நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

பயணத் தடை

Sunday, 27 May 2012 10 கருத்துரைகள்
அம்மணிக் கெழவிக்கு
எமன் ஓலையனுப்பி
ஏழெட்டு நாளாச்சு
கிளம்பற வழியாயில்ல கெழவி.

ஊர் சுத்தி திரியிற ஒத்த மவன்...
கண்ணாலம் கட்டாத கோயில் காளை
கிழவி தலைமாட்டுல நிக்க
அசலூரில் வாக்கப்பட்ட பெத்த மவள்
சேதி கேட்டு ஓடி வந்து
ஆச்சு மூணு நாளு

கெடக்கற வீட்டு மேல
கெழவிக்குப் பிடிப்போன்னு
ஈசான்ய மூலைய பேர்த்து
தண்ணியில கரைச்சு
ரெண்டு சங்கு புகட்டியாச்சு

நண்டும் சிண்டுமா
புள்ளைங்களோட தவிக்கவிட்டு
கண்ணாலமான அஞ்சாறு வருசத்துல
கண்ணை மூடுன கட்டுனவன் - அந்தக்
‘கட்டையில போனவன்'
அரூபமா கெழவிகிட்ட நின்னு
வலுக்கட்டாயமா இழுக்கறான் தன்னோட...

மசியல கெழவி
‘பாசக்'கயிறு பலமும் கொறைவில்ல
காத்திருந்து காத்திருந்து
ஊரு ஒறவுக்கு அலுத்தும் போச்சு

கெழவியாண்ட வந்த
பங்காளி மவனொருத்தன்
“நாங்க பார்த்துக்கறோம்
உம் புள்ளிங்கள...”
கூவினான் கெழவி காதுல.

வாயடைச்சிருந்த கெழவிக்கு
வார்த்தைங்க கண்ணால கசியுது
“உங்க பவிசு தெரிஞ்சுதானே
தவிக்குது மனசு!”

நன்றி: 'காக்கை சிறகினிலே ' - மே'12

தடுத்தாட்கொண்ட மழை

Tuesday, 15 May 2012 8 கருத்துரைகள்
வெயில் பூத்துக் கிடந்தவொரு
அந்தி மாலை...
திடுமென சூழ்ந்த மேகம்
குளிர்ந்து மழை தருவித்தது.

நனையாமல்
பள்ளி விட்டு
வரவேணும் குழந்தைகள் ...

வழக்கமாய் கிறக்கம் தரும்
மண் வாசமும் ஈரக் காற்றும்
பாசப் பரிதவிப்பில்
ஈர்ப்பற்றுப் போனது.

மூடிய கதவும்
திறந்த சாளரமும்
சாரல் தடுக்கவும்
சாலை தெரியவும்...

சாளரம் தாண்டிய
சாத்துக்குடி மரத்தின்
நனைந்து சொட்டும் இலைகளின்
சிறு மறைப்பில்
கிளை மாறிக் கிளையமர்ந்து...
நனைந்த  சிறகுகளை
சிற்றலகால் கோதிவிட்டு
உலர்த்திக் கொண்டிருக்கும்
சிட்டுக் குருவியும்
காத்திருக்கு - தன்
கூடு சென்றடைய.

நன்றி: 'காக்கை சிறகினிலே ' மே- 2012

வாழ்த்தலாம் வாங்க!

Friday, 4 May 2012 7 கருத்துரைகள்


அவர்களுடைய பணமும் ...

ஒட்டுத் துணியும் நழுவுகின்ற
சுரணையின்றிப்
பசியில் புலம்பியபடி
தெருவோரம் புரள்கிறாள்
உடல் முழுவதும்
புண்களைச் சுமந்த
மனநிலை தவறிய பெண்ணொருத்தி ....!

வீங்கிய சோகை முகத்திலும்
சின்னப் புன்னகை தேக்கி
வருவோர் போவோரிடம்
கையேந்துகிறாள்
இனிப்புக் கடை வாசலில்
அந்த முதியவள் ...!

தண்ணீரைக் குடித்தே
பெருத்த வயிற்றுடன்
பெரியவள் ஒருத்தியின்
இடுப்பில் அமர்ந்தபடி
அரை மயக்கத்திலேயே
அம்மா, அய்யா என்கிறது
ஓர் இளங்குருத்து ...!

எண்ணெய் காணாத
பரட்டைத் தலையும்
எங்கும் கிழிந்த
அழுக்குச் சட்டையுமாய்ப்
பசியோடு திரிகிறார்கள்
பால் மணம் மாறாத
பச்சிளம் பிள்ளைகள் ...!

இவர்களில்
யாருக்குமே தெரியவில்லை ....
ஆயிரம் இலட்சம் கோடிகளிலும்
அள்ளி வீசப்படும் இலவசங்களிலும்
தம் வாழ்நாள் பசிக்குமான
பணமும் சேர்ந்துதான் இருக்கிறதென்று...

                               -கிருஷ்ணப்ரியா
                               http://krishnapriyakavithai.blogspot.in/

கிருஷ்ணப்ரியாவின்

           "வெட்கத்தில் நனைகின்ற ..."

கவிதைத் தொகுப்பு வெளியீடு ...

05.05.2012- மாலை 6 மணிக்கு...

நிகழ்வு: சுகன் 300 வெள்ளி விழா

இடம்:

       ரெட் கிராஸ் கூட்ட அரங்கு
       மேம்பாலம் ,
       மருத்துவக் கல்லுரி சாலை ,
       தஞ்சாவூர் .


உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar