நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

மீள்வாசிப்பில் ஒரு மறு மதிப்பீடு

Monday, 30 September 2013 9 கருத்துரைகள்
கவிதை அப்பாவுக்கொரு செல்ல மகளின் கவிதாஞ்சலி... 
      மரபுக் கவிதை மயங்கிய பொழுதில் புதுக்கணித சூத்திரமாய் புதுக்கவிதைப் பூங்காவில் பூத்திட்ட புதுமைக் கவி...
        எண்பதுகளில் மட்டுமல்ல, என்றென்றும் நம் நினைவில் இனித்திடும் ‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்' படைத்த எழுச்சிக் கவி...
 களம்பல கண்டவர், கவிதைத் திறத்தால் உளம்பல வென்றவர், உயர்வாய்த் தளம்பல கண்டவர், பதிப்புக் கலைக்கு முகமென நின்றவர், சாகாத வானம், சரியாத பேரிமயம், நேர்(மை)க் கோடாய் நின்ற நெருப்பு, சிவகங்கைக் கொரு சிறப்பு... கவிஞர் மீரா!(நன்றி: ‘ஆனந்தஜோதி'-மார்ச்,2012, பேரா. இரா.பாஸ்கரன்)
         
       இப்பூவுலகில் வாழப்பிறந்த அனைவரும் ஏதேனுமொருநாள் புறப்பட்ட இடத்துக்கு போய்ச்சேர வேண்டியுள்ளது உலக நியதி. 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி  கவிஞர் மீராவை காலன் களவாண்டு சென்றான். அவரை மைய அச்சாய்க் கொண்டு சுழன்ற இலக்கிய உலகும், இல்லற உறவுகளும் செய்வதறியாமல் பதைத்து பரிதவித்தனர். அழுதும் அரற்றியும், அவர் பெருமைகளைப் பேசிப் புளங்ககித்தும், நினைவெழும்போதெல்லாம் நின்று கலங்கியும் ஆற்றவொண்ணா வேதனையில் ஆழ்ந்தனர்.
         
       எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது எத்துணை சத்தியமோ அத்தகையதே ஆண் குழந்தைக்கு அம்மா மேல் அதீத பிரியமும் பெண் குழந்தைக்கு அப்பா மேல் அளவற்ற பாசமும் வேர்விட்டிருப்பது.
       
       
கவிஞர் செல்மா தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் 

மீராவின் செல்ல மகள் ‘செல்மா' என்று தந்தையால் சீராட்டப்பட்ட கண்மணியும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஓணப் பூவில் எஞ்சிய நறுமணம்

Friday, 20 September 2013 8 கருத்துரைகள்
பண்டிகைகளில் வாழ்த்துப் பரிமாற்றம் என்பது பழகிப் போனதொரு சம்பிரதாயம் ஆகிவிட்டது . கிருஷ்ண ஜெயந்திக்கும், விநாயக சதுர்த்திக்கும், விஜய தசமிக்கும் கூட வாழ்த்து சொல்லிக்கொள்ளும் கூத்தும் பார்க்க முடிகிறது.

சமீபத்திய ஓணத்துக்கு ஒருவாரம் முன்பிருந்தே 'சொல்லிடணும், சொல்லிடணும்' என்றிருந்தும் என்னால் ஓணம் முடிந்து மூன்று நாள் கடந்து தான் சொல்ல வாய்த்தது ஒருவருக்கு... அவர்... நம் கிருஷ்ணப்ரியா!!

தொலைபேசி மணி ஒலித்து தேய்ந்தது. சில மணித் துளிகளில் அவரே தொடர்புக்கு வந்தார். 
"ஒரு வாரமா உங்க நினைவுதான்... மகள் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் பற்றி ... மலர்க் கோலமிடுதலில் அவங்க அணி வெற்றி பெற்றது பற்றி, சக தோழிகளின் 'திருவாதிரைக் களி' ஆட்டம் பற்றி எல்லாம் கேள்விப் பட்டபோது, உங்க நூல் வெளியீட்டு விழாவுக்காக உங்க வீட்டுக்கு வந்து தங்கியிருந்த போது உறவினர்களுடன் 'திருவாதிரைக் களி' பாடி ஆடிக் காண்பித்ததெல்லாம் நினைத்துக் கொண்டேன்... 
பண்டிகையெல்லாம் நல்லாப் போச்சா?"

"நீங்க லேட்டா சொல்றதுக்கு வருத்தப் பட வேண்டாம். ரெண்டு மாசத்துக்கு முன்பே சொந்த ஊருக்கு பண்டிகைக்குப் போக ட்ரெய்ன் டிக்கெட் புக் பண்ணியும் நான் மட்டும் நண்பர் ஜே.டி.ஆர். மகள் திருமணத்துக்காக சென்னையும், கணவர், மகன்கள் மட்டும் சொந்த ஊருக்கும் போகும்படி ஆச்சு."

"அடடா... பண்டிகையும் அதுவுமா குடும்பத்தோடு இல்லாம... ஓணச் சாப்பாட்டை வேற மிஸ் பண்ணியிருக்கீங்க "

"கல்யாணப் பொண்ணுக்கு ரொம்ப சந்தோஷம் ... அவ விருப்பத்தை தட்ட முடியாமத் தான், டிக்கெட் கேன்சல் பண்ணாம 'இன்னொரு நாள் கல்யாணம் விசாரிச்சுக்கலாம்' என்ற மனோஜ் கிட்ட 'நான் கல்யாணத்துக்கு போறேன்'ன்னு அறிவிச்சுட்டேன்." 

("தனக்கு சரியென்று பட்டதை சொல்லவும் செய்யவும்  தயங்காதவராச்சே நீங்க...!")

"காலைல கல்யாண வீட்டில் டிபன் சாப்பிட்டு பஸ் ஏறின நான், இரவு  வரை காய்ந்து வந்து சேர்ந்தேன் நிலா. வித்தியாசமான பண்டிகை அனுபவம் இந்தமுறை எனக்கு. ஆனா, வீட்டில் அம்மா எனக்காக அவியல், பாயாசம், மற்ற ஐட்டமெல்லாம் எடுத்து வைத்திருந்தாங்க. எடுத்துட்டு வந்து தனியா எங்க வீட்டில் உட்கார்ந்து இரவு சாப்பிட்டேன்."

"வருஷ பண்டிகை ஆச்சே... சார் சொன்ன மாதிரி சேர்ந்து கொண்டாடி இருக்கலாம் தானே...?"

"பண்டிகை அடுத்த வருஷமும் வரும்... அந்தப் பொண்ணு கல்யாணத்துல இப்பதானே கலந்துக்க முடியும்...?!" 

"அது சரி! உங்க தெளிவு எனக்கு ரொம்பப்  பிடிக்கும் ப்ரியா!"

ஆமா... இந்தப் படத்துல மனோஜ் எங்களுக்கு 'ஹாய்' சொல்றாரா? இல்லை... உங்களுக்கு கொம்பு வைக்கிறாரா?

 ரெண்டு பேரும் இந்தப் படத்தில் 8-10 வயசுக் குழந்தைகளாக இருக்கீங்க... அச்சு அசலா!

உங்க கவிழ்ந்த முகத்தில் இத்தனை வெட்கத்தை, உடல்மொழியின் பெருமிதத்தை ரசிக்கிறேன் ப்ரியா...
                                   


                                 வாழ்க! வளமுடன்.. நலமுடன்!! 
                             விஷ்ணு, விஜய் உடன்!!!

( ப்ரியா... நீங்க சொன்னமாதிரி ஒரு பதிவு தேத்திட்டேனா.... உங்க வீட்டுப் பசுவை எங்க தென்னை மரத்தில் கட்டியாச்சு. ஆனா, நம்ம உரையாடலில் ஒரு நல்ல கதைக்கரு இருக்குப்பா... அது உங்க சாய்ஸ்... ஓகே?!)

நல்லாசிரியர்!

Thursday, 5 September 2013 9 கருத்துரைகள்
திருமதி.கோமளா பத்மநாபன் , M .A ., M.Ed.
(எனதினிய ஆசிரியர்களுள் முதன்மையாய்  இவர்.பின்னொரு நாளில் இவர் பற்றிய நினைவுகளை 'அசை' போடுவேன் உங்களுடன்)

குலனரு டெய்வங் கொள்கை மேன்மை

                                 கலைபயி றெளிவு கட்டுரை வன்மை
                                 நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும்
                                 உலகிய லறிவோ டுயர்குண மினையவும்
                                அமைபவ னூலுரை யாசிரி யன்னே. (26)
                                                 
                                                                        -பவணந்தியார், நன்னூல்.
தெளிவுரை: 
       நற்குடிப் பிறப்பு, அருள், இறைவழிபாடு என்ற இவற்றால் அடைந்த மேன்மையும், பல நூல்களில் பழகிய தெளிவும், நூலின் பொருளை மாணாக்கர் எளிதில் உணரும் வண்ணம் எடுத்துச் சொல்லும் வன்மையும், நிலம், மலை, துலாக்கோல், மலர் போன்ற குணங்களும், உலக நடையை அறியும் அறிவும், இவை போன்ற உயர்ந்த குணங்கள் பிறவும் நிரம்ப உடையவர் ஆசிரியர் எனப்படுவர்.

(நிலத்தின் மாண்பு)
தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி யளவிற் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே. (27)

தெளிவுரை:
     மற்றவரால் அறியப்படாத வடிவத்தின் பெருமையும், தன் மேல் பொருந்திய சுமையால் கலங்காத வன்மையும், தன்னைச் சார்ந்த மக்கள் தோண்டுவது போன்ற குற்றங்களைச் செய்தாலும் பொறுக்கும் பொறுமையும்,பருவ காலத்தில் உழவர் செய்யும் முயற்சியின் அளவுக்கு ஏற்ப பயனைத் தருதலும் நல்ல நிலத்தின் சிறந்த குணங்களாகும்.

 (மலையின் மாண்பு)
     அளக்க லாகா வளவும் பொருளும்
      துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
      வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே. (28)

தெளிவுரை:
     அளவிட முடியாத வடிவத்தின் அளவும், அளவிட முடியாத பலவகைப் பொருளும், எத்தனை வன்மையுடையவராலும் அசைக்கப்படாத வடிவத்தின் நிலையம், நெடுந்தொலைவில் உள்ளவராலும் காணப்படும் உயர்வும், மழை பெய்யாமல் வறண்ட காலத்திலும் தன்னைச் சேர்ந்த உயிர்களுக்கு நீர் வளத்தைக் கொடுக்கும் கொடையும் மலைக்குப் பொருந்திய குணங்களாகும்.

     (நிறைகோல் மாண்பு)
      ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும்
      மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே. (29)

தெளிவுரை:
     நிறுக்கப்பட்ட பொருளின் அளவை ஐயம் நீங்கக் காட்டுதல், உண்மை பெற இரு தட்டுகளுக்கும் நடுவாக நிற்றல் ஆகியவை துலாக்கோலின் குணங்களாம்.

      (மலரின் மாண்பு)
       மங்கல மாகி யின்றி யமையா
       தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
       பொழுதின் முகமலர் வுடையது பூவே. (30)

தெளிவுரை:
      நல்வினைகளுக்கு உரிய பொருளாகி, ஏதொன்றும் தான் இன்றி முடியாததாகி, கண்டவர் அனைவரும் மகிழ்ந்து தன்னைச் சூடிக் கொள்ள மென்மையான குணம் உடையதாகிப் பூப்பதற்கு உரிய காலத்திலே முகம் விரிதலை உடையது பூவாகும்.

       அகத்தியம், தொல்காப்பியத்துக்கு அடுத்ததாய் எழுந்தது பவனந்தியாரின் நன்னூல். மேலிரண்டினும் எளிமையாய் உள்ளதுமாம்.  800 ஆண்டுகளுக்கு முன் சொன்ன ஆசிரியர் இலக்கணம் பொருந்த நம்மை அறிவேற்றும ஆசிரியர்களை வாழ்த்தி வணங்குவோம்!


உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar