நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

குடிக்கலாம் வாங்க

Tuesday, 30 July 2013 17 கருத்துரைகள்
பால் பானங்கள் சில...

உறவினர்களோ நண்பர்களோ வீட்டுக்கு வந்தால் உடனடி உபசரிப்பு சூடான பாலில் காபி அல்லது தேநீர் மற்றும் பூஸ்ட் ஹார்லிக்ஸ் போன்ற தயாரிப்புகள். மாறுதலாக சில பானங்களைக் கொடுத்து உபசரிக்கவும், நாம் தினசரி பருகவும் சித்த மருத்துவ முறையில் சில பானங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்சி சுவை நீர்:
தோல் நீக்கிய இஞ்சியை (ஒரு இஞ்ச்) நசுக்கி அரை டம்ளர் நீரில் காய்ச்சி வடிகட்டி, அரை டம்ளர் சூடான பாலில் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பரிமாறவும். 
காலை காபிக்கு பதில் இதை தினசரி அருந்த, நெஞ்சு கரிப்பு, புளிஏப்பம், வாயு தொல்லை ஆகியவை நீங்கும். நல்ல பசி ஏற்படும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். இஞ்சி ஒரு காய கல்ப மூலிகையாதலால் முதுமையைத் தள்ளிப் போடும். (அப்படிப் போடுங்க!)

பாதாம் சுவை நீர்:
பாதாம் பருப்பு 2, முந்திரிப் பருப்பு 4, கசகசா 1 டீஸ்பூன் இவற்றை ஊற வைத்து அரைத்து சூடான ஒரு டம்ளர் பாலில் கலந்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க, வாய்ப் புண், வயிற்றுப் புண் குணமாகும். இதை தினமும் குழந்தைகளுக்குக் கொடுக்க புரதச் சத்து எளிதில் கிடைப்பதோடு நாள் முழுதும் உற்சாகமாகச் செயல்படத் துணைபுரிகிறது.

செம்பருத்திச் சுவைநீர்:
காம்பு நீக்கப்பட்ட ஐந்து செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி அரை டம்ளராக்கி, பால் சர்க்கரை சேர்த்துப் பருகலாம். இது இதய நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்து. மேலும், இரத்த அழுத்த நோயாளிகள், வெள்ளை படும் பெண்களுக்கும் ஒரு சிறந்த பானம். இதை தினம் பருகிவர நல்ல பலன் கிடைக்கும்.

தாமரைப்பூ சுவைநீர்:
10 தாமரை இதழ்களை ஒரு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து அருந்திவர ‘இதய கமல'மாகிய தாமரையால் இதய நோயாளிகளுக்கு நலம். தாமரைப் பூ இதழ்களை நிழலில் உலர்த்திப் பொடி செய்து கொண்டும் இவ்வாறு தயாரிக்கலாம்.

ஆவாரைப்பூ சுவைநீர்:
‘ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ' எனும் பழமொழிக்கிணங்க ஆவாரைப் பூ, இலை, பட்டை இவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொண்டு, இப்பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து வெறும்வயிற்றில் தினசரி பருகிவர, உடல் வறட்சி, அடங்காத தாகம், மூச்சுத் திணறல் ஆகியவை நீங்கும். தோல் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்தது. நீரிழிவு நோயாளிகள் இதை தினமும் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க, நீரிழிவு கட்டுப்படும். நல்ல சுறுசுறுப்பை உண்டாக்கும்.

இனி, பால் தேவையற்ற பானங்கள்...

அத்திப்பழச் சுவைநீர்:
கொத்துக்கடலை ஒரு கைப்பிடி எடுத்து இரவில் ஊறவைத்து விடவும். 4 அத்திப்பழங்களைத் துண்டாக்கி கடலையுடன் ஊறவிடவும். மறுநாள் காலை இக்கலவையை நன்கு வேக வைத்து வடிகட்டி சிறிது பால் சர்க்கரை சேர்த்து பருகி வர இரத்தம் தூய்மையடையும். உடல் திசுக்களுக்கு வளர்ச்சி அளித்து சுறுசுறுப்பை உண்டாக்கும். இரத்தப் பற்றாக்குறையுள்ளவர்கள், மாதவிடாய் கோளாறுள்ளவர்களுக்கு இதுவொரு சிறந்த பானம்.

நிலக்கடலைப்பால் சுவைநீர்:
100 கிராம் வறுக்காத நிலக்கடலையை நீரில் ஊறவைத்து வடிகட்டி,ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு நாள் முழுதும் வைத்துவிட்டால் மறுநாள் அது முளைவிட்டிருக்கும். அத்துடன் 2 முந்திரிப்பருப்பு 4 ஏலக்காய் சிறிது குங்குமப்பூ ஆகியவற்றைப்போட்டு நன்கு அறைத்துப் பாலெடுத்து சர்க்கரை சேர்த்துப் பருகலாம். (முளைகட்டிய பயிறை தினசரி தேவையானதை எடுத்துக்கொண்டு குளிர்பதனப்பெட்டியில் பத்திரப்படுத்திக்கொள்ளலாம்.)
இது குழந்தைகளுக்கு மிகச் சிறந்த பானம். நரம்புகளுக்கு நல்ல சக்தியளிக்கிறது. முளைகட்டிச் செய்வதால் கூடுதல் சத்துகள் பெற வாய்ப்புள்ளது.

எள்ளுப் பால்:
100 கிராம் எள்ளை ஊறவைத்து முளைக்க வைத்துக் கொண்டு, சிறிது தேங்காய்த் துருவல், ஏலக்காய் கலந்து நன்கரைத்துப் பால் எடுத்துக் கொள்ளவும். சிறிது வெல்லம் அல்லது பனைவெல்லம் சேர்த்துப் பருகலாம். இது பருவமடைந்த பெண்களுக்கு சிறந்த பானம். ஒல்லியான குழந்தைகளுக்கு இதை தினமும் செய்து கொடுக்கலாம். (‘இளைத்தவனுக்கு எள்ளு' என்பதை நினைவூட்டிக் கொள்க.)

கொள்ளுப் பால்:
100 கிராம் கொள்ளை ஊற வைத்து முளைக்க வைத்து அத்துடன் சிறிது தேங்காய், ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்துப் பாலெடுத்து , சிறிது வெல்லம் அல்லது பனைவெல்லம் கலந்து பருகி வர, மழைக்காலத்தில் அடிக்கடி சளி பிடிப்பவர்கள், மூட்டு வலியுள்ளவர்கள், பக்கவாத நோயாளிகள் குணமடைவர்.
உடல் எடையைக் குறைக்க பிரயாசைப்படுபவர்கள் இதைத் தினம் பருகிவர பலன் உறுதி. (‘கொழுத்தவனுக்குக் கொள்ளு')

புதினா தேநீர்:
அடடே, வாங்க, வாங்க. இதோ கைப்பிடி புதினா இலைகளைக் கொதிக்க வைத்த நீரில் சிறிது எலுமிச்சை சாறும் சர்க்கரையும் (வெல்லம், பனைவெல்லம்) கலந்த சூடான புதினா தேநீர் குடிங்க. வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. சூடாக பருகுவதால் எலுமிச்சை சாறு சளிபிடிக்குமென்ற பயமில்லை. வாய் துர்நாற்றம் போகும். நாள்முழுதும் புத்துணர்ச்சி. ருசியோ, தினம் தினம் பருகச் செய்யும். இரத்தம் விருத்தியாகும். 
என்னது... இன்னொரு டம்ளரா...!


' யா தேவி சர்வ பூதேஷூ: சக்தி ரூபேண...

Friday, 26 July 2013 7 கருத்துரைகள்


அம்மன் கோயில்கள் அநேக இடங்களில் அநேக சிறப்புகளோடு நீங்க பார்த்திருக்கலாம். முகப்பு வாயிலில் பாரத மாதா சிலையோடு கண்டதுண்டா? உலக மாதாவாகட்டும் பாரத மாதாவாகட்டும்... பராசக்தியின் வேறு உருவம் தானே...!

தில்லை அம்பலராம் சிவகாமி சமேத நடராஜர் குடியிருக்கும் சிதம்பரம் நகரிலிருந்து கடலூர் செல்லும் பாதையில் புவனகிரி வரும். (ஸ்ரீ ராகவேந்திரர் அவதார இடமிருக்கும் புவனகிரி தான்!) 

புவனகிரியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் (அரசுப் பேருந்து எண்கள்: 8, 8A, 36, மற்றும் தனியார் சிற்றுந்து (Mini Bus)போன்றவற்றில் பயணிக்கலாம்) உள்கிராமங்களான  ஆயிபுரம், குறியாமங்கலம், எல்லை முடிவில் கீழமணக்குடி கிராமம் துவங்கியதுமே ஸ்ரீ தீப்பாய்ந்தாள் முத்துமாரியம்மன் கோயில் கோபுரம் உங்கள் கண்களுக்குத் தென்படும். 

முடிந்தால் இந்த ஆடிமாத இறுதியில் நடைபெற இருக்கும் 50-வது ஆண்டு தீமிதித் திருவிழா காண வாருங்களேன்... 

இக்கோயிலின் சிறப்புகளில் ஒன்று, வெளிப் பிரகாரத்தில் பிரதிருஷ்டை செய்திருக்கும் சப்த கன்னியர் ஒரே சிலையாக வடிக்கப் பட்டிருப்பது. 


(தாணுமாலயன் கோயில்,(பார்க்க: http://jaghamani.blogspot.com/2013/07/blog-post_11.html ),

ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையை அடுத்த நெருஞ்சிப்பேட்டை காவிரியாற்றின் நடுவே உள்ள கன்னிமார் திட்டு 

மற்றும் சேலம் அம்மாப்பேட்டை காளி கோயிலில் இவ்வாறு ஒரே கல்லில் வடிக்கப் பட்டிருப்பதாக  அறிகிறோம்)

ஸ்ரீ தீப்பாய்ந்தாள் முத்துமாரி அம்மன் வரலாற்றையும் சிறப்புகளையும் மற்றொரு பதிவில் சொல்கிறேன். சுழல்

Wednesday, 17 July 2013 8 கருத்துரைகள்

       செண்பகவல்லி சீனிப்பயலுக்கு வாக்கப்பட்டு வருசம் ஆறாவுது. எதுக்கு இந்தக் கணக்கெல்லாம்? வானத்துப் பொறை வளர்றதும், தேயறதும் வழக்கம்தானே... ஒரே தினுசாவா இருக்கு மனுச வாழ்வு?! ஏத்தமும் எறக்கமும் எங்கேயும் உள்ளதுதானே... மேல் கீழாவும், கீழ் மேலாவும் ராட்டினம் சுத்துறாப்புல தானே நாம உழுந்து எழுந்து கிடக்க வேண்டியிருக்கு இந்த மண்ணுல...
      ஆதியிலேயிருந்து சொன்னா உங்களுக்கும் புரியும்.

எண் சொன்னால் குறள் சொல்ல முடியுமா?

Saturday, 13 July 2013 8 கருத்துரைகள்


திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி - 2

நான்காம் படி: 

      தற்போது திருக்குறளின் அதிகாரத் தலைப்புகள் எண்ணுடன் தெரியும். திருக்குறள் முழுவதும் தெரியும். எண் சொன்னால் குறள் சொல்வதற்குரிய படியை இப்போது பார்க்கலாம்.
இதற்கு மீண்டும் அதிகாரத் தலைப்பு எண்களை எண்ணுடன் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
         ஒவ்வொரு அதிகாரத்திலும் முதற்குறள், கடைசிக் குறள் இவற்றை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
         முதல் அதிகாரத்திலிருந்து 133-வது அதிகாரம் வரை முதற்குறளையும் கடைசிக் குறளையும் சொல்லிப் பாருங்கள். போதுமான பயிற்சி எடுத்துக் கொள்ளவும்.
          அதாவது 411வது குறள்  என்று சொன்னால் 42வது அதிகாரமாகிய 'கேள்வி'யில் முதற்குறள் என்று கொள்ள வேண்டும். 740வது குறள் என்று சொன்னால் 74வது 'நாடு' என்ற அதிகாரத்தின் கடைசிக் குறள் என்று நினைவுக்கு வரவேண்டும்.
         இதற்கான பயிற்சியைத் தொடருங்கள். இவ்வாறு மீண்டும் மீண்டும் பயில்வதால் நினைவாற்றலில் வலிவு ஏற்படுகிறது. அவ்வலிவை வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
        இடையில் தொய்வு ஏற்பட்டாலும் தொடர்ந்து தொய்வினை பயிற்சி மூலம் சரிசெய்து கொள்ள வேண்டும்.

ஐந்தாம் படி:

        இப்போது அதிகாரத்தின் தலைப்புடன் 1330 குறள்களும் தெரியும். ஒவ்வொரு அதிகாரத்தின் முதல் குறளும் கடைசிக் குறளும் தெரியும். அதாவது 1,0 ல் முடியும் எந்தக் குறளைக் கேட்டாலும் உடன் விடையளிக்க இயலும். இதர எண்களுக்குரிய குறட்பாக்களை எப்படி நினைவுக்குக் கொண்டுவருவது?
இப்போது 637எண்ணுள்ள குறள் எது எனக் கேட்டால் 64வது அதிகாரம் ‘அமைச்சு' ல் 7வது குறள்.(செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து /இயற்கை அறிந்து செயல்) இத்தொடர் சிந்தனை வரவேண்டும்.
இதற்குரிய எளிய வழி, ஒவ்வொரு அதிகாரத்தின் முதற்குறள், கடைசிக் குறள் இவற்றை விரைந்து சொல்லும் ஆற்றலைப் பெற்றபின் ஒவ்வொரு அதிகாரத்தின் ஐந்தாவது குறளையும் சேர்த்து நினைவில் வைத்துக் கொள்ளப் பயிலுங்கள்.
       இப்பயிற்சியால் 1,5,0 இவற்றில் முடியும் குறட்பாக்களை எப்பொழுதும் நினைவில் இருத்தலாம். இவற்றின் உதவியுடன் பிற எண்ணில் முடியும் குறட்பாக்களை எளிமையாக நினைவுக்குக் கொண்டுவந்து விடலாம்.

ஆறாம் படி:

தற்போது 1330 குறட்பாக்களும், அதிகாரத் தலைப்பு எண்ணுடன் தெரியும். 1,5,0 இல் முடியும் குறட்பாக்களைக் கேட்டவுடன் சொல்லத் தெரியும். எந்த எண் கூறினாலும் குறளைச் சொல்வதற்குரிய பயிற்சியை இப்போது பார்க்கலாம்.
494-வது குறள் என்றால், 50-வது ‘இடனறிதல்' அதிகாரத்தில் நான்காவது குறள்.
491 ‘தொடங்கற்க' என்பது உடன் நினைவுக்கு வரும். தொடர்ந்து 492,493 சொல்லி வந்தால் 494-வது
‘எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்'
என்று கூறிட முடியும்.
1038-வது குறள் என்று சொன்னால், 104-வது ‘உழவு' அதிகாரத்தில் 8 வது குறள்.
          1035 வது குறள் ‘இரவார் இரப்பார்க்கொன்றீவர்' எனத் தொடங்கும் குறள் என்பது முன்னரே தெரியும். தொடர்ந்து சொல்லி வந்தால் 1038-வது குறள்,
‘ஏரினும் நன்றாம் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு'
எனக் கூற இயலும்.

       இவ்வாறு எந்த எண்ணைக் கூறிக் குறளைக் கேட்டாலும் தற்போது கூற இயலும். இவ்வாறு முயற்சியால் பெற்ற ஆற்றலை மறதி வெள்ளத்தில் இழந்து விடலாகாது.
கைப்பொருளை எவ்வளவு பாடுபட்டுக் காப்பாற்றுகிறோமோ அவ்வாறே இவ்வாற்றலைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு படுக்கப் போகும் வரை சிந்தனைக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் முதல் குறளிலிருந்து கடைசிக் குறள் வரை வரிசையாய்ச் சொல்லி முடித்திருக்க வேண்டும். இப்பயிற்சி தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஏழாம் படி:

       தற்போது உங்களுடைய ஏட்டில் 133 அதிகாரத் தலைப்புகளும் 1330 குறட்பாக்களும் எண்களுடன் முதற்சீரும் இறுதிச் சீரும் எழுதப் பெற்றிருக்கின்றன.
        தங்கள் கையில் திருக்குறள் புத்தகத்தைத் தவிர திருக்குறள் நினைவேடு ஒன்றும் உருவாகியிருக்கிறது. இந்நினைவேட்டினை கையில் வைத்துக் கொண்டு சில வரிசை எண்களைச் சொல்லி அவற்றுக்குரிய குறள்களையும் காணுங்கள். கையேட்டின் வழி சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
        நண்பர்களைக் கேட்கச் செய்வது இன்னும் பயன் அளிக்கும். இதனால் எண் கூறக் குறள் கூறும் ஆற்றல் இயல்பாகவே வளரும். கேட்க நண்பர்கள் அருகில் இல்லையெனில் சாலையில் ஓடுகிற வண்டிகளில் காணப்படும் எண்கள், பிற பலகைகளில் காணப்படும் எண்கள் இவற்றைப் பார்த்தவுடன் அவ்வெண்களுக்குரிய குறட்பாக்களை நீங்களே நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
         உங்கள் ஊருக்கு அஞ்சல் குறிப்பெண் 621851 எனில், இவ்வொரு குறிப்பிலிருந்து 621, 851, 158,126, 261, 581, 218, 516, 625, 628 போன்ற பல எண்களை நாமே உருவாக்கி அவ்வெண்ணுக்குரிய குறட்பா எது என்பதை நினைவு படுத்திக் கொள்ளலாம். நினைவாற்றல் வளர இதுவும் ஒரு வழி.

எட்டாம் படி, ஒன்பதாம் படி, பத்தாம் படி ஆகியவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நன்றி: திரு. அ . ஆறுமுகம், திருமழபாடி ,
             வெளியீடு: பாவேந்தர் பதிப்பகம், 
                                  'சீரகம்', திருமழபாடி,
                                  திருச்சி மாவட்டம்.
             வெளியான ஆண்டு : தி.பி. 2024 (1993)

திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி

Wednesday, 10 July 2013 11 கருத்துரைகள்
   
   
         14.03.1948-ல் மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகச் சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியதிலிருந்து ...


       "100 ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கும் டெக்ஸ்ட் புத்தகங்கள் வாங்கிப் படித்து மடையர்களாவதை விட, 3 அணாவுக்கு திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல் என்று தான் கூறுகிறேன். திருக்குறள் ஒன்றே போதும் உனக்கு அறிவு உண்டாக்க; ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுக்க; உலக ஞானம் மேம்பட. அப்படிப்பட்ட குறளைத்தான் நாம் இதுவரை அலட்சியப் படுத்தி வந்திருக்கிறோம். ஒரு தாசில்தார், ஒரு மாஜிஸ்ட்ரேட்,  ஒரு நீதிபதி, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இவர்களுக்குக் கூட திருக்குறள் ஒன்றே போதும் தமது வேலையை சரியாகச் செய்ய. அவர்களை உத்தியோகத்துக்கு தேர்ந்தெடுக்க பரீட்சை வைக்கும் பொது கூடத் திருக்குறளிலிருந்து தான் கேள்விகள் கேட்கப் பட வேண்டும். திருக்குறளை நன்கு உணர்ந்திருந்தால் போதும் என்று அவர்களுக்கு உத்தியோகம் வழங்கப் பட வேண்டும்... அனைவரும் திருக்குறளைப் படித்து அறிவுள்ள மக்களாகி இன்புற்று வாழ வேண்டுமென்பதுதான் எனது ஆசை." (திருக்குறளும் பெரியாரும்... பக்கம்:33,34)

திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி: (10 படிகள்)

முதற்படி:
       
      முதலில் திருக்குறள் முழுவதையும் முதலிலிருந்து முடிவு வரை பல முறை முறை படித்து விட்டு, 133 அதிகாரங்களின் தலைப்புகளையும் மனனம் செய்யுங்கள். 40வது அதிகாரம் 'கல்வி', 73வது அதிகாரம் 'அவையஞ்சாமை' என எண்ணுடன் அதிகாரத் தலைப்பினை நினைவில் நிறுத்துங்கள்.

இரண்டாம் படி:

       முதல் அதிகாரத்திலிருந்து முறையாகக் குறட்பாக்களை மனப்பாடம் செய்யத் தொடங்குங்கள். ஒரு நாளைக்கு ஒரு அதிகாரம் மனனம் செய்யலாம். தங்களது ஆற்றலுக்கேற்ப அளவை வரையறை செய்து கொள்ள வேண்டும் . ஒருநாளும் தளராமல் பயிற்சி செய்ய வேண்டும். காலையில் மனனம் செய்த பகுதியை இரவு வரை ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

      ஒரு நானூறு பக்க ஏட்டினை வாங்கி முதற்படியாக மனனம் செய்த திருக்குறள் அதிகாரத் தலைப்புகளை வரிசையாக எண்ணுடன் நினைவுபடுத்தி எழுதுங்கள். சரிபார்த்துக் கொள்ளுங்கள். மனனம் செய்த குறட்பாக்களை ஒவ்வொரு அதிகாரமாக தலைப்பிட்டு ஒவ்வொரு பக்கத்துக்கு ஒவ்வொரு அதிகாரமாக மனனம் செய்த அன்றே எழுதுங்கள். குறள் வரிசை எண் , முதல் சீர், இறுதி சீர் இவற்றை எழுதினாலே போதும். ஏனெனில் முதல் சீரைப் பார்த்தவுடன் குறள் முழுவதும் இயல்பாகவே நினைவில் வந்துவிடும். இவ்வாறு எழுதும் ஏட்டைத் திருப்பிப் பார்த்து ஆற்றலை வளர்த்துக் கொள்ள உறுதுணையாகும்.

மூன்றாம் படி:

     ஒவ்வொரு அதிகாரமாக மனனம் செய்யும் போது இரண்டாம் அதிகாரம் மனனம் செய்தவுடன் முதல் அதிகாரத்தையும் சேர்த்துச் சொல்லி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். 133-வது அதிகாரம் மனனம் செய்யும்போது திருக்குறள் முழுவதையும் சொல்லிப் பார்க்க வேண்டிய நிலை வந்து விடும். இதற்கு ஆகும் நேரம் ஒரு மணி அளவில்தான் இருக்கும். இவ்வாறு பயில்வதால், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எந்தக் குறளைக் கேட்டாலும் சொல்லக் கூடிய வைல்வான நினைவாற்றல் உங்களிடம் வளர்ந்து விடும்.

நான்காம் படி:

     தற்போது திருக்குறள் அதிகாரத் தலைப்புக்கள் எண்ணுடன் தெரியும். திருக்குறள் முழுவதும் தெரியும். எண் சொன்னால் குறள்  சொல்லுவதற்குரிய படியை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நன்றி: திரு. அ . ஆறுமுகம், திருமழபாடி .

  

பறவை வடிவிலொரு பரமன்...

Thursday, 4 July 2013 6 கருத்துரைகள்
மனிதக் குரல்களால்
சலிப்புறும்போது
ஏதேனுமோர்
பறவையின் மொழிதேடி
உடல்தாண்டி நீளும் செவி
தோட்டம் முழுக்க அலைகிறது

கூர்மையேறிய
அதன் புலனுணர்வில்
கிறீச்சிடும் ஒலி கொண்டே
பறவையை அனுமானிக்கும் நுட்பம்
கைவரப்பெற்ற கர்வத்தை
பங்கம் கொள்ள வைக்கிறது
இதுவரை கேட்டறியாதொரு
புதுப் புள்ளொலியின் குழைவு.

செவி தொடர்ந்து வெளியேறிய
உடம்பும் மனசும்
தோட்டத்து மரக்கிளைகளை-
செறிந்திருக்கும் இலைகளை-
துழாவத் தொடங்கியது துள்ளலோடு.

பரவசம்பரமானந்தம்;
பலநாள் புத்துணர்வூட்டுமாம்
பரம்பொருளறிதல்!

தான் கண்ட
விரல் அகல
முழம் நீள வெள்ளை வால்
கருந்தலைக் குருவி
எங்கிருந்து எங்கு போகிறதென
இணையம் வழித் தேடித் தெளிந்த
என் குதூகலமோ
கடவுளைக் கண்டதைப் போல்.

இன்னும் இன்னும்
எத்தனை பிரத்யட்சம்
இருக்கிறதோ இறை வசம்!!


நன்றி: ஜூலை,13  'சங்கு' வளவ.துரையன் 

மரபின் மைந்தன்: வங்கம் வழங்கிய ஞானஒளி

5 கருத்துரைகள்
(ஜூலை-4 சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்)
 
எல்லாத் திசைகளும் என்வீடு-என
இங்கே வாழ்ந்தவர்யார்?
நல்லார் அனைவரும் என்னோடு-என
நெஞ்சு நிமிர்ந்தவர்யார்?
நில்லா நதிபோல் விசையோடு-அட
நாளும் நடந்தவர் யார்?
கல்லார் நாடெனும் கறையகற்ற-சுடர்க்
கணையாய்ப் பாய்ந்தவர்யார்
 
எங்கள் கிழக்கில் எழுந்தகதிர்-புகழ்
ஏந்திடும் மேல்திசையில்
பொங்கும் எரிமலை போலெழுந்தே-இருள்
போக்கிடும் நம்முயிரில்
வங்கம் வழங்கிய ஞானஒளி-நம்
விவேகானந்த ஒளி
சிங்கப் பிடரி சிலிர்த்தபடி-அவர்
சென்றது ஞானவழி
 
பூமியை உலுக்கும் புயலாக-அவர்
புறப்பட்ட வேகமென்ன
சாமி உனக்குள் எனசொல்லி -அவர்
சமத்துவம் கண்டதென்ன
தீமைகள் எரிக்கும் கனல்பிழம்பாய்-அவர்
திருமொழி திகழ்ந்ததென்ன
ஓமெனும் மந்திர ஒலிபோலே-அவர்
ஓங்கி யெழுந்ததென்ன
 
எத்தனை யுகங்கள் போனாலும்-அவர்
ஏற்றிய ஒளியிருக்கும்
எத்தனை இடர்கள் வந்தாலும்-அவர்
வார்த்தையில் வழிபிறக்கும்
தத்துவம் மானிடன் உயர்வதுதான்-அவர்
வாழ்வுக்கு இது விளக்கம்
முத்திரை பதித்த முனிராஜன்- அவர்
மலரடிக்கென் வணக்க்ம் 

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar