நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

உன்னத மாணவர்களுக்காக...

Tuesday, 26 February 2013 12 கருத்துரைகள்

         குழந்தைகள் பெற்றுக்கொள்வது வெகு சுலபம் தான். நல்வழியில் வளர்த்தெடுப்பது தான் ...

           நாம் வாங்கிக் குவிக்கும் பொருட்களால் அல்ல... நாம் காட்டும் அன்பினால் தான் குழந்தைகள் சிறந்தவர்களாகிறார்கள்! சதாசர்வ காலமும் குழந்தைகள் மேல் நமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் எத்தனை அதிக தடவை இச்சாதனையை நாம் செய்கிறோம் என்பதில் இருக்கிறது நம் குழந்தைகளின் அதீத வளர்ச்சி.

           பிரகாசமான குழந்தைகளுக்கு பெற்றோரே நிரந்த ஆசிரியர்.  கற்றுக் கொள்ள உதவும் வசதிகள், உதவிகள், விமர்சனங்களை செய்யுங்கள். அறிவிற்கும், திறமைகளுக்குமான பயிற்சிக்கும், ஆரோக்கியமான விமர்சனத்திற்கும் குழந்தைக்கு உதவி தேவைப்படும். சிறிய விண்ணப்பங்களையும் மதிக்கவும் பெரிய விஷயங்களை விவாதிக்கவும் வேண்டும். ஒரு விண்ணப்பம் மறுக்கப்பட்டாலும் அவன் நேசிக்கப் படுவதை அவன் அறிய வேண்டும். தன்மதிப்பை ஏற்படுத்தி நல்ல பழக்கங்களை உண்டாக்க வேண்டும். 

      வெற்றி பெறுவதற்காக நமது நாணயத்தை இழப்பதும்,குறுக்குவழிகளைத் தேர்ந்தெடுப்பதும் பயனுள்ளதல்ல. நாம் நமது நற்பண்புகளுக்கு விசுவாசமாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டியது நம் பொறுப்பே.


             “சிந்திக்கவும், ஆச்சர்யப்படவும், கனவு காணவும் அவர்களுக்குக் கற்றுத் தாருங்கள். வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளவும் கற்பியுங்கள். புகழ்ச்சியையும் முகஸ்துதியையும் வேறுபடுத்திக் காணவும் கற்பியுங்கள். சூரிய அஸ்தமனத்தின் சந்தோஷத்தை, பகிர்வதன் சந்தோஷத்தைக் கற்பியுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நிமிர்ந்து நடக்கக் கற்பியுங்கள்.”
- கலீல் கிப்ரான்.


       இதற்குத் தான் நம் குழந்தைகளிடம் சுய மதிப்பை உண்டாக்க
வேண்டியிருக்கிறது.


           கடினமான பருவ வயதில் கைப்பிடித்து நடத்தி, பெரியவர்களானதும் அவர்கள் வழியில் செல்ல அனுமதிக்க வேண்டும். நாம் எப்படி வாழ்கிறோம் என்பதுதான் நம் குழந்தைகள் எப்படி வாழ்வார்கள் என்பதை பெரிதாக முடிவு செய்கிறது.

       ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு  எழுதிய ஒரு கடிதத்தின் சுருக்கம் ஒன்று படிக்கக் கிடைத்தது... உங்கள் பார்வைக்கு இதோ...

“எல்லா மனிதர்களும் நேர்மையானவர்களல்ல; உண்மையானவர்களல்ல என்று அவன் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் ஒவ்வொரு போக்கிரிக்கும் ஒரு கதாநாயகன் உண்டு. ஒவ்வொரு சுயநலமான அரசியல்வாதிக்கும் தியாகியான தலைவன் உண்டு. ஒவ்வொரு எதிரிக்கும் ஒரு நண்பன் உண்டு என்றும் அவனுக்குக் கற்றுத் தாருங்கள். 

           முடியுமானால் பொறாமையை விட்டு அவனை விலக்குங்கள். அமைதியாக இருப்பதன் இரகசியத்தைக் கற்றுத் தாருங்கள். கொடுமை செய்பவன் விரைவில் காலில் விழுவான் என்று அவன் கற்றுக் கொள்ளட்டும்.


ஏமாற்றுவதை விடத் தோற்பது எவ்வளவோ பெருமையானது என்று அவனுக்குக் கற்றுத் தாருங்கள். 


              எல்லோருமே தவறு என்று கூறினாலும் தன் சொந்தக் கருத்துக்களில் நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள்.


               நளினமானவர்களோடு நளினமாகவும் கடினமானவர்களோடு கடினமாகவும் பழக அவனுக்குக் கற்றுத் தாருங்கள்.


கண்ணீர் விடுவதில் அவமானமில்லை என்று அவனுக்குக் கற்றுத் தாருங்கள். 


            சிடுமூஞ்சிகளை அலட்சியப்படுத்தவும் அதிக இனிமையாகப் பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் கற்றுத் தாருங்கள். 


              தன் தசையையும் மூளையையும் அதிக விலைக்கு விற்கவும், ஆனால் தன் இதயத்திற்கும் ஆன்மாவிற்கும் விலையை நிர்ணயிக்காதிருக்கவும் கற்றுத் தாருங்கள். 


               கூக்குரலிடும் கூட்டத்துக்கு செவிசாய்க்காதிருக்கவும், தான் சரியென்றால் எதிர்த்துச் சண்டையிடவும் கற்றுத் தாருங்கள். மென்மையாகக் கற்றுத் தாருங்கள். ஆனால் கெஞ்ச வேண்டாம். ஏனெனில் தீயில் சோதித்தால்தான் இரும்பு சுடர்விடும்.


பொறுமையின்றி இருக்கும் துணிச்சல் அவனுக்கு இருக்கட்டும். துணிவோடிருக்கும் பொறுமை இருக்கட்டும்.


               தன்னிடம் உன்னத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள். ஏனெனில் அப்போதுதான் மனித இனத்தில் அவன் உன்னத நம்பிக்கை வைப்பான்.


          இது பெரிய விண்ணப்பம் தான். ஆனால் உங்களால் என்ன செய்ய முடியுமென்று பாருங்கள். 

  என் மகன் அவ்வளவு உன்னதமானவன்.”
-----------------

       இப்படி எந்த விண்ணப்பமும் தர நாமும்...
             
        உத்திரவாதம் தர
                   இன்றைய அரசின் கல்விக் கொள்கையும்,
                  கல்வி நிறுவனங்களும்,
                 ஆசிரியப் பெருந்தகைகளும்
                                    தயாரில்லை....

       பணம், புகழ், சமூகத்தில் உயரிய இடம்... இதை மனதில் வைத்தே பெரும்பாலோர் ஓட்டம்.

         அரைக் கிணறு (பத்தாம் வகுப்பு) முக்கால் கிணறு (பனிரெண்டாம் வகுப்பு) தாண்ட வேண்டி நம் குழந்தைகள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டுள்ளனர்.

              நம் பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் அவர்களுக்கு சமர்ப்பிப்போம்!பயணிகள் கவனிக்கவும்...

Tuesday, 12 February 2013 14 கருத்துரைகள்

இரயிலுக்கு காத்திருந்த
பயணிகள் கூட்டத்தில்
ஓரிடத்தில் நிற்கவொண்ணா பொடிசுகள்
ஓரணியாய் திரண்டு
ஒருவர்பின் ஒருவராக
சட்டை பிடித்து பெட்டி கோர்க்க
ஓடத் தொடங்கிற்று
அங்கொரு கும்மாள இரயில்...

மூட்டை முடிச்சுகளை
கும்பல் மனிதர்களை
மனச்சுமை மறக்க
குட்டித் தூக்கம் போடுபவர்களை
நிறுத்தங்களாக்கி
உற்சாகக் கூவலுடன்
வளைந்து நெளிந்து
ஓடிய அவர்களுடன்
கட்டணமின்றி பின்னோக்கிப் பயணித்தன
வேடிக்கை பார்த்தவர்களின்
'இனி ஒருபோதும் திரும்பாத'
வசந்தப் பொழுதுகளும்.

வந்து நின்ற நிஜ இரயிலில்
அடித்து பிடித்து
அனிச்சையாய் ஏறின
வெற்றுடம்புகள்.
கடந்த காலத்தில் மேய்ந்து கொண்டிருந்த
மனசெல்லாம்
கிளம்பிய வண்டியில் தாவி ஏறி
தத்தம் உடல் புகுந்தன.
இழுத்து விட்ட பெருமூச்சோடு
வேகமெடுத்தது இரயில்.

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar