நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

சிரித்தால் அழகு!

Friday, 23 December 2011 4 கருத்துரைகள்

     என்னம்மா அது? பார்த்துப் பார்த்து சிரிச்சிகிட்டிருக்கே?” என்றவாறு எனது படுக்கையருகே வந்தமர்ந்தார் அம்மா.
      ஆம். என் கையிலிருக்கும் இந்த புகைப்படம் கடந்த ஒருமணி நேரமாக என்னை எங்கெங்கோ கூட்டிச் செல்லும் வல்லமை பெற்றிருக்கிறது தான்.
      எனது பக்கத்துப் படுக்கை, நோயாளி யாருமின்றி காலியாக உள்ளது. எனவே தான் இரண்டாம் வகை சிறப்பு அறை, முதலாம் வகை சிறப்பு அறை போன்ற ஏகாந்தத்தை தருகிறது எனக்கு.
      எனது தந்தையின் மத்திய அரசுப் பணிக்கான சிறப்புச் சலுகை என் குடும்பத்தினருக்கான இந்த மருத்துவமனையின் சேவை. பணித் தகுதிக்கேற்ப இட வசதி. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே உள்நோயாளிகள் பிரிவு உண்டு. தலா இருபது படுக்கைகள் கொண்ட பகுதி. அதுவன்றி மூன்றாம் வகை சிறப்பு அறைகள் நான்கு படுக்கைகள் கொண்டிருக்கும். இரண்டாம் வகையெனில் இரண்டு படுக்கைகள் கொண்ட அறைகள். முதல் வகையெனில் ஒரு நோயாளிக்கொரு படுக்கை மற்றும் உடனிருக்கும் துணையாளருக்கு ஒரு படுக்கை. இவையன்றி குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணிகள் பிரிவு என சகலருக்கும் தனித்தனிப் பிரிவுகளோடு பிரம்மாண்டமானதாய் இருக்கும் மருத்துவமனையின் வளாகம்.
      இங்கு வந்து சேர்ந்த போதிருந்த எனது நிலையை இந்தப் பத்து நாட்கள் வெகுவாக சீரமைத்தே இருக்கின்றன.
      பாருங்க... இந்த புகைப்படம் எடுத்த கதையை உங்க கிட்ட சொல்லாம ஏதேதோ நட்ட நடுவுல பிடிச்சிப் பேசறேன். நீங்களும் தடுமாறி முழிக்கிறீங்க.

கபீர்தாஸ் கண்ணிகள்-30

Wednesday, 14 December 2011 9 கருத்துரைகள்
கபீர்தாஸ் கண்ணிகள்-30     
(தமிழில்: ஆகாசம்பட்டு வெ. சேஷாசலம்)

     கபீர்தாஸ் ஒரு பக்திக் கவி; பதினைந்தாம் நூற்றாண்டுக்காரர்; உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்தவர். Couplets-கண்ணிகள்-இரண்டிரண்டு அடிகளால் ஆன இவை Dohas என்றும் சொல்லப்படுகின்றன. இரவீந்திரநாத் தாகூர் கூட இவரின் சில கண்ணிகளை (காண்க: One Hundred Poem of Kabir) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். கபீர்தாஸின் பஜன்கள் அளவுக்குக் கண்ணிகள் பரவலாக இன்னும் அறியப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தாள்நிலம், ஏழுகடல் தான்மசி; பேனாவாய்
நீள்தருக்கள் கொண்டும் நினைஎழுதி மாலதுமோ?

கட்டிப் பனியுருகி நீரிற் கலப்பதுபோல்
ஒட்டி அவனோடும் ஒன்றாத லேபக்தி!
   *
உன்னுடைய நூலகத்தை ஓடையிலே வீசியெறி!
என்னபயன் ராமனில் இன்னமும் ஆழாமல்?

கத்துகிறாய் பட்டினியில்! காதுதந்து கேட்பார்யார்?
மெத்தஒரு கர்ப்பத்தில் மேல் அவனே தாங்கலையா?
   *
அன்னமும் நாரையை அல்லவா ஒத்திருக்கும்?
பின்னதோ மீன் உண்ணும்; முன்னதோ முத்துமணி!

சிந்து மழைத்துளிக்கே சிப்பி கடல்மிதக்கும்;
அந்தோ துளிகுடித்தால் ஆழி அடியொதுங்கும்!
   *
பாலும் விஷமாகும் பாம்புக்கே வார்த்திட்டால்!
ஞாலத்தில் தீயவரால் நல்லதுவும் மாறிவிடும்!

“நான்” ,“எனது” விட்டுவிட்டால் நல்லவன்யார் உன்னைவிட?
ஏன், வாழ்வின் நங்கூரம் இந்த நிலைத்தமனம்!
   *
தாகித்தும் சக்ரவாகம் தண்ணீர் அருந்தாமல்
வேகத் துடன்பெய்ய வேண்டும் மழைக்கடவுள்!

வட்டப்பூ வாட; உதயமோ அத்தமிக்க...
கட்டல் நொறுங்க; குழந்தையோ தான்மரிக்க...!
   *
பூத்த மலரைப் பறித்தாந்தோட் டக்காரன்,
“பார்த்துக்கோ, நாளை நமதுமுறை!” மொக்குசொலும்!

எச்சரிக்கும் மண்சேறும்: “ஏ குயவா நீ
அச்சோ அழுத்தாதே வாய்ப்பு வருமெனக்கும்!”
   *
ஓர்நாள் நடக்கும் இது! உன்னையும் பார்ப்பவர் ஆர்?
பாரியாளும் பேசாள்; பறக்கும் உலகமிது!

தெப்பமாய் பாம்பையெலாம் தேடிநீ கட்டிவிட்டால்
அப்போ கடல்தாண்டி அக்கரையுஞ் சேர்வாயா?
   *
பா(கு)இனிப் புக்குப் பறந்த ஈ கால்,சிறகு
நோகஒட்டிக் கொண்டதே நொந்து வெளிவராமல்!

சிங்கத்தின் பிம்பம் தெரியக் கிணற்றுநீரில்
பங்கம்; விழுந்(து)இறக்க வைக்கும் முயலொன்று!
   *
முந்திப்போம் ஆட்டுவழி, மந்தையே போம்,அலவா?
சிந்திப்போம் என்றிலையே... செல்லுகிறோம் ஈதேபோல்!
   *
“வீழ்ந்த பிறகும் விருட்சம் உன்னோ(டு) ஒட்டுவனா?”
ஆழ்ந்த  வருத்தத்தில் ஆடி இலைவீழும்!

வானகத்து வீடிருந்து வந்தான் விருந்தாளி,
கானகத்து மேற்பயணம்; காப்பாற்ற சாவுதுணை!
   *
வாராப் புதையும் வடவாக் கினியாலே!
ஆரறி வார்தகிப்பை ஆர்க்கும் கடல்தவிர?

விண்ணின் நிலவொளியால் மண்தா மரைமலரும்;
அண்மையா கும்தூரம் அன்புக்(கு) உருகிட்டால்!
   *
தாகம் எடுத்திட்டால் சாக்கடைநீர் ஆர்குடிப்பார்?
ஆ,கங்கை யோடுசேர்ந்தால் ஆரே குடிக்காதார்?

வீழ்த்தி விடுவான் விறகுவெட்டி என்னைவிடு;
பார்த்தானா உச்சிப் பறவை களைஎண்ணி?
   *
இழித்துமே பேசலும் ஏன்கால்கீழ்ப் புல்லை;
விழியுங் கிழிபடலாம் வேகமாய்த் தானெழுந்தால்!

ஓடத்துள் நீர்வந்தால் வீட்டுக்குள் காசுவந்தால்
ஓடிவெளி ஏற்றிடுவர் உத்தமர் எல்லோரும்!
   *
கானில் மலர்கள் கனிகளெலாம் ஏராளம்;
மானிடனே, தித்திப்பை விட்டேன் அலைகின்றாய்?

அன்னம் பறக்கிற(து) ஆகாயம், புல்லைவிட்டும்!
தண்ணீர் பருகும் தரைவீடு தான்மறந்தும்!
   *
நீலக் கடல்வீழ்ந்த நீர்ச்சொட்டா மீண்டுவரும்?
வாலறிவன் தேடி வழியை இழந்தேனே!

வேண்டிய(து) ஆறடிதான்; விண்முட்டும் மாளிகைஏன்?
ஈண்டெதற்குப் பேராசை? ஏராளக் கர்வங்கள்?
   *
பற்றோ கவர்ச்சிமிகு பாவையைப் போல்;விரட்டிச்
சற்றே துரத்திடினும் சட்டென வந்தொட்டும்!

(நன்றி: திசை எட்டும்)

முன்னோட்டம்

Friday, 9 December 2011 11 கருத்துரைகள்
 கதை கேட்டுத் தூங்கிய இரவுகளும்   
       கதைகளால் விழிப்படைந்த பகல்களும்...

       கதை சொல்வது மற்றும் கேட்பதன் ஆதிருசியை உணர்ந்தது அவரவர் தாயின் அரவணைப்போடான தூங்கச் செய்யும் தருணங்களன்றி வேறென்ன...?
       சிலருக்குப் பாட்டி...
      சிலருக்கு அத்தை...
      சிலருக்கு அப்பா... எனக் கதை சொல்லும் உறவுமுறை வேண்டுமானால்     சமயங்களில் மாறுபடலாம்.
      ஆனால், கதை கேட்டுக் கேட்டுத் தூங்கிய ஆழ்மனசில் ‘கதை'யின் மேலான ஈர்ப்பு நிரந்தரமாகிவிடுகிறது.
      ஆக, நம்மில் பலருக்கு சிறுபிராயத்தில் அருகில் படுத்து, முதுகைத் தட்டி, தலையைக் கோதி, கால்களை வருடி தூக்கத் துணையாகும் உறவொன்று  நீங்காமல் நிலைத்திருக்கும் மனசின் ஆழத்தில். வாழ்தலில் நிறைந்துள்ள நல்லது கெட்டதுகளை தான் சொல்லும் கதையுள் பொதிந்து கூறித் தூங்கச் செய்த அவ்வுறவின் உயிர்ப்பு நாம் வாழும் வரை வரும் இரவுகளில் வருடிச் செல்லும் நம்மை.
      எனக்குள் விதைத்தவர்களும் துளிர்த்தபடியே ...
  
                                          * * * * *

மெள‌ன‌த்திற்கொரு ம‌ரியாதை

Monday, 5 December 2011 14 கருத்துரைகள்
மெளனமே... மெளனமே....
  
  வீட்டில்
 பேருந்தில்
 அலுவலகத்தில்
 கடைத்தெருவில் என
 அன்றாடங்களை நிறைக்கும்
 காதடைக்கும் புறவொலிகள்...
 எப்போதேனும் போக வாய்க்கும்
 கேட்க,
 பேசவியலா
 மாற்றுத் திறனாளிகளின்
 பள்ளி வளாகத்தில்
 பெரும்பாலும்
 மெளனத்தின் கச்சேரி...
 செவிக்கினிதாய்.
  
            *****

மெளனத்தின் பேரிரைச்சல் 
போகும் போதெல்லாம்
 புன்னகைத்து முதுகு தட்டுவார்
 குடும்ப வைத்தியர்...
 “எல்லாம் சரியாகிவிடும்.”
 இதற்குப் பின்னும்
 எஞ்சிய நோயை
 மருந்துகள் விரட்டிவிடும்.
 காலப் போக்கில்
 வியாதியின் உக்கிரம்
 மருந்துகளை ஏய்த்திட
 மீண்டுமொரு சந்திப்பு
 மருத்துவரோடு...

 அறிகுறிகள், அவஸ்தைகளை
 பட்டியலிட்டேன்
 காலண்டர் சென்று
 மீண்ட அவரின் கண்கள்
 தழைந்தன தரை நோக்கி...
 மிஞ்சிய நாளை எண்ணுவது போல.
 உற்சாகத் தட்டலில்லை
 ஒய்யாரச் சிரிப்பில்லை
 அறை முழுக்க
 மெளனத்தின் பேரிரைச்சல்.

 துள்ளும் கன்றை
 கயிறு கொண்டு கட்டுதல் போல்
 எங்களிருவர் நாவை
 இழுத்துக் கட்டியது
 எல்லாவற்றையும் மிஞ்சிய
 இறைச் செயல்.

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar