நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

யாவாரம்

Saturday, 26 November 2011 12 கருத்துரைகள்
       மாரி, கொல்லையில் செழித்து வளர்ந்திருந்த முருங்கை மரத்திலிருந்து அலக்கு கழியால் பறிப்பதை கீழே மண்ணில் விழாமல் இலாவகமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள் அவன் மனைவி காசாம்பு.
       கைப்பிடியளவு இனுக்குகள் சேரச் சேர கத்தையாய் கட்டி விரித்திருக்கும் ஈர சாக்குத் துண்டில் அடுக்குவதும் அவளே. வயதின் முதிர்வு இருவரையும் சீக்கிரமே சோர்வாக்கியது.
       “எத்தனை கட்டு தேறுது புள்ள?” தலைக்கு மேல் தூக்கித் தூக்கி துழாவிய அலக்கு தந்த தோள்வலியோடு, கழியை கீழிறக்கி தரையில் அண்டை கொடுத்து தோளில் சாய்த்துக் கொண்டே மாரி கேட்கிறான்.
       “இத்தோட பதினெட்டு ஆவுது... போதாது...?” காசாம்புவுக்கும் உட்கார்ந்தால் தேவலை என்ற அசதி ஒலிக்கிறது குரலில்.
       “போதும் போ... பதினெட்டஞ்சி தொண்ணூறு... பேரத்துல பத்திருபது கொறஞ்சாலும் பாதகமில்ல. சுள்ளான் மண்டியில கடன் சொல்லி வாங்கியாந்த  காய்கறிங்க இருவது கிலோயிருக்கு. இதுங்களை வித்து முதலாக்கி வூடு வந்து சேர்ந்தாலே போதுமாச்சே. போய் எனக்கு ஏதாச்சும் நீராகாரமிருந்தா எடுத்து வெய். அந்தக் கண்ணியோரமா துளுத்துக் கெடக்குற வல்லாரையையும், மொடக்கத்தானையும் ஆய்ஞ்சினு வாரேன். சுண்டக்காய் பறிச்சு வெச்சியா?”


நேசத்தின் சீமாட்டி

Wednesday, 23 November 2011 21 கருத்துரைகள்

          அந்திக் காற்று பகலின் புழுக்கத்தை மட்டுப்படுத்துவதாயிருந்தது. வாசல் கதவை விரியத் திறந்து வைத்து முன் நடையில் சுவரோரத்தை ஆக்கிரமித்திருக்கும் மரப் பலகையில் அமர்ந்திருக்கிறார் சங்கரசுப்பு. திறந்திருக்கும் கதவின் உபயத்தால் தெருக்கோடிவரை அவரது பார்வையின் எல்லைக்குள் அடங்குகிறது.
        உள்ளிருந்து கமழும் பில்டர் காபியின் மணத்தை ‘இன்னும்... இன்னும்' என நுரையீரலை விரித்து உள்ளனுப்புகிறது அவரது நாசியின் நுகர்திறன். சாயங்காலம் வாங்கும் இருநூறு மிலி பாலில் இவருக்கொரு கும்மோணம் டிகிரி காபியும், தனக்கொரு டீத்தண்ணியும் போட்டு, மிஞ்சும் ஐம்பது மிலி பாலை உறை ஊற்றி மறுநாளுக்கான மோராக்கிவிடும் சாமர்த்தியம் வேண்டியிருக்கிறது அவரது மனைவி கமலத்துக்கு.
       நுரைத்துத் தளும்பும் காபியை ஏந்திவரும் மனைவி தேவதையாகவே தெரிகிறாள். ஏதாவது வாங்கிவரச் சொல்லிப் பையுடன் தலைகாட்டும்போது மட்டும் அரக்கியாக மாறிக் காட்சியளிப்பாள் அவரது அகக்கண்ணுக்கு.
      ‘பணமும் பத்தாக இருக்கணும்; பிள்ளையும் முத்தாக இருக்கணும்' அவருக்கு. அதற்குத் தோதாக, கல்யாணமான புதிதில் கமலத்தின் வயிறு திறக்க வந்த ஒற்றைக் கருவும் முத்துக் கர்ப்பமாக, கருப்பை தவிர்த்து ஃபெலோபியன் டியூபில் தங்கி அற்பாயுசில் மடிந்தது. அதன் பிறகு அவர்கள் வீட்டுக் குடும்ப அட்டையில் இரண்டு நபர் மட்டுமே நிரந்தரமாகிப் போயினர்.
       காபியை ஆற்றி ஆற்றி நுரை கூட்டி கடைசி சொட்டு வரை ரசித்து உறிஞ்சுகிறார். நுரைக் குமிழ்கள் அவர் வாயுள் இரகசிய சப்தமெழுப்பியபடி உடைந்து மறைகின்றன. நாவின் சுவையுணர் அரும்புகள் விரிந்து விகசித்து ‘ஆகா... ஆகா' என தேவசுகம் தருவிக்கிறது அவருக்கு.

விருந்தாளித் தாம்பூலம்

Saturday, 19 November 2011 11 கருத்துரைகள்
      தணலிடையே உடல் கருகுவதுபோல் அக்னிச் சூரியனின் தகிப்பு! மின் விசிறியின் இறைச்சலுக்கு சற்றும் பயமற்று அனல் காற்று சுழன்றடித்தது அறை முழுதும்.       வேறு வழியின்றி, முற்றத்து தொட்டித் தண்ணீரில் ஒரு வாளி மொண்டு வாசலில் விசிறி, தெருக்கதவைத் திறந்து வைத்தாள் ரம்யா. பசித்த காக்கைக் கூட்டம் படைத்த உணவெடுக்கும் வேகத்தில் ஆவியானது நீர்த்தடம். சளைக்காமல் மறுபடி மறுபடி தெளித்த நீரில் மட்டுப் பட்டு தண்மையேறியது காற்றுக்கு.  அப்பாடாவென ஆயாசப் பெருமூச்சோடு உள்நுழைந்து அவளுடன் உறவாடியது மெல்ல.
        நேற்று வேலையோடு வேலையாக தைத்து வைத்த இரவிக்கைகளையும், ஊசி-நூல்கண்டு-ஊக்கு வகையறாக்களையும் சேகரித்து வந்தமர்ந்தாள் காற்றாட.
        குழந்தைகள் கிராமத்திலிருக்கும் தாத்தா பாட்டியுடன் விடுமுறையை உற்சாகமாகக் கழிக்க, துணைவரின் பணிக்கும், உணவகச் சாப்பாடு ஒவ்வாத அவரது பிணிக்குமாய் அவளது இருப்பு இங்கே என்றானது.
       இல்லறம் பெண்களுக்கான விடுப்பை எப்போதும் எளிதாக்குவதில்லையே. நாகரீகமும் நகர நெருக்கடிகளும் உடல்சார் ‘விடாய்' காலங்களைக் கூட புறந்தள்ளி விட்டதால்  அவரவர்க்கான ஓய்வு நேரம் அவரவர் மனப்பாங்காகி விட்ட சூழல். அன்றாட அலுவல்களும், துடைக்கவும், அடுக்கவும், தைக்கவும், பின்னவுமாக வேலைக்கும் நேரத்துக்கும் எப்போதும் போல் சடுகுடு.
        சத்தமின்றி வந்து நின்ற இ-பைக்கில் காலூன்றியபடி, ‘சார் இருக்காரா?' என்றவர் கணவரின் அலுவலக சகா.

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar