நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

செவிக்குணவு

Tuesday, 24 January 2012 24 கருத்துரைகள்
திருவிழாக் கூச்சலில்
தனித்து இனிக்கிறது
ஊதல்காரனின் இசை

காலை நேரத்தில்
உற்சாகமாய் தொடர்ந்தொலித்த
அவனது ஊதல்

வியாபார மந்தமாலோ
வயிற்றைப் புரட்டும் பசியாலோ
தட்டுத் தடுமாறுகிறது
மதியப் பொழுதில்

இசையால் மட்டுமே
உயிர்த்திருந்தான்
அவன்  

கூட்டம் நெரிந்த
மாலைப் பொழுதில்
இருள் விலக்க
எரியும் தீப்பந்தமாய்
உயர்ந்தோங்கிய
அவனது குழலொலி
எட்டும் செவிகளைப்
பிரகாசமாக்குகிறது

பெற்றோரை தம்
பிடிவாதத்தால் மசிய வைக்கும்
குழந்தைகள்
சூழ்ந்தனர் அவனை
இன்றிரவு உறங்கலாம்
அவனும்
நிறைந்த வயிறுடன்.

(கல்கியில் பிரசுரம் ஆனது )

இங்கிவனை யான் பெறவே...

Friday, 13 January 2012 17 கருத்துரைகள்
            அப்பாடா... நானும் இந்த வலையுலகில் நூறாவது பதிவை எட்டிவிட்டேன்! குருவணக்கமாக எங்கள் மகன் சிபிகுமாருக்கு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன். (வலைப்பூ தொடங்கி வைத்ததும், பல தொழில்நுட்பங்களை கணினியில் தேர்ந்து செழுமைப்படுத்தியதும், மிகப் பொறுமையாக அடிப்படை விஷயங்களை அறியச்செய்து தொடர்ந்து நான் செயல்பட உற்சாகம் ஊட்டியதும் ஆக இன்னபிறவற்றுக்காக)
      கல்வியின் நிமித்தம் பிரிவிலிருக்கும் அவனை நினைவுகளால் அரவணைக்கும் தருணங்களில்  பிரிவாற்ற துணை நிற்பது சிறு பிராயம் முதல் எடுத்து வைத்துள்ள புகைப்படங்களே. ஒருசிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
      

எங்கள்  இரு முத்துக்கள்அப்பாவுடன்...பாட்டி செல்லம்...(மாமனாரின் தாயார்)


அக்காவின் உடையணிந்து    ...

தோட்டத்துக்கு வரும் நிஜ மயிலுடன் எங்க தங்க மயில்!


பள்ளி செல்லத் துவங்கிய முதல் நாள் ... தாயுடனான முதல் பிரிவு!


அக்காவும் அத்தை பெண்ணும் உடன் நிற்க ...


அப்பாவும் பிள்ளையும் பிறந்தநாள் கேக் வெட்டிய நேரம் ...அத்தை பையனுடன் குளிர்பதனப் பெட்டியின் தட்டுகளை எழுது பலகையாக்கி...வயதுக்கு மீறிய வண்டி மீதான மாறா விருப்பம்...
கங்கை கொண்ட சோழபுரம்  கோயிலில் ...

திருச்செந்தூர் கடலில்...
கொடைக்கானலில் ...

 

எந்த வண்டியாயினும் உடன் நின்று படமெடுத்துக் கொள்வதில் தீரா விருப்பம்...
 

விளையாடப் போன இடத்தில் அடிபட்டுக் கிடந்த மைனாவை எடுத்து வந்து வீட்டில் உபசாரம்...

துப்பாக்கி சுடுவதில் அலாதி சுகம்... எந்த சுற்றுலா தளத்திலும் பார்த்தவுடன் நின்றுகொள்வான் . ஆசை தீர பலூன்களை குறிபார்த்து சுடுவதில் ஒரு திருப்தி.
கடந்த ஆண்டின் பிறந்த நாளில் அக்காவுடன்...பள்ளி முடிந்த நாளன்று நண்பர்களுடன் கொண்டாட்டம்...
பத்தாம் வகுப்புத் தேர்வை இந்தக் கட்டுடன் தான் எழுதினான் பிள்ளை. (நிஜ கட்டு! சுண்டு விரலில் சின்ன எலும்பு முறிவு)
சிரிஷ் சந்திரன் தான் அவனது ஹீரோ!

ஓவர் டிரைவ் படித்து, பார்த்து, பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் தன் நண்பன் அரவிந்த் உடன் இம்மூன்று  வண்டிகளையும் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தனர்.
அதையொரு கட்டுரை வடிவமாக்கி மோட்டார் விகடனுக்கும் அனுப்பினர்.மோட்டார் விகடனிலிருந்து தொடர்பு கொண்டு விசாரித்தார்கள். இருவரும் பதினெட்டு வயது நிரம்பாதவர்கள் என்ற காரணத்தால் அக்கட்டுரை பிரசுரிக்க இயலாமல் போனது.
அதனாலென்ன... விடுமுறையை உபயோகமாக ப்ரஜெக்ட் செய்து கழித்த நிம்மதி....நட நட நட நடப்பதுவும் ஸ்டைல் ....

சாகசக்காரன் என்ற பெயரெடுக்க தீரா அவா ...

நாராயணா ஜூனியர் காலேஜில் சேர வீட்டிலிருந்து புறப்படுகிறான்... முகத்தின் சிரிப்புக்கு  சற்றும் குறைந்ததல்ல மனதினுள்  பிரிவின் நெருடல்...

இனி இரண்டாண்டுகளுக்கு இதுதான் அவனது விலாசம்...

பிரிட்ஜ் கோர்ஸ் முடிந்து வீட்டுக்கு வந்ததும் கடலூர் பீச்சில் ஒரு கொண்டாட்டம்...
அப்பாவும் பிள்ளையும் கடலில் இறங்கினால் சாமானியமாக கரையேற மாட்டார்கள்.
உற்சாகமும் சந்தோஷமும் நிழல்போல் அவனுடன் எப்போதும்...


புகைப்படமெடுத்தல் அவனது பொழுதுபோக்கு ...  அவன் திறனுக்கு சில...


கணினியில் தானாகவே கற்றுத் தேர்ந்த பலவற்றுள் ஒன்றிரண்டு...
கார் ... அவனது பிரம்மாண்ட கனவு நாயகி...இவ்வாண்டின் பிறந்த நாளுக்காக பதிவிட அவனறியாமல் அவனது சேமிப்பிலிருந்து சுட்ட அவனது கிராபிக்ஸ் படம்...
மாதங்களில் 'அவன்' மார்கழி!


இப்பதிவுக்கான படங்களை உடனிருந்து தேர்வு செய்ததிலிருந்து, பதிவுக்கான தொழில் நுட்பங்களில் உதவி செய்த 'தாய்க்கு தாயான' ('தகப்பன்சாமி'க்கு பெண்பால்!) எங்கள் மூத்த முத்து... ப்ருத்வி மதுமிதா... நன்றி சொல்லவே எனக்கு வார்த்தையில்லையே... உன் 'கனவு' நிறைவேற பிரார்த்தனைகளையே நன்றியாக சமர்ப்பிக்கிறேன் மது... 

காத்தடிக்குது காத்தடிக்குது...

Tuesday, 10 January 2012 8 கருத்துரைகள்

      கடந்த டிசம்பர் கடைசி வாரத் தொடக்கம். வார இறுதியில் துணைவரும் நானும் நெல்லூர் சென்று மகனுடன் புத்தாண்டை கொண்டாட முடிவு செய்திருந்தோம். புறப்படும் நாள் நெருங்க நெருங்க டிசம்பர் 31 அன்று ஆந்திராவில் உருவாக இருக்கும் புயல் நாகப்பட்டினத்தில் கரைகடக்க இருப்பதாக வேலையிடத்தில் கேள்விப்பட்டு வந்து சொன்னார். (எங்க வீட்டில் கேபிள் இணைப்பு இல்லாததால் தொலைக்காட்சி நீள் உறக்கத்திலிருக்கிறது)
       நெல்லூரிலிருந்து மகன் தொலைபேசினான் வழக்கம் போல். புத்தாண்டுக்கு ஒரு நாள் தான் அவனது கல்வி நிறுவனத்தில் விடுமுறையெனினும், பெற்றோர் வந்தால் ஓரிரு நாள் முன்னதாக வீட்டுக்கு அனுப்புவார்களாம்; அதனால் ‘நீங்க மட்டும் வந்து கூப்பிட்டுப் போங்கப்பா' என்று. இவன் பிறந்ததும் ஒரு ஆங்கிலப்  புத்தாண்டில் தான் (1996) என்பதால் எங்கள் கொண்டாட்ட கிழமைகளில் புத்தாண்டுக்கு சிறப்பிடம். (அவனுக்காக சிறப்புப் பதிவு எழுத மகள் துணையுடன் கணினியிலிருந்து சேகரித்த அவன் தொடர்பான படங்கள் 'தானே' கூத்தில்  தடம் பிரியாமல் இருக்கிறது)
       தானே வந்து செல்லும் பிள்ளை, கூப்பிடவும் இவரும் உடனடியாக வேலையிடத்தில் விடுப்புக்கு ஏற்பாடு செய்துகொண்டு கிளம்பினார் வியாழன் இரவு (29.12.2011).
      மகளுடன் இரவு மூன்று மணிவரை ஏதேதோ கதைகள் பேசிவிட்டு, உறக்கத்துக்கு ஆட்பட்டேன்.  படார், திடீர் என சப்தம் கலைத்தது தூக்கத்தை. விழித்தால் மின்சாரம் தடைபட்டிருந்தது. எழுந்து வெளிச்சமூட்ட சோம்பலுடன் படுத்திருந்த என்னை, திறந்திருக்கும் சாளரங்களின் கதவுகள் கிளப்பின. மணி மூன்றரை ஆகியிருந்தது.

'தானே' தனக்குள்...

Sunday, 8 January 2012 7 கருத்துரைகள்
எங்களுக்கு புயலுடன் தொடங்கிய புத்தாண்டு இது. 'தானே' புயலில் இருந்து மீண்டு கொண்டிருக்கிறோம் ஒருவாறாய் .

'நாங்களும்' ஆண்டிறுதி முதல், ஆண்டு தொடக்கம் வரை
( 30 . 12 . 2011 - 5 . 1 . 2012 )  ஆறேழு நாட்கள் மின்தடையை அனுபவித்து வாழ்ந்தோம்.(சந்தோஷப் படுங்கள் மக்களே... தினசரி மின்தடை அனுபவித்த உங்கள் வேதனைக்கு மருந்தாய் இருக்கட்டும் இச்செய்தி.)

மனிதர்களை விடுத்து மரங்களைத்  தாக்கி அழித்தொழித்தது புயல்.

கடந்த ஒரு வாரமாய் கலவர பூமியாய் காட்சியளித்தது  எங்கள் ஊரின் தெருக்களும் தோட்டங்களும்.

தாறுமாறாய் வீழ்ந்து கிடக்கும் மரங்கள் ஈழத்து தமிழ் மனிதர்களாய் தோற்ற மயக்கம் தந்தன  எனக்கு...

டிசம்பர் 30 , 2011 அதிகாலை தொடங்கிய 'தானே' புயலின் சேதாரங்களில் இருந்து நெய்வேலி மீண்டெழ, கட்டமைக்கப் பட்ட நகரான இவ்வூரின் நகர நிர்வாகம் சிறப்பான செயல்பாடினை செய்து வருகிறது .

புயல் பற்றிய அனுபவங்கள் அடுத்த பதிவில்...


உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar