நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

தேஜாவின் சித்தி!

Thursday, 8 March 2012 15 கருத்துரைகள்
        இன்று + 2 தேர்வு எழுதப் புகும் மாணவ மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் அன்பு வாழ்த்துகளும் ப்ரார்த்தனைகளும்...!
          பெற்றோர்களுக்கு இந்நாள் அக்குழந்தைகளை இரண்டாம் தடவை பிரசவிப்பது போலொரு நிலை...!

        எப்படியென இன்னொரு பதிவில் விரைவில்!
                                         *********

          நெல்லூரிலிருந்து நேற்று மாலை சிபியிடம் தொலைபேசினோம். அவனுக்கும் தேர்வு நேரம். அவர்கள் பள்ளியிலிருந்து வெளியே பயணித்து வேறு பள்ளியில் தேர்வு மையமிருப்பதில் வெகு கொண்டாட்டம் அவனுக்கு. (பள்ளி வளாகத்தில் அடைபட்டுக் கிடந்த பிள்ளைகளுக்கு பள்ளிப் பேருந்தில் வெளியே போவதும் வரும்போது ஷாப்பிங் சென்று வருவதும் என கும்மாளம்...
       
        தேர்வுக்கான இறுக்கம் தளர்ந்து போவதில் எங்களுக்கும் மகிழ்வு.
மார்ச் 2 தொடங்கிய தேர்வு, மொழிப் பாடங்களைக் கடந்து நேற்று கணிதம் முதல் தாள். எப்படியிருந்ததென விசாரிக்கவும், அப்பா போலவே சுவாரஸ்யமாக விவரித்தான் பிள்ளை.

        “1 ஏ மேத்ஸ்க்கு ஒரு நாள் தானம்மா படிக்க நேரம் இருந்தது. சரியாக முடிக்க முடியாத சங்கடத்தோடே போனேன். தேர்வு தொடங்கியதிலிருந்தே என் தெலுங்கு ஃப்ரெண்ட் சூர்ய தேஜாவோட சித்தி எக்ஸாம் செண்டருக்கு கோயில் குங்குமத்தோட வந்து எல்லோருக்கும் இட்டு விடுவாங்க. எக்ஸாம் முடிச்சு வெளிய வரும்போதும் ஏதாவது சாப்பாடு செஞ்சி வந்தோ, இல்லை... தின்பண்டம் வாங்கியோ தயாரா வெச்சிருப்பாங்க. எல்லோருக்கும் ஊட்டி விடுவாங்க.

         இன்னைக்கு அவங்களையும் காணோம். மனசே சரியில்லாம இருந்தேன். கடைசி நேரத்தில் எக்ஸாம் ஹாலுக்கு போகுமுன் ஓடி வந்துட்டாங்க. அவங்க குங்குமம் இட்டதும் தெம்பா எழுதிட்டு வந்தேன்.”

          ஜனவரியில் பொங்கல் விடுமுறைக்கு வந்து போனவனைப் பார்க்காமல் கண்பூத்துக் கிடக்கிறோம். எல்லாப் பெற்றோரும் போய் பார்த்து வர, ‘வராதீங்க. வந்தா ஏக்கமாகிடும். வீட்டு நினைவு குறைய மூணு நாளாகும். தேர்வு முடிஞ்சு நானே வந்துடறேன்' என்ற அவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு போகிறவர்களிடம் வேண்டியது கொடுத்து விட்டு, பிரார்த்தனைகளுடன் ஆற்றமாட்டாமல் கிடக்கும் எங்கள் மனசில் பால் வார்த்தாங்க தேஜா சித்தி!

        மானசீகமாக வணங்கினேன் அவங்களை.

          தன் குழந்தைகளுக்கும் மேலாக தன் சகோதரி குழந்தைகளிடம் அன்புமேலிட இருக்கும் ‘சித்தி' களால் நிறைந்தது இப்பெண்கள் உலகம்!

        பெண்கள் தின வாழ்த்துகள்!

வெற்றியைக் கைப்பற்றுவோம்!

Tuesday, 6 March 2012 4 கருத்துரைகள்
       சாதாரண மனிதனை சாதனை மனிதனாக, சரித்திர மனிதனான வெற்றிபெறச் செய்யும் சமன்பாடாக திரு. செண்பகராஜனின்
            
           தன்னம்பிக்கை+முயற்சி+கடின உழைப்பு=வெற்றி
என்ற கோட்பாட்டைத் தாங்கிய சுயமுன்னேற்ற நூல் 'வெற்றி உங்களை அழைக்கிறது'.
        
         ‘You should be updated; Otherwise you will be outdated!'என்ற கருத்தை பல தளங்களில் அழுத்தமாக விளக்கிச் செல்கிறார்.
        
          குழந்தைப் பருவத்திலிருந்து நல்லொழுக்கத்துடன் நெறிப்படுத்தப் படுபவர்கள் சாதனைச் சிகரமடைவது சுலபமே என்றும்,

         ஊக்குவிப்பு என்னும் ஊட்ட மருந்து செலுத்தப் படாத குழந்தைகள் பிற்காலத்தில் தாழ்வு மனப்பான்மை உடையவர்களாகவும், சமூக விரோதிகளாகவும் உருமாற வாய்ப்பு அதிகம் உள்ளதென்றும்,

         மனிதம் என்னும் நெற்பயிர் செழித்து வளர, இயற்கை உரமாவது ஊக்குவிப்பே என்றும்,

        நல்ல மனித உறவுகள் தான் ஒருவரின் வெற்றிக்கு துணை செய்யும் என்றும் தெளிவுபடுத்தும் நூலாசிரியர்,

        தனது தனித் திறன்களைக் கண்டுணர்ந்து அவற்றைப் பொலிவு பெறச் செய்து, 1+1=11 என்ற சமன்பாட்டை சாத்தியப்படுத்த இந்நூல் வாயிலாக முனைகிறார்.

         வெற்றிக்கான தூண்டல்களாக இவர் குறிப்பிடும்

       *இலட்சியங்களைத் தீர்மானித்தல்

       *நல்ல மனப்பான்மை

       *புதுப்பித்துக் கொள்ளுதல்

       *வித்தியாசமாகச் சிந்தித்தல்

       *உயரிய நோக்கத்தைக் கனவு காணுதல்

       *ஆக்கப் பூர்வ சிந்தனை

       *மொழியாளுமையை வளர்த்துக் கொள்ளுதல்

       *நிறைய வாசித்தலால் அறிவை விரிவாக்கல்

       *மனித நேயம்
ஆகியவை நாம் எப்போதும் நினைவில் நிறுத்தத் தக்கவை.

        இப்படியான நூல்களைப் படிப்பதால் என்ன பயன்?

        பலனடைந்தவரே முன்னுரையில் (குறிஞ்சிச் செல்வர் கொ.மா.கோதண்டம்) தெளிவாக விளக்குகிறார்.

         நூலின் பல இடங்களில் சினிமா மற்றும் நாட்டு நடப்புகளில் பிரபலமாக்கப் பட்டவற்றை காணமுடிகிறது. அவர் சொல்வதுபோல், நாம் விரும்பியோ விரும்பாமலோ நம் புலன்களை ஆக்கிரமித்துக் கிடக்கும் அவற்றை தன் கருத்துகளை அறிவுறுத்த பயன்படுத்திக் கொள்வதும் தவறல்ல. அளவான மசாலா உணவின் சுவை கூட்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

       பெருந்தலைவர்கள், சாதனையாளர்கள், திரைத் துறையினரின் படங்களும், அவர்களின் சிறப்புகளும் காட்டிச் செல்வது நூற்பொருளை பலப்படுத்துவதாய் உள்ளது. காமராஜருக்கும், குற்றாலீஸ்வரனுக்கும்; கமலுக்கும், சச்சினுக்குமிடையே நம் படமும் இடம்பெற வேண்டுமென்ற உத்வேகத்தை மாணவர்களிடம் துண்டும்படி செண்பகராஜனின் எழுத்துநடை வசீகரிக்கிறது.

       பழமொழிகள், அறிஞர்களின் சொல்லாடல்களைத் தக்க இடங்களில் கையாண்டிருப்பது அழகு.

      ‘கற்றது கால்குலேட்டர் அளவு; கல்லாதது இண்டர்நெட் அளவு' என்ற இவரது புதுமொழியும் ரசிக்கத் தக்கது.

         ‘பொழுது பார்க்கும் கருவி, இங்கு பழுது பார்க்கப்படும்' என்ற கடிகாரம் பழுது பார்க்கும் கடையின் வாசகம் மூலம், எதையும் புதுமையாக மாற்றி யோசித்து செய்வதில் மக்கள் கவரப்படுகிறார்கள் என்று காட்டி நின்றது அறிவார்ந்த செயல்.

        வாசிப்போரின் வெற்றிப் பயணத்தில், ஏதேனும் ஓர் தருணத்தில், தனது நூல் வரிகள் வெற்றிப் படிக்கட்டாகி உதவ வேண்டுமென்ற திரு. செண்பக ராஜனின் ஆவலும், ஆர்வமும் போற்றுதற்குரியது!

நூற்பெயர் :        வெற்றி உங்களை அழைக்கிறது
நூலாசிரியர்:     ‘நீல நிலா' செண்பகராஜன்
வெளியீடு:         கந்தகப் பூக்கள் பதிப்பகம்
                                    120. குட்டியனஞ்சான் தெரு,
                                    சிவகாசி- 626 123.
பேச:                     9843677110
விலை: ரூ.80/-

         

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar