நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

ஒரு கப் உற்சாகம்

Friday, 28 December 2012 5 கருத்துரைகள்


ஆசிரியர்: ‘மரபின் மைந்தன்' முத்தையா
வெளியீடு: விஜயா பதிப்பகம்
விலை: ரூ. 30/-
பக்கங்கள்: 120

       சின்ன சின்ன வாக்கியங்களில் பெரிய பெரிய செய்திகள்... கையடக்க நூலில் கடலளவு வழிகாட்டல்கள்...
            'நமது நம்பிக்கை' சுய  முன்னேற்ற மாத இதழ்  ஆசிரியரான திரு.மரபின் மைந்தன் அவர்கள் ('ரசனை' இலக்கிய இதழும்) தன்  எழுத்துக்களால் எல்லோருக்கும் ஊக்கம் அளிப்பவர்.  தமிழகம் நன்கறிந்த படைப்பாளரான இவர் உலக நாடுகளை வலம்  வரும் பேச்சாளர். சமயத் தமிழ் , சமகால இலக்கியம் அனைத்திலும் ஆளுமை மிக்க சிந்தனையாளர்  விளம்பரவியல் ஆலோசகர் நிறுவனங்களுக்கு பயிற்சி தரும் வல்லுநர் வெற்றித் தமிழர் பேரவையின் பொதுச்  செயலாளர் ஈஷாவின்  தமிழாக்க நூல்களில் பெரும் பங்கு வகிப்பவர் .(சமீபத்தில் ... 'ஞானத்தின் பிரம்மாண்டம்'!)

இனி 'ஒரு கப் உற்சாகம்'   உங்களுக்கும் ....


நன்றி சொல்லுங்கள்...

        செயல்படத்தூண்டும் சவால்களுக்கு
சாதிக்கத் தூண்டும் பகைவர்களுக்கு
சிந்திக்கத் தூண்டும் சிக்கல்களுக்கு

கவனக்குறையை உணர்த்தும் தோல்விகளுக்கு
வைராக்கியம் வளர்த்த அவமானங்களுக்கு
பாராட்டும்படி வளரச் செய்த பரிகாசங்களுக்கு

எப்போதும் துணையிருக்கும் நண்பர்களுக்கு
எப்போதும் வழிகாட்டும் எழுத்துகளுக்கு
எப்போதும் கைவிடாத நம்பிக்கைக்கு

நம்பிக்கை கொடுக்கும் கனவுக்கு
புத்துணர்வு கொடுக்கும் விடியலுக்கு
வாய்ப்புகள் கொடுக்கும் வாழ்க்கைக்கு

... அப்படியானால் நீங்கள் ஜெயிப்பீர்கள்!

         உங்கள் மனநிறைவுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் உழைக்கிறீர்களா?
விமர்சனங்களுக்கு அஞ்சாமல் உறுதியாய் இயங்குகிறீர்களா?
சுயமாக நிதானமாக முடிவெடுக்கிறீர்களா?

பதட்டமில்லாமல் செயல்படத் தெரியுமா?
கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றுவீர்களா?
தோல்விகளுக்குப் பின்னும் துடிப்புடன் எழுகிறீர்களா?
உங்களால் முடியுமென்று உறுதியாய் நம்புகிறீர்களா?

... அப்படியானால் நீங்கள் ஜெயிப்பீர்கள்!

நிரந்தரமான மகிழ்ச்சி...

துணிவான முடிவுகளில் இருக்கிறது
பணிவான வார்த்தைகளில் இருக்கிறது
கணிவான அணுகுமுறையில் இருக்கிறது
பரிவான உதவிகளில் இருக்கிறது

கனவுகளை வரையறுப்பதில் இருக்கிறது
இலட்சியத்தை செயல்படுத்துவதில் இருக்கிறது
இழப்புகளை ஈடுகட்டுவதில் இருக்கிறது
கணிசமாக சேமிப்பதில் இருக்கிறது

புரிந்து கொள்ளுங்கள்...

தோல்வி வந்தால் பொறுமை அவசியம்
வெற்றி வந்தால் பணிவு அவசியம்
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்
எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்

வாழ்வில் எளிமை விரயங்கள் தடுக்கும்
பேச்சில் இனிமை பிரிவுகள் தடுக்கும்
நேரத்தின் அருமை தோல்விகள் தடுக்கும்
வேலையில் திறமை வெற்றியைக் கொடுக்கும்


சோதனைச் சூறாவளியில்...

 அன்புள்ள உறவுகளில் ஆறுதல் தேடுங்கள்
அச்சம்தான் நம் எதிரி- அச்சத்தை உதறுங்கள்
எதிர்ப்பவர் நம் மனிதர்தான் - முடிந்தவரை மோதுங்கள்
எண்ணமே வாழ்வாகும் - நல்லதை எண்ணுங்கள்
நிச்சயம் தீர்வுண்டு - நிதானமாய் தேடுங்கள்

நீங்கள் விரும்பினால்...

பகைவர்களை மிகநல்ல நண்பர்கள் ஆக்கலாம்
பழைய தோல்விகளின் பாரங்கள் நீங்கலாம்
எத்தனை இழந்தாலும் இழந்த பொருள் மீட்கலாம்
என்றைக்கு இருந்தாலும் எண்ணியதை எட்டலாம்
வியர்வை செலவழித்து வெற்றிகள் குவிக்கலாம்
மவுனத்தை பதிலாக்கி விமர்சனங்களை வீழ்த்தலாம்
வெற்றியிலே தேங்காமல் அடுத்த செயல் ஆற்றலாம்

எதிர்ப்புகள் என்பவை...

 எதிர்ப்பதை தவிர எதுவும் செய்யாது
கத்தும், குலைக்கும், கடிக்க வராது
சத்தம் இருக்கும், சாதிக்காது
பயத்தைக் கொடுக்கும், பாதிக்காது
வளர்ச்சிக்கு வரமாய் வாழ்கின்ற சாபம்
வெற்றிக்கு வேண்டிய கட்டாய பாடம்

இன்னும் கொஞ்சம்...

 புன்னகை செய்யுங்கள்; பரிவாய் பேசுங்கள்
திட்டமிடுங்கள்; புதுமைகள் செய்யுங்கள்
விழிப்பாய் இருங்கள்; விட்டுக் கொடுங்கள்
நம்பிக்கை கொடுங்கள்; பெறுங்கள்

நிலையான நிம்மதி...

 வேண்டாத நட்பை விலக்குவதில்
வேண்டாத குணங்களை மாற்றுவதில்
சரியான அளவு உழைப்பதில்
சீரான அளவு உண்பதில்
அமைதி தவழும் இல்லங்களில்
உதவி செய்யும் நேரங்களில்
நேர்மையாய் செயல்படும் பொழுதுகளில்
புரிந்து கொள்ளும் உறவுகளில்
வரவுக்கேற்ற செலவுகளில்

அப்ப நீங்க...?

 இன்று பலர் தங்கள் வலிமைகளை உணர்வார்கள்
இன்று பலர் புதிய முயற்சிகளில் இறங்குவார்கள்
இன்று பலர் சுய விமர்சனத்தில் தெளிவடைவார்கள்
இன்று பலர் யாருக்காவது உதவுவார்கள்
இன்று பலர் தங்கள் இலட்சியங்களைத் தொடுவார்கள்
இன்று பலர் புதிய உற்சாகம் பெறுவார்கள்.

*****இனிய புத்தாண்டு
மற்றும்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்*******இங்குமிருக்கிறார் ...

6 கருத்துரைகள்
தனுர்பூசை   தீபாராதனை காண
கோயில் வாசல் வரை
நீண்டிருந்தது கூட்டம்

சிலைமேல் பூக்கள் அர்ச்சிக்கப் பட்டன
மந்திர உச்சாடனங்கள்  காதுகளை நிறைத்தன
காத்துக் கிடப்பதில் கால்கள் நொந்துபோய் 
'சாமிக்கு  என்னம்மா செய்யறாங்க?'
தாயை கேட்டது  ஒரு நடைபருவக் குழந்தை

'அர்ச்சனை செய்யறாங்க' என்று
வாய் மூடி கரம் குவித்தார் அத்தாய்.
'நமக்கெல்லாம் செய்யமாட்டாங்களாம்மா ?'
தொடுத்தது தன் அடுத்த கணையை பொதுவில்...

என் கையிலிருந்த பூக்களை
அந்த மழலையின்  தலை மேல் தூவிவிட்டு
வரிசை விட்டு வெளியேறினேன்
திருப்தியுடன் .

பிரிவின் கொடுந்துன்பம்

Saturday, 8 December 2012 14 கருத்துரைகள்

பேருந்துப் பயணத்தில்
முன்னிருக்கைக் குழந்தை
தாயின் தோளில் உறங்குகிறது.

அதன் தலையில்
குட்டிக் குட்டி இரட்டைச் சிண்டு
மதுவின் ‘அந்த'ப் ப்ராயத்தை
மனசில் திரையிடுகிறது.

பக்கத்து இருக்கையில்
ஒரு துறுதுறுக் குழந்தை...

தன்னை கவனிப்போரை
பெருமிதமாய் வளைய வரும் தன்
சுழல்கண்கள் படபடக்க
தன் மழலைக் குரலில்
சுற்றியிருப்போர் செவிகளை நிறைக்கிறது.

சிபியின் சின்னவயசு மழலைமொழி
சிம்மாசனமிடுகிறது மனசில்.

ஆளுக்கொரு தொலைவில்
தொலைதூரத்திலிருக்கும்
சிபியும் மதுவும்
அக்குழந்தைகள் இருவருமாய் மாற
அவ்விரு தாயாய் நானொருத்தியே.

***********************

பசியென்னும் பெரும்பிணிக்கு
மருந்தெனவேனும் நினைத்து
விழுங்கி வை கண்ணே
கிடைக்கும் உணவை
கொஞ்சமாவது.

நுனி நாவின் ருசியரும்புகளை
தொடவேண்டாம்...
நீ வாயிலிடும் கவளங்கள்.
நடுநாவில் வைத்து
‘மடக்'கென உள்தள்.
தொண்டையடைத்தால்
நிதானித்து நீரருந்து.

வீடு வரும்வரை
விரதமிரு.
விரும்பியதையெல்லாம்
ரசித்து ருசித்து சாப்பிட.

யாகத் தீயிலிட்ட ஆகுதிகள்
தேவர்களை அடைவது போல்
உங்களிருவர்க்காகவுமாய்
உண்டு கழிக்கிறோம் நாட்களை...
நாங்கள்.
வயிற்றில் சுமந்த நாள் கடந்தும்
மனசில் சுமக்கிறோம்.

*********************************

பிள்ளைகள் வீட்டிலில்லாத
வெறுமையை
ஊருக்கே பறைசாற்றும்படி
இளநீர் வியாபாரியின்
கிண்கிணி ஒலிக்கிறது
வாசலில் விடாப்பிடியாய்.

கொடுக்க நீயும்
வாங்க நானும் இருக்க
குடிக்க வேண்டியவர்கள்
இங்கில்லையே இப்போது.
போயேன் புண்ணியவானே...
பிரிவின் கொடுந்துன்பம்
எனைத் தீண்டிடாமல்
உன் மணிநாவடக்கி.

*********************************

பிரபஞ்சப் பேரமுது

Thursday, 22 November 2012 15 கருத்துரைகள்
(பட உதவி : http://thamaraimalar-chandrasekar.blogspot.in/2012/11/blog-post_18.html#comment-form)

அமிழ்தாய் தரையிறங்கும்
மழைத் தாரைகளுக்கு
மரங்களும் செடிகளும்
அசையாது ஆட்பட்டிருக்க
பாத்தி கட்டிய வயலையும்
பயணிக்கும் பாதையையும்
பாகுபாடின்றி அரவணைக்கின்றன
மழைக்கரங்கள்!

ஆசானின் தமிழ் மழையில்
இலயித்திருக்கும் வகுப்பறை போல்
நெடிதுயர்ந்த மரங்களும் மலையும்
சொல்லில் அடங்கா சுகமாய்
உள்வாங்கி உயிர் பெருக்க
நனையாமலே ஈரமாகும்
வேடிக்கை பார்க்கும் மனசு. 

வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)

Saturday, 13 October 2012 12 கருத்துரைகள்
         வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)

        இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. . முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டதை மகாவில்வம் என்பார்கள். (ஐந்து இலைக்கு மேலமைந்ததை நாம் முன் பதிவில் பார்த்தோம். அதுவும் மகா வில்வமென இராஜ இராஜேஸ்வரி அம்மா சொல்லியிருந்தாங்க )

       கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலையடி ஆப்ப வடிவமானது அல்லது உருண்டையாக இருக்கும். இலை விளிம்பு இடைவெளிகளில் வெட்டப் பட்டிருக்கும் இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும்.

        பூக்கள் ஐந்தங்க மலர் வகையைச் சேர்ந்தது. தெளிவில்லாத் தட்டைத்தகடு கொண்டது. மகரந்தத் தூள்கள் எண்ணற்றவை கனி பெரிய வகையைச் சேர்ந்தது. கெட்டியன ஓடாக இருக்கும். விதைகள் பல அகலத்தைக் காட்டிலும் நீளம் அதிகம்.

        இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது. ஸ்பரிசத் தீட்சைக்கு வில்வ மரம் விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.

வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொற்று வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும்.வெட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். சன்னி ஜுரங்களைப் போக்கும்.

ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் கழித்து, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயிற்று வலி தீரும், உடல் நலம் பெறும், ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.

இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும். மந்தத்தைப் போக்கும்.

பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிர்க்கும்.
பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கைகால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது .

வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.

      பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். பழ ஓடு காய்ச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும்.

வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும்.

விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு
புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.

வாய்ப்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.


வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் பழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல் வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.

இதை குழந்தைகளுக்கு அவுன்ஸ் கணக்கில் கொடுக்கலாம். வில்வ பழத்தின் உள் சதையை எடுத்து அதற்குத் தக்க படி எள் எண்ணெய் சேர்த்து, அதே அளவு பசும் பாலும் சேர்த்து பதம் வரும் வரை காய்ச்சி ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு வாரம் 2 நாள் தைலம் தேய்த்து வந்தால் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் கண் எரிச்சல், உடல் அசதி, கை கால் வீக்கம் தீரும் கண்கள் குளிர்ச்சியடையும். இப்படிக் குளிக்கும் நாட்களில் பகல் தூக்கம் ஆகாது உடலுறவு கூடாது.

பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும்.


வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போகும்.

வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல் வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும்.

வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் விட்டரைத்து விழுதாக்கி இரவு நேரங்களில் உடலில் காணப் படும் கரும் புள்ளிகளில் தடவி காலையில் முகம் அலம்ப வேண்டும். ஒரு மாதத்தில் நிறம் மாறி மறைந்து விடும்.

வில்வக் காயை சுட்டால் வெடிக்கும். வெடித்த காயின் உள்ளேயிருக்கும் சதையை மட்டும் எடுத்து அரைத்து சூடாக வலி, வீக்கம், கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் நாள்பட குணமாகும்.

வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும்.

வில்வ இலை, அத்தி இலை, வேப்ப இலை, துளசி இலை இவை நான்கிலும் 25 கிராம் எடுத்துக்கொண்டு 5 கிராம் கடுகையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன்னதாக 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் குடித்து வர 45 நாட்கள் முடிந்தால் கால் ஆணி நீங்கி விடும்.

வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.

வேர் நோய் நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும்.


(தேடத்தேட  இன்னும் வரும்...)பசித்த வயிறு... செவிக்குணவு!

Saturday, 6 October 2012 11 கருத்துரைகள்
அலை - தொலைபேசிகளற்ற
அந்தக் காலப் பிரிவெல்லாம்
கடிதங்களால் ஆற்றியிருந்தன

தகவல் பரிமாறத்
தாமதமானாலும்
தோன்றும் போதெல்லாம்
தடவிப் பார்த்து
படித்துப் படித்து
பழுப்பேறிய அத்தாள்கள்
கடவுளைக் காட்சிப் படுத்தும்
கோயில் சிலைகளாய்
தொலைவிலிருப்போரை
நெருக்கமாக்கியது.

பொருள்வயிற் பிரிந்த
போர்நிமித்தம் பிரிந்த
சங்கத் தலைவர்களை
காவியத் தலைவிகள்
வழிமீது வைத்தவிழி வாங்காமல்
காத்திருந்தனர்
பசலையேறிய மேனியொடு.

பெற்ற பிள்ளைகளை
கண்காணா தூரத்தில்
அறிவுக்கண் திறக்க அனுப்பிவிட்டு
விடுதியின் வரவேற்பறையில்
விரல்விடும் எண்ணிக்கையில்
இருக்கும் தொலைபேசிகளின்
தொடர்பெல்லைக்குள்
நுழைய முயன்று சோரும்
பெற்றோருக்கும்

சாப்பாட்டு இடைவேளையில்
செவிக்குணவாய்
தாய் - தந்தையின் குரலுக்குக்
கால்கடுக்கக் காத்திருக்கும்
பிள்ளைகளுக்கும்
சமர்ப்பணமாகும் இக்கவிதை
சறுக்கிக் கிடக்கிறது
அவர்களின்
கடக்கும் உணவிடைவேளை நேரத்தில்
சிதறிய பருக்கைகளின் பிசுபிசுப்பில்.

விடுதியின்
ஒட்டுமொத்த மாணாக்கருக்கும்
ரட்சகனாகும்
அச் சில இணைப்புகள்
பிரிவின் தகிப்பால்
கொதிகொதித்துக் கிடக்கின்றன
அந்திமுதிர் இரவிலும்...

சமன்படுத்தும் மென்தென்றலாய்
இணைப்பு கிடைத்த மறுகணம்
அலையழித்த கரையோர காலடித் தடங்களாய்
குதூகலம் நிறைந்து கும்மாளிக்கும் மனசில்
மறுநொடியே குற்றவுணர்வெழும்...
காத்திருக்கும், கைசோரும்
பிற பெற்றோரை எண்ணி.

முப்பது நிமிட அல்லாட்டம்
மூன்று நிமிடப் பேச்சாகி
காதில் பரவும் பிள்ளைகுரல்
மனம்தழுவி
பிரிவின் ரணங்களுக்கு மருந்திடும்.

காத்திருக்கும்
இருபக்கப் பேசிகளும்
அடுத்த அழைப்புக்காக!

நீரின்றி அமையாது உலகு

Wednesday, 3 October 2012 7 கருத்துரைகள்

அருவி நீர்:
          உடல் வன்மையை உண்டாக்கும். இரத்த பித்த நோயை அகற்றும். பெண்களின் வெள்ளைப் போக்கை நிறுத்தும்.

ஆற்று நீர்:
            வாத பித்த நோய்களைச் சமனப்படுத்தும். நாவறட்சியை நீக்கும். விந்தைப் பெருக்கும்.

கங்கை நீர்:
            உடல் எரிச்சல், நாவறட்சி, குன்மம், இளைப்பு, உள்சூடு, ஈளை, மிகு பித்தம் போன்றவற்றை நீக்கும்.

தாமிரபரணி நீர்:
           கண் புகைச்சல், காய்ச்சல், எலும்புருக்கி, ஈளை நோய்களை அகற்றும்

காவிரி நீர்:
           இருமல், வயிற்றுப் பொருமல், இரைப்பு, சளிக்கட்டு, நீர்க்குற்றம், நாவறட்சி ஆகியவற்றை விலக்கும்.

கோதாவரி நீர்:
              பல்வகைச் சொறிகளை நீக்கும். உடலில் மினுமினுப்பை ஊட்டும்.

வைகை நீர்:
            சோகை, கரப்பான், உடல் எரிச்சல், உதறுகால், விந்துக்குறை ஆகியவற்றை அகற்றும்.

நர்மதை நீர்:
           காய்ச்சல், விக்கல், வாந்தி, காமாலை, வயிற்றுப் பொருமல், கைகால் எரிச்சல், பெருமூச்சு, அயர்ச்சி ஆகியவற்றை நீக்கும்.

ஊற்று நீர்:
           பித்தம், மிகு வறட்சி ஆகியவற்றை விலக்கும்.

ஏரி நீர்:
            வாயுவை உண்டாக்கும்,

உப்பு நீர்:
            குடல் நோய், ஓடு வாயு ஆகியவற்றை குணப்படுத்தும்.

ஓடை நீர்:
           நாவறட்சியை உண்டாக்கும். உடல் வளமையைக் குறைக்கும்.
குளத்து நீர்:
          வாத நோய் மிகச் செய்யும். நீர் ஊற்றுப் போக்குள்ள குளமாக இருப்பின் உடல்நலத்துக்கு மிக நல்லது.

அல்லிக்குளத்து நீர்:
           விந்தைக் கெடுக்கும். அஜீரணக் கழிச்சலை தோற்றுவிக்கும். புண், சொறி முதலியவற்றை உண்டாக்கும்.

தாமரைக் குளத்து நீர்:
           வாத, பித்தக் கலப்புக் கோளாறுகளை உண்டாக்கும். தாடை நோயைத் தோற்றுவிக்கும். காய்ச்சல் உண்டாக்கும்.

சருகு ஊறிய நீர்:
            காய்ச்சலைத் தோற்றுவிக்கும்.

கடல்நீர்:
             உடல் குடைச்சல், இரத்தக் குன்மம், பெருநோய், வயிற்று நோய், பெரு வயிறு, நுரையீரல் தொடர்பான நோய்களை விலக்கும்.
 கடல் நீரைக் காய்ச்சி அருந்தினால் மல,நீர்க்கட்டு, உடல் கடுப்பு, நாக்குப் பிடிப்பு, சோர்வு, பல் நோய் முதலியவற்றை விலக்கும்.

காடி நீர்:
           மருந்தின் குணங்களைக் கெடுக்கும். அஜீரணம், சோகை, பித்த மயக்கம் ஆகியவற்றை நீக்கும்.

பாசி நீர்:
           பாசிநீரைக் குடித்தால் உடலில் தடிப்புகள் தோன்றும். குடல் கோளாறுகள் உண்டாகும். பலவிதமான சரும நோய்கள் தோன்றும்.

பனி நீர்:
            மிகு மூத்திரம், கண் படலம், உடல் வறட்சி, ஈளை, கழிச்சல், சொறி, கரப்பான் ஆகியவற்றை நீக்கும்.

நண்டுக்குழி நீர்:
            உடல் வெப்பம், எரிச்சல், மிகு நாவறட்சி, வாந்தி ஆகியவற்றைக் குணமாக்கும்.

பாறை நீர்:
             உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும். காய்ச்சலை உண்டாக்கும்.
சுக்கான் பாறை நீர்:
 கோழைக் கட்டு, சளி, சிறுநீர்க்கடுப்பு போன்ற குறைபாடுகளை உண்டாக்கும்.

கரும்பாறை நீர்:
           அறிவாற்றலைப் பெருக்கும். உடல் வனப்பை அதிகமாக்கும். மயக்கம், விடாக் காய்ச்சல், பித்தக் காய்ச்சல் ஆகியவற்றையும் நீக்கி உடலை நலமாக்கும்.

வயல் நீர்:
            உடல் சூடு மிகுந்தாலும் சமப்படுத்தும். தளர்ந்த உடலை முறுக்கேற்றும். காய்ச்சல் வேகத்தைக் குறைக்கும்.

வெந்நீர்:
             வெந்நீரை உணவு உண்டவுடன் அருந்தினால் சீக்கிரம் செரிமானமாகும். நெற்றி நோய், சீதக்கட்டு ஆகியவற்றையும் விலக்கும்.
            வெந்நீரை ஆற வைத்துக் குடித்தால் கீல் பிடிப்பு, மார்புச் சளி, காது குத்தல், கண்ணோய், மயக்கம், பித்த நோய், விக்கல், நாவறட்சி போன்றவற்றைக் குணமாக்கும்.
            கொதிக்க விடாது பதமாகச் சுட வைத்த நீர் குளிர் நடுக்கம், பலவகைக் கழிச்சல், மிகு காய்ச்சல் ஆகியவற்றைக் குணமாக்கும்.

நன்றி: பதார்த்தகுண சிந்தாமணி.

(அது சரி... மணல் கொள்ளை , ஆற்றுப் படுகைகளில் நில ஆக்கிரமிப்பு, அண்டை மாநிலக் கெடுபிடிகள், பன்னாட்டு குடிபானங்களின் அட்டகாசங்கள் இதெல்லாம் பதார்த்த குண சிந்தாமணி படைத்தவர் அறியாதவை அல்லவா...?!)

         பதார்த்த குண சிந்தாமணியை எழுதியவர் பதினெண் சித்தர்களில் ஒருவரான தேரையர் என்றழைக்கப்படும் இராமத்தேவர் .

           இவர் மருத்துவ ஆராய்ச்சிகளில்  தேர்ந்தவர். அகத்தியரின் சீடர். பின்னாளில் தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியர் இவர் என்றும் சொல்லப்படுகிறது.

         ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் உள்ள மருத்துவ குணங்களையும் எந்தெந்த கால கட்டத்தில் எந்தெந்த உணவுப் பொருள்களை உண்ணவேண்டும் , எதைஎதை சாப்பிட்டால் நோய் வராது என விரிவாக பதார்த்த குண சிந்தாமணி விளக்குகிறது.

         இவரின் பிற நூல்கள் ... மணி வெண்பா, மருந்து பாதம், ஞான போதம், நீர்க்குறி நூல், தைலவர்க்க சுருக்கம், வைத்தியர் மகா வெண்பா.
பொதிகை சார்ந்த தோரண மலையில் (கேரளம்) தேரையர் சமாதி அடைந்ததாக அறிகிறோம்.

 

இது இப்படித்தான்...!

Sunday, 16 September 2012 13 கருத்துரைகள்
“வெற்றிகரமாக ஆளுவதென்பது ஆளப்படுபவர்கள் நாம் ஆளப்படுகிறோம் என்று தெரிந்து விடாமல் பார்த்துக் கொள்வதுதான்!”

“மிகக் கூர்மையான, பெரிதும் நுட்பமான நினைத்ததை நினைத்தபடி சாதிக்கும் கருவி, இந்தப் பிரபஞ்சத்தில் முகத்துக்கு முகம் புகழ்வது தான்.”

“பழிவாங்கும் கலை என்பது, சந்தேகம் ஒரு சிறிதும் வராதபடி அதைப் பெரிதும் ரகசியமாக நிகழ்த்திக் காட்டுவது தான்.”

“அறிவாளிக்கு மிக உயர்ந்த வேதனை என்பது எந்த வேலையும் செய்யாமல் ஒருவனிடம் நல்ல பெயர் வாங்கும் திறமைதான்”

நன்றி: எரிக் ப்ரன்க் ரஸ்ஸல் 

 

‘தேன்' இருக்க பயமேன்?!

Wednesday, 12 September 2012 12 கருத்துரைகள்

         இயற்கையின் அற்புதப் படைப்பான மணம் வீசும் மலர்களிலிருந்து பெறப்படும் மகத்துவமான ஒன்று தேன். ரிக் வேதத்தில் கூட தேனின் சிறப்பு வெகுவாக சொல்லப்பட்டிருக்கிறதாம். வேதகாலத்து மகரிஷிகளின் முக்கிய பானமாக விளங்கியதும் தேன் தானாம்.
            தேனீக்கள் தம் முகத்தில் நீண்டிருக்கும் குழல்போன்ற அமைப்பை மலரில் நுழைத்து உறிஞ்சிய தேனுடன் தன் மார்பில் சுரக்கும் ஒருவகை சுரப்பி நீரையும் சேர்த்து பக்குவப்படுத்தி தம் வயிற்றுப் பகுதியிலுள்ள பை போன்ற அமைப்பில் நிரப்பிக் கொள்கின்றன. தம் கூட்டுக்குத் திரும்பும் தேனீக்கள் சேகரித்த தேனை தம் சிறகுகளை வேகமாக அடித்து விசிறி தேனடையின் ஒவ்வொரு அறையிலும் பாதுகாக்கின்றன.
             தேனீக்கள் அடிக்கடி இடம் விட்டு இடம் மாறும் தன்மையற்றவை எனக் கண்டறிந்த மனிதர்கள் செயற்கைக் கூடுகள் வைத்து தேனீக்களை வளர்த்து பெருமளவு தேனை சேகரித்து உபயோகிக்கக் கற்றனர். கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கக் கண்டறியும் முன்பே தேனின் பயனை அறிந்து உபயோகித்துள்ளனர் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளதாம்.
            உலகிலேயே அமெரிக்காவில்தான் தேன் உற்பத்தி அதிகம். அடுத்து ஆஸ்த்ரேலியா, கனடா, ஸ்பெயின், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி போன்ற நாடுகளைக் கூறலாம். இலங்கை மற்றும் இந்தியாவின் பல இடங்களிலும் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.
            இப்படியான தேன் சேகரிப்பவை மலைத் தேனீ, கொம்புத் தேனீ, அடுக்குத் தேனீ என மூவகையாக உள்ளன.
            
        உருவத்தில் பெரிய மலைத்தேனீ மலைகளிலும் செங்குத்தான பாறைகளிலும் தேன்கூடுகளைக் கட்டி அதிகளவு தேன் சேகரிக்கும். இவை கொடூரமானவை. எனவே பழக்கப்பட்டவர்கள் மட்டுமே பக்குவமாக இத்தேனடைகளில் தேன் எடுப்பர்.
          
         கொம்புத்தேனீக்கள் சிறிய கூடுகளையே கட்டும். மரக்கிளைகள், புதர்களில் மட்டுமே கட்டுமிவை விஷத்தன்மையற்றவை. இத்தேனடைகளிலிருந்து குறைந்த அளவே தேன் கிடைக்கும்.
            
         மரப்பொந்துகளிலும் பூமியிலுள்ள வளை போன்ற இடங்களிலும் அடுக்கடுக்காக அடைகளை அமைக்கும் அடுக்குத் தேனீக்களும் மனிதர்களுக்கு கெடுதல் செய்வதில்லை.
          
         மண் பாத்திரம், கண்ணாடிப் பாத்திரம், பீங்கான் பாத்திரம் ஆகியவற்றில் தேனை சேகரித்து பாதுகாத்து உபயோகிக்கலாம்.
            உடலுக்குப் புது உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் அளிக்கும் தேனை ஆரோக்கியமான சமயங்களிலும் குழந்தை முதல் முதியவர் வரை அருந்தலாம். ஒருசிலருக்கு மட்டும் தேன் ஒத்துக் கொள்ளாது. சருமத்தில் நமைச்சலை ஏற்படுத்தி கட்டிகளை உண்டாக்கும். வேறு சிலருக்கு வாந்தியும் வயிற்றுப் போக்கும், சிலருக்கு மூச்சுத் திணறலும் கூட ஏற்படலாம்.
          
         கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத் தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதிய தேன், பழைய தேன் என ஏழுவகைத் தேன் பற்றிய குறிப்புகள் பதார்த்த குண விளக்கம் எனும் நூலில் காணப்படுகிறது.
          
         திரிதோஷங்களால் ஏற்படும் நோய்களையும் மாந்தம் மற்றும் பசியின்மையையும் நீக்க வல்லது கொம்புத்தேன்.
           நுரையீரல் தொடர்பான சளி, காசம், காய்ச்சல், உடல்தடிப்பு, அக்கிப்புண், விக்கல் போன்ற நோய்களை நீக்க வல்லது மலைத்தேன். பசி விருத்தியாகவும், குரல் வளத்தையும் அளிக்க வல்லது இது.
           உடலுக்கு உஷ்ணமூட்டி, வாந்தி, அஜீரணம், விக்கல், பசியின்மை, இருமல், சளி, காசம் போன்ற நோய்களை நீக்கக் கூடியது மரப்பொந்துத் தேன்.
 சரும நோய்களை நீக்கவும், ரணம், கரப்பான், புழுவெட்டு போன்றவற்றை ஆற்றவும் சளியை அறுத்து காச நோய்க்கு மருந்தாகவும் மனைத்தேன் பயன்படுகிறது.
           கண் தொடர்பான நோய்களைப் போக்கவும், சளித்தொல்லையை நீக்கவும், இருமல், அஜீரணம், வாந்தி போன்றவற்றையும் கட்டுப்படுத்த வல்லது புற்றுத்தேன்.
         
         புதிய தேன் சக்தி மிக்கது. உடலுக்கு வெப்பத்தையும், சக்தியையும் தரவல்லது. இரத்தத்தைச் சுத்திகரிக்க வல்லது. பசியின்மையைப் போக்கும். கபத்தை அறுத்தெடுக்கும், மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றிலுள்ள அசுத்தப் பூச்சிகளை வெளியேற்றும். ஆழ்ந்த உறக்கத்தை அளிக்கும். பஸ்பம், செந்தூரம், மாத்திரை, பானங்கள் போன்ற பல மருந்துகளுக்குத் துணைமருந்தாகவும், அனுபானமாகவும் பயன்படுகிறது.
             நீண்ட நாட்களானாலும், தேனை சீரான முறையில் வைத்திருக்காவிட்டாலும் அது புளித்துப் போய் பழைய தேனாகும்.இது வாதம் மற்றும் மூல சம்பந்த நோய்களைத் தோற்றுவிக்கும். இதனை உபயோகித்தால் அஜீரணம், வாந்தி, வயிற்றில் எரிச்சல் ஆகியன ஏற்படும்.

தேனில் அடங்கியுள்ள சத்துகள்:             அயோடின், கால்சியம், கந்தகம், சோடியம், மக்னீஷியம், குளோரின், பொட்டாசியம், பாஸ்பரம், இரும்புச்சத்து, உப்புச் சத்து, குளூக்கோஸ், லெவுலோஸ் (Levlose) லாக்டிக் ஆசிட், டார்டாரிக் ஆசிட், சிட்ரிக் ஆசிட், ஆக்ஸாலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் உயிர்ச்சத்துக்களான பி-2, பி-6,சி, மற்றும் கே போன்றவை உள்ளன.

சுத்தமான தேனை அறிய:            தேன் சுத்தமானது தானா என்றறிய மை ஒற்றும் பேப்பர் (Blating paper) மீது ஒரு சொட்டு விட்டால் பேப்பரில் ஊறாது முத்துப் போல் நிற்க நல்ல தேன் என அறியலாம். வெல்லப்பாகு காய்ச்சி கலப்படம் செய்யப்பட்டதாயின் இச்சோதனையில் தெரிந்துவிடும்.
             தேனின் மருத்துவ குணங்களை மற்றொரு பதிவில் காண்போம்...

 

மரணத்தின் தூசி

Friday, 7 September 2012 10 கருத்துரைகள்

பிறக்கின்ற போதே இறக்கின்ற சேதி இருக்கின்றதென்பது மெய்தானே...
... .... ....

உடம்பு என்பது உண்மையில் என்ன... கனவுகள் வாங்கும் பைதானே...!

 

                எவ்வளவுதான் மனசை துடைத்து துடைத்து தெளிவாக்கிக் கொண்டாலும் ஒவ்வொரு மரணத்தின் தூசியிலும் கலங்கித் தான் போகிறது பாழும் மனசு.

                உறவாயிருக்கட்டும், நட்பாயிருக்கட்டும், அறிந்தவரோ அறியாதவரோ யாராகவேனும் இருக்கட்டும்... இறப்பின் இழப்பு சற்றேனும் சலனப்படுத்தவே செய்கிறது நம்மை. கணநேரமேனும் ஆட்பட்டு மீள்கிறோம்.

                போனவர் போக இருப்பவர் நினைத்து அனுதாபமெழுகிறது.

                மூன்று நாட்களுக்கு முன் தோழர் யாழி கோவையிலிருந்து அனுப்பிய குறுஞ்செய்தியால் திரு.கோவை ஞானியின் துணைவியார் இவ்வுலகைத் துறந்து உடல் கிடத்தினார் என்ற தகவலும் மனதைக் குடைந்தவண்ணமிருக்கிறது.

                அம்மையாரின் ஆன்மசாந்திக்கு நாம் பிரார்த்திப்போம்.பையும் மனசும்

Tuesday, 28 August 2012 14 கருத்துரைகள்
பையில் போட வேண்டியதை  மனசிலும்
மனசில் போட வேண்டியதை  பையிலும்
போடுவது தான் 
உங்க பிரச்னையே சுவாமி

பத்திரமாக இருக்க பையில் போடுங்கள்
சித்திரமாக ரசிக்க மனசில் வையுங்கள்

அன்பு காதல் பாசம் பரிவு
இதையெல்லாம்
பையில் வைத்திருக்காதீர்  ஓய்!
இதெல்லாம் மனசில் வைக்க வேண்டிய பண்டங்கள்

பணம் புகழ் பசி காமம்
எல்லாவற்றையும் தூக்கி 
பையில் போடுங்காணும்!

பையை சீக்கிரம்  காலி செய்யச்செய்ய
மனசு நிரம்பிக் கொண்டே இருக்கும்.
பையையே எறியும் பக்குவம் வந்தால்
மனசு நிறைந்து மானுடம் தழைக்கும்.
               - தஞ்சாவூர் கவிராயர் .

கவிராயரின் கவிதைகள் அமுத ரசம் நிரம்பியவை என்பதை நாமறிவோம் .

நாளை தனது இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர இருக்கும் அவருக்கு நமது பிரார்த்தனைகளை காணிக்கை ஆக்குவோம் வாருங்கள் தோழர்களே...

நம் விசாரிப்புக்களை அவர் உடனிருக்கும் நம் சுந்தர்ஜி அவர்களிடம் பகிர்ந்து கொள்வோம் . கவிராயர் பூரண நலம் பெற்றவுடன் அவரிடம் நம் மகிழ்வான விசாரிப்புக்களை  பகிரலாம்.

பிரார்த்தனையில் நம்பிக்கை இல்லாதவர்களின் நல்லெண்ணமும் நேர்மறை சிந்தனைகளும் கூட அவரது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அல்லவா...!!

நாளையும் நாளை மறுநாளும் (29.8.2012, 30.8.2012) நம் சிந்தனையில் அவரது  மேன்மைகள்  நிறைந்திருக்கட்டும்!

 

அரிதாரமற்ற அவதாரம்

Sunday, 26 August 2012 12 கருத்துரைகள்

தன் குழந்தை வயிறு நிறைக்க
ஒரு தாய்க்கு
விளையாட்டு பொம்மையாய்...

மோகித்தவளின் முகம் பொருத்தி
சிலாகிக்கும் காதல் பித்தனை
தெளிவிக்கும் மருந்தாய்...

மின் தடை இரவிலும்
தெருப்பிள்ளைகளின்
விளையாட்டுத் தடையறாமல்
இயற்கையின் வெளிச்சமாய்...

இரவோடிரவாய்
உறவறுத்து வெளியேறும்
அபலையின் வழித்துணையாய்...

வாழ்வின் மூர்க்கத்தில்
கொதிப்பேறிக் கிடப்பவனைத்
தணிவிக்கும் தண்ணொளியாய்...

மினுக்கும் உடுக்களிடையே
கம்பீரமாய் அரசோச்சி
ஜொலிக்கும் பெரு நட்சத்திரமாய்...

நிலவுக்கும் உண்டு...
அரிதாரம் தேவையற்ற
பல அவதாரங்கள்...!

நன்றி: நீலநிலா.. செப். 2012

ஸ்ரீரங்கம் செளரிராஜனின் “உரிய நேரம்”...

Thursday, 23 August 2012 6 கருத்துரைகள்
         “உலக இலக்கியம் படித்தவர்களுக்குச் சொல்ல என்னிடம் ஏதுமில்லை” என்று தன் கவிதைநூலின் முன்னுரையில் பிரகடனம் செய்யும் துணிவோடு திரு.செளரிராஜன் அவர்கள் வழுவழுக்கும் ஆர்ட் பேப்பரில் நம் கைகளில் தன் கவிதைநூலை தவழச் செய்திருக்கிறார். அவரது மகன் செள.ராஜேஷ் அவர்கள் முகமன் கூறி வரவேற்கிறார் முதல் பக்கத்தில்! கவிஞரின் 66-வது பிறந்தநாள் வெளியீடாக வரும் இந்நூல் செறிவோடும் அழகோடும் நம்மை நிறைக்கிறது.
        ஸ்ரீரங்கம் கோவிந்தராஜ் கவிஞரை நேர்கண்டது நூலின் பின் நான்கு பக்கங்களில் நமக்கு பலவற்றை தெளிவுபடுத்திச் செல்கிறது.
 கவிதையென்பது என்ன? எனும் கேள்விக்கு கவிஞர், “என்ன விளக்கினாலும் முழுமை பெறாமலிருக்கும் ஒரு வடிவமே கவிதை” என்கிறார்.
         கதையம்சம் கவிதைக்கு விலங்கா? சிறகா? எனும் கேள்விக்கு, “ ஒரு சம்பவம் கவிதைக்கான கருப்பொருளாக அமையும் போது கதைத் தன்மை தோன்றலாம். எதன்மீதும் இது கவிதைக்கானது இல்லை என்று முத்திரை குத்த முடியாது. எனவே கதைத் தன்மை ஒரு கவிதைக்கு விலங்காகாது. இயல்பேயாகும்” என்கிறார் கவிஞர்.
          “செளரியின் கவிதைகளில் முதலில் நம்மை வசீகரிப்பது அவற்றின் இருண்மையற்ற எளிமைதான். முதல்வாசிப்பில் அவரது கவிதைகள் லேசாகத் தோன்றினாலும் பிரித்துப் பல பொருள் கூறுமளவுக்கு அவற்றில் பல அடுக்குகள் ஒளிந்துள்ளன. சாதாரண சொற்களைக் கொண்டே அசாதாரண அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறார். அரிதான படிமங்களின் பயன்பாடு, அற்புதமான பதச் சேர்க்கைகள், மற்றும் காட்சிப்படுத்துதல் இவை இணைந்து இவரது கவிதைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.” இது பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியின் தமிழ்த்துறையிலிருக்கும் வ.நாராயண நம்பியின் அணிந்துரை.

சுத‌ந்திர‌ தேவிநின் திருவ‌டி ச‌ர‌ண‌ம்!

Wednesday, 15 August 2012 10 கருத்துரைகள்
வ‌ங்காள‌ம்: ப‌க்கிம் ச‌ந்திர‌ ச‌ட்டோபாத்யாய‌ர்

த‌மிழில் : ம‌காக‌வி பார‌தி


ந‌ளிர்ம‌ணி நீரும், ந‌ய‌ம்ப‌டு க‌னிக‌ளும்
குளிர்பூந் தென்ற‌லும் கொழும்பொழிற் ப‌சுமையும்
வாய்ந்துந‌ன் கில‌குவை வாழிய‌ அன்னை!
வ‌ந்தே மாத‌ர‌ம்!

தெண்ணில‌ வ‌த‌னிற் சிலிர்த்திடு மிர‌வும்
த‌ண்ணிய‌ல் விரிம‌ல‌ர் தாங்கிய‌ த‌ருக்க‌ளும்
புன்ன‌கை யொளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்த‌னை யின்ப‌மும் வ‌ர‌ங்க‌ளு ந‌ல்குவை.
வ‌ந்தே மாத‌ர‌ம்!


கோடி கோடி குர‌ல்க‌ ளொலிக்க‌வும்
கோடி கோடி புய‌த்துணை கொற்ற‌மார்
நீடு ப‌ல்ப‌டை தாங்கிமுன் னிற்க‌வும்
கூடு திண்மை குறைந்த‌னை யென்ப‌தேன்?
ஆற்ற‌லின் மிகுந்த‌னை அரும்ப‌த‌ங் கூட்டுவை
மாற்ற‌ல‌ர் கொண‌ர்ந்த‌ வ‌ன்ப‌டை யோட்டுவை
வ‌ந்தே மாத‌ர‌ம்!

அறிவுநீ த‌ரும‌நீ உள்ள‌நீ அத‌னிடை
ம‌ரும‌நீ உட‌ற்க‌ண் வாழ்ந்திடு முயிர்நீ
தோளிடை வ‌ன்புநீ நெஞ்ச‌க‌த் த‌ன்புநீ
ஆல‌ய‌ந் தோறும் அணிபெற‌ விள‌ங்கும்
தெய்வ‌ச் சிலையெலாந் தேவியிங் குன‌தே.
வ‌ந்தே மாத‌ர‌ம்!


ப‌த்துப் ப‌டைகொளும் பார்வ‌தி தேவியும்
க‌ம‌ல‌த் தித‌ழ்க‌ளிற் க‌ளித்திடும் க‌ம‌லையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ!
வ‌ந்தே மாத‌ர‌ம்!

திருநிறைந்த‌னை த‌ன்னிக‌ ரொன்றிலை!
தீது தீர்ந்த‌னை நீர்வ‌ள‌ஞ் சார்ந்த‌னை
ம‌ருவு செய்க‌ளின் ந‌ற்ப‌ய‌ன் ம‌ல்குவை
வ‌ள‌னின் வ‌ந்த‌தோர் பைந்நிற‌ம் வாய்ந்த‌னை
பெருகு மின்ப‌ முடையை குறுந‌கை
பெற்றொ ளிர்ந்த‌னை ப‌ல்ப‌ணி பூண்ட‌னை
இருநி ல‌த்துவ‌ந் தெம்முயிர் தாங்குவை
எங்க‌ள் தாய்நின் ப‌த‌ங்க‌ளி றைஞ்சுவாம்.
வ‌ந்தே மாத‌ர‌ம்! வ‌ந்தே மாத‌ர‌ம்!!

நீங்க போனதுண்டா இங்கே?

Thursday, 9 August 2012 11 கருத்துரைகள்
          இம்முறை கோடைக்கானல் பயணத் திட்டமான நான்கு நாள்கள் திட்டமிட்டபடி செம்மையாகவே எல்லாம் அமைந்தது. ஊருக்கு திரும்ப வேண்டிய முதல் நாள் இரவு தொடங்கிய மழையிலும் அதன் காரணமான மின் தடையிலும் எங்களுக்கான சோதனை ஆரம்பமானது.
           தங்கியிருந்த இடத்தில் எடுத்துச் சென்றிருந்த மெழுகு வர்த்திகள் மற்றும் டார்ச் லைட் துணையிருக்க தூக்கம் தழுவிய நேரம். பெரிய நாத்தனார் மகள் எழுந்து போய் பாத்ரூமில் வாந்தி எடுத்தாள். அடுத்த அரை மணியில் மறுபடியும். கையிலிருந்த முதலுதவி மருந்துகள் பலனளிக்கவில்லை. மணி 12.30

லோகேஷைத் தெரியுமா உங்களுக்கு?

Saturday, 28 July 2012 11 கருத்துரைகள்
       கொடைக்கானலின் லேக்குக்கும் பார்க்குக்கும் இடையில் வரிசை வரிசையான கடைகள் மட்டுமின்றி மசாலா சுண்டல், மாங்காய் பத்தை, சோளக் கதிர், பஞ்சு மிட்டாய், ஐஸ் க்ரீம் என தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டு கனஜோராய் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. மலர்க் கண்காட்சி மற்றும் அக்னி நட்சத்திரம் காரணமாய் மக்கள் கூட்டம் வெகு அதிகம்! அந்தி சாயும் நேரம். மதியம் அடித்த மிதமான வெயில் சரிந்து குளிர் தழுவி வீசியது மென்காற்று. 
        “அம்மாம்மா... இங்க பாரேன்... இந்த சின்னப் பையன் பஞ்சுமிட்டாய் செய்யும் லாவகத்தை...!” சிபி என்னைச் சுரண்டினான். “இப்பதான் வாங்கி சாப்பிட்டோம்” உப தகவல் வேறு! அரை ம‌ணி நேர‌மாய் என் க‌ண‌வ‌ரும் நாத்த‌னார் ம‌க‌னும் சிபியும் போட்டிங் போய்விட்டு ஷாப்பிங் சென்றிருந்த‌ எங்க‌ளுக்காக‌க் காத்திருந்த‌ன‌ர் அங்கு. என் கணவரும் மகளும் பர்ச்சேஸில் விடுபட்ட ஸ்வெட்டர் வாங்கச் சென்றனர். மரத்தடியிலிருந்த சிமெண்ட் கட்டையில் அமர்ந்திருந்த நாங்கள் அருகிலிருந்த தள்ளுவண்டியில் ஒரு கல் மேல் ஏறி நின்று  குனிந்தவாகில் மும்முரமாயிருந்த அப்பையனைப் பார்த்தோம்.

ஏற்ற இறக்கம் எவ்வுலகிலும்...

Thursday, 19 July 2012 7 கருத்துரைகள்

இம்முறை கொடைக்கானல் பயணத்தில் புதிதாக பார்த்த இடம்  இது. பில்லர் ராக் போகும் வழியில் இருக்கிறது இந்த வேகஸ் வேர்ல்ட். 

சமுதாயத்தால் மதிக்கப் படுபவர்களையும் மதிப்பிழந்தவர்களையும் இங்கு மெழுகு உருவில் தத்ரூபமாக காண முடிகிறது. 

கடைசி விருந்தின் பன்னிரண்டு சீடர்களையும் இயேசுவுடன் சேர்த்து ஒரே படமாக்க முடியவில்லை. (வலது பக்கமிருந்த பாதி பேர் அடங்கிய படம் அப்லோட் ஆகவில்லை) 

இயேசு பிறப்பை விளக்கும் தொழுவம் ஒன்றும் சித்தரிக்கப் பட்டிருந்தது. மாடு கன்றோ ஆடோ ஏதேனும் ஒன்றிருந்திருக்கலாம். மற்றபடி வெகு துல்லியம். தொழுவத்தில் வெளிச்சம் போதாமையால் எடுத்த படம் இருட்டடிக்க , அப்லோட் செய்யாமல் இருட்டடிப்பு செய்ய வேண்டியதாயிற்று.சமூக  அக்கறையுடனான ஒரு சித்தரிப்பு! அற்ப சந்தோஷத்துக்காக பலியாகும் இளம் தலைமுறையினர் யோசிக்க வேண்டிய இடம்.கையேந்தி அமர்ந்திருக்கும் மூதாட்டியின் சுருக்கம் விழுந்த முகத்தில் தெறிக்கும் உணர்வுகள் பார்ப்பவர் மனத்தைக் கரைக்கும் தன்மையுடையது. கோபிகைகளுடன் கிருஷ்ண லீலை சித்தரிப்புக்கு அடுத்திருந்த இம்மூதாட்டியின் உருவம் அவர்கள் வைத்திருந்த அறிவிப்பை உயிர்க்கச் செய்வதாய்...

 பரணில் எட்டிப் பார்ப்பது யார் தெரியுமா? சந்தனக் கடத்தல் வீரப்பன்!கச்சேரி களை கட்டுகிறது. எல்லாமே மெழுகு உருவங்கள் . இசைக் கருவிகள் மட்டும் உண்மை. வாசிக்க விருப்பமுள்ள பார்வையாளர்களை கட்டணம் வாங்கிக் கொண்டு ஐந்து நிமிடம் அனுமதித்தார்கள் 


விற்பனைக்காக  மெழுகினால் செய்யப்பட்ட பொருட்களில் சில .

கல்கத்தா உள்ளிட்ட சில நகரங்களில் இவ்வமைப்பினர் இதுபோன்று மேலும் பல உருவங்களை செய்து பார்வைக்கு வைத்துள்ளனராம். இங்கு நுழைவுக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு வாங்கும் முப்பது ரூபாய் மட்டுமே வரும்படியாம் நன்கொடை தர விரும்பினால் தரலாமாம்.
நன்றி:' மதுமிதா'  (புகைப்பட உதவிக்காக ...)

கல்வி உளவியல்

Saturday, 23 June 2012 9 கருத்துரைகள்
(மயிலாடுதுறை-திருவாரூர் பேருந்தில் காலை 7.30 மணிக்குஒரு ஆசிரியர், மாணவரிடையேயான உரையாடல்)

         இந்தக் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற ஒரு மாணவன் விடுமுறைக்கு தன் உறவினர் வீடு சென்று திரும்புகிறான் தன் சொந்த ஊருக்கு. ஏனெனில் அன்றுதான் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாள். (21.06.2012)

         மூவர் அமரும் இருக்கையின்  சன்னலோர இருக்கையில் அவன் அமர்ந்திருக்க, அருகில் துணைக்கு வந்த உறவுப் பெண்மணி. பேருந்தில் கூட்டம் அதிகரிக்கவும், அருகில் நின்ற ஒருவர் இடம் மாறி அமருமாறு கேட்கிறார்.  பெண்மணி சன்னலோரம் நகர பையன் நடுவில் மாறுகிறான். உட்கார்ந்த மறுநிமிடம், அவர் பேச்சைத் துவக்குகிறார்.

பயணி: என்ன படிக்கிறே தம்பி?

பையன்: பத்தாவது பாஸ் பண்ணியிருக்கேன்.

பயணி: இந்த வருஷமா?

பையன்: ம்...

பயணி: என்ன மார்க்?

பையன்: (தயங்கி, சங்கடத்துடன்) 307 தான்....

பயணி: 500ல் மீதி எங்க போச்சு?

(பையன் குற்ற உணர்வில் நெளிய, “ப்ளஸ் டூ-வில் வாங்கிடுவான் நிறைய” என உறவுப் பெண்மணி சமாளிக்கிறார்.)

பயணி: நானும் திருக்கண்ணபுரத்தில் ஆசிரியரா தான் பணி செய்யறேன்.       மார்க் ஷீட் எழுதத் தான் இப்ப போய்கிட்டிருக்கேன். எல்லோருக்கும் பதிவு பண்ணி கொடுக்க எல்லாப் பள்ளிகளிலும் மதியம் ஆயிடும். வீட்டுக்குப் போயிட்டு நீங்க பொறுமையா பதினொரு பண்ணெண்டு மணிக்கு பள்ளிக்கூடம் போனாப் போதும்.

(தலையாட்டிய பையன் பேசாதிருக்க, பின் இருக்கையில் கல்லூரி மாணவர்களின் அலைபேசியில் சமீபத்திய காதல் பாடல்களின் ஆரவார இறைச்சல். ஆசிரியர் மீண்டும் பேச்சைத் துவங்குகிறார்.)

ஆசிரியர்: என்ன பிரிவு கேட்கலாம்ன்னு இருக்கே, மேற்கொண்டு படிக்க?

பையன்: சி. எஸ். தான்...

ஆசிரியர்: ம்ம்...  தருவாங்களா இந்த மார்க்குக்கு? கேட்கணும், அப்பா அம்மாவை விட்டு தலைமையாசிரியர்கிட்ட விடாப்பிடியா... கேட்டு வாங்கினா மட்டும் போதாது. இன்னும் கடுமையா உழைச்சுப் படிக்கணும். ப்ளஸ் டூவில் 1200க்கு 1170க்கும் மேல மதிப்பெண் எடுக்கணும். வேலைக்குப் போகணும். கை நிறைய சம்பாதிச்சு பெரிய்ய ஆளாகணும். அப்பா, தாத்தாவை விட ...
         பின்னாடி பையன்க பேசிக்கிறாங்க பாரு... ‘அந்த வாத்தி போடவே மாட்டாண்டா... இதுல இன்னும் 30 மார்க்கு எடுத்திருக்கனும்டா'ன்னு... தான் சரியா படிச்சு எழுதாததை மறைச்சு வாத்தியார் மேல குறை சொல்றான் பார். இவன் ஒழுங்கா எழுதியிருந்தா அவர் ஏன் குறைச்சிருக்கப் போறார்? அதனால தான் பி.இ. சேர முடியாம ஐ.டி.ஐ. சேர்ந்திருக்கானுங்க...
          எங்க தலைமையாசிரியர் ஒருத்தர் ரொம்ப அழகாச் சொல்வார், ‘ஆடு மாடுங்களை அவுத்து விட்டா என்ன செய்யுது...? நேரா பச்சை தேடி மேயுது. இராத்திரி பூரா சுவாசிச்சிட்டிருக்கற மரமெல்லாம் சூரியன் உதிச்சதும் என்னா செய்யுது...? ம்... என்ன செய்யுது?

பையன்: ஒளிச்சேர்க்கை செய்யுது.

ஆசிரியர்: ஆங்... சூரியன் இருக்கற வரைக்கும் தனக்கான உணவு தயாரிக்குது. ஆனா மாணவப் பருவத்துல நாம என்ன செய்யறோம்...? டி.வி., கம்ப்யூட்டர், செல், கிரிக்கெட் இப்படி கவனத்தை பலதுலயும் சிதறடிக்கிறோம். அப்பறம் எப்படி அதிக மார்க் எடுக்க முடியும்?
          இந்த ரெண்டு வருஷமும் நீயும் இதெல்லாம் குறைச்சுக்கணும். விளையாட்டு வேணும்தான்... ஒருமணி நேரம் விளையாண்டதும், நான் படிக்கணும் போறேண்டான்னு சினேகிதன் கிட்ட சொல்லிட்டு வீட்டுக்கு வந்துடணும்.
          சி.எஸ். சேரணும்னியே... மேத்ஸ் வருமா உனக்கு?

பையன்: ம்ஹும்... அவ்வளவா வராது.

ஆசிரியர்: அப்புறம்? இப்ப மேத்ஸ்ல என்ன மார்க் எடுத்திருக்கே?

பையன்: 60 தான்...

ஆசிரியர்: 60 வாங்கியிருக்கியா! அப்புறம் வராதுன்னே... 35 வாங்கறவன் தான் வராதுன்னு சொல்லனும். 200க்கு 120 வாங்க முடியும் உன்னால. இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு படிச்சா இன்னும் கூட வாங்கிடலாமே...
           எம்பொண்ணு ப்ளஸ் டூவில 1164 மார்க்! நாகை மாவட்டத்திலேயே முதலா வந்தவ. பி.இ. முடிச்சிட்டு இப்ப 40,000 சம்பளம் வாங்கறா! பொம்பள புள்ள... அவளாலயே முடியுது... ஆம்பள புள்ள உன்னால முடியாதா?

         (பூந்தோட்டம் வந்துவிட அப்பெண்மணியும் அப்பையனும் எழுந்து இறங்கினர். பெண்மணி இறங்குமுன் சொன்னார்... ‘உங்க வார்த்தைங்களை மனசில் ஏத்தி உணர்ந்தான்னா பின்னாள்ல பெரியாளா ஆகிடுவான் சார். நன்றி!' ‘எடுத்துச் சொல்லுங்கம்மா' என்றபடி அவர்கள் இறங்க கூட்டத்தை விலக்கி வழி ஏற்படுத்திக் கொடுத்தார் அம்மருத்துவர்.)

          ‘நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'ன்னு வள்ளுவர் மருத்துவருக்கு மட்டுமா சொல்லிச் சென்றார்...?!

ஆச்சார்ய தேவோ பவ!!

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar