்துக் கிடக்கும் ஊதல் காரனின் பசியை நினைத்து தாயினும் சாலப்பரிந்து உருகுகிறது.
'இன்றிரவு உறங்கலாம்
அவனும்
நிறைந்த வயிறுடன்'
-செவிக்குணவு

மென்மையாய் நகரும் நிலாவின் கவியுலகம்
'தம்மை
தகர்த்தவர்க்கும்
சிதைத்தவர்க்கும்
மிதித்தவர்க்கும்
உறுதுணையாய் இறுதிவரை..
மணலாயிரு'
என்று போதிப்பவர்க்குள்ளும் இருக்கும் வன்மம் வெளிப்படுகிறது.
'திறந்திருந்த உடற்பரப்பில்
சுருக்கென கடித்து-தன்
விடமேற்றிய சிறு குளவி...
ஏற்றிய கடுகடுப்பு குளவி பல்லியிடம் சிக்கியதும் ஏற்படும் குதூகலம்..வன்மம் தவிர்த்த வாழ்வரிதா? என்கிற  கேள்வியை நமக்குள்ளும் கவிஞருக்குள்ளும் எழுப்புகிறது.

வாழ்த்துகள் நிலா.

வெளியீடு
************
ஊருணி வாசகர் வட்டம்,
22/105,பாஸ்கர் காலனி,
3வது தெரு,விருகம்பாக்கம்,
சென்னை-600 092.

பேச:81481 94272
89393 87296

விலை₹70/-

நன்றி :
முகநூல்
கவிஞர் சக்தி அருளானந்தம்
https://m.facebook.com/story.php?story_fbid=618953895103916&id=100009679339172

Share on:


புஜ்ஜி வந்த புதிதில்
‘ஒரு பூனைக் குட்டிக்கு
இத்தனை பாசம் காட்டுவது அதீதம்'
தன் மீதான பரிவின் போட்டியாய் நினைத்து
விடுமுறைக்கு வந்த மகள்
அழுத்திச் சொன்னாள்
ஆதங்கம் தெறிக்க.

‘நமக்கு மிக விருப்பமாயிருந்து
கால தேவனால் களவாடப் பட்ட யாரேனும்
மீண்டிருக்கலாம் புஜ்ஜி வடிவில்' என்றேன்.

புதிரவிழ்க்கும் குறுகுறுப்பில்-தன்
நினைவுக் கிடங்கிலிருந்து
எடுத்து எடுத்துப் பொருத்திப்பார்த்தாள்
ஒவ்வொருவராக...
அவளுடன் நானும்.
கசிந்தது  அவளுள் புஜ்ஜிக்கான பரிவும்.
.......  ......  ......
.......  ......  .......
இனி
அடைக்கலமாக
ஏதேனும் ஓருயிர்
எங்கள் வசம் வந்தால்
புஜ்ஜியையும் பொருத்தி நெகிழ்வோம்.

# 13. 01.2018 மதியம் 2.30 
   புஜ்ஜி களவாடப் பட்டது. துயரின் பிடியில் நாங்கள்.


Share on:
தொடுவானமற்ற கடல்' தொகுப்பிலிருந்து மற்றொரு கவிதை...
நுகரப்பட்ட ஒரு மலரின் மணம் இதர புலன்களைத் தூண்டி மனசின் அடியாழம் வரை ஞாபகப் புதையல்களை சங்கிலித் தொடர்ச்சியாய் எடுத்துவைத்த பட்டியல் மலைக்க வைக்கிறது. அம்மா இறப்பில் முடிந்த நினைவுச் சங்கிலியின் கண்ணி வெகு கனம். தேடலின் உணர்வுக் குவியலில் துக்கம் கசிய வைக்கும் முடிப்பு வாசிப்பை நிறுத்தி நம்மையும் அதில் தோயச் செய்து விடுகிறது.

இதோ சக்தியின் கவிதை வரிகள்...

வாசனை

ஒரு மல்லிகைப் பூவின் மணம்
அதன் மனமாய் மட்டும் இருப்பதில்லை
தவிர்க்கவியலாமல்
நுணாப்பூவின் மணத்தையும் நினைவூட்டுகிறது

நட்சத்திரங்களைப் பூக்களென உதிர்க்கும்
நுணா மரமோ
ஊரையும் அங்கிருந்த வீட்டையும்
அதன் கொல்லைப்புறத்தில்
உழவோட்டிய வயலுக்கு உரமாக
தழைகளும் கிளைகளும் கழிக்கப்பட்டு
மொட்டையாக நிற்கும்
வேலிக் கிளுவையும் கிளோரியாவையும்
சவுண்டல் மரங்களையும்

மக்கிப் போன எருக் குழிகளில் எழும்
மணத்தையும்
எருவடிக்கும் மொட்டை மாட்டு வண்டிகளில்
செய்த சவாரியும்
உரத்திற்காகப் போடப் பட்ட
மாட்டுக்கிடை ஆட்டுக்கிடையையும்
அபூர்வமாய்
ஒருமுறை போட்ட வாத்துக் கிடை
நீந்தித் திளைத்த குளத்தில் துழாவியபோது
கையிலகப்பட்ட நான்கு வாத்து முட்டைகளையும்
அவற்றை அம்மா
அவயம் வைத்த கோழி முட்டைகளுடன்
கலந்து வைக்க
பொரிந்த வாத்துக் குஞ்சுகளையும்
வாத்துக் குஞ்சுகள் நீந்தி வளர்ந்த
பொன்னுகொண்டானாற்றின் கரையில்
எரியூட்டப் பட்ட அம்மாவையும்
ஞாபகப் படுத்தி விடுகிறது.
       -சக்தி அருளானந்தம்

       வெகு காலத்துக்கு முன் மிருணா என்ற தோழியின் கீழ்க்கண்ட கவிதையை ரசித்து ரசித்து வியந்திருக்கிறேன். இன்று வரை அப்படியொரு கவிதை எழுத முடியாத ஆதங்கம் என்னுள் உண்டு. வரிக்கு  வரி அழகுறு அந்தாதி. வார்த்தைகளுள் அடங்கிய படைப்பின் சூட்சுமம்!

எனவே...

அந்தப் பூ புலிநகம் போன்றது
புலிநகம் கழுகின் அலகு போலிருந்தது
கழுகின் அலகு முந்திரி வளைவு
முந்திரி வளைவு பிறை நிலா
பிறைநிலா வானில் மிதக்கும் தோணி
தோணி ஒரு கருநீலத் திமிங்கிலத்தின் வால்
வால் மறியாட்டின் கருங்கொம்பு
கருங்கொம்போ கவண் பிளவு
கவண் பிளவு விரிமரக் கிளை
விரிமரக்கிளை குழைந்து பரவும் நீரூற்று
நீரூற்றோ அந்தியில் செம்பளிங்குப் பூ
அந்தப் பூ...

             -மிருணா
https://cycle2live.blogspot.in/2015/05/blog-post_28.html
Share on:
   


பூனைக்கு மணி கட்டு 

பூனைக்கு மணி கட்ட 
முதலில் அதை நேசிக்க வேண்டும்
அல்லது பாவனையாவது செய்யலாம்

இப்போது அது
பிராண்டுவது சீறுவதை விட்டு
வெதுவெதுப்பான உங்கள்
மடிசுகத்திலும் கைவருடலிலும்
சொக்கி கிறங்கியிருக்கும்

மணியைக் கோர்க்க
நீங்கள் தேர்ந்தெடுக்கும் கயிறு
மஞ்சள் வண்ணத்தில் இருப்பது நலம்

மணியின் அளவை
பூனையின் கழுத்தை விட
உலோகமும்
உங்கள் வாங்கும் சக்தியும்
தீர்மானிக்கும்

மணி கட்டப் பட்டதும்
தன்  உடலை வளைத்தும் நெளிந்தும்
ஒவ்வொரு அசைவிற்கும்
ஒவ்வொரு விதமாய்
ஒலிக்கும் மணியோசையில்
மகிழ்கிறது பூனை.

-'தொடுவானமற்ற கடல்'  சக்தி அருளானந்தம்

குறிப்பு: 
இதில் பூனை என்றது பெண்ணை....  மணி என்றது  அவளின்                பொன்விலங்கை.



Share on:

தான் பிடிக்கும் கரப்பானை
மசாலா கூட்டுவதுமில்லை;
வறுப்பதுமில்லை; வேக வைப்பதுமில்லை...
உடனே தின்றுவிடுவதுமில்லை புஜ்ஜி.

கவ்வலிலிருந்து விடுவிக்கும்
எதிர்பாரா சுதந்திரத்தில் திகைத்து
இலக்கின்றி ஓடும் கரப்பான்
ஓரெல்லை வரை அனுமதித்து
சட்டென்று கரப்பான் ஓட்டத்தை தன்
முன்னிரு கைகளால்
தடுத்தாட்கொள்ளும்.

உள்ளங்கையடியில் அதன் நெளிவின் குறுகுறுப்பை
ரசித்து அனுபவிக்கும்.
பெரிய மனசுக்காரிபோல் மறுபடியும் ஓட விடும்.
தட்டுத் தடுமாறி பூச்சி ஓடும்.
மறுபடி மறுபடி பிடித்தும் விட்டும் விளையாடி
அலுத்துப் போகும் போது பூச்சியின்
ஆயுள் முடியும். 

Share on:



       ஒரு துணிக்கடை. பண்டிகைக்கு இன்னும் ஒருமாதம் இருக்கும் நேரம். இலேசான கூட்டம் கடையில்.  வெள்ளை கோட் தேடி வந்த மூவர், கடை சிப்பந்தி காண்பித்தவை திருப்தி படாததால் வெளியேறுகின்றனர். வழிமறித்த கடை முதலாளி என்ன தேடி வந்தீங்க? ஏன் எதுவும் வாங்காமல் போறீங்க? என்றார்.
“வெள்ளை கோட்...”
“இருக்கே... ஏ... சரவணா... காட்டுப்பா இவங்களுக்கு...”
“பார்த்தோம்...”
“அப்புறம்?”
“சைஸ் சரியில்லை. அதான்...”
“எல்லா சைசிலும் நம்ம கிட்ட இருக்கே. சொல்லப்போனா இந்த ஊரிலேயே நம்ம கடையில் மட்டும் தான் இதெல்லாம் கிடைக்கும். நீங்க என்னடான்னா... விளம்பரத்துக்கு மயங்கி எங்கியோ போய் காசை கொட்டிட்டு வர்றீங்க”
அவர்கள் கையிலிருந்த பைகளை பார்த்து அவரே ஒரு முடிவுக்கு வந்து விட்டார் போல.
“ஐயோ.. இதுல துணியில்லைங்க. வீட்டிலிருந்து எடுத்து வந்தது. மற்ற பொருட்கள் வாங்கி எடுத்துப் போக.”
“அதெல்லாம் கிடையாது. அங்கே போயிருக்கீங்க, இங்கே போயிருக்கீங்க, எங்க கடையில் வாங்க மட்டும் யோசிக்கிறீங்க. நீங்க எங்க வேணுமானாலும் போய் கேட்டுப் பாருங்க. இருக்காது. கோட்டுக்கு நம்ம கடைக்கு தான் வந்தாகணும்.”
“இரண்டு பைகளிலும் வேறு பொருட்கள் தான் இருக்கு. நாங்களே முதல் வருடம் உங்க கடையில் தான் கோட் வாங்கினோம். எப்பவும் உங்க கடையில் எடுக்கறவங்க தான். இப்ப இருக்கறது அளவு சரியில்லை அதான் போறோம்.”
அருகில் வந்த கடை சிப்பந்தியும் இருந்தவை எல்லாம் காட்டியாயிற்று என்று சொல்ல, சமாளித்துக் கொண்ட முதலாளி, “உங்க சைஸ் என்ன சொல்லுங்க, அடுத்த வாரம் வந்தா ரெடி பண்ணி வைக்கிறோம்.” முட்டுச் சந்தில் முட்டி நின்றது அவரது கோபம்.
அவரின் ஆவேசம் தன் வியாபாரத்தை அதிகரிக்கவா? தன்னிலும் வெற்றியடைந்த பிற வியாபாரி மேல் பொறாமை போர்த்திய ஆணவமா?
வேறு கடையின் பெயர் தாங்கிய பையை தன் கடையினுள் பார்க்கவும் சகிக்காத அவரின் மனப்பாங்கை என்ன சொல்லலாம்? நிமிண்டிக் கொண்டேயிருந்த மனசை சுமந்தலைந்தேன்.
பிறகு, ஜெயமோகனின் ‘விதி சமைப்பவர்கள்' நூலை வாசித்த போது, ஐந்தாவது அத்தியாயம் ‘ஒரு மரம் மூன்று உயிர்கள்'. அதில் சில வரிகள் துணிக்கடைக்காரரை அடையாளம் காட்டியது.
“அகப்பட்ட வாழ்க்கையை முட்டிமோதி வாழ்ந்து முடிப்பவர்கள் தான் பலர். அதில் வெற்றி கொள்ளும் போது அவர்கள் அகங்காரம் கொண்டு எக்களிக்கிறார்கள். பொதுவாகவே கொஞ்சம் காசு சேர்ந்ததும் அந்த எக்களிப்பு வந்து விடுகிறது. நான் இதில் இரு வகையினரைக் காண்கிறேன்...
ரயில்களில் முதல் வகுப்பில் வரும் புதுப் பணக்காரர்கள் ஒருவகை. இவர்கள் ரயில்களில் பிறரைச் சந்தித்ததுமே அவர்களின் பொருளாதாரப் பின்னணியை விசாரித்துவிட்டு, தன் பணம், சமூகத் தொடர்புகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லும் சுயததும்பல்களோடு இருப்பார்கள்.
நட்சத்திர விடுதிகளில் சந்திக்க நேரும் நெடுங்காலப் பணக்காரர்கள் இரண்டாம் வகை. நாங்கள் தேவர்கள் என்ற பாவனையில் மிதப்பாக இருப்பார்கள். 
இந்த இருசாரர்களுக்கும் நரகம் என்ற ஒன்று அவர்களின் அருகேயே உள்ளது. அது, அவர்களை விடப் பெரியவர்களைக் காணும் அனுபவம் தான். அவர்கள் அந்த நரகத்தை ஒருகணமேனும் மறக்க முடியாது. இவர்களின் இன்பம் என்பது ஒருவகை அகங்கார நிறைவு மட்டுமே. அந்த நிறைவு சில கணங்கள் கூட நீடிக்காதபடி அவர்களின் அகங்காரம் அடிபட்டுக் கொண்டுமிருக்கும். அவன் எந்தப் புலனின்பத்தையும் அகங்காரம் குறுக்கிடாமல் அனுபவிக்க முடியாது. நல்ல உணவு சாப்பிட்டால் மட்டும் போதாது அவனுக்கு. அது பிறர் எவருக்கும் கிடைக்காத உணவாகவும் இருக்க வேண்டும். 
தன்னைச் சுற்றி முழுமையை உணர்ந்து அதில் தன்னை இழந்திருக்கும் சிலதருணங்களே முழுமையான இன்பம் தரவல்லது. அந்தத் தருணங்களை அடைய  இந்த மனிதர்களுக்கு அவர்களின் கையில் சுமந்தும் அக்குளில் இடுக்கியும் தலையில் சுருட்டியும் வைத்திருக்கும் சுமைகளே பெரும் தடைகளாகின்றன.”
மன உளைச்சல் தீர்ந்தது ஜெயமோகனை வாசித்ததில்.



Share on:


மகிழ்வாயிருக்க
பெரும்பணம் வேண்டியிருக்கு
‘போதுமென்ற மன'மற்ற நமக்கு
சக மனிதர்களுள்
புலம்பிக் கொள்ள
இருப்பதைத் தாண்டி எவ்வளவோ உண்டு
எட்டாத உயரம் ...
இல்லாத வசதி,  இத்யாதி, இத்யாதி.

கிடைத்ததைக் கொண்டு மகிழும் கலையை
புஜ்ஜி போதிக்கிறது
தன் விளையாட்டுப் பொருட்களால்.

பழசாகிப் போன ஹேண்ட் மசாஜ் பால்
நுனி பிய்ந்த இன்ச் டேப்
தீர்ந்து போன செலோடேப் உருளை
சின்னச் சின்ன காகிதத் துண்டுகள்
காய்ந்து போன பசை டப்பா
பார்சல் பிரித்த பேக்கிங் நாடா
தேவை தீர்ந்த கழுத்துப் பட்டை
குச்சிகளற்ற தீப்பெட்டி
இன்னும் இன்னும் நீளும் பட்டியல்
புஜ்ஜியின் பெரிய மனசைக் காட்டும்.






Share on:
  • ← Previous post

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (58)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • அகவெளிப் பயணத்தின் வழித்துணை
             ‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம்  ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...
  • உன்னைக் கொண்டு என்னில் வைத்தேன்
    'உன்னைக் கொண்டு என்னில் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்...' இன்று எங்களுக்கான ஒரு பிரத்யேகமான , நினைவில் மணம் கமழும் ஒரு நாள...

Blog Archive

  • ▼  2018 (6)
    • ▼  March (2)
      • மா‘தவப் பிறப்பு'
      • கூழாங்கற்களில் மறைந்திருக்கும் கூர்மை
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

போக...வர...

  • முத்துச்சிதறல்
    பாட்டி வீடு!!
    5 days ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    தெரியாதோ நோக்கு தெரியாதோ.....
    2 weeks ago
  • கீதமஞ்சரி
    கயிற்று முனையில் அதிர்ஷ்டம்
    3 weeks ago
  • Thanjai Kavithai
    1 month ago
  • VAI. GOPALAKRISHNAN
    ’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் !
    2 months ago
  • சமவெளி
    இறப்பில் இருந்து...
    2 months ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    ஆப்பிரிக்கக் காடு
    3 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    3 months ago
  • திண்டுக்கல் தனபாலன்
    வெள்ளி விழா
    4 months ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    5 months ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    6 months ago
  • வானவில் மனிதன்
    'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்
    10 months ago
  • ஊமைக்கனவுகள்
    ஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
    11 months ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    1 year ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    வர்தா புயலும் எனது காரும்...
    1 year ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    1 year ago
  • அடர் கருப்பு
    கொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு.
    1 year ago
  • ரிஷபன்
    பிச்சி
    1 year ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    2 years ago
  • CrUcifiXioN
    பாசம்! - விலை என்ன????
    2 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    விவேகானந்தரின் முடிவுறாக் கவிதை.
    4 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை நாத்திகன்: 3
    5 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    6 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    7 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates