நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

மனங்கவர் முன்னுரைகள்...2 (கண்மணி குணசேகரன்)

Thursday, 28 July 2011 16 கருத்துரைகள்
        பேராசிரியர் த. பழமலய் சொல்கிறார்... “மனித வரலாற்றில் மகாகவி, சாதனை என்றெல்லாம் ஒன்றும் இல்லை. சூழல், தொடர்ந்த பயிற்சி இவற்றின் தொடர்ச்சி தான் படைப்பாளி, படிப்பாளி எல்லாம்.
         வாய் காய்ந்தவர்கள், தலைகாய்ந்தவர்கள் என்று ஏளனத்துக்கு உள்ளானாலும் மனம் காயாத பொட்டங்காட்டு மனிதர்களின் காய்ந்த கதைகள், காயாத கதைகளை எழுதியும் சொல்லியும் இவர்களுக்கிடையில் ஈரம் வளர்பவன் கண்மணி குணசேகரன். என்றுமுள்ள தெந்தமிழ் தன் மேனியில் ஆசையோடு குத்திக் கொள்ளும் பச்சையில் இவனுமொரு புள்ளி.”(கண்மணி குணசேகரனின் ‘தலைமுறைக் கோபம்' கவிதை நூலின் அணிந்துரையில்...)
        
          புதுமைப் பித்தனும், ஜெய காந்தனும், இராமலிங்க அடிகளும், ராகவேந்திரரும்  பிறந்த தென்னார்க்காடு மாவட்டத்தில் விருத்தாசலம் வட்டத்தின் மணிக்கொல்லை எனும் செம்மண் பூமி இவரைப் பெற்ற பேறு பெற்றது.

மனங்கவர் முன்னுரைகள்...1 (வண்ணதாசன்)

Sunday, 24 July 2011 11 கருத்துரைகள்
        தொடர்பதிவின் கண்ணியில் என்னையும் இணைத்த ‘முத்துச்சிதறல்' திருமதி. மனோ சாமிநாதன் அவர்களுக்கு மனம் கனிந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.

          புத்தக வாசிப்பின் மீதான நேசிப்பு நாளுக்கு நாள் வயதுக்கு நிகராய் கூடியபடியே தானிருக்கிறது. எழுத்துக் கூட்டிப் படிக்கப் பழகிய காலத்தில் கிடைத்ததைப் படித்ததுண்டு... எல்லா வேலைகளையும் ஏறக்கட்டி, கூட்டுக் குடும்பத்தின் எல்லோரும் தூங்கிய பிறகு, ‘ராணி' போன்ற வாராந்திரிகளை படுக்கையில் படுத்தபடி படிப்பாங்க எங்கம்மா. மின்சாரம் நின்றால் உதவ தினசரி ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ‘பெட்ரூம் லைட்' எனப்படும் கண்ணாடி போட்ட சின்ன சிமினி விளக்கு வெளிச்சத்தில்! . தாழ்வாரத்தில் உடன் படுத்திருக்கும் மற்றவர்கள் தூக்கம் கெடாதிருக்க மின் விளக்கு அணைக்கப் பட்டிருக்கும்... மறுநாள் அம்மா வைத்த இடம் தேடி, நேரம் தேடி புரிந்தோ புரியாமலோ படித்து வைத்ததுண்டு. நம்மாலும் படிக்க முடிகிறதே என்ற குதூகலத்தின் எச்சத்துடன்.
             பிந்தைய நாட்களில் செல்வம் மாமா வாரம் தவறாமல் வாங்கி வரும் குமுதம், கல்கண்டு, துக்ளக் இவற்றையும் அவரது பையை ஆராய்ந்து படித்து விடும் வழக்கம். மளிகைக் கடையிலிருந்து பொருட்கள் கட்டி வரும் பேப்பர்கவர்களைப் பிரித்து முதலும் முடிவுமற்ற கதைகளை, செய்திகளை படித்து முன்னும் பின்னும் கற்பனையில் அவதானிப்பது சுவையான பொழுது போக்கு அப்போதெல்லாம். வீட்டை ஒட்டியிருக்கும் சீமான் மளிகைக் கடையில் கவர் செய்ய வைத்திருக்கும் புத்தகங்களைக் கேட்டும் படித்திருக்கிறேன்.
            சாப்பிடும்போதும் தூங்கப் போகும் போதும் படித்தேயாக வேண்டும். புதிதாக ஒன்றும் கிடைக்க வில்லையானால் படித்ததையே பலதடவை படித்ததுண்டு. அப்புறம் எதிர் வீட்டு வைத்தியநாதன் அண்ணன் தயவில் புவனகிரி கிளை நூலகத்திலிருந்து சுஜாதா புத்தகங்கள்.(அவர் சுஜாதா பிரியர்) ,
           அப்புறம்,பதின்வயது துப்பறியும் நாவல்கள் புற்றீசலாய் புறப்பட்ட காலம். ஒன்று விடாமல் வாங்கியோ, நட்பு வட்டத்தில் பகிர்ந்தோ பயண நேரப் படிப்பு. துரித வாசிப்பு பழகியது அதில்தான்.
             அப்புறம், நர்மதா, மணிமேகலை போன்ற பதிப்பகங்களிலிருந்து வி.பி.பி. முறையில் புத்தகங்களை வாங்குவது... குறியாமங்கலம் கிராமத்திலிருந்து நகரை ஒத்த நெய்வேலிக்குத் தாவச் செய்தது திருமண பந்தம்.
             இலக்கிய ஈடுபாடுள்ள துணைவர் வாய்க்கப் பெற்றதும், இருவருமாகத் தேடித் தேடி வாங்கியடுக்கி உள்ளவற்றை, வாங்க இருப்பவற்றை வாழ்வின் எஞ்சிய நாட்களில் படித்துவிடுவோமா என்ற பிரமிப்பு இப்போது எங்கள் நூலக அறையைக் காணும் போதெல்லாம்...!

        பதிவின் முன்னுரை இத்துடன் நிற்க.

         எந்தவொரு படைப்புக்கும் ஒரு முன்னோட்டம் அவசியமாகிறது. தொடர்ந்து படிக்கும் ஆவலைத் தூண்டும்படியும், விருந்தில் முதலில் பரிமாறும் இனிப்பு நாவின் சுவையரும்புகளைத் தூண்டித் தயார்ப்படுத்துவது போலவும், நூற்பொருளைப் பற்றிய சுருக்க விளக்கமாகவும், கச்சேரி தொடக்கத்தில் பாகவதர் தொண்டையை செறுமிக் கொள்வது போலவும் உள்ளது முன்னுரை / முகவுரை / நூன்முகம் / தோற்றுவாய் இன்ன பிறவாய் கூறப்படுபவன நூலாசிரியருடையது. அணிந்துரை, தந்துரை, பதிப்புரை, சிறப்புரை எல்லாம் மற்றவர்களின் தட்டிக் கொடுத்தல், போர்த்தி விடுதல், சமயங்களில் குட்டும் வைத்தல்.
          முன்னுரையிலிருந்து படிக்கத் தொடங்குதல் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுடன் வண்டியேறுதல் போல். வாழைப் பழத்தை நாம் உரித்தே சாப்பிடுவது வழக்கம். அதிலும் சில வகைகளில் தோலின் உள் உரிப்பு தனிச் சுவையல்லவா!
          முதலில் எனது ஆதர்ச எழுத்தாளரான வண்ணதாசனும் அவரது படைப்புலகமும்!

பூமரப் பெண் - 4 (இறுதிப் பகுதி)

Friday, 15 July 2011 8 கருத்துரைகள்
      இரவு நெருங்கியது. அவள் முனங்கல்  தூங்க வந்த அவன் காதுகளில் விழுந்தது. சிலிர்த்துப் போனான். நெருங்கி வந்தான். கண்டு உருகிக் கண்ணீர் சிந்தினான்.
        தீர்வு நெருக்கமானது. பெண்ணுக்குப் பேசச் சந்தர்ப்பம்! தன் மனதுக்கினியவனிடம் தான் பட்ட பாட்டையெல்லாம் கொட்டுவதற்கு வாய்ப்பு!       

       அவள் பேசப் பேச அவன் கேட்டான்.
         இனி என்ன செய்யலாம்?
        அவள் சொன்னாள்: “இரண்டு வாளித் தண்ணீர் கொண்டு வாங்க. நான் மந்திரம் சொல்றேன். ஒருவாளித் தண்ணிய என் மேல ஊத்துங்க. நான் மரமாவேன். மரத்தின் சிதைந்த பகுதியை எல்லாம் கவனமா சரிப்படுத்த முயற்சி செய்யுங்க. மறுபடி தண்ணி ஊத்துங்க... என்ன நடக்குதுன்னு பார்ப்போம்!”
         சொன்னது போலவே கணவன் செய்தான். கிழிந்த இலை, முறிந்த கணு, ஒடிந்த கிளை எல்லாவற்றையும் பொறுமையாச் சரிசெய்தான். மீண்டும் தண்ணீர் ஊற்றியதும் முழுப் பெண்ணாய் பழைய வடிவில் வந்தாள் பூமரப் பெண்.
         மிச்ச காலம் பூராவும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். பூமரமாகும் நிர்ப்பந்தம் அவளுக்கு ஒருபோதும் திரும்ப நேரவில்லை. தோட்டத்தில் அவளைச் சிதைத்த இளவரசியும், தோழிகளும் தண்டிக்கப் பட்டார்கள்....

        கதைகள், சம்பவங்களை முன்வைத்து பிறந்த மனிதநேய அனுபவங்களின் தொகுப்பு பூமரப் பெண்.

        கதை நிற்கிறது ஆல மரமாய்... விழுதுகளாய் விவாதங்கள் பெருகுகின்றன.

பூமரப் பெண் - 3

7 கருத்துரைகள்
        ஊருக்குத் தள்ளியுள்ள ஒரு தோட்டத்திற்குத் தன் தோழிகளுடன் விளையாடக் கிளம்பிய இளவரசனின் தங்கை, தன் அண்ணியையும் வற்புறுத்தி அழைத்தாள். அழைத்துப் போக அம்மா, அண்ணன் சம்மதங்களையும் செல்லங் கொஞ்சிப் பெற்றுவிட்டாள்.
         ஊர்கோடித் தோட்டத்துக்குப் போனதும், “மரமாகு! பூக்கொடு!” என்று அண்ணியைக் கட்டாயப்படுத்தினாள். கூட சேர்ந்து கூச்சலிட அவளது தோழிகள். வேறு வழியின்றி நம் கதாநாயகி சம்மதித்தாள். தொடங்கிய நோக்கத்திலிருந்து இது நாலாவது மாற்றம்! கோரிக்கை நச்சரிப்பு வடிவம் பெற்றுவிட்டது.
         அவள் பூ மரமானதும், இளவரசியும் தோழிகளும் மரத்தை மொய்த்தனர். பூமரப் பெண்ணின் கட்டளைகளைக் கவனத்தில் கொள்ளவில்லை. பூக்களைப் பறிக்கையில் இலைகளைக் கிழித்தார்கள். கணுக்களை முறித்தார்கள். கிளைகளை ஒடித்தார்கள்.

பூமரப் பெண்-2

Thursday, 14 July 2011 6 கருத்துரைகள்
       தங்கை சொன்னபடியே அக்கா செய்தாள். நீரூற்றியதும் அழகிய மணமிக்க மலர்கள் மலர்ந்த மரமானாள் தங்கை. மரத்துக்குச் சேதமின்றி பூக்களை மட்டும் கவனமாகப் பறித்தாள் அக்கா. பறித்ததும் மீண்டும் நீரூற்றினாள். மறுபடி தங்கை தோன்றினாள்.
         பூக்களை எடுத்துக் கொண்டு தாய்க்குத் தெரியாமல் விற்பனை செய்யப் போனார்கள் சகோதரிகள். இளையவள்தான் எப்போதும் தீர்மானிப்பவள். “அரண்மனைப் பக்கம் போகலாம்; அதிக விலை கிடைக்கும்!”
        குடிசை வீட்டிலிருந்து கதை இப்போது அரண்மனைப் பக்கம் நகர்கிறது.

பூமரப் பெண்

3 கருத்துரைகள்
    கடந்த  வாரம் நடந்தேறிய நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புதுப் புத்தகங்களைப் புரட்டினேன்.(ஆமாமாம்... சிபி நேற்றிரவு 11.30 பேருந்தில் கிளம்பியாச்சு.)
     பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாய் ச. மாடசாமி என்பவரெழுதிய ‘பூமரப் பெண்' என்ற நாற்பத்தெட்டு பக்க (பத்தே ரூபாய் தானுங்க) நூலினை வாசித்த வியப்பு தங்களுடனான பகிர்தலைத் துரிதப்படுத்தியது. மார்ச்-2007-ல் முதல் பதிப்பும், 2009-ல் இரண்டாம் பதிப்பும் பெற்ற இந்நூல் நான் கண்டடைய இவ்வளவு காலமாகியிருக்கிறது!
      முன்னுரை, அணிந்துரை... பதிப்புரை என ஒன்றுமேயின்றி தடாலெனத் துவங்கி விடுகிற சிறப்பென்னவெனில், உள்ளடக்கம் அதை எல்லாம் தாண்டிய காத்திரமாய் இருப்பது!
      மற்றொன்று, நூலாசிரியர் கதைகளைத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் நம்மோடு அவ்வப்போது எதிரிலமர்ந்து கலந்துரையாடவும், விவாதிக்கவும், சிந்தனையைத் தூண்டவுமாயிருக்கிறார். அறிவொளி இயக்கத்தில் இயங்கிய அனுபவத்தில் எழுதப்பட்ட நூல்.நன்றாகவேயிருக்கிறது இந்த உத்தி.   


பராக்... பராக்...பராக்!

Thursday, 7 July 2011 11 கருத்துரைகள்
       கடல் அலைகள் கரை வந்து மோதி மோதிச் செல்வது போல் பேசவும், கேட்கவும் பலப்பல விஷயங்கள் நினைவுகளிலும் உணர்வுகளிலும் வந்து வந்து மோதிச் செல்கின்றன மனதுள்.       
        வாரத்தில் மூன்று நாட்களின் பத்து நிமிட நலவிசாரிப்புகள் பாலைவனத்து ஒட்டகத் திமிலின் தண்ணீர் சேகரிப்பு போலல்லவா இருந்தது!

         போன வாரமே முற்றிய மாங்காய்களைப் பார்த்து வாங்கி பழுக்க வைத்தாயிற்று.

          நான்கு நாட்களுக்கு முன்பே முற்றிய பலாக்காய் பறித்து காம்பை வெட்டி வேப்பங்குச்சி செறுகியாச்சு. (விரைவில் பழுக்கவும் சுவை அதிகரிக்கவும்)

         இரண்டு நாட்களுக்கு முன் சந்தை சென்றவர், காய்கறிகளை விடவும் அதிக அளவில் பிடித்தமான பழங்களை வாங்கிப் பைநிரப்பி வந்தாச்சு.

          அனைவரும் தூங்கியதை உறுதி செய்து கொண்டு சுவரேறிக் குதிக்கும் திருடனின் அவசரத்தோடு இருக்கப் போகிறது வரும் இந்த நாட்களில் எனது வலையுலா.

           காய்ந்தமாடு கம்பங்கொல்லையில் பாய்ந்தாற்போல் விருப்பத்துக்குரியவர்களின் பதிவுகளைப் படித்துவிடுவேன்... கருத்துரைக்கத் தவறினாலும்!

         ஆக்கிரமிப்பை அகற்றும் அவசரத்தோடு அவனறையில் ஏறிக் கொண்ட எங்கள் உடமைகளை அப்புறப்படுத்தி விட வேண்டும் இன்று.

         இன்னும் ஐந்தாறு நாட்கள் எங்கள் வீட்டின் அசையும் அசையாப் பொருட்கள் (நாங்கள் உட்பட) அவனது ஆளுமைக்கு உட்பட்டவர்களாவோம்.

       ஆம்.... சிபி வருகிறான் இன்றிரவு... அவன் சார்ந்த கல்வி நிறுவனம் பெரிய மனதோடு ஹோம்சிக் லீவ் தந்திருக்கிறது ஐந்து நாட்களுக்கு...!

          பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமானதாய்.

          தோட்டத்து மரங்கள்  மழைக்குக் காத்திருப்பதைப் போல் நாங்களும்....

மலை வேம்பு -சில தகவல்கள்

Saturday, 2 July 2011 13 கருத்துரைகள்
மலைவேம்பு (melia dubia)

       மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட் டோர்,வீட்டு மரசாமான்கள்,லாரி பாடி பில்டிங், தீக்குச்சி , பேப்பர்
உட்பட பல பொருட்கள் தயாரிக்க மலைவேம்பு பயன்படுகிறது.

சிறப்புகள்:

        குறைந்த வருடங்களில் மற்ர மரவகைகளை காட்டிலும் அதிக வருமானம்.ஒரு ஏக்கருக்கு ஏழு வருடங்களில் சுமார் ஏழு இலட்சம் ரூபாய் வருமானம்.குறைந்த அளவு நீர்வளம் கொண்ட பகுதிகளிலும் நன்கு
வளரும்.வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்களுக்கும் ஏற்றது.குறிப்பிட்ட உயரம் வரை (20-25 அடி)90 சதவீதம் பக்க கிளைகள் வராது.மிக நேராக வளரும் தன்மை கொண்டது. அதிக மரக்கழிவு
இல்லை.பராமரிக்க குறைந்த ஆட்களே தேவை.மலைவேம்பு நடவு செய்த 5-ஆண்டுகள் வரை ஊடுபயிர் செய்யலாம்.இலை ஆடுகளுக்கு நல்ல தீவனமாகப் பயன்படுகிறது.விற்பனை வாய்ப்பு அதிகம் உள்ளதால் தேவையும்,விலையும் எப்போதும் உண்டு.கரும்பு,நிலக்கடலை,மிளகாய்,மரவள்ளி,மஞ்சள்,உளுந்து,
பாக்கு மற்றும் தென்னையிலும் ஊடுபயிராக பயிர் செய்யலாம்.

        இஸ்ரேலிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகக்குறைந்த நீர்வளம் உள்ள பகுதிகளிலும் மலைவேம்பு வளர்க்கலாம்.ஒரு ஏக்கரில்
கரும்பு,தென்னை,வாழை பயிரிடத்தேவைப்படும் நீர்வளத்தை கொணடு 5-ஏக்கரில் மலைவேம்பு வளர்க்கலாம்.

மருத்துவப் பயன்:
        பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த  பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க, நீர்க்கட்டி வளர்ச்சி குறையும். கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும். சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்.( மலைவேம்பு இலை இரு கைப்பிடி, இரு டம்ளர் நீர் கொதிக்க வைத்து ஒருடம்ளராக குறுக்கிக் குடிக்கவும் )

நன்றி: Google Search .
               

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar