நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

சிரித்தால் அழகு!

Friday, 23 December 2011 4 கருத்துரைகள்

     என்னம்மா அது? பார்த்துப் பார்த்து சிரிச்சிகிட்டிருக்கே?” என்றவாறு எனது படுக்கையருகே வந்தமர்ந்தார் அம்மா.
      ஆம். என் கையிலிருக்கும் இந்த புகைப்படம் கடந்த ஒருமணி நேரமாக என்னை எங்கெங்கோ கூட்டிச் செல்லும் வல்லமை பெற்றிருக்கிறது தான்.
      எனது பக்கத்துப் படுக்கை, நோயாளி யாருமின்றி காலியாக உள்ளது. எனவே தான் இரண்டாம் வகை சிறப்பு அறை, முதலாம் வகை சிறப்பு அறை போன்ற ஏகாந்தத்தை தருகிறது எனக்கு.
      எனது தந்தையின் மத்திய அரசுப் பணிக்கான சிறப்புச் சலுகை என் குடும்பத்தினருக்கான இந்த மருத்துவமனையின் சேவை. பணித் தகுதிக்கேற்ப இட வசதி. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே உள்நோயாளிகள் பிரிவு உண்டு. தலா இருபது படுக்கைகள் கொண்ட பகுதி. அதுவன்றி மூன்றாம் வகை சிறப்பு அறைகள் நான்கு படுக்கைகள் கொண்டிருக்கும். இரண்டாம் வகையெனில் இரண்டு படுக்கைகள் கொண்ட அறைகள். முதல் வகையெனில் ஒரு நோயாளிக்கொரு படுக்கை மற்றும் உடனிருக்கும் துணையாளருக்கு ஒரு படுக்கை. இவையன்றி குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணிகள் பிரிவு என சகலருக்கும் தனித்தனிப் பிரிவுகளோடு பிரம்மாண்டமானதாய் இருக்கும் மருத்துவமனையின் வளாகம்.
      இங்கு வந்து சேர்ந்த போதிருந்த எனது நிலையை இந்தப் பத்து நாட்கள் வெகுவாக சீரமைத்தே இருக்கின்றன.
      பாருங்க... இந்த புகைப்படம் எடுத்த கதையை உங்க கிட்ட சொல்லாம ஏதேதோ நட்ட நடுவுல பிடிச்சிப் பேசறேன். நீங்களும் தடுமாறி முழிக்கிறீங்க.

கபீர்தாஸ் கண்ணிகள்-30

Wednesday, 14 December 2011 9 கருத்துரைகள்
கபீர்தாஸ் கண்ணிகள்-30     
(தமிழில்: ஆகாசம்பட்டு வெ. சேஷாசலம்)

     கபீர்தாஸ் ஒரு பக்திக் கவி; பதினைந்தாம் நூற்றாண்டுக்காரர்; உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்தவர். Couplets-கண்ணிகள்-இரண்டிரண்டு அடிகளால் ஆன இவை Dohas என்றும் சொல்லப்படுகின்றன. இரவீந்திரநாத் தாகூர் கூட இவரின் சில கண்ணிகளை (காண்க: One Hundred Poem of Kabir) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். கபீர்தாஸின் பஜன்கள் அளவுக்குக் கண்ணிகள் பரவலாக இன்னும் அறியப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தாள்நிலம், ஏழுகடல் தான்மசி; பேனாவாய்
நீள்தருக்கள் கொண்டும் நினைஎழுதி மாலதுமோ?

கட்டிப் பனியுருகி நீரிற் கலப்பதுபோல்
ஒட்டி அவனோடும் ஒன்றாத லேபக்தி!
   *
உன்னுடைய நூலகத்தை ஓடையிலே வீசியெறி!
என்னபயன் ராமனில் இன்னமும் ஆழாமல்?

கத்துகிறாய் பட்டினியில்! காதுதந்து கேட்பார்யார்?
மெத்தஒரு கர்ப்பத்தில் மேல் அவனே தாங்கலையா?
   *
அன்னமும் நாரையை அல்லவா ஒத்திருக்கும்?
பின்னதோ மீன் உண்ணும்; முன்னதோ முத்துமணி!

சிந்து மழைத்துளிக்கே சிப்பி கடல்மிதக்கும்;
அந்தோ துளிகுடித்தால் ஆழி அடியொதுங்கும்!
   *
பாலும் விஷமாகும் பாம்புக்கே வார்த்திட்டால்!
ஞாலத்தில் தீயவரால் நல்லதுவும் மாறிவிடும்!

“நான்” ,“எனது” விட்டுவிட்டால் நல்லவன்யார் உன்னைவிட?
ஏன், வாழ்வின் நங்கூரம் இந்த நிலைத்தமனம்!
   *
தாகித்தும் சக்ரவாகம் தண்ணீர் அருந்தாமல்
வேகத் துடன்பெய்ய வேண்டும் மழைக்கடவுள்!

வட்டப்பூ வாட; உதயமோ அத்தமிக்க...
கட்டல் நொறுங்க; குழந்தையோ தான்மரிக்க...!
   *
பூத்த மலரைப் பறித்தாந்தோட் டக்காரன்,
“பார்த்துக்கோ, நாளை நமதுமுறை!” மொக்குசொலும்!

எச்சரிக்கும் மண்சேறும்: “ஏ குயவா நீ
அச்சோ அழுத்தாதே வாய்ப்பு வருமெனக்கும்!”
   *
ஓர்நாள் நடக்கும் இது! உன்னையும் பார்ப்பவர் ஆர்?
பாரியாளும் பேசாள்; பறக்கும் உலகமிது!

தெப்பமாய் பாம்பையெலாம் தேடிநீ கட்டிவிட்டால்
அப்போ கடல்தாண்டி அக்கரையுஞ் சேர்வாயா?
   *
பா(கு)இனிப் புக்குப் பறந்த ஈ கால்,சிறகு
நோகஒட்டிக் கொண்டதே நொந்து வெளிவராமல்!

சிங்கத்தின் பிம்பம் தெரியக் கிணற்றுநீரில்
பங்கம்; விழுந்(து)இறக்க வைக்கும் முயலொன்று!
   *
முந்திப்போம் ஆட்டுவழி, மந்தையே போம்,அலவா?
சிந்திப்போம் என்றிலையே... செல்லுகிறோம் ஈதேபோல்!
   *
“வீழ்ந்த பிறகும் விருட்சம் உன்னோ(டு) ஒட்டுவனா?”
ஆழ்ந்த  வருத்தத்தில் ஆடி இலைவீழும்!

வானகத்து வீடிருந்து வந்தான் விருந்தாளி,
கானகத்து மேற்பயணம்; காப்பாற்ற சாவுதுணை!
   *
வாராப் புதையும் வடவாக் கினியாலே!
ஆரறி வார்தகிப்பை ஆர்க்கும் கடல்தவிர?

விண்ணின் நிலவொளியால் மண்தா மரைமலரும்;
அண்மையா கும்தூரம் அன்புக்(கு) உருகிட்டால்!
   *
தாகம் எடுத்திட்டால் சாக்கடைநீர் ஆர்குடிப்பார்?
ஆ,கங்கை யோடுசேர்ந்தால் ஆரே குடிக்காதார்?

வீழ்த்தி விடுவான் விறகுவெட்டி என்னைவிடு;
பார்த்தானா உச்சிப் பறவை களைஎண்ணி?
   *
இழித்துமே பேசலும் ஏன்கால்கீழ்ப் புல்லை;
விழியுங் கிழிபடலாம் வேகமாய்த் தானெழுந்தால்!

ஓடத்துள் நீர்வந்தால் வீட்டுக்குள் காசுவந்தால்
ஓடிவெளி ஏற்றிடுவர் உத்தமர் எல்லோரும்!
   *
கானில் மலர்கள் கனிகளெலாம் ஏராளம்;
மானிடனே, தித்திப்பை விட்டேன் அலைகின்றாய்?

அன்னம் பறக்கிற(து) ஆகாயம், புல்லைவிட்டும்!
தண்ணீர் பருகும் தரைவீடு தான்மறந்தும்!
   *
நீலக் கடல்வீழ்ந்த நீர்ச்சொட்டா மீண்டுவரும்?
வாலறிவன் தேடி வழியை இழந்தேனே!

வேண்டிய(து) ஆறடிதான்; விண்முட்டும் மாளிகைஏன்?
ஈண்டெதற்குப் பேராசை? ஏராளக் கர்வங்கள்?
   *
பற்றோ கவர்ச்சிமிகு பாவையைப் போல்;விரட்டிச்
சற்றே துரத்திடினும் சட்டென வந்தொட்டும்!

(நன்றி: திசை எட்டும்)

முன்னோட்டம்

Friday, 9 December 2011 11 கருத்துரைகள்
 கதை கேட்டுத் தூங்கிய இரவுகளும்   
       கதைகளால் விழிப்படைந்த பகல்களும்...

       கதை சொல்வது மற்றும் கேட்பதன் ஆதிருசியை உணர்ந்தது அவரவர் தாயின் அரவணைப்போடான தூங்கச் செய்யும் தருணங்களன்றி வேறென்ன...?
       சிலருக்குப் பாட்டி...
      சிலருக்கு அத்தை...
      சிலருக்கு அப்பா... எனக் கதை சொல்லும் உறவுமுறை வேண்டுமானால்     சமயங்களில் மாறுபடலாம்.
      ஆனால், கதை கேட்டுக் கேட்டுத் தூங்கிய ஆழ்மனசில் ‘கதை'யின் மேலான ஈர்ப்பு நிரந்தரமாகிவிடுகிறது.
      ஆக, நம்மில் பலருக்கு சிறுபிராயத்தில் அருகில் படுத்து, முதுகைத் தட்டி, தலையைக் கோதி, கால்களை வருடி தூக்கத் துணையாகும் உறவொன்று  நீங்காமல் நிலைத்திருக்கும் மனசின் ஆழத்தில். வாழ்தலில் நிறைந்துள்ள நல்லது கெட்டதுகளை தான் சொல்லும் கதையுள் பொதிந்து கூறித் தூங்கச் செய்த அவ்வுறவின் உயிர்ப்பு நாம் வாழும் வரை வரும் இரவுகளில் வருடிச் செல்லும் நம்மை.
      எனக்குள் விதைத்தவர்களும் துளிர்த்தபடியே ...
  
                                          * * * * *

மெள‌ன‌த்திற்கொரு ம‌ரியாதை

Monday, 5 December 2011 14 கருத்துரைகள்
மெளனமே... மெளனமே....
  
  வீட்டில்
 பேருந்தில்
 அலுவலகத்தில்
 கடைத்தெருவில் என
 அன்றாடங்களை நிறைக்கும்
 காதடைக்கும் புறவொலிகள்...
 எப்போதேனும் போக வாய்க்கும்
 கேட்க,
 பேசவியலா
 மாற்றுத் திறனாளிகளின்
 பள்ளி வளாகத்தில்
 பெரும்பாலும்
 மெளனத்தின் கச்சேரி...
 செவிக்கினிதாய்.
  
            *****

மெளனத்தின் பேரிரைச்சல் 
போகும் போதெல்லாம்
 புன்னகைத்து முதுகு தட்டுவார்
 குடும்ப வைத்தியர்...
 “எல்லாம் சரியாகிவிடும்.”
 இதற்குப் பின்னும்
 எஞ்சிய நோயை
 மருந்துகள் விரட்டிவிடும்.
 காலப் போக்கில்
 வியாதியின் உக்கிரம்
 மருந்துகளை ஏய்த்திட
 மீண்டுமொரு சந்திப்பு
 மருத்துவரோடு...

 அறிகுறிகள், அவஸ்தைகளை
 பட்டியலிட்டேன்
 காலண்டர் சென்று
 மீண்ட அவரின் கண்கள்
 தழைந்தன தரை நோக்கி...
 மிஞ்சிய நாளை எண்ணுவது போல.
 உற்சாகத் தட்டலில்லை
 ஒய்யாரச் சிரிப்பில்லை
 அறை முழுக்க
 மெளனத்தின் பேரிரைச்சல்.

 துள்ளும் கன்றை
 கயிறு கொண்டு கட்டுதல் போல்
 எங்களிருவர் நாவை
 இழுத்துக் கட்டியது
 எல்லாவற்றையும் மிஞ்சிய
 இறைச் செயல்.

யாவாரம்

Saturday, 26 November 2011 12 கருத்துரைகள்
       மாரி, கொல்லையில் செழித்து வளர்ந்திருந்த முருங்கை மரத்திலிருந்து அலக்கு கழியால் பறிப்பதை கீழே மண்ணில் விழாமல் இலாவகமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள் அவன் மனைவி காசாம்பு.
       கைப்பிடியளவு இனுக்குகள் சேரச் சேர கத்தையாய் கட்டி விரித்திருக்கும் ஈர சாக்குத் துண்டில் அடுக்குவதும் அவளே. வயதின் முதிர்வு இருவரையும் சீக்கிரமே சோர்வாக்கியது.
       “எத்தனை கட்டு தேறுது புள்ள?” தலைக்கு மேல் தூக்கித் தூக்கி துழாவிய அலக்கு தந்த தோள்வலியோடு, கழியை கீழிறக்கி தரையில் அண்டை கொடுத்து தோளில் சாய்த்துக் கொண்டே மாரி கேட்கிறான்.
       “இத்தோட பதினெட்டு ஆவுது... போதாது...?” காசாம்புவுக்கும் உட்கார்ந்தால் தேவலை என்ற அசதி ஒலிக்கிறது குரலில்.
       “போதும் போ... பதினெட்டஞ்சி தொண்ணூறு... பேரத்துல பத்திருபது கொறஞ்சாலும் பாதகமில்ல. சுள்ளான் மண்டியில கடன் சொல்லி வாங்கியாந்த  காய்கறிங்க இருவது கிலோயிருக்கு. இதுங்களை வித்து முதலாக்கி வூடு வந்து சேர்ந்தாலே போதுமாச்சே. போய் எனக்கு ஏதாச்சும் நீராகாரமிருந்தா எடுத்து வெய். அந்தக் கண்ணியோரமா துளுத்துக் கெடக்குற வல்லாரையையும், மொடக்கத்தானையும் ஆய்ஞ்சினு வாரேன். சுண்டக்காய் பறிச்சு வெச்சியா?”


நேசத்தின் சீமாட்டி

Wednesday, 23 November 2011 21 கருத்துரைகள்

          அந்திக் காற்று பகலின் புழுக்கத்தை மட்டுப்படுத்துவதாயிருந்தது. வாசல் கதவை விரியத் திறந்து வைத்து முன் நடையில் சுவரோரத்தை ஆக்கிரமித்திருக்கும் மரப் பலகையில் அமர்ந்திருக்கிறார் சங்கரசுப்பு. திறந்திருக்கும் கதவின் உபயத்தால் தெருக்கோடிவரை அவரது பார்வையின் எல்லைக்குள் அடங்குகிறது.
        உள்ளிருந்து கமழும் பில்டர் காபியின் மணத்தை ‘இன்னும்... இன்னும்' என நுரையீரலை விரித்து உள்ளனுப்புகிறது அவரது நாசியின் நுகர்திறன். சாயங்காலம் வாங்கும் இருநூறு மிலி பாலில் இவருக்கொரு கும்மோணம் டிகிரி காபியும், தனக்கொரு டீத்தண்ணியும் போட்டு, மிஞ்சும் ஐம்பது மிலி பாலை உறை ஊற்றி மறுநாளுக்கான மோராக்கிவிடும் சாமர்த்தியம் வேண்டியிருக்கிறது அவரது மனைவி கமலத்துக்கு.
       நுரைத்துத் தளும்பும் காபியை ஏந்திவரும் மனைவி தேவதையாகவே தெரிகிறாள். ஏதாவது வாங்கிவரச் சொல்லிப் பையுடன் தலைகாட்டும்போது மட்டும் அரக்கியாக மாறிக் காட்சியளிப்பாள் அவரது அகக்கண்ணுக்கு.
      ‘பணமும் பத்தாக இருக்கணும்; பிள்ளையும் முத்தாக இருக்கணும்' அவருக்கு. அதற்குத் தோதாக, கல்யாணமான புதிதில் கமலத்தின் வயிறு திறக்க வந்த ஒற்றைக் கருவும் முத்துக் கர்ப்பமாக, கருப்பை தவிர்த்து ஃபெலோபியன் டியூபில் தங்கி அற்பாயுசில் மடிந்தது. அதன் பிறகு அவர்கள் வீட்டுக் குடும்ப அட்டையில் இரண்டு நபர் மட்டுமே நிரந்தரமாகிப் போயினர்.
       காபியை ஆற்றி ஆற்றி நுரை கூட்டி கடைசி சொட்டு வரை ரசித்து உறிஞ்சுகிறார். நுரைக் குமிழ்கள் அவர் வாயுள் இரகசிய சப்தமெழுப்பியபடி உடைந்து மறைகின்றன. நாவின் சுவையுணர் அரும்புகள் விரிந்து விகசித்து ‘ஆகா... ஆகா' என தேவசுகம் தருவிக்கிறது அவருக்கு.

விருந்தாளித் தாம்பூலம்

Saturday, 19 November 2011 11 கருத்துரைகள்
      தணலிடையே உடல் கருகுவதுபோல் அக்னிச் சூரியனின் தகிப்பு! மின் விசிறியின் இறைச்சலுக்கு சற்றும் பயமற்று அனல் காற்று சுழன்றடித்தது அறை முழுதும்.       வேறு வழியின்றி, முற்றத்து தொட்டித் தண்ணீரில் ஒரு வாளி மொண்டு வாசலில் விசிறி, தெருக்கதவைத் திறந்து வைத்தாள் ரம்யா. பசித்த காக்கைக் கூட்டம் படைத்த உணவெடுக்கும் வேகத்தில் ஆவியானது நீர்த்தடம். சளைக்காமல் மறுபடி மறுபடி தெளித்த நீரில் மட்டுப் பட்டு தண்மையேறியது காற்றுக்கு.  அப்பாடாவென ஆயாசப் பெருமூச்சோடு உள்நுழைந்து அவளுடன் உறவாடியது மெல்ல.
        நேற்று வேலையோடு வேலையாக தைத்து வைத்த இரவிக்கைகளையும், ஊசி-நூல்கண்டு-ஊக்கு வகையறாக்களையும் சேகரித்து வந்தமர்ந்தாள் காற்றாட.
        குழந்தைகள் கிராமத்திலிருக்கும் தாத்தா பாட்டியுடன் விடுமுறையை உற்சாகமாகக் கழிக்க, துணைவரின் பணிக்கும், உணவகச் சாப்பாடு ஒவ்வாத அவரது பிணிக்குமாய் அவளது இருப்பு இங்கே என்றானது.
       இல்லறம் பெண்களுக்கான விடுப்பை எப்போதும் எளிதாக்குவதில்லையே. நாகரீகமும் நகர நெருக்கடிகளும் உடல்சார் ‘விடாய்' காலங்களைக் கூட புறந்தள்ளி விட்டதால்  அவரவர்க்கான ஓய்வு நேரம் அவரவர் மனப்பாங்காகி விட்ட சூழல். அன்றாட அலுவல்களும், துடைக்கவும், அடுக்கவும், தைக்கவும், பின்னவுமாக வேலைக்கும் நேரத்துக்கும் எப்போதும் போல் சடுகுடு.
        சத்தமின்றி வந்து நின்ற இ-பைக்கில் காலூன்றியபடி, ‘சார் இருக்காரா?' என்றவர் கணவரின் அலுவலக சகா.

யயாதியின் மகள்

Friday, 28 October 2011 15 கருத்துரைகள்
       “யேய்... தனா... மிஸ் உன்னையே பார்க்கிறாங்க முழிச்சுக்கோ” அடிக்குரலில் கிசுகிசுத்த பக்கத்து இருக்கைக்காரி மிருதுளா, டெஸ்க் மறைப்பில் தனாவின் தொடையை இலேசாக சுரண்டினாள்.
       கண்கள் செருகிட கிறக்கத்திலிருந்தாள் தனா. தானொரு ப்ளஸ் டூ மாணவி என்பதோ கணக்கு வகுப்பு நடந்து கொண்டிருக்கிறதென்பதோ நினைவற்ற கனவொன்றில் அமிழ்ந்திருந்தாள் அவள். “ஆல் ஆஃப் யூ அண்டர்ஸ்டாண்ட்...?”
      எல்லோர் முகத்தையும் வருடி வந்த டீச்சரின் பார்வை தனாவிடம் நிலைத்தது. தளர்ந்தும் சரிந்தும் அயர்ந்துமிருக்கும் அவள், அவரது கடுப்பைக் கிளப்பப் போதுமானவளாயிருந்தாள்.
      “தனலட்சுமி... ஸ்டேண்ட் அப்... டெல் மி அபெளட் திஸ் தியரம்.” என்ற மேத்ஸ் டீச்சர் முத்து மீனாளின் கர்ணகடூர குரலில் வகுப்பின் மொத்த கவனமும் தனா மேல் விழுந்தது.

தாத்தா வைத்தியம்!

Saturday, 22 October 2011 23 கருத்துரைகள்
     'வலி'யின் வேதனை மனிதர்களுக்கு சகிக்க முடியாத ஒன்றுதான். அதிலும் உடல் உபாதையால் ஒரு வலியென்றால் அந்நேரத்தில் அவ்வலி ஒன்றே உலகின் மிகக் கொடூரமானதாய் நமக்கு காட்சியளித்து நம்மை புலம்ப வைக்கும்.
     பல்வலியோடிருக்கும் ஒருவரிடம் கேட்டால் சொல்வார், 'பல்வலி தான் உலகத்திலேயே மிக மோசமானது' என்று.
     வயிற்றுவலிக்காரர் சொல்வார், 'இந்த பாட்டுக்கு தூக்கு போட்டு சாகலாம்' என்று!
     'மண்டையை பிளக்குது ' என்பவர்களும், 'உடைக்குது' என்பவர்களும் தலைவலிக்காரர்கள்.
     நெஞ்சு வலியா... கேட்கவே வேண்டாம். அடுத்த சிலநிமிடங்களில் இசிஜி நம் கையிலிருக்கும்.
     இன்றைய நம் பதிவின் நாயகிக்கு அதிகாலை மூன்று மணி முதலே அடிவயிற்றில் சக்கை வலி. நேரமாக நேரமாக வலி மேல் நோக்கி பரவி நெஞ்சுவரை அவஸ்த்தை . நான்கு மணிக்கு மேல் படுக்க சகிக்காமல் எழுந்து பாத் ரூம்  செல்கிறாள்.
     சற்று மட்டுப்பட்ட வலி சிறிது நேரம் கழித்து வேலையை காட்டுகிறது. மறுபடி பாத் ரூம்  ! நான்காவது தடவை  கணவரும் குழந்தைகளும் எழுந்தாச்சு. பரபரப்பாக ரெடியாகிறார் கணவர்... மருத்துவமனைக்கு.  இதற்குள் எண்ணிக்கை ஆறானது.
     வலியும் வேதனையும் வாட்டினாலும் மருத்துவமனை போக விரும்பவில்லை  நம் நாயகி.
      'வேறேன்னதாம்மா செய்யறது? பிடிவாதத்துக்கு இதுவா நேரம்? கிளம்பு' என்கிறார் கணவர்.
     'அதாங்க சொல்றேன். குதிகால் வலி வாதத்துக்கு போன வாரம் ஒரு தாத்தாவை பார்த்து மருந்து வாங்கி வந்தோமே ... அவருக்கு போன் செய்து 'இப்படியிருக்கு, என்ன செய்யலாம்னு கேளுங்க' சொல்லியபடி விட்டு விட்டு தாக்கும் வலியரக்கனோடு பாத் ரூம்க்கு பாய்ந்தாள்.
     தாத்தா நாலு தலைமுறை சித்த வைத்தியப் பரம்பரை. மத்திய அரசுப் பணி ஓய்வுக்குப் பின் வைத்தியம் பார்ப்பது முழு நேரப் பணியானது. நண்பர் ஒருவர் மூலம் மிகச் சமீப அறிமுகம். பதினைந்து நாட்களுக்கு மேலாய் படுத்தியெடுத்து  நொண்டியடிக்க வைத்த குதிகால் வாயுவெனும் இராட்சசனை நான்கைந்து நாட்களில் தன் மூலிகைப் பொடிகளால் 'ஏன்' என்று கேட்டவர்.
     "அரசமர இலைக் கொழுந்து கொஞ்சம் பறித்து அரைத்து காய்ச்சாத பாலுடன் சாப்பிட்டுப் பாருங்க" வைத்தியர் தாத்தா சர்வ சாதாரணமாய் சொன்னார்.
     சுறட்டு கழியோடு கிளம்பினார் கணவர் .
     எண்ணிக்கை எட்டை எட்டியது. நாயகிக்கு நம்பிக்கை தளரவில்லை.
     ஐயப்பன் புலிப்பாலாய்  அரசம்கொழுந்து வந்தாச்சு.
     அம்மியில் அரைத்து தந்தார் மாமியார்.
     மருந்து 'பட்'டென்று கேட்டது.
     பாரம்பர்யம் பாரம்பர்யம் தான்!!நல்ல தாய்தந்தையராக இருப்பதெப்படி-5

Sunday, 9 October 2011 12 கருத்துரைகள்
அவர்கள்...
உங்கள் குழந்தைகள்
ஆனால்...
உங்கள் உடமைகளல்ல.
உங்கள் வாழ்க்கை வேட்கையின் துளிர்கள்
உங்கள் மூலமாக அவர்கள் ஜனித்திருக்கலாம்
உங்களுடன் வாழலாம்
ஆனாலும் உங்கள் உடமைகளல்ல.
நீங்கள் அவர்களுக்கு அன்பைத் தரலாம்
அவர்களுக்கென தனித்தனி சிந்தனையுண்டு
அவர்கள் உடலை நீங்கள் தீண்டலாம்
அவர்களின் ஆன்மாவையல்ல
உங்களைப் போல் அவர்களை மாற்ற முடியாது
அவர்களைப் போல் நீங்கள் வாழலாம்-கனவில்!
அவர்கள் எதிர்காலத்தின் வாரிசுகள்
உங்கள் வில்லிலிருந்து புறப்படும் அம்பு அவர்கள்
மகிழ்ச்சியென்னும் இலக்கை நோக்கி
அவர்களைச் செலுத்துங்கள்
அதை நீங்கள் செய்ய முடியும்!
அதை மட்டுமே செய்ய வேண்டும்!!
                                                          
                                                             -கலீல் கிப்ரான்.

நல்ல தாய்தந்தையராக இருப்பது எப்படி-4

Friday, 7 October 2011 9 கருத்துரைகள்
குழந்தைகளின் கண்ணீர் வேதனையானது...
அதனைத் துடைப்போம்.
குழந்தையின் சிந்தனை குழப்பமானது...
அதனைத் தெளிவுபடுத்துவோம்.
குழந்தையின் துயரம் ஆபத்தானது...
அதற்கு ஆறுதல் அளிப்போம்.
குழந்தையின் இருதயம் மென்மையானது...
அதனைக் கடினமாக்காமல் இருப்போம்.

நல்ல தாய்தந்தையராக இருப்பது எப்படி-3

Saturday, 3 September 2011 16 கருத்துரைகள்
குழந்தைகளுக்கு
       சந்தோஷத்தைப் பரிசளியுங்கள்.
       நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள்.
       பல அனுபவங்களைக் கிடைக்கச் செய்யுங்கள்.
       உலகின் நீள அகலங்களைப் புரிய வையுங்கள்.

தந்தை என்னும் அற்புத உறவு:

       குழந்தை எதிர்கொள்ளும் முதல் ஆண் அப்பாதான். அப்பாவின் பாதுகாப்பு தரும் நன்மை, தூண்டுதல் தரும் நடவடிக்கை இரண்டும் குழந்தை வளரத் தேவைப்படுகிறது. பிறரின் உணர்வுகளைப் புரிந்து செயல்படுவது, மற்றவர்களுடன் பேசும் லாவகம், தலைமைப் பொறுப்பு ஏற்பது போன்ற திறமைகளை குழந்தையிடம் வளர்ப்பது தந்தையால் மட்டுமே முடியும். வெளி உலகை அறிமுகப்படுத்துபவர் தந்தையே! விளையாடுவதற்கு, தந்தையின் அருகாமையைத் தான் குழந்தைகள் விரும்புகிறார்கள். நீங்கள் கொடுக்கும் வெகுமதிகளை விட, உங்களுடன் சேர்ந்து இருப்பதைத் தான் குழந்தைகள் விரும்புகின்றனர்.

நல்ல தாய்தந்தையராக இருப்பது எப்படி-2

Monday, 22 August 2011 10 கருத்துரைகள்
         ஒரு எண்ணத்தை விதையுங்கள்...
         ஒரு செயலை அறுவடை செய்வீர்கள்.
         ஒரு செயலை விதையுங்கள்...
         ஒரு பழக்கத்தை அறுவடை செய்வீர்கள்.
         ஒரு பழக்கத்தை விதையுங்கள்...
         ஒரு பண்பை அறுவடை செய்வீர்கள்.
         ஒரு பண்பை விதையுங்கள்...
         ஒரு எதிர்காலத்தை அறுவடை செய்வீர்கள்!
தொட்டால் பூ மலரும்:
         
         பிறந்த குழந்தையால் பாலின் வாசனையை வைத்து தன்னுடைய தாயை இனம் காண முடிகிறது. மூன்று வாரங்களில் தாயுடனும், பன்னிரெண்டு வாரங்களில் தந்தையுடனும் நெருக்கத்தை உண்டுபண்ணிக் கொள்கிறது. குழந்தைக்குத் தெரிகிறது, இது என்னுடைய தாய்; இது என்னுடைய தந்தை என்று! ஆரம்ப சில மாதங்களில் பெற்றோருடைய அருகாமையை குழந்தை மிகவும் நாடுகிறது. தன்னுடைய தேவைகளுக்குப் பெற்றோரைச் சார்ந்திருக்கிறது. பாதுகாப்பு உணர்வு, பழக்கவழக்கங்களை அவர்களிடமிருந்து பெறத் தொடங்குகிறது. மனதளவில் நெருங்க ஆரம்பிக்கிறது. இந்த வாய்ப்பைத் தவற விட்டால், பின்னாளில் எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த நெருக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியாது.

நல்ல தாய் தந்தையாக இருப்பது எப்படி?

Saturday, 20 August 2011 18 கருத்துரைகள்
 “செயல்களில் உறுதியாகவும், உள்ளத்தில் மென்மையாகவும்
   இருக்கும் தந்தை...
  செயல்களில் மென்மையாகவும், உள்ளத்தில் உறுதியாகவும்
   இருக்கும் தாய்...
  இவர்களே சிறந்த பெற்றோர்கள்!”

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...
      
       குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். பெற்றோர் தான் அவர்களின் முதன்மையான வழிகாட்டி. குழந்தைகள் பெற்றோரின் நடவடிக்கைகளை, பழக்க வழக்கங்களை கவனித்து, அந்த பண்பு நலன்களை நினைவில் கொள்கின்றனர்.
 ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மையான மதிநுட்பமும், புதிய சாதனைகளைப் படைக்கும் தன்மையும் கொண்டவராக உள்ளது. உங்கள் குழந்தையின் செயல்களைப் பாராட்டவும், பராமரிக்கவும் உங்களால் மட்டுமெ முடியும்.

மனங்கவர் முன்னுரைகள்...3 (மீரா)

Thursday, 4 August 2011 10 கருத்துரைகள்

          “தமிழ்க் கவிதையின்...  தமிழ்க் கவிஞர்களின்... ஒரு குறிப்பிட்ட காலத்தின் ஒளிசூடிய அடையாளம் ‘மீரா'. கவிதைப் பெருக்கில் கடல் செய்யும் ஆற்றல் கைவரப் பெற்றும் குளமாய் தன்னைக் குறைத்துக் கொண்டவர்; இங்கிதமான காதல் தமிழிலும் அங்கதமான அரசியல் தமிழிலும் முன்னேர் நடத்திய முதல்வர்”-
இது அறிவுமதி, ‘மீரா சிறப்பிதழாய்' வெளியிட்ட தன் ‘மண்' மூன்றாமிதழில்.
            “சிவகங்கை என்ற சிற்றூரை அவர் இலக்கிய வாதிகள் வந்து செல்லும் புண்ணியதலமாக்கினார். பிறர் படைப்புகளை வெளியிடும் வெறியில் அவருடைய எழுத்துக்கள் தடைபட்டுப் போயின.” என்றவர் மீராவின் கெழுதகை நண்பர் அப்துல்ரஹ்மான்.
            பழனிபாரதி சொன்னாற்போல், ‘அன்பின் விதைகளுக்குள்ளே குறுகுறுத்த உற்சாகத்தின் தட்பவெப்பமான மீரா, ஓராயிரம் பெயர்களை ஊட்டி வளர்த்த ஒற்றைப் பெயர்'.
            “எழுதுபவர்களின் சாலைகள் அனைத்தும் சிவகங்கை நோக்கியே சென்றன. இளைஞர்களை அவர் ஊக்கப்படுத்தும் விதமே அலாதியானது. பயணங்களில் அவருக்கிருந்த ஆர்வம் அதிசயமானது” இது செழியனின் அஞ்சலிச் சொற்கள்.
              “அவர் பரிவு மிக்க ஒரு பதிப்பாளர்; உயர்ந்த கவிஞர்; சிறந்த பண்பாளர் என்கிற தகுதிகளையெல்லாம் விட மேன்மையான இரண்டு உண்டு அவரிடம். ஒன்று... அவருடைய தேர்ந்த இரசனை; இரண்டு... அவரோடு நெருங்கியவர்களிடம் அவருக்கிருந்த பாசம். பலருடைய முகவரியை எழுதித் தமிழ்நாட்டுக்குக் கொடுத்தவர் மீரா. அது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ... எனக்குப் பொருந்தும்” -கந்தர்வனின் கண்ணியச் சொற்களிவை.
             “தன்னை விமர்சனம் செய்பவர்களைக் கூட, மன்னித்து ஏற்கும் மனநிலை மீராவின் தனிச் சொத்து. ‘மரணம் ஒரு கதிர் அரிவாள் அன்று. அதுவொரு புல்வெட்டும் கத்தி' என்றார் பிரெஞ்சு எழுத்தாளர் கில்லர்பெல்லாக். பயிர் முற்றிப் பால் பிடிக்கும் வரை கதிர் அரிவாளுக்குக் காத்திருக்கத் தெரியும். புல்வெட்டும் கத்திக்கு பூ எது; புல் எது என பேதம் பார்க்கத் தெரியாது. மரணம் புல்வெட்டும் கத்தி. அது மீராவை நம்மிடமிருந்து பிரித்து விட்டது” இப்படி உருகியவர் இந்திரன்.
            “அவரது அன்பையும் அரவணைப்பையும்  நட்பையும் உரிச்சொற்களோ உவமைகளோ எடுத்துக் காட்டிவிட முடியாது. மீரா ஓர் அனுபவம். எளிமை நிறைந்த அவரது அன்பில் திளைத்தவர்கள் பாக்கியவான்கள். இப்படியொரு கலப்படமற்ற அன்பை, நிபந்தனையற்ற நட்பை இனி யாரிடம் பெறப்போகிறோம்...?!” என நெட்டுயிர்த்தவர் கலாப்ரியா.

மனங்கவர் முன்னுரைகள்...2 (கண்மணி குணசேகரன்)

Thursday, 28 July 2011 16 கருத்துரைகள்
        பேராசிரியர் த. பழமலய் சொல்கிறார்... “மனித வரலாற்றில் மகாகவி, சாதனை என்றெல்லாம் ஒன்றும் இல்லை. சூழல், தொடர்ந்த பயிற்சி இவற்றின் தொடர்ச்சி தான் படைப்பாளி, படிப்பாளி எல்லாம்.
         வாய் காய்ந்தவர்கள், தலைகாய்ந்தவர்கள் என்று ஏளனத்துக்கு உள்ளானாலும் மனம் காயாத பொட்டங்காட்டு மனிதர்களின் காய்ந்த கதைகள், காயாத கதைகளை எழுதியும் சொல்லியும் இவர்களுக்கிடையில் ஈரம் வளர்பவன் கண்மணி குணசேகரன். என்றுமுள்ள தெந்தமிழ் தன் மேனியில் ஆசையோடு குத்திக் கொள்ளும் பச்சையில் இவனுமொரு புள்ளி.”(கண்மணி குணசேகரனின் ‘தலைமுறைக் கோபம்' கவிதை நூலின் அணிந்துரையில்...)
        
          புதுமைப் பித்தனும், ஜெய காந்தனும், இராமலிங்க அடிகளும், ராகவேந்திரரும்  பிறந்த தென்னார்க்காடு மாவட்டத்தில் விருத்தாசலம் வட்டத்தின் மணிக்கொல்லை எனும் செம்மண் பூமி இவரைப் பெற்ற பேறு பெற்றது.

மனங்கவர் முன்னுரைகள்...1 (வண்ணதாசன்)

Sunday, 24 July 2011 11 கருத்துரைகள்
        தொடர்பதிவின் கண்ணியில் என்னையும் இணைத்த ‘முத்துச்சிதறல்' திருமதி. மனோ சாமிநாதன் அவர்களுக்கு மனம் கனிந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.

          புத்தக வாசிப்பின் மீதான நேசிப்பு நாளுக்கு நாள் வயதுக்கு நிகராய் கூடியபடியே தானிருக்கிறது. எழுத்துக் கூட்டிப் படிக்கப் பழகிய காலத்தில் கிடைத்ததைப் படித்ததுண்டு... எல்லா வேலைகளையும் ஏறக்கட்டி, கூட்டுக் குடும்பத்தின் எல்லோரும் தூங்கிய பிறகு, ‘ராணி' போன்ற வாராந்திரிகளை படுக்கையில் படுத்தபடி படிப்பாங்க எங்கம்மா. மின்சாரம் நின்றால் உதவ தினசரி ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ‘பெட்ரூம் லைட்' எனப்படும் கண்ணாடி போட்ட சின்ன சிமினி விளக்கு வெளிச்சத்தில்! . தாழ்வாரத்தில் உடன் படுத்திருக்கும் மற்றவர்கள் தூக்கம் கெடாதிருக்க மின் விளக்கு அணைக்கப் பட்டிருக்கும்... மறுநாள் அம்மா வைத்த இடம் தேடி, நேரம் தேடி புரிந்தோ புரியாமலோ படித்து வைத்ததுண்டு. நம்மாலும் படிக்க முடிகிறதே என்ற குதூகலத்தின் எச்சத்துடன்.
             பிந்தைய நாட்களில் செல்வம் மாமா வாரம் தவறாமல் வாங்கி வரும் குமுதம், கல்கண்டு, துக்ளக் இவற்றையும் அவரது பையை ஆராய்ந்து படித்து விடும் வழக்கம். மளிகைக் கடையிலிருந்து பொருட்கள் கட்டி வரும் பேப்பர்கவர்களைப் பிரித்து முதலும் முடிவுமற்ற கதைகளை, செய்திகளை படித்து முன்னும் பின்னும் கற்பனையில் அவதானிப்பது சுவையான பொழுது போக்கு அப்போதெல்லாம். வீட்டை ஒட்டியிருக்கும் சீமான் மளிகைக் கடையில் கவர் செய்ய வைத்திருக்கும் புத்தகங்களைக் கேட்டும் படித்திருக்கிறேன்.
            சாப்பிடும்போதும் தூங்கப் போகும் போதும் படித்தேயாக வேண்டும். புதிதாக ஒன்றும் கிடைக்க வில்லையானால் படித்ததையே பலதடவை படித்ததுண்டு. அப்புறம் எதிர் வீட்டு வைத்தியநாதன் அண்ணன் தயவில் புவனகிரி கிளை நூலகத்திலிருந்து சுஜாதா புத்தகங்கள்.(அவர் சுஜாதா பிரியர்) ,
           அப்புறம்,பதின்வயது துப்பறியும் நாவல்கள் புற்றீசலாய் புறப்பட்ட காலம். ஒன்று விடாமல் வாங்கியோ, நட்பு வட்டத்தில் பகிர்ந்தோ பயண நேரப் படிப்பு. துரித வாசிப்பு பழகியது அதில்தான்.
             அப்புறம், நர்மதா, மணிமேகலை போன்ற பதிப்பகங்களிலிருந்து வி.பி.பி. முறையில் புத்தகங்களை வாங்குவது... குறியாமங்கலம் கிராமத்திலிருந்து நகரை ஒத்த நெய்வேலிக்குத் தாவச் செய்தது திருமண பந்தம்.
             இலக்கிய ஈடுபாடுள்ள துணைவர் வாய்க்கப் பெற்றதும், இருவருமாகத் தேடித் தேடி வாங்கியடுக்கி உள்ளவற்றை, வாங்க இருப்பவற்றை வாழ்வின் எஞ்சிய நாட்களில் படித்துவிடுவோமா என்ற பிரமிப்பு இப்போது எங்கள் நூலக அறையைக் காணும் போதெல்லாம்...!

        பதிவின் முன்னுரை இத்துடன் நிற்க.

         எந்தவொரு படைப்புக்கும் ஒரு முன்னோட்டம் அவசியமாகிறது. தொடர்ந்து படிக்கும் ஆவலைத் தூண்டும்படியும், விருந்தில் முதலில் பரிமாறும் இனிப்பு நாவின் சுவையரும்புகளைத் தூண்டித் தயார்ப்படுத்துவது போலவும், நூற்பொருளைப் பற்றிய சுருக்க விளக்கமாகவும், கச்சேரி தொடக்கத்தில் பாகவதர் தொண்டையை செறுமிக் கொள்வது போலவும் உள்ளது முன்னுரை / முகவுரை / நூன்முகம் / தோற்றுவாய் இன்ன பிறவாய் கூறப்படுபவன நூலாசிரியருடையது. அணிந்துரை, தந்துரை, பதிப்புரை, சிறப்புரை எல்லாம் மற்றவர்களின் தட்டிக் கொடுத்தல், போர்த்தி விடுதல், சமயங்களில் குட்டும் வைத்தல்.
          முன்னுரையிலிருந்து படிக்கத் தொடங்குதல் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுடன் வண்டியேறுதல் போல். வாழைப் பழத்தை நாம் உரித்தே சாப்பிடுவது வழக்கம். அதிலும் சில வகைகளில் தோலின் உள் உரிப்பு தனிச் சுவையல்லவா!
          முதலில் எனது ஆதர்ச எழுத்தாளரான வண்ணதாசனும் அவரது படைப்புலகமும்!

பூமரப் பெண் - 4 (இறுதிப் பகுதி)

Friday, 15 July 2011 8 கருத்துரைகள்
      இரவு நெருங்கியது. அவள் முனங்கல்  தூங்க வந்த அவன் காதுகளில் விழுந்தது. சிலிர்த்துப் போனான். நெருங்கி வந்தான். கண்டு உருகிக் கண்ணீர் சிந்தினான்.
        தீர்வு நெருக்கமானது. பெண்ணுக்குப் பேசச் சந்தர்ப்பம்! தன் மனதுக்கினியவனிடம் தான் பட்ட பாட்டையெல்லாம் கொட்டுவதற்கு வாய்ப்பு!       

       அவள் பேசப் பேச அவன் கேட்டான்.
         இனி என்ன செய்யலாம்?
        அவள் சொன்னாள்: “இரண்டு வாளித் தண்ணீர் கொண்டு வாங்க. நான் மந்திரம் சொல்றேன். ஒருவாளித் தண்ணிய என் மேல ஊத்துங்க. நான் மரமாவேன். மரத்தின் சிதைந்த பகுதியை எல்லாம் கவனமா சரிப்படுத்த முயற்சி செய்யுங்க. மறுபடி தண்ணி ஊத்துங்க... என்ன நடக்குதுன்னு பார்ப்போம்!”
         சொன்னது போலவே கணவன் செய்தான். கிழிந்த இலை, முறிந்த கணு, ஒடிந்த கிளை எல்லாவற்றையும் பொறுமையாச் சரிசெய்தான். மீண்டும் தண்ணீர் ஊற்றியதும் முழுப் பெண்ணாய் பழைய வடிவில் வந்தாள் பூமரப் பெண்.
         மிச்ச காலம் பூராவும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். பூமரமாகும் நிர்ப்பந்தம் அவளுக்கு ஒருபோதும் திரும்ப நேரவில்லை. தோட்டத்தில் அவளைச் சிதைத்த இளவரசியும், தோழிகளும் தண்டிக்கப் பட்டார்கள்....

        கதைகள், சம்பவங்களை முன்வைத்து பிறந்த மனிதநேய அனுபவங்களின் தொகுப்பு பூமரப் பெண்.

        கதை நிற்கிறது ஆல மரமாய்... விழுதுகளாய் விவாதங்கள் பெருகுகின்றன.

பூமரப் பெண் - 3

7 கருத்துரைகள்
        ஊருக்குத் தள்ளியுள்ள ஒரு தோட்டத்திற்குத் தன் தோழிகளுடன் விளையாடக் கிளம்பிய இளவரசனின் தங்கை, தன் அண்ணியையும் வற்புறுத்தி அழைத்தாள். அழைத்துப் போக அம்மா, அண்ணன் சம்மதங்களையும் செல்லங் கொஞ்சிப் பெற்றுவிட்டாள்.
         ஊர்கோடித் தோட்டத்துக்குப் போனதும், “மரமாகு! பூக்கொடு!” என்று அண்ணியைக் கட்டாயப்படுத்தினாள். கூட சேர்ந்து கூச்சலிட அவளது தோழிகள். வேறு வழியின்றி நம் கதாநாயகி சம்மதித்தாள். தொடங்கிய நோக்கத்திலிருந்து இது நாலாவது மாற்றம்! கோரிக்கை நச்சரிப்பு வடிவம் பெற்றுவிட்டது.
         அவள் பூ மரமானதும், இளவரசியும் தோழிகளும் மரத்தை மொய்த்தனர். பூமரப் பெண்ணின் கட்டளைகளைக் கவனத்தில் கொள்ளவில்லை. பூக்களைப் பறிக்கையில் இலைகளைக் கிழித்தார்கள். கணுக்களை முறித்தார்கள். கிளைகளை ஒடித்தார்கள்.

பூமரப் பெண்-2

Thursday, 14 July 2011 6 கருத்துரைகள்
       தங்கை சொன்னபடியே அக்கா செய்தாள். நீரூற்றியதும் அழகிய மணமிக்க மலர்கள் மலர்ந்த மரமானாள் தங்கை. மரத்துக்குச் சேதமின்றி பூக்களை மட்டும் கவனமாகப் பறித்தாள் அக்கா. பறித்ததும் மீண்டும் நீரூற்றினாள். மறுபடி தங்கை தோன்றினாள்.
         பூக்களை எடுத்துக் கொண்டு தாய்க்குத் தெரியாமல் விற்பனை செய்யப் போனார்கள் சகோதரிகள். இளையவள்தான் எப்போதும் தீர்மானிப்பவள். “அரண்மனைப் பக்கம் போகலாம்; அதிக விலை கிடைக்கும்!”
        குடிசை வீட்டிலிருந்து கதை இப்போது அரண்மனைப் பக்கம் நகர்கிறது.

பூமரப் பெண்

3 கருத்துரைகள்
    கடந்த  வாரம் நடந்தேறிய நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புதுப் புத்தகங்களைப் புரட்டினேன்.(ஆமாமாம்... சிபி நேற்றிரவு 11.30 பேருந்தில் கிளம்பியாச்சு.)
     பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாய் ச. மாடசாமி என்பவரெழுதிய ‘பூமரப் பெண்' என்ற நாற்பத்தெட்டு பக்க (பத்தே ரூபாய் தானுங்க) நூலினை வாசித்த வியப்பு தங்களுடனான பகிர்தலைத் துரிதப்படுத்தியது. மார்ச்-2007-ல் முதல் பதிப்பும், 2009-ல் இரண்டாம் பதிப்பும் பெற்ற இந்நூல் நான் கண்டடைய இவ்வளவு காலமாகியிருக்கிறது!
      முன்னுரை, அணிந்துரை... பதிப்புரை என ஒன்றுமேயின்றி தடாலெனத் துவங்கி விடுகிற சிறப்பென்னவெனில், உள்ளடக்கம் அதை எல்லாம் தாண்டிய காத்திரமாய் இருப்பது!
      மற்றொன்று, நூலாசிரியர் கதைகளைத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் நம்மோடு அவ்வப்போது எதிரிலமர்ந்து கலந்துரையாடவும், விவாதிக்கவும், சிந்தனையைத் தூண்டவுமாயிருக்கிறார். அறிவொளி இயக்கத்தில் இயங்கிய அனுபவத்தில் எழுதப்பட்ட நூல்.நன்றாகவேயிருக்கிறது இந்த உத்தி.   


பராக்... பராக்...பராக்!

Thursday, 7 July 2011 11 கருத்துரைகள்
       கடல் அலைகள் கரை வந்து மோதி மோதிச் செல்வது போல் பேசவும், கேட்கவும் பலப்பல விஷயங்கள் நினைவுகளிலும் உணர்வுகளிலும் வந்து வந்து மோதிச் செல்கின்றன மனதுள்.       
        வாரத்தில் மூன்று நாட்களின் பத்து நிமிட நலவிசாரிப்புகள் பாலைவனத்து ஒட்டகத் திமிலின் தண்ணீர் சேகரிப்பு போலல்லவா இருந்தது!

         போன வாரமே முற்றிய மாங்காய்களைப் பார்த்து வாங்கி பழுக்க வைத்தாயிற்று.

          நான்கு நாட்களுக்கு முன்பே முற்றிய பலாக்காய் பறித்து காம்பை வெட்டி வேப்பங்குச்சி செறுகியாச்சு. (விரைவில் பழுக்கவும் சுவை அதிகரிக்கவும்)

         இரண்டு நாட்களுக்கு முன் சந்தை சென்றவர், காய்கறிகளை விடவும் அதிக அளவில் பிடித்தமான பழங்களை வாங்கிப் பைநிரப்பி வந்தாச்சு.

          அனைவரும் தூங்கியதை உறுதி செய்து கொண்டு சுவரேறிக் குதிக்கும் திருடனின் அவசரத்தோடு இருக்கப் போகிறது வரும் இந்த நாட்களில் எனது வலையுலா.

           காய்ந்தமாடு கம்பங்கொல்லையில் பாய்ந்தாற்போல் விருப்பத்துக்குரியவர்களின் பதிவுகளைப் படித்துவிடுவேன்... கருத்துரைக்கத் தவறினாலும்!

         ஆக்கிரமிப்பை அகற்றும் அவசரத்தோடு அவனறையில் ஏறிக் கொண்ட எங்கள் உடமைகளை அப்புறப்படுத்தி விட வேண்டும் இன்று.

         இன்னும் ஐந்தாறு நாட்கள் எங்கள் வீட்டின் அசையும் அசையாப் பொருட்கள் (நாங்கள் உட்பட) அவனது ஆளுமைக்கு உட்பட்டவர்களாவோம்.

       ஆம்.... சிபி வருகிறான் இன்றிரவு... அவன் சார்ந்த கல்வி நிறுவனம் பெரிய மனதோடு ஹோம்சிக் லீவ் தந்திருக்கிறது ஐந்து நாட்களுக்கு...!

          பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமானதாய்.

          தோட்டத்து மரங்கள்  மழைக்குக் காத்திருப்பதைப் போல் நாங்களும்....

மலை வேம்பு -சில தகவல்கள்

Saturday, 2 July 2011 13 கருத்துரைகள்
மலைவேம்பு (melia dubia)

       மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட் டோர்,வீட்டு மரசாமான்கள்,லாரி பாடி பில்டிங், தீக்குச்சி , பேப்பர்
உட்பட பல பொருட்கள் தயாரிக்க மலைவேம்பு பயன்படுகிறது.

சிறப்புகள்:

        குறைந்த வருடங்களில் மற்ர மரவகைகளை காட்டிலும் அதிக வருமானம்.ஒரு ஏக்கருக்கு ஏழு வருடங்களில் சுமார் ஏழு இலட்சம் ரூபாய் வருமானம்.குறைந்த அளவு நீர்வளம் கொண்ட பகுதிகளிலும் நன்கு
வளரும்.வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்களுக்கும் ஏற்றது.குறிப்பிட்ட உயரம் வரை (20-25 அடி)90 சதவீதம் பக்க கிளைகள் வராது.மிக நேராக வளரும் தன்மை கொண்டது. அதிக மரக்கழிவு
இல்லை.பராமரிக்க குறைந்த ஆட்களே தேவை.மலைவேம்பு நடவு செய்த 5-ஆண்டுகள் வரை ஊடுபயிர் செய்யலாம்.இலை ஆடுகளுக்கு நல்ல தீவனமாகப் பயன்படுகிறது.விற்பனை வாய்ப்பு அதிகம் உள்ளதால் தேவையும்,விலையும் எப்போதும் உண்டு.கரும்பு,நிலக்கடலை,மிளகாய்,மரவள்ளி,மஞ்சள்,உளுந்து,
பாக்கு மற்றும் தென்னையிலும் ஊடுபயிராக பயிர் செய்யலாம்.

        இஸ்ரேலிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகக்குறைந்த நீர்வளம் உள்ள பகுதிகளிலும் மலைவேம்பு வளர்க்கலாம்.ஒரு ஏக்கரில்
கரும்பு,தென்னை,வாழை பயிரிடத்தேவைப்படும் நீர்வளத்தை கொணடு 5-ஏக்கரில் மலைவேம்பு வளர்க்கலாம்.

மருத்துவப் பயன்:
        பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த  பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க, நீர்க்கட்டி வளர்ச்சி குறையும். கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும். சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்.( மலைவேம்பு இலை இரு கைப்பிடி, இரு டம்ளர் நீர் கொதிக்க வைத்து ஒருடம்ளராக குறுக்கிக் குடிக்கவும் )

நன்றி: Google Search .
               

மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)

Monday, 27 June 2011 14 கருத்துரைகள்

வேம்பு:
 சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, உட்பாகம், பிசின், இலை, பூ, காய், பழம், ஈர்க்கு, விதை, எண்ணெய் என  அனைத்து பகுதிகளும் பயன் தர வல்லவை. வேப்பமரக் காற்று தொற்று நோய்வராமல் தடுக்கும் வல்லமை பெற்றது.

சரத்சந்திரரின் 'தேவதாஸ்'- ஒரு பார்வை.

Thursday, 23 June 2011 21 கருத்துரைகள்
       நிறைவேறாக் காதலுக்கு மதுவை நாடும் பழக்கம் சுமார் 47 ஆண்டுகளாக எழுதாச் சட்டமாகியதன் மூலகாரணமாக, சரத் சந்திரரின் ‘தேவதாஸ்' நாவலுமிருக்கிறது. ஒரு கதாபாத்திரம், காதல் தோல்வியின் சோர்வுக்குக் குறியீடாகவே மாறிய விந்தை!
       ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து வறுமையால் படிப்பைத் தொடரமுடியாமல் கைவிட்ட சரத் சந்திரர், ஏழைகள் படும் துன்பங்களையும், சந்திக்கும் போராட்டங்களையும் உலகுக்கு எடுத்துரைப்பதே எழுத வந்ததற்கான காரணமென்கிறார். பக்கிம் சந்திரர், தாகூர் போன்றவர்கள் சமூக மாற்றம், சுதந்திரப் போராட்டம், மெய்தேடல் என தீவிரத் தளங்களில் எழுதிய போது, இவர் பாமரர்களும் படிக்கும்படியான எளிமையான, சுவையான, பெண்களை மையமாகக் கொண்ட குடும்ப நாவல்களை எழுதி, தாகூரை விடவும் புகழ்பெற்றவர். நகர மயமாதலின் ஆரம்பகால மாற்றங்களை இவரது எழுத்தில் உணரலாம். இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் திரைப்படமாக்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை அடைந்துள்ளது ‘தேவதாஸ்'!

மரங்களில் மக(ரு)த்துவம் (1.எலுமிச்சை)

10 கருத்துரைகள்
வெயிலுக்கு ஏற்ற ஒன்றல்லவா... பழத்தை வெட்டி உச்சியில் வைத்து தேய்க்க உன்மத்தம் கூட குறையுமென வேடிக்கையாகக் கூறிக் கேட்டதுண்டு. குளிர்ச்சி மற்றும் கண்ணோய்க்கு நிவாரணியாய் கண்ணில் பிழிந்து கொள்பவர்களைக் கண்டதுண்டு. நகசுற்றுக்கு எலுமிச்சை செறுகியதுண்டா... மகா அவஸ்தை அது!

எலுமிச்சையில் 60 வகைகள் உள்ளனவாம். நாம் அறிந்தது நாட்டு எலுமிச்சை மற்றும் கொடி எலுமிச்சை.

நோயும் நீ ... மருந்தும் நீ!

Tuesday, 21 June 2011 14 கருத்துரைகள்
நீளும் வாக்குவாதத்தின்
உச்சாணியில் நிற்கும்
உக்கிரம் தணிய
அருமருந்தாய்
இருக்குமொரு
வார்த்தையுமற்ற
மெளன வெளிநடப்பு .

சூழல்களால் கிளறப்பட்ட
அடிமனசின் ஆற்றாமைகள்
மேலெழும்பி நம்மை
அமிழ்த்தும்போது
வாயடைத்து
மனப்புழுக்கம் கூட்டுவிக்கும்
மெளனம் மட்டும்
பெருநோயாய் ...

கேள்விகளால் சூழ்ந்தவன் பதிலற்று போனபோது...

Thursday, 16 June 2011 20 கருத்துரைகள்
‘தெய்வத்திண்டே கண்ணு' -என்.பி.முகமது

      குழந்தைமை நிறைந்த கேள்விகளும், அவற்றுக்கான தேடல்களுமாய் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் அஹம்மது. எரியும் சருகுகளுக்கும், உதிரும் இலைகளுக்கும், அறுபடும் கோழிகளுக்கும், இரயில் கடக்கும் போது கடபட, தடபட என்று அழும் பாலத்துக்கும் இரக்கப்பட்டு உருகி நிற்பவன்.
      கோழிக்கோட்டிலிருந்து பரப்பனங்காடியிலிருக்கும் உறவினர் வீட்டில் வந்து தங்குகிறான். முன்பொரு முறை ஆயிசா மாமி இறந்தபோது அவனிங்கு வந்ததுண்டு. அச்சமயம் நல்ல மனநிலையிலிருந்த, தனக்கு மிட்டாயெல்லாம் வாங்கித் தந்து தோளில் தூக்கி வந்த, மொய்யம்மதாலி அண்ணன் ஆயிசா மாமி மகன். இப்போது சங்கிலியால் கட்டப்பட்டு நெடும்புரையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான். பூதங்கள் விரும்பிய தோட்டத்துக் காளானைப் பறித்து உண்டு புத்தி பேதலித்ததால் அவனிப்படி ஆனதாக  தன்னொத்த விளையாட்டுத் தோழி, மரியம் மாமி மகள் உம்மு மூலம் அறிகிறான்.

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்...

Monday, 6 June 2011 27 கருத்துரைகள்
     நேற்றிர‌வு  எங்களிட‌ம் விடைபெற்று த‌ன் த‌ந்தையுட‌ன் பேருந்து நிலைய‌ம் சென்றான் எங்க‌ள் அருமை ம‌க‌ன். இன்றிர‌வு  ஐநூறு கிலோமீட்ட‌ர் தாண்டிய‌ ப‌ள்ளி விடுதியில் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ப‌டுத்துற‌ங்கிக் கொண்டிருக்கிறான். இராம‌னின் தாய் கோச‌லையின் ஏக்க‌த்தையும் த‌விப்பையும் எல்லாத் தாயாரும் அனுப‌விக்க‌ நேர்கிற‌து அவ்வ‌ப்போது. என‌க்கான‌ முறை இப்போது.

கத்திரி வெயிலுக்கில்லை ஒரு கத்திரி

Friday, 27 May 2011 24 கருத்துரைகள்
சித்திரைச் சூரியனின் அக்கினிப் பிழம்படி
சிதைஎறி பிழம்பாய் உடல்வருத்த
அந்தியின் தென்றலும் அழகுநிலா தண்னொளியும்
உற்றதொரு கொழுகொம்பாய்
நம் உயிர்பிடித்து நிறுத்திவைக்க

மணியோசை

Sunday, 22 May 2011 28 கருத்துரைகள்
பள்ளிக்கூட
கால இடைவேளை
உணர்த்தும்
தண்டவாளத் துண்டின்
நீண்டு தேயும் ஒலியில்

எய்தவனிருக்க ...

Thursday, 19 May 2011 23 கருத்துரைகள்
வேலி முறித்து
பயிர் மேயும்
பசித்த மாடறியுமா
நீரூற்றி
களைபறித்து
உரம்போட்டு
பயிர் வளர்த்த
உழவன் மன உளைச்சலை...?!

முயன்றால் முடியாதது இல்லை!!

Monday, 9 May 2011 10 கருத்துரைகள்


உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ...!

தமிழகத்தில் மொழிவிழிப்புணர்வு

Monday, 2 May 2011 8 கருத்துரைகள்
தமிழுணர்வாளர் ம. பொன்னிறைவனுடன் ஒரு நேர் காணல்:
தினக்குரல் (கொழும்பு-இலங்கை)
நாள்: 20-03-2011.
நேர்கண்டவர்: கே.ஜி. மகாதேவா

கேள்வி:
     தமிழ் மொழி ஒரு ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்கிறது என எப்படிக் கருதுகிறீர்கள்?

பதில்:
     ஆறு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழும்போது தமிழுக்கு எப்படி அழிவு வருமென்று கேட்கிறார்கள். இது ஒரு தப்புக் கணக்கு. தமிழ்த்தாயின் தலைக்கு மேல், ஒரு ஆயுதம் விழும் நிலையில் இருக்கிறது.

அலையாடும் முன்றில்

Saturday, 30 April 2011 8 கருத்துரைகள்

அலையோடும் விளையாடாது
அவளோடும் உறவாடாது
கட்டாது கிடக்கும் காலி மனைக்கான
தத்தம் கனவுக்கோட்டை பற்றி
சத்தமற்ற விவாதத்திலொரு பெற்றோர்...

செயலற்றிருக்கவொன்னாத
அவர்களின் குட்டிப் பெண்ணோ
அலைநனைத்த கரைமணலை
கால்கைகளின் துணைகொண்டு
குவித்தும் குழித்தும்
நிர்மாணித்தே விட்டாளொரு மாளிகையை!

எட்ட நின்று உற்றுக் கவனித்தன
இரு பொடிசுகள்...
அவர்களின் பெற்றோருக்கும்
அதி தீவிரப் பேச்சு
வேறெதற்கோ...

கட்ட நினைத்தவர்களும்
கட்டி முடித்தவளும்
எழுந்து
மணல் புதைத்த கால்களைப்
பெயர்த்துப் போயினர் இருப்பிடத்துக்கு.

வேடிக்கை பார்த்த பொடிசுகளுக்கு
ஓடிப் பிடித்து விளையாட்டு தொடங்கியது.

மணல் மாளிகைக்காரியின்
உழைப்புக்கும் ரசனைக்கும்
மரியாதை கொடுப்பது போல்
வளைந்தும் நெளிந்தும்
கவனமாயிருக்கிறதவர்கள் கொண்டாட்டம்.

அவர்களும் கிளம்பிய பின்
மாளிகைக்கு காவலாய்
வந்து வந்து போகின்றன
அலைகள்....

தமிழனென்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா...

Thursday, 14 April 2011 8 கருத்துரைகள்
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ஜன லோக்பால் கமிசனின் முக்கியமான அம்சங்கள்

Monday, 11 April 2011 3 கருத்துரைகள்


ஜன லோக்பால் என்பது எந்த ஒரு அரசியல் தலையீடுமின்றி தனித்து இயங்கும் ஒரு கமிசன். ஊழல் , லஞ்சம் போன்ற வேலைகளில் ஈடுபடும் நபர் யாராக இருந்தாலும் ( உச்ச நீதிமன்ற நீதிபதி , இந்திய பிரதமர், முதலமைச்சர் என யாரும் விதிவிலக்கு அல்ல) வெறும் ஒரு ஆண்டில் விசாரணையை முடித்து , அடுத்த ஆண்டில் சிறையில் அடைப்பதே இவர்களின் பணியாகும் .


இப்போது தெரிகிறதா ஏன் காங்கிரஸ் அரசு இதனை ஆதரிக்கவில்லை என்று .

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..

Friday, 8 April 2011 9 கருத்துரைகள்
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!


குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.

இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.

ஏனென்றால்,

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,

ஓட்டுக்கு பணம் கிடையாது.

டாஸ்மாக் கிடையாது (மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).

கரண்ட் கட் கிடையாது.

இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...

குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய

உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.

(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

ஆனால்... இன்று..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.

மீண்டும் உங்கள் நினைவிற்கு..

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,

ஓட்டுக்கு பணம் கிடையாது.

டாஸ்மாக் கிடையாது (மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .

கரண்ட் கட் கிடையாது.

இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.

-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.

-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 15 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.

நம் மாநிலத்தின் நிலை என்ன ??

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..

மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.

இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.

இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.

உலகம் நம்மை காரி உமிழும்.

ஓட்டு போடும் முன் சிந்திங்கள்

நல்ல வரலாறு படைப்போம்.

நன்றி!

(எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றின் சாரம் இப்பதிவு)

பொக்கைவாயழகி முன் வெக்கையின் தோல்வி...

Sunday, 3 April 2011 11 கருத்துரைகள்
உருக்கிடும்  வெயிலின் உக்கிரம்
தார்ச்சாலை முழுக்க...
வாகனங்கள் கிளப்பிய
புழுதி எழுந்து கண்மறைக்க
வரண்ட நாவும் தொண்டையும்
நீருக்குத் தவிக்க
தூரத்துக் கானல்நீர் கண்மயக்க
தேய்ந்த செருப்பு மீறி
கால்வழி மேலேறும் கனல்தகிக்க
தள்ளாமை தந்த தடுமாற்றம் மீறி
கைமாற்றிச் சுமந்து செல்லும்
பைநிரம்பி வழிந்தது
முறுக்கும் அதிரசமும் எள்ளடையும்
இன்னபிறவுமாக...
வழிந்தோடும் வியர்வை
அவள் உடற்சூட்டை தணிக்க
படும் பாடு பெரும் பாடு
தூ...ரத்தில் தென்பட்ட மகன் வீடு
நெருங்கியது அவளின் வேகநடையில்.
வயல் வரப்பும் வாய்க்காலும் தோப்புமாக
இருமாதம் இறக்கை கட்டும்
ஏகாந்த கற்பனையின் துள்ளலோடு
கும்மாளமிட்டு
குதித்தோடி எதிர்வந்தனர்
பாட்டியுடன் பயணப்படத் தயாராய் 
பரீட்சை முடித்த பெயரனும் பெயர்த்தியும்
வெக்கை எல்லாம் பறந்தது
பொக்கைவாயழகிக்கு
சுட்டெரித்த சூரியனும்
ஒளிகிறான் மேகத்திரையுள்
காட்டாற்றில் கால் நனைத்த சிலிர்ப்புடன்
மலர்ந்து சிரிக்கும் அவளது
சுருங்கிய தசைகளனைத்தும்
இப்போது சூரியனுக்கே சவாலாய்...

அய்யோ

Thursday, 31 March 2011 10 கருத்துரைகள்
ஒளவியம் மிஞ்சியே அரசியல் நாறுது

ஓட்டு வேட்டையோ கன ஜோரா நடக்குது

ஒவ்வொருவர் பேச்சிலும் கயமை தெரியுது

ஐயா சாமி... இனியிங்கு என்ன இருக்குது?!

ஏமாந்தவன் குடிமகன் நல்லா தெரியுது

எதிர்த்தவன் குடி அழிஞ்சி போகுது

ஊழல் மட்டுமே ஒளிர்ந்து மினுக்குது

உயிர் பயத்தில் உண்மை அஞ்சி நடுங்குது

ஈ எறும்புக்குத்தான் சுதந்திரம் இருக்குது

இல்லாதவன் பாடு திண்டாட்டமாகுது

ஆட்சிக்கு வந்ததும் ஜனநாயகம் மறக்குது

அறமோ அடுக்குமோ இது?!

இந்த மனப்பான்மையை என்ன செய்யலாம்...?

Wednesday, 30 March 2011 9 கருத்துரைகள்

28 March 2011 21:19


இரா.எட்வின் said...


வணக்கம் நிலா,


இப்படி ஒன்று நடந்திருக்கவே நடந்திருக்காது என்று சொல்வதற்கில்லை. இது நடந்திருக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. ஆசிரியர் என்றால் புனிதர், தெய்வம் மாதிரி (தெய்வம் என்பதே கற்பிதம் ) என்பன போன்ற மிகை மதிப்பீடுகளை எடுத்த எடுப்பிலேயே எறிந்துவிட வேண்டும். தாராள மயமும் உலகமயமும் தேசத்தின் தரைப் பரப்பெங்கும் கும்மாளமாய் குதித்து குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கும் சூழலில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆசிரியனும் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை பார்க்கும் ஒரு சராசரி ஊழியனே. நாளைய உலகச் சமூகத்திற்கான மனித சக்த்தியை தயாரித்து தருபவன் என்கிற அளவில் இவன் மற்ற ஊழியர்களிடமிருந்து மிக அதிகமாய் வேறுபட்டு நிற்க வேண்டும் என்று இந்தச் சமூகம் எதிர்பார்ப்பதில் நியாயமிருக்கவே செய்கிறது.


தாராள மயத்தின் கோர விளைவுகளின் உச்சம் இன்னும்கூட கொடூரமாக இருக்கவே செய்யும். கல்வியும் நுகர் பொருளாகிப் போனதன் விளைவுதான் இது. தாராளமயத்தை சம்மட்டி கொண்டு போடும் வரைக்கும் இது தவிர்க்க முடியாததுதான்.

வணக்கம் தோழர்...


தமிழச்சி போன்ற படைப்புலக வெளிச்சங்கள் வியக்கும் படைப்பாளுமை பெற்ற' தங்கள் முதல் வருகைக்கு வந்தனம். ஆசிரியப் பணியை அறப் பணியாகக் கருதி சேவை செய்யும் தங்களைப் போன்ற, சகோதரர் சுகன் போன்ற, எனது தகைசால் ஆசான்கள் பலரையும் போற்றிக் கொண்டாடுவதை ஒருபோதும் கைவிடேன். சாப்பாட்டில் தென்படும் ஒன்றிரண்டு கற்களை சமைப்பவரிடம் அறிவுறுத்துதல் ஒட்டுமொத்த சமையல் சுவையை குற்றம் சாட்டுவது ஆகாது தானே... தோழி மணிமேகலை எனது எண்ணவோட்டத்தை பிரதிபலித்து விட்டார் எனினும் முல்லையும் கீர்த்திக்குட்டியும் நினைவிலிருப்பதால் தங்கள் கருத்துரையால் ஏற்பட்ட எனது சிந்தனை ஓட்டத்தை ஒரு பதிவிடுமளவு பேச உரிமை எடுத்துக் கொள்கிறேன். 'பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்' என்ற பரிதவிப்பு தெரிகிறது தங்கள் கருத்துரையில்.


குறிப்பிட்ட சம்பவங்களிரண்டும் கோர்க்கப் பட்டதல்ல... கேள்விப்பட்டது தான். புனைவல்ல... நிஜமே. எங்களின் அனுபவமாயிருந்தால், என்ன செய்யலாமென்று கைபிசைந்து நின்றிருக்க மாட்டோம். என்ன செய்ய முடியுமென்று ஒரு கை பார்த்திருக்கலாம். சம்பந்தப் பட்டவர்களின் நேரடி அறிமுகமில்லை. கேள்விப் பட்டதும் பொய்யில்லை. எழுந்த குமுறல் தான் பதிவானது. மேலும் சட்டப் பூர்வமாய் ஏதேனும் செய்ய முடியுமா என்ற அறிதலுக்காகவும், அறிவுறுத்தலுக்காகவும் தான். ஒரு நல்லாசிரியராக, பாட திட்ட வரைவில் பங்கேற்கும் அளவு பொறுப்பிலிருக்கும் தாங்கள் அப்படியான ஆலோசனைகளை தந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்.


எங்கள் ஊராயிருந்தும், புகழ் வாய்ந்த தனியார் கல்வி நிறுவனமாயிருப்பதும், வெளிப்படையாய் பெயர் கூறுவது வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாமென்ற காரணத்தாலும் தவிர்க்கிறேன். நிறுவனத்துக்கு இதில் சம்பந்தமில்லை. கண்காணிப்பாளர் வெளிப் பள்ளியிலிருந்து வந்தவர். சுய விருப்பத்திலும் ஆணாதிக்க போக்கிலும் (பின்னணியில் என்ன பலமிருக்கிறதோ யாரறிவர்?) செய்தது என்பது புரிகிறது. இதில் ஆணாதிக்கம் எங்கு வந்தது தோழர் ? எனக் கேட்டு விடாதீர்கள். தங்கள் கருத்துரையில் உலக மயமாக்கலும், தனியார் மயமாக்கலும் பற்றி கேட்க எனக்கும் தோன்றியது. தோழர் சொன்னால் எதோ உள்ளரசியலிருக்கும் என விளங்கிக் கொள்ள முயற்சிக்கிறேன்.

ஆனால், இந்த சம்பவத்தில் அதே வயது மாணவ மாணவிகளின் கருத்து என்னவென்றால்... பையன்களிடம் ஆசிரியர்களுக்கு உள்ளூர பயமிருக்கிறது. வெளியில் போனால் கூட்டு சேர்ந்து தாக்கப் படுவோமோ என்று... பெண் பிள்ளை என்றால் மிரண்டுவிடும். புகாருக்கும் போராடவும் துணியாது என்ற தைரியம். அறிமுகமற்ற கவசம். அடையாளம் காட்டப் பட மாட்டோம் என்ற நம்பிக்கை. நெருக்கடியான நேரத்தின் பாதுகாப்பு.

கேட்டவுடன் இப்படி நடந்தால் என்ன செய்யலாமென எங்களுக்கு தெரிந்ததை பிள்ளைகளுக்கு எடுத்து சொன்னோம். பதட்டப் படாமல் தேர்வு முடிந்ததும் தலைமைக் கண்காணிப்பாளரையோ, தலைமை ஆசிரியரையோ அணுகி நடந்ததை சொல்லி புகார் செய்யவும்( தேர்வறையில் சக மாணாக்கர்கள் சாட்சிதானே ) பெற்றோரிடம் பகிரவும் செய்யலாம் என்று. சக அலுவலருக்காக அவர்கள் இரக்கப்பட்டு குற்றத்தை திசை திருப்பினாலும் வியப்பதற்கில்லை. பெற்றோர் உணர்வர். அரசுத் தேர்வுக்காக மாணாக்கர்கள் ஒன்றுக்கு இரண்டு ஆண்டுகள் படும் அல்லாட்டதை, கடும் உழைப்பை.

இதுபற்றி தீவிரமாக பேசிக்கொண்டிருக்கும் போது, 'ஏன் நேரமில்லை என மறுத்து அந்த அக்கா அவர் கோபத்துக்கு ஆளாகணும்...? வாங்கி தப்பும் தவறுமா பதில் குறித்து தந்துட்டு வேலையைப் பார்க்க வேண்டியது தானே...' என்கிறது ஒரு பொடிசு.

இன்றைய கால கட்டத்தில் கல்வியின் அத்தியாவசியமும் உச்சபட்ச உழைப்பும் பெரும் பணச் செலவும் எல்லாத் தட்டு மக்களுக்கும் தவிர்க்க முடியாத சுமைதான். இந்த இடத்தில் தங்கள் 'உலக மயமாக்கலும் தாராள மயமாக்கலும்' பற்றிப் பொருத்திப் பார்க்கலாமென நினைக்கிறேன்.

பெற்றோரின் அறிவார்ந்த வழிகாட்டல் வாய்க்காத மாணாக்கர்களுக்கும், வகுப்பாசிரியர்களின் நல்லறிவுரைகளும் தனிப்பயிற்சி ஆசிரியர்களின் அக்கறையான அனுபவப் பகிர்தல்களும் பெருந்துணையாய் இருப்பதை நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.

இந்தப் பதிவேற்றும் நேரம் கிடைத்த தகவலின்படி மருத்துவக் கல்வி குறித்த கனவோடு உழைத்த அப்பேதையும், தோள்கொடுத்த பெற்றோரும் இளங்கலை அறிவியல் படிக்க மனச் சமாதானப் படுத்திக் கொண்டு அதற்கு எந்த கல்லூரி சிறந்தது என்ற தேர்வில் இறங்கியுள்ளனராம் ...

இந்த மனப்பான்மையை என்ன செய்யலாம்...?

கொலைவாளினை எடடா மிகுகொடியோர் செயலறவே....

Monday, 28 March 2011 25 கருத்துரைகள்
நடந்து முடிந்த பள்ளியிறுதித் தேர்வில் நிகழ்ந்த இரு சம்பவங்கள்...

அதிக சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவனொருவன்... தேர்வறையில் மெயின் ஷீட் எழுதி முடித்து அடிஷனல் ஷீட் வாங்கி எழுதும் மும்முரத்தில் மெயின் ஷீட்டை தன்னருகே வைத்து மேற்கொண்டு எழுதி முடிக்கும் தருவாயில் எல்லாவற்றையும் இணைத்துக் கட்ட விழையும் போதுதான் தனது மெயின் ஷீட் மாயமாய் மறைந்தது தெரிந்து திகைக்கிறான். சற்று நேர அல்லாட்டத்துக்குப் பின் பக்கத்து தேர்வறையில் இருந்து ஆடி அசைந்து வருகிறது அது. கண்காணிப்பாளரின் கயமையில் அவருக்கு வேண்டிய மாணவனுக்காக பயணித்திருக்கிறது அது. இதற்க்கு பக்கத்து அறை கண்காணிப்பாளரும் உடந்தை. வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல. கூட்டணியின் லட்ச்சனமெல்லாம் இப்படித்தான் போல.

மற்றொரு சம்பவத்தில் ஒரு மாணவி... பள்ளியின் மாதாந்திரத் தேர்வுகளில் கூட நூற்றுக்கு தொண்ணூற்றைந்து சதம் குறையாமல் மதிப்பெண் பெறுபவள். விறுவிறுப்பாக தன் கணிதத் தேர்வெழுதிக் கொண்டிருக்கையில் சாத்தான் பார்வையில் விழுந்தாளவள். மோப்பம் பிடித்து நெருங்கிய அவ்வறையின் கண்காணிப்பாளர், ஒரு வினாத் தாளைக் கொடுத்து ஒற்றை மதிப்பெண் வினாக்கள் நாற்பதையும் குறித்துத் தரச் சொல்லியிருக்கிறார். நேரமில்லையென மறுத்த அவளது தேர்வுத்தாளையும் எழுதுகோலையும் ஆவேசமாகப் பறித்து அவள் கண்ணெதிரிலேயே நாலைந்து பக்கங்களை குறுக்கில் கிழியுமளவு கோடு கிழித்து வீசியிருக்கிறார்... மிஞ்சிய நேரத்தில் அப்பேதையின் எஞ்சிய மனநிலையும் அவளது எதிர்காலம் குறித்த கனவுக் கோட்டைகளும் சின்னாபின்னமாய் சிதைந்திருக்குமல்லவா? என்ன செய்யலாம் இவர்களை...???

உடனுறை மருத்துவர்கள்....

Sunday, 20 March 2011 8 கருத்துரைகள்
எழுபதை நெருங்கும் முதியவர் ஒருவர்... ஆரோக்கியமான மனைவி,நல்ல நிலையிலிருக்கும் தன் பிள்ளைகள் மற்றும் பிறர் பார்வையில் குறைவற்ற வாழ்வு வாழ்பவர் திடீரென மனம் துணிந்து தற்கொலையை நாடுகிறார். செய்தியறிந்து சென்று பார்க்கும்போது அறுவை சிகிச்சைக்கு அவசியமான உடல் நலக் குறைவு தந்த பயம் தான் காரணமெனக் கூறப்படுகிறது.

இன்னொருவர்... சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சிகள் மூலம் உடலையும் மனதையும் உறுதியாக வைத்திருப்பவர். காந்திய வழியில் தன் வேலைகளைத் தானே செய்யவும், பிறர்க்கான உபகாரங்களைச் செய்யவும் தயங்காதவர். தள்ளாமை நேரிட்ட முதிர்வயதில் பிறர்க்கு பாரமாகிடக் கூடாதென்ற அதே மனப் பாங்கில் தன் வியாதிகளுக்கு மருந்தெடுக்கவும் மறுத்து இறப்பை எதிர்கொள்கிறார் நெஞ்சுரமோடு.

இடருய்தி

Saturday, 5 March 2011 14 கருத்துரைகள்
தள்ளாத வயோதிகர்க்கு
நடக்கவும்
பின்தொடரும்
நாயைத் துரத்தவும்
தெருவோர அரளிச் செடியில்
சிவன் தலைக்கு
ரெண்டு பூப்பறிக்கவும்
பிற்பகலில் கண்ணசர விடாம
சேட்டை செய்யும்
பொடிசுகளை விரட்டவும்
தோட்டத்துச் சருகடியில்
நெளியும் பூச்சி பொட்டை
சட்டுன்னு அடிக்கவும்
உட்கார்ந்து எழ
ஒரு பிடிமானமாகவும்

பயணச் சுவை

Wednesday, 23 February 2011 21 கருத்துரைகள்
ஏறியதும் தேடிப்பிடித்து
யாருமற்ற முழுநீள இருக்கைகளில்
ஆளுக்கொன்றாய் அமர்ந்தோம்.
இருவருக்குமான சன்னலும்
ஏகாந்த தனிமையுமாக
சுகமாய் தொடங்கியது பயணம்.
நிறுத்துமிடங்களில்
ஏறுபவர்கள் ஆக்கிரமிக்க

உடல் உறுப்புகளை ஊடுருவும் உணவின் சக்தி- கால அட்டவணை

Thursday, 17 February 2011 15 கருத்துரைகள்
நாம் உண்ணும் உணவினின்றும் வெளிப்படும் சக்தியானது, நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் ஒன்றன் பின் ஒன்றாய் ஊடுருவுவதாக அக்குபங்சர் மூலம் அறிகிறோம். ஒவ்வொரு உறுப்பிலும் இரண்டுமணி நேரம் விகிதம் 12 உறுப்புகளிலும் 24 மணி நேரத்தில் நாம் உட்கொள்ளும் உணவின் சக்தியானது ஊடுருவுவது பற்றி சற்று விவரமாகப் பார்க்கலாம்.

உன்னைக் கொண்டு என்னில் வைத்தேன்

Saturday, 5 February 2011 38 கருத்துரைகள்

'உன்னைக் கொண்டு என்னில் வைத்தேன்
என்னையும் உன்னில் இட்டேன்...'


இன்று எங்களுக்கான ஒரு பிரத்யேகமான , நினைவில் மணம் கமழும் ஒரு நாள்!

வாழ்கநீ! எம்மான்...

Sunday, 30 January 2011 9 கருத்துரைகள்
      உடுத்திய எளிய உடை, சாப்பிட்ட அலுமினியத் தட்டு, தூங்கிய கோரைப் பாய், உடல் தேய்த்துக் குளித்த வெள்ளைக் கல்... தன் எளிமையைக் காந்தி ரகசியமாக வைத்திருக்கவில்லை. அது அவரது பிரகடனம். எளிமையாக இருப்பதைப் பிரகடனப்படுத்தியது வழியாக அவர் முன் வைக்கும் அறைகூவல்கள் ஏராளமானவை. மன்னர்களுக்கும் பிரபுக்களுக்கும் அது தெளிவாகவே ஒரு சொல்லைச் சொன்னது- அவர்களின் காலம் முடிந்து விட்டது. எளியவர்களின் காலம் வந்து விட்டது என்று. விக்டோரியா ராணிக்கே காந்தி தன் உடை மூலம் அந்தச் சேதியை தெள்ளத்தெளிவாகச் சொன்னார். எளிய கோமண உடையுடன் சக்கரவர்த்தினிக்குச் சமானமாகச் சென்று பேச்சு வார்த்தை மேஜை முன் அமர்ந்தபடி! கோகலேயிடமும் திலகரிடமும் இல்லாத எது அவரிடமிருந்தது? எளிமை. முன்னுதாரணமான எளிமை.

      இன்று வரை நம்மைச் சூழ உள்ள நாடுகளில் ஜனநாயகமில்லை. ஏன்?

Wednesday, 26 January 2011 5 கருத்துரைகள்இன்னல்வந் துற்றிடும் போததற்கஞ்சோம்
ஏழையராகி யினிமண்ணிற்  றுஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில்புரியோம்
தாய்த்திரு நாடெனி லினிக்கையைவிரியோம்
கன்னலுந் தேனும் கனியுமின்பாலும்
கதலியும் செந்நெல்லும் நல்குமெக்காலும்
உன்னத ஆரிய நாடெங்கள்நாடே
ஓதுவ மிஃதை யெமக்கிலையீடே

                                                     -மகாகவி பாரதியார்.

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar