நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

கள்ளம் பெரிதா? காப்பான் பெரிதா?

Friday, 28 June 2013 10 கருத்துரைகள்
              மாலை நேரம். அதுவொரு செல்போன் கடை. பள்ளி, கல்லூரிகள் துவக்க நேரமென்பதால் கூட்டத்துக்கு குறைவில்லை. ஏகப்பட்ட மாடல்கள்... விலையைப் பற்றி யாருக்கு கவலை? பணம் கொடுக்கப் போகும் பெற்றோருக்கல்லவா...! பிள்ளைகளுக்கு எந்த மாடலில் எவ்வளவு வசதி என்பது பற்றியே பேச்சு. நம் உடல் பொருள் ஆவி அனைத்தும் 'பெற்றிருக்கும் ஒன்று ரெண்டு'க்காகத் தானே...

"நானெல்லாம் படிக்கிற காலத்தில்..." ஒவ்வொரு அப்பா அம்மாவுக்கும் மனசில் அவங்கவங்க அனுபவங்கள் ... ஒப்பீடுகள்... ஒரு hmt வாட்ச் தந்த குதூகலத்தை இன்றைய iphone கூட தருவதில்லை.

பெரிதினும் பெரிது கேட்கவும், கிடைத்தவுடன் அதற்கும் பெரிது தேடவுமாக... திருப்தியில்லாத இன்றைய தலைமுறை...

போன் கைக்கு வந்ததும், தயாராக வாங்கி வைத்திருந்த சிம் கார்டை  பொருத்தியபடி நண்பர்கள் புடைசூழ WiFi சிக்னல் கிடைக்கும் இடம் தேடி பறந்து விடுகிறார்கள் பலர்.

எந்த கடையில் எது நல்லதாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும் என்பது பெற்றவர்களின் விசாரிப்பு என்றால் எந்த வீட்டருகே WiFi சிக்னல் கிடைக்கிறது என்பது நண்பர்கள் மூலம் பசங்களுக்கு அத்துப்படி.

தங்களுக்கு செலவின்றி இலவசமாக டவுன்லோட் செய்வதற்கும் பேஸ்புக் பார்க்கவும் WiFi சிக்னல் கிடைக்கும் வீட்டின் அருகிலுள்ள மரத்தடியிலோ மதில் சுவரிலோ இடம் பிடித்துவிடுவார்கள்.

கல்வியால் பெற்ற அறிவை ஆக்கப் பூர்வமானவைக்கு மட்டும் உபயோகப் படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்...!

வீட்டில் இணைய இணைப்பு இருந்தும் சிலர் ஒரு த்ரில்லுக்காக இந்த வேலை செய்வதை  அறிந்த போது, திருட்டைக் கூட சாமர்த்தியம் என்று எண்ணத் துவங்கி விட்ட இளைஞர்களின் மனப்பாங்கை மாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் சமூகத்தால் அலட்சியப் படுத்தப் பட்டுவிட்டதை உணர முடிந்தது.

பெரிய கல்வி நிறுவனங்களின் வளாகங்களில், அலுவலகங்களில் WiFi வசதி இருக்கிறது இப்போதெல்லாம்.

BSNL நிறுவன மோடம்
வீட்டு உபயோகத்திற்காக இருக்கும் மோடம்களில் சிலதிலும் கூட இவ்வசதி இருக்கிறது. BSNL பிராட்பேண்ட் அலுவலகத்தில் இணைப்பின்போது WiFi வசதியுள்ள மோடம் / இல்லாத மோடம் என்று கேட்பார்கள். சில முறை நாம்  WiFi வசதி இல்லாத மோடம் கேட்டிருந்தாலும் 'ஸ்டாக்  இல்லை' என்று சொல்லி WiFi வசதியிருக்கும் மோடத்தை கொடுத்துவிடுவார்கள். இதனால் பலருக்கு இணைப்பு பெற்ற பிறகு தங்கள் மோடத்தில் WiFi வசதி இருப்பதை மறந்துவிடுவார்கள். பின்னர் ஒருநாள் தங்கள் மோடத்தில் ஆண்டெனா இருப்பதை பார்க்கும்போது பொறி தட்டும். ஆண்டெனா இல்லையென்றால் WiFi இல்லை என்று நினைத்துகொள்ள வேண்டாம். சில WiFi வசதியுள்ள மோடம்களில் ஆண்டெனா இருப்பதில்லை!!!

மார்கெட்டில் கிடைக்கும் பிற நிறுவன மோடம்
பிராட்பேண்ட் இணைப்பின்போது ஒருசில முறை அவர்களிடம் மோடம் எதுவுமே ஸ்டாக் இல்லை என்று கடையில் வாங்கிக்கொள்ள சொல்வார்கள். இவ்வாறு மார்கெட்டில் கிடைக்கும் மோடத்தில் WiFi on/off செய்வதற்கு தனியாக Button கொடுத்திருப்பார்கள்.அவ்வாறு Button இருக்கும் பட்சத்தில் உங்கள் உபயோகத்திற்கு பிறகு off செய்து கொள்ளலாம். BSNL நிறுவன மோடம்களில்  இவ்வசதி கிடையாது. அதற்காக பாஸ்வேர்ட் 'ஐ போட்டுவிட்டால் இதுபோன்ற நூதனத் திருட்டில் நம் போன் பில் எகிறாமல் பார்த்துக் கொள்ளலாம்.இந்த மோடம் லாக் எப்படிப் போடுவதென எங்க வீட்டு கணினி நிபுணர் சிபி சொல்கிறார்...


உங்கள் Address Bar'ல் 192.168.1.1 என்பதை டைப் செய்து பிறகு 'Enter' கொடுங்க.

பிறகு வரும் Dialogue Box'ல் Username'க்கு நேராக admin என்று கொடுக்கவும். Password'-ம்  admin தான். பின் உள்நுழையவும்.

 (பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் அனைத்திற்கும் Username,  admin பொதுவானது.)

இப்போது வரும் பக்கத்தில் இடது ஓரத்தில் Wireless'ஐ கிளிக் செய்யவும்.

அடுத்து வருவதில்  Security'ஐ க்ளிக் செய்யவும்.

அதில் WEB  Encryption என்று உள்ள இடத்தில் Disabled என்றிருக்கும் பட்சத்தில் Enabled என்று மாற்றிக்கொள்ளவும்.

பிறகு Current Network Key என்ற இடத்தில் 1'ஐ தேர்வு செய்யவும்.

பிறகு Network Key 1 என்ற இடத்தில் தங்களுக்கு பிடித்தமான பாஸ்வேர்ட்'ஐ இடுங்கள்.  (நான்கிலும் வேறு வேறு பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டு Current Network Key 'ஐ மாற்றி மாற்றியும் பயன்படுத்திக் கொள்ளலாம்)

எல்லாம் முடிந்து Save/Apply என்பதை மறக்காமல் க்ளிக் செய்யவும்.

 *பி.எஸ்.என்.எல் நிறுவன மோடத்திற்கு மட்டுமே இது பொருந்தும்.


Step 1

Step 2

Step 3

Step 4

Step 5

Step 6

Step 7


உஸ்ஸ்... இவ்வளவு கஷ்டம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் புதிதாக இணைப்பு பெறும்போது WiFi வசதி வேண்டுமாயின் மோடத்தை கடையில் வாங்கிகொள்ளலாம். ஆனால் நெட் பிரச்னை என்று BSNL அதிகாரிகளை கூப்பிட்டால், 'உங்கள் மோடத்தில் தான் பிரச்னை.... எங்க மோடமாயிருந்தால் பிரச்சனையில்லை... நாங்களே சர்விஸ் செய்துவிடுவோம்' என்பார்கள்!!! 

கள்ளம் பெரிசா? காப்பான் பெரிசா? என்பார்கள் அந்த காலப் பெரியவர்கள். பூட்டு என்று ஒன்றிருந்தால் சாவியும், கள்ள சாவியும் இருக்கத் தானே செய்கிறது  என்கிறான் சிபி!

எதனால் ???

Sunday, 23 June 2013 17 கருத்துரைகள்
http://nilaamagal.blogspot.in/2011/03/blog-post_20.html

இப்பதிவெழுதி இரண்டாண்டுகள் கடந்த நிலையில் மறுபடி இரு மரணங்கள் ...
மனம் வருத்தும் நிகழ்வுகள்...

கடந்த மாதம் வீடருகே எண்பதை நெருங்கிய ஒரு திடகாத்திர மனிதரொருவரின் திடீர் மரணம். சர்க்கரை வியாதி, இரத்த அழுத்த நோய் இரண்டுக்கும் சரிவர மாத்திரை எடுக்காத காரணத்தால் மாரடைப்பு என அறிய நேரிட்டது. நெய்வேலி  நிறுவனத்தின் பாதுகாப்புப்பிரிவில்  பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். தமிழார்வலர். இளமையில் மேடை நாடகங்களில் பங்கேற்றவர். மனைவி, இரு மகன்கள் (நிறுவன ஊழியர்கள்), ஒரு மகள், அனைவருக்கும் பேரக் குழந்தைகள், போதுமான பண வசதி என குறைவற்ற வாழ்வுதான்.

மகன்களும்  தத்தம் மனைவிகளை அவரது கவனிப்பில் எந்த குறையும் வைக்காமல் பராமரிக்கச் செய்திருந்தனர். உடற்பயிற்சியிலும், ருசியாக உண்டு மகிழ்வதிலும் அவருக்கு இருந்த நம்பிக்கை மாத்திரைகளில் இல்லை போலும்.

அடுத்த நாள் கசிந்த தகவலின் படி அவர் தூக்கு போட்டு இறந்திருக்கிறார்!

எதனால்??

ஏதேதோ பரப்புரைகள்.

தன் மனம்போல் வாழ்ந்தவர் தன் மரணத்தையும் தானே தீர்மானித்துக் கொண்டதை  பிடிவாதம் என்பதா? அடாவடி என்பதா? இயலாமையின் முதல் துளிர்ப்பு என்பதா? அகம்பாவத்தின் கடைசி சொட்டு என்பதா?

************

போன வாரம் சொந்த ஊருக்கு கோவில் காரியமாக செல்ல நேர்ந்தது.

எங்கப்பா வீட்டிலிருந்து மூன்று வீடு தள்ளியிருந்த இவரை விவரம் தெரிந்த நாளிலிருந்தே தெரியும் எனக்கு. கடின உழைப்பாளி. சிக்கனமானவரும் கூட. இருக்குமிடம் தெரியாது என்று சொல்வது போல் அமைதியானவர். மகள்கள் மகன்களுக்கு திருமணமாகி எல்லோரும் சுக வாழ்வு. ஒரு மகனிடம் இவரும், ஒரு மகனிடம் மனைவியும் என அடுத்தடுத்த வீட்டில்  வாழ்வு. இவருக்கும் எண்பதைக் கடந்த வயது தான். நடமாட்டத்தில், தன்னாலான உதவிகளை செய்து கொண்டு இருந்தவரே.

என்னதான் பெரிய மருமகள் கவனித்துக் கொண்டாலும், நிற்காத வயிற்றுப் போக்கில்  பக்கத்து வீட்டிலிருந்த மனைவியை  அழைத்தும் வராத மன வேகத்தில் பத்தாயத்தின் மேல் (நெல் குதிர்) இருந்த களைக் கொல்லியை குடித்து விட்டார்.

அடித்து மோதி அழுதென்ன, ஏழு மேளம், அதிர்வேட்டு என அமர்களமென்ன ... இறுதி ஊர்வலம் ஏகப் பிரமாதம்!

**************

பிறப்பு நம் கையிலில்லை. இறப்பும் தான். பிரிவின் தாளாமையாலோ, வறுமை தாங்காமலோ வாழ்வை வெறுத்து மரணம் தேடுபவர்கள் ஒருபுறமிருக்க, நோய்க்கு பயந்து அல்லது தளர்ந்து சக மனிதர்களின் ஆதரவும் அன்பும் வற்றிப் போனதால்  தன்னுயிரை தானே போக்கிக் கொள்ளத் துணியும் இம் முதியவர்கள் போன்றோரை  பார்க்கும் போது மனம் திடுக்கிடவே செய்கிறது.

வாழ்ந்த காலத்தில் எத்தனையோ வலிகளைத் தாங்கி மீண்டெழுந்தவர்களுக்கு பார வண்டியின் அச்சு முறிவதற்கு முன் ஏற்றப் பட்ட கடைசி மயிற் பீலியாய் ஏதேனும் மன வேறுபாடுகள் காரணமாய் அமைந்துவிடுவது துர்ப்பாக்கியமே.

இருவருக்குமே வாழ்க்கைத் துணையிடம் அன்னியோன்யம் இருந்திருக்கவில்லை என்ற செய்தியும் நெருடலுக்குரியது... யோசிக்க வேண்டியது.

****************

http://marabinmaindanmuthiah.blogspot.in/2013/04/blog-post_5.html

திரு.மரபின் மைந்தன் முத்தையாவின் இந்தப் பதிவையும் நினைவு படுத்துகிறது பாழும் மனசு. 

மகா பிராமணன்

Monday, 10 June 2013 5 கருத்துரைகள்

 •      ‘காமக்குரோதங்களை விட்டொழிக்கிறவன் எவனோ அவனே மகாபிராமணன்' எனும் ஞானம் பேரரசன் கௌசிகனை விசுவாமித்திரனாக்குவது தான் இந்நாவலின் சாரம். பிராமணனாக வேண்டுமென்ற வேட்கையும் கூட காமம் தான் எனும் சிந்தனைத் தெளிவு நம்மையும் புடமிடுகிறது. 

 •       காம குரோதம் இல்லாதவனெனில் செருக்கு அறுத்தவன் என்றும், மரண துன்பத்திலிருந்து வசிஷ்டர் விடுபட்டது செருக்கை வென்றதால் தான் என இந்திரனே சொன்னபடியால், படைப்பின் இரகசியத்தை கண்டறிந்து விஸ்வாமித்திரனே ஒரு உலகைப் படைக்கும் ஆற்றலையும் பெற்றதெப்படி என உணர்த்தி நிற்கிறது நாவல். இதில் உபநிடதத்தின் இரகசியங்கள், காயத்ரி மந்திரத்தின் பெருமை அனைத்தும் அடங்கியுள்ளன. வேதகாலத்து உலகம் சமகால மொழியில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தேவகன்னியர்கள் இவ்வுலகில் வந்து தவ சிரேஷ்டர்களோடு குடும்பம் செய்ததாக புனையப்பட்ட கற்பனையை மேஜிக்கல் ரியலிசம் என்பர் இக்கால இலக்கியவியலாளர்கள்.

 • வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு வந்த கௌசிக மாமன்னன் அவரது உபசரிப்பின் அஸ்திவாரம் ஆசிரமப் பசுவான காமதேனுவின் வழித்தோன்றல் நந்தினி தான் என்றறிந்து அதனை தனக்காக தரும்படி வசிஷ்டரை வேண்ட, ‘உனக்குத் தேவையானதை தவத்தின் மூலம் பெற்றுக் கொள்' என்கிறார் வசிஷ்டர். அவர் மேலிருந்த அன்பு துவேஷமாகிறது அரசனுக்கு. அவனுக்கு ஈசனருள் பெறவேண்டிய மார்க்கத்தைக் காட்ட தன் சீடன் வாமதேவனைப் பணிக்கிறார் வசிஷ்டர்.

 • இயற்கையின் பாதையிலிருக்கிற தடையை அப்புறப்படுத்தி, அதன் செயல்பாட்டினை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது பிராமணனின் தர்மம் எனவும், உலக நன்மைக்காக தவம் புரியும் பிராமணன் தனக்கு பிரியமானவற்றைக் கவனிக்கக் கூடாதெனவும், புலனாகாதவற்றிலிருந்து புலனறிவுக்கு வருகிற சக்தியை மையப்படுத்தி ஒருபுறமிருந்து பெற்றதை மறுபுறம் பரவலாக்கி உலகுக்கு தருகிற இயந்திரமாகிய பிராமணன் பிரியம், பிரியமற்றதற்கு அப்பால் இருப்பவன் என்றும் வாமதேவனையும் நம்மையும் தெளிவிக்கிறார் வசிஷ்டர்.

 •  தவப்பயனால் கிட்டிய சிவ அஸ்திரங்களை கௌசிகன் வசிஷ்டர் மேல் செலுத்த வெகு எளிதாக அவற்றை எதிர்கொள்கிறார் வசிஷ்டர். தனது பிரம்மதண்டத்தால் கௌசிகனின் பகைமனதை மாற்றுகிறார். தோல்வியால் துவண்ட கௌசிகனை வாமதேவன், தவமென்பது யாதென தெளிவிக்கிறான்.

 • “தத்தம் விருப்பங்கள் நிறைவேற யாரெல்லாம் என்னென்ன செய்கின்றார்களோ அதெல்லாம் தவமே.

 • மனமொரு விளக்கு கம்பம். ஒரே இடத்தில் குவித்தால் பிரகாசம் மிகுவது போல் மனதை ஒருநிலைப்படுத்த மனதின் அங்கங்களாக இருக்கிற பொறிகளைப் பிடிக்க வேண்டும். மனம் அலைபாயாதபடி பிடித்து நிறுத்தும் போது மையக்கோட்டில் சுழலும் பம்பரம் போல் நோக்கத்தில் சுழலும். பாம்பு பின் முகமாக சுற்றிக் கொண்டால் தலையானது வாலைப் பிடிப்பது போல் நோக்கம் நிறைவேற செய்யவேண்டியது மறுபுறம் பதிலாகக் கிடைக்கும். இதுவே தவத்தின் முதல் கட்டம்.

 • விதை மரமாவது போன்றதே தவம். காலம், இடம் பொருந்தினால் மட்டுமே சரியாகும். தன் நிலையைக் காப்பாற்றிக் கொண்டு, எதிர்வரும் நிலையை தனக்கேற்றபடி வடிவமைத்துக் கொள்ளப் போராடுவதே தவம்.

 • பாம்பாட்டி பாம்பை ஆட்டி வைப்பது போல, மனதை தன்போக்கில் வசப்படுத்திக் கொள்கிறவன் இந்த உலகை ஆட்டி வைப்பான்.

 •  நீ என்னவாக வேண்டுமென்பதை நிச்சயித்துக் கொள். அதற்கு உன் முயற்சியே சாதனை என நம்பு. முயற்சி சாஸ்திரத்தின் வழியாக நடைபெறுமானால், சிறிதளவு கொடுத்து அதிக அளவு நிரப்பிக் கொள்வதைப் போன்றது. அது சாஸ்திரத்துக்கு அப்பாற்பட்டதெனில், ஒரு படி அரிசி கொடுத்து மூன்று படி கேழ்வரகு வாங்குவது போலாகும்”.

 •  இவ்வுபதேசங்கள் வாமதேவனால் நமக்கும் சித்திக்கின்றன.

 • சத்திரிய குலத்தில் பிறந்த  விஸ்வாமித்திரர், தன் உடலோடு சொர்க்கம் புக விரும்பிய திரிசங்கு மன்னனுக்காக தனியாகவொரு சொர்க்கலோகம் படைக்குமளவு மகாபிராமணனாய் உயர்வடைந்ததை நாவல் ஊர்ஜிதப்படுத்துகிறது.

 • கன்னட இலக்கிய உலகில் சொல்லத்தக்க ஓரிடம் உண்டு தேவுடு நரசிம்ம சாஸ்திரிக்கு. (1896 - 1962) குழந்தை இலக்கியம், திரையுலகம், பத்திரிகையாளர், கல்வி பிரச்சாரம், விடுதலைப் போராட்ட வீரர் என பன்முகத்தன்மை கொண்டவர் இவர். அறுபதுக்கும் அதிகமான இவரது படைப்புகள் கன்னட இலக்கியத்தில் என்றும் அழியாதவை. மகா பிராமணன், மகா சத்திரியன், மகா தரிசனம் ஆகிய மூன்று நாவல்களும் போதும் இவரது பெருமையைப் பறைசாற்ற. இவரது கடைசி நாவலான மகா தரிசனத்தை வேதம் என்றே கூறலாம்.

 • இறையடியான் சாகித்ய அகாதெமிக்கு சர்வக்ஞர் உரைப்பா, சலங்கைச் சடங்கு, போராட்டம், அவதேஸ்வரி, புரந்தர தாசர் போன்ற நூல்களின் மொழிபெயர்ப்பால் நிலைத்த புகழுடையவர். இவர் மொழிபெயர்த்த பணியம்மா நாவல் கல்லூரிகளுக்குத் துணைப்பாட நூலாக உள்ளது. அவரது அனுபவமிக்க மொழியாக்கம் கன்னடத்தை தமிழுக்கு நெருக்கமாக்குகிறது.

 • நூல் பெயர்: மகா பிராமணன்
 • கன்னட மூலம்: தேவுடு நரசிம்ம சாஸ்திரி
 • தமிழாக்கம்: இறையடியான்
 • வெளியீடு : சாகித்ய அகாதெமி
 • பக்கங்கள்: 384
 • விலை: ரூ.180/-

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar