நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

மரம் வளர்த்த மனிதனின் கதை... பகுதி-2

Thursday, 31 October 2013 6 கருத்துரைகள்


         அந்த கிராமம் அப்படியொன்றும் பெரியதாய் மாறியிருக்கவில்லை. எனினும், கைவிடப்பட்ட அந்த கிராமத்திற்கு அப்பால் தொலைதூரத்தில் ஒரு மலைமுகட்டின் மேல் சாம்பல் பூசிய மூடுபனியைப் போன்ற ஒன்று போர்வையாய் மூடியிருந்தது.
அப்போதுதான் மரங்களை நட்ட அந்த இடையரின் நினைவு எனக்கு வந்தது.
இத்தனை நாட்கள் கழித்து நேற்றுதான் அந்த 10,000 ஓக் மரங்கள் பற்றி ஞாபகம் வந்தது. அவைகள் இன்றைய நாள் வரை வளர்ந்திருந்தால் நிறைய இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும்.
கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான மனிதர்கள் இறந்து போய் விட்டார்கள். அந்த ஆட்டுக்காரர் ‘எல்சியர்டு பூபியர்' கூட ஒருவேளை இறந்திருக்கலாம்.
குறிப்பாக நமக்கு 20 வயதாகும் போது 50 வயது மனிதர்களைப் பழமைவாதிகள் என்று சொல்லி விடுகிறோம். என்ன செய்வது... அதற்கு மேல் சாக வேண்டியதுதான். ஆனால் அவர் சாகவில்லை!
தன் பழைய தொழிலை மாற்றிக் கொண்டுவிட்டார். தற்போது அவரது கிடையில் வெறும் நான்கே நான்கு ஆடுகள் தான் இருக்கின்றன. ஆனால், 100 தேனீக் கூடுகள் வைத்திருக்கிறார். தற்போது ஆடுகள் மேய்க்கும் வேலையை விட்டுவிட்டார். ஏனென்றால், ஆடுகள் இளம் ஓக் கன்றுகளின் வளர்ச்சியைப் பாதித்தன.
நடந்து முடிந்த உலகப் போர் அவருக்கு இடையூறாய் இருக்கவில்லை. ஆனாலும் அவர் தன்னுடைய மரம் நடும் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
1910-ம் வருடம் நட்ட ஓக் கன்றுகளுக்கு இப்போது பத்து வயதாகிவிட்டது. என்னை விட அவை உயரமாக நிற்கின்றன. என்ன ஒரு அருமையான காட்சி!
என்னிடம் ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. அவர் வளர்த்த காட்டின் ஊடாக அந்த நாள் முழுவதும் நடந்து கொண்டிருந்தோம். 11 கி.மீ. நீளத்துக்கு 3 பாத்தி வரிசைகளில் ஓக் மரங்கள் வளர்ந்திருந்தன. அவை 3 கி.மீ. தூரம் பரவி இருந்தன. எனக்கு ஞாபகமிருக்கிறது.  இவ்வளவு பெரிய வேலை ஒரு தனிமனிதனின் உழைப்பு. ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு. எந்த எந்திர உதவியும் இல்லாத உழைப்பு.
மனிதர்கள் தெய்வமாக மாற முடியும் என்பதை அன்று உணர்ந்தேன்.
கடும் உழைப்பு; அழிவுக்கு எதிரான உழைப்பு.
அவர் கண்ட கனவை அவரே நனவாக்கினார்.
புங்க மரங்கள் என் தோள் உயரத்திற்கு வளர்ந்திருந்தன. என் கண்களுக்கு எட்டும் தூரம் வரை பசுமையாக ஓக் மரங்கள் உறுதியாய் தலைநிமிர்ந்து நின்றிருந்தன.
இவைகளே சாட்சிகள்!
இவைகள் வளர எலிகளின், வேர்க் கரையான்களின், இயற்கையின் கருணையும் ஒரு காரணமல்லவா?
இயற்கையைப் பொறுத்தவரை இந்த அரிய வளத்தை இம்மனிதனின் சாதனையை முறியடிக்க சுழன்றடிக்கும் ஒரு சூறாவளி போதுமானது.
பின்னர் அவர் என்னிடம் ஐந்து சிறிய சோலைகளைக் காட்டினார். அவை 1915-ல் பயிரிடப்பட்டவை என்றார். அந்த ஆண்டு நான் ‘வெர்டூன்' பகுதியில் போரில் ஈடுபட்டிருந்தேன்.
பள்ளமான எல்லா இடங்களிலும் அவர் விதைகள் போட்டிருந்தார். அவர் நினைத்தபடியே மண்படுகையின் அடியில் ஈரம் இருந்திருக்கவேண்டும்.
அந்த சோலைகள் குழந்தைகளைப் போல் இளமையுடன் மிருதுவாக காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. உறுதியாக நின்றன. இயல்பாக வளர்ந்ததைப் போல் அவை தோற்றமளித்தன.
அவர் சஞ்சலமற்ற தனது இடைவிடாத உழைப்பால் தன் இலக்குகளின் உச்சத்தை அடைந்து கொண்டிருந்தார். 
நான் கிராமத்தை விட்டுக் கீழிறங்கி நடந்த போது ஓடைகள் நிரம்பிய நீரோடு ஓடி வருவதைப் பார்த்தேன்.
எப்போதும் காய்ந்து கிடந்த அந்த மண்ணின் ஈரப்பதத்தின் அற்புத உயிரோட்டம்.
இதுதான் இயற்கையின் இயல்பான சுழற்சியில் வெளிப்படும் அதிசயம். இந்த அதிசயத்தை நான் பார்த்ததேயில்லை. நீண்ட காலத்துக்குப் பின் நீர்த் தாங்கல்கள் நிரம்பியுள்ளன. கைவிடப்பட்ட கிராமங்களாயிருந்தவைகளில் இப்போது சிலர் ரோமானிய சாயலில் வீடுகள் கட்டுகிறார்கள்.
தொல்லியல் ஆய்வாளர்கள் இங்கிருந்து மீன்பிடி தூண்டில்களைத் தோண்டி எடுத்து இருந்தார்கள். அவை 20 ம் நூற்றாண்டில் உள்ளதைப் போலவே இருந்ததாம்.
அந்தக் கிராமத்தில் குடிநீர் மற்றும் நீர்ப்பாசனம் குழாய் இணைப்புகளின் மூலமாக நடைபெறுகிறது. வேகமாக வீசும் காற்று மரத்திலிருந்த முற்றிய விதைகளை உதிர்த்து விடுகிறது. ஆங்காங்கே விழுந்த விதைகள் மீண்டும் முளைக்கத் தொடங்கி விடுகின்றன.
வில்லோ மரங்கள், நாணல் புதர்கள், பசும் புல்வெளிகள், பூக்கள் வளர்கின்றன. வாழ்வுக்கான அர்த்தம் தான் என்ன என்பது இவ்வாறு வெளிப்படுகிறது. இவையெல்லாம் மெதுவாக நடந்தேறின. ஆனால் அவை உடனே பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
முயல் அல்லது காட்டுப் பன்றிகளை வேட்டையாட வருபவர்கள் மலைகளின் முகடுகளுக்கு வரும்போது காட்டில் உள்ள சிறுமரங்களைப் பார்த்து ஏதோ இயற்கையின் கொடை என்று அதிசயிக்கின்றனர்.
அதனால் தானோ என்னவோ இடையரின் கடின உழைப்பிற்கு ஒருவரும் அங்கீகாரம் கொடுக்கவில்லை.
நல்லவேளை யாராவது ஒரு மனிதருக்கு சந்தேகம் வந்திருந்தாலும் இன்னொருவர் அதனைத் தடுத்து நிறுத்தியிருப்பார்.
ஆனால், யார் தான் அவரைப் பற்றி நினைப்பது?
அந்தக் கிராமங்களின் மனிதர்கள் அல்லது அந்தப் பகுதி அதிகாரிகள் யாராவது இடையரின் தொடர்ந்த உன்னதமான இலட்சிய உழைப்பை கற்பனை செய்து பார்த்திருப்பார்களா?
1920 முதல் ஒவ்வொரு ஆண்டும் நான் அவரைப் பார்க்க வருவேன். அவர் எப்போதும் போலவே இருந்தார்.
சோர்வடையாத மனம், இளகாத விடாமுயற்சி, கடவுளுக்குத் தான் தெரியும். சொர்க்கமே இவருக்கு எதிராக இருக்கிறதென்று.
அவருடைய மனப்போராட்டங்கள் வேதனைகள் குறித்து நான் கற்பனை செய்தது கூட இல்லை.
இத்தகைய சாதனைகளுக்காக அவர் நிறைய இடையூறுகளைச் சந்தித்திருக்கக் கூடும். இந்த அமைதிப் புரட்சிக்காக அவர் ஏராளமான இன்னல்களைத் தாங்கி அவநம்பிக்கையை எதிர்கொண்டும் வெற்றி பெற்றிருக்கக் கூடும். இந்த அசாதாரண மனிதன் இந்தச் சாதனையைச் சாதிக்க முழுமனதோடு தன்னந்தனியாக உழைத்தார். தன் வாழ்வின் இறுதி வரை உழைத்தார். இதற்காகப் பேச்சையே துறந்தார். ஏனெனில் உழைக்கும் அவருக்குப் பேச்சு தேவையற்றதாய் இருந்தது.
ரொம்ப நாள் கழித்து 1933-ல் காட்டிலாகா அதிகாரி ஒருவர் அவரைச் சந்தித்தார். வனப்பகுதியில் குப்பையை எரித்தல் தடைசெய்யப் பட்டுள்ளது என்று அறிவுறுத்தினார். அந்தத் தீ இயற்கையாய் உருவான காட்டை அழித்துவிடக் கூடியதாம். இயற்கையாகவே உருவான இது போன்றதொரு அற்புதமான காட்டை என் வாழ்வில் தான் பார்த்ததே இல்லை என்றார்.
1935-ல் இயற்கைக் காட்டைப் பார்க்க அரசு அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இயற்கை ஆர்வலர்கள் அங்கு வந்தார்கள்.
அவர்கள் உரையாடல் முழுவதும் அந்த இயற்கைக் காட்டைப் பற்றியே இருந்தது. ஏதாவது செய்யப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஒரே ஒரு நல்ல தீர்மானம் போட்டார்கள். யாரோ உருவாக்கிய காட்டை அரசின் பாதுகாப்பில் ஒப்படைத்தார்கள்.
அப்போதுதான் மரக்கரித் துண்டுகள் உற்பத்தி செய்வது தடைசெய்யப் பட்டது. இது போல் ஒரு காடு இயற்கையாக உருவாகியிருக்க முடியாது. யாரோ ஒருவரின் கடின உழைப்பு என்று சொல்லக் கூட காட்டிலாகா அதிகாரி யாருக்கும் அங்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சொல்லத் தோன்றவில்லை.
அந்த உயர்மட்ட காட்டிலாகா அதிகாரிகளின் குழுவில் என் நண்பர் ஒருவர் இருந்தார். என் நண்பருக்கு எல்லாம் சரியாகப் புலப்பட்டது. இந்த அதிசயத்திற்கான இரகசியத்தை அவரிடம் எடுத்துக் கூறினேன். 
பின்பு, ஒருநாள் அவரும் நானும் ‘எல்சியர்டு பூபியரை' பார்க்கச் சென்றோம்.
 
-மேலும் வளரும்....


...இந்தக் கவிதை எழுதுகிறவன்
பீங்கான் கழிப்பறைகளில்
பிளாஸ்டிக் குவளைகளில் 
கொட்டிய தண்ணீரில்
கோடியில் ஒரு பங்காவது
ஊற்றியிருப்பானா 
ஒரே ஒரு செடி 
வேரடி மண்ணில்.
       - கல்யாண்ஜி 

நிறமில்லாத இரத்தம்


இன்றோடு
அறுந்து தரை வீழ்கிறது
உன் தாய்மையின் தலை

இன்றுதான்
சிதறியுடைந்து பாழாகிப்போனது
கிளைகள் நீட்டி
இலைகளை வேய்ந்து
நீ கட்டிய அந்த பிரம்மாண்ட வீடு

நேற்றுவரை
புழு பூச்சி பறவைகளின்
பிரசவம் நிகழ்ந்த
இலவச மகப்பேறு மருத்துவமனையாயிருந்தது
உன் மனை

பிராணிகளின் பிராண வாயு
சுதந்திரம் என்பதால்
அவை
தாவி ஓடி விளையாடும்
தடகளப்போட்டி மைதானமாயிருந்தன
உன் தோள்கள்

சுவற்றில் சிறு கீறல் விழுந்தாலே
அலறும்
வீட்டு உரிமையாளர்கள் மத்தியில்
வாடகையேதும் வாங்காமல்
குருவிகளையும் காக்கைகளையும்
குடிவைத்தவள் நீ

உன் தேகமெங்கும்
நாங்கள்
ஆணிகளால் அறைந்தோம்
கூரான ஆயுதம் கொண்டு
காதலரின் பெயர்கள் வரைந்தோம்

ரணமானதே மேனியென்று
ரௌத்திரம் கொள்ளாமல்
கனமான உன் சோகங்களை
எங்களுக்கு
காட்டாமல் மறைத்த
கண்ணியக்காரி நீ

நாங்கள்
உழைத்துக்களைத்து
உன் மடி தேடி வந்தால்
வெயிலை வடித்துவிட்டு
நிழல் தேனீர் தந்தாய்

பசி பொறுக்காமல் உன்
புகலிடம் தேடி வந்தாலோ
உயிரைக்கனியாக்கி
உண்ணக்கொடுத்தாய்

இறுதியாய்,

நீ மரித்து வீழ்ந்த பின்புதான்
மிச்சமான உன் எலும்புகள்
எங்கள் வீட்டின்
மேஜை நாற்காலிகளாயின

மனிதர்கள் எங்களை நீ
மன்னித்துவிடு

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
என்று சூளுரைத்தோம்
பின்பு
எங்கள் பேருந்துகள் பயணிக்க
சாலைகளில்
நாங்களே
உன்னை வேரோடு அறுத்தோம்

ஆம்..

ஈன்ற அன்னையருக்கே
முதியோர் இல்லத்தில்
கல்லறை தயாரிக்கும் நாங்கள்
அறியவில்லை

வாள் கொண்டு கிழித்தபோது
வழிந்த
நிறமே இல்லாத உன் ரத்தம் பற்றி

காற்று மொத்தமும் நிறையும்படி
பெருங்குரலெடுத்து அழுத
உன்
சத்தம் பற்றி..

-ப. தியாகு (http://pa-thiyagu.blogspot.in/)

மரம் வளர்த்த மனிதனின் கதை... தொடர்ச்சி...1

Wednesday, 30 October 2013 3 கருத்துரைகள்
 (முதல் பகுதி: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html )

      விதைகள் அதனுள் இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பரிசோதித்தார். நல்லவற்றைத் தனியாகவும் சொத்தைகளைத் தனியாகவும் வைத்தார்.
       நான் என் பைப்பில் புகைத்தபடி அமர்ந்திருந்தேன். நான் கொஞ்சம் உதவட்டுமா என்று கேட்டேன். அது தன் வேலை என்றார். அந்த வேலையை மிகுந்த கவனத்தோடு அவர் செய்வதைக் கவனித்தேன்.
        அப்போதுதான் நாங்கள் முதலும் கடைசியுமாகப் பேசிக்கொண்டோம்.
        பின், அவர் தேவையான ஓக் விதைகளை பரிசோதித்தபின் பத்து பத்தாகப் பிரித்தார். அவற்றிலும் சிறியவைகளையும் கீறல் விழுந்தவைகளையும் ஒதுக்கி வைத்தார்.
         இப்போது மீண்டும் அவைகளை துல்ல்¢யமாகப் பரிசோதித்து இறுதியாக அவர் மேசையில் 100 ஓக் விதைகல் சேர்ந்ததும் வேலையை நிறுத்தி விட்டார்.
         நாங்கள் படுக்கைக்குச் சென்றோம். அவரோடு கூட இருந்த கணங்கள் எனக்கு நிறைவான மன அமைதியைத் தந்தது.
        அடுத்த நாள் காலை இன்னும் ஒருநாள் நான் அங்கே தங்கிவிட்டுப் போகலாமா என்று கேட்டேன். நான் கேட்டது அவருக்கு இயல்பாகத் தோன்றியிருக்கலாம். எனக்கு அவரோடு தங்கியிருக்க வேண்டும் போலிருந்தது.
        அப்படிக் கேட்டதால் அவரை எதுவும் பாதித்ததாக எனக்குத் தெரியவில்லை. அடுத்தநாள் எனக்கு ஓய்வு தேவைப்படவில்லை.
        அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள விரும்பினேன். அவர் பட்டியிலிருந்த ஆடுகளை விடுவித்து மேய்ச்சலுக்கு புறப்பட்டார்.
         அதற்கு முன் அவர் ‘ஓக்' விதைகள் இருந்த பையை நீர் இருந்த கிண்ணத்தில் ஊறப்போட்டார். அவர் ஆடு விரட்டும் தடிக்குப் பதிலாக ஒரு இரும்புக் கம்பியை எடுத்துவருவதை நான் கவனித்தேன். என் கட்டை விரலளவு தடிமனாகவும் என் தோள்பட்டை உயரத்திலும் அது இருந்தது.
        நான் அங்குமிங்கும் உலாவுவதைப் போல் அவரைப் பின் தொடர்ந்தேன். ஒரு குறிப்பிட்ட தொலைவில் அவர் போகும் பாதைக்கு இணையான பாதையொன்றில் நானும் நடந்தேன்.
       அவரது ஆடுகள் பள்ளத்தாக்கிலிருந்த புல்வெளியில் மேயத் தொடங்கின. ஆடுகளுக்கு நாயைக் காவலுக்கு விட்டுவிட்டு நான் நின்றிருந்த மலை முகட்டுக்கு ஏறத்தொடங்கினார். என்னைக் கடிந்து கொள்ளத்தான் வருகிறார் என்று நினைத்து சற்று பயந்தேன்.
       ஆனால், நான் நின்றிருந்த இடத்தைத் தாண்டி மேலே அவர் சென்று கொண்டிருந்தார். எனக்கு வேறு வேலை எதுவுமில்லை என்றால், என்னையும் தன்னோடு வரும்படி அழைத்தார். அவருடைய இலக்கை நாங்கள் அடைந்ததும் அந்த இரும்புத் தடியால் குழியெடுக்கத் தொடங்கினார்.
         ஒவ்வொரு குழியிலும் ஒரு ஓக் விதையைப் போட்டு மண்ணை மூடினார். 
        இந்த மலைப்பரப்பு உங்களுடையதா என்று கேட்டேன். இல்லையென்று சொன்னார்.
         இந்த நிலம் யாருடையதென்று கேட்டேன். அதுவும் தெரியவில்லை என்றார். அது பொது நிலம். கோயில் சொத்தாக இருக்கலாமென்றார். இல்லையெனில் இந்த இடத்தைப் பற்றிக் கவலைப்படாத யாரோ ஒருவருடையதாகவும் இருக்கலாம் என்றார். அதுபற்றி அவருக்குக் கவலையில்லை.
         அப்படியாக தொடர்ச்சியான அக்கறையோடு தான் கொண்டு வந்த 100 ஓக்  விதைகளையும் விதைத்தார்.
       மதிய உணவிற்குப் பின் தான் ஏற்கனவே நட்ட ஓக் செடிகளைப் பார்வையிடத் தொடங்கினார்.
          கடந்த மூன்று வருடங்களாக அவர் இந்தத் தரிசு நிலத்தில் மரங்களை நடத் தொடங்கியுள்ளார்.
      கிட்டதட்ட 10,000 விதைகள் விதைத்துள்ளார். அவற்றிலிருந்து 2,000 இளஞ்செடிகளே வெளிவந்துள்ளன. இவற்றில் பாதியையும் இழந்து விடுவேன் என்றார். வேர்க்கரையானோ, எலிகளோ, இயற்கை சீற்றமோ இளஞ்செடிகளின் அழிவை மேலும் அதிகரிக்கலாம்; யாருக்குத் தெரியும் என்றார்.
      அந்த 10,000 ஓக் கன்றுகளைத் தவிர இதற்கு முன் அங்கே எதுவுமே இருந்திருக்கவில்லை.
       அவருடைய வயதைக் கேட்டேன். அவர் சொன்னதை விட அவருக்குக் கூடுதலாக இருக்கலாம் போல் இருந்தார்.
        பின்னர் அவர் பெயர் கேட்டென். அவர் பெயர் ‘எல்சியர்டு பூபியர்' என்றார். பள்ளத்தாக்குப் பகுதியில் அவர் ஒரு பண்ணை வைத்திருக்கிறார்.  அங்குதான் அவர் வாழ்வு சிறந்திருந்தது. 
       கொடிய நோய்த் தாக்குதலினால் முதலில் அவரது ஒரே மகனையும் அடுத்து அவரது மனைவியையும் இழந்திருக்கிறார். பின்பு தான் ஏகாந்தமான இந்த இடத்துக்கு வந்திருக்கிறார்.
        தன்னுடைய ஆடுகளோடும், நாயோடும் வாழ்வதே அவருக்கு மனதுக்கு நிறைவாய் இருந்திருக்கிறது.
    இந்த நிலப்பகுதி மரங்கள் இல்லாமல் பாலைநிலமாய் மாறிக் கொண்டிருக்கிறது. தனக்கென்று குறிப்பாக எந்த வேலையும் இல்லாததால் இந்தப் பகுதியில் மரங்களை நடும் வேலையைத் தேர்ந்தெடுத்தேன் என்று கூறினார்.
       அவருடைய பகிர்வு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் இளைஞன் ஆதலால் என் எதிர்காலம் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். நான் சொன்னேன்: இன்னும் 30 ஆண்டுகளில் 10,000 ஓக் மரங்கள் மிக அருமையாக வளர்ந்திருக்குமென்று. அதற்கு அவர் சொன்னார்: “கடவுள் என்னைப் பிழைக்க வைத்திருந்தால் இந்த 30 ஆண்டுகளில்...”
       இன்னும் ஏராளமான விதைகளை விதைத்திருப்பார். இந்த 10,000 ஓக் மரங்கள் கடலில் விழுந்த ஒரு துளி நீர் போல தான். ஏற்கனவே அவர் புங்கன் மரங்களை வளர்ப்பது பற்றிய நுட்பத்தைத் தெரிந்து வைத்திருந்தார். அதோடு கூட புங்கன் விதைகளை நட்டு நாற்றங்காலில் இளம் செடிகளை வைத்திருந்தார். அந்த புங்கன் செடிகள் வளர்ந்திருந்த பாத்தி மிக அழகாக இருந்தது.
     மேலும் அவர் பள்ளத்தாக்குகளில் மரம் வளர்க்க வேறு வகையான விதைகளையும் வைத்திருந்தார்.
     அவர் சொன்னார்: இந்த மண் படுகைக்கடியில் ஈரப்பதம் இருக்கிறது. கண்டிப்பாய் நட்ட விதைகள் மரங்களாகும்.
        அடுத்தநாள் நான் என் பயணத்தைத் தொடங்கினேன். அப்போதுதான் முதல் உலகப்போர் மூண்டது.
     தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நான் இராணுவச் சேவையில் ஈடுபட்டிருந்தேன். ஒரு போர் வீரன் மரங்களைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது இயல்பான செயலல்ல. போர் நிறுத்தத்துக்குப் பிறகு எங்கள் படை கலைக்கப் பட்டது. எனக்கு இராணுவச் சேவைக்கான கணிசமான ஒரு தொகை ஊதியமாகக் கிடைத்தது.
               நான் மீண்டும் பயணப்பட்டு அந்த மலை முகட்டுக்கு வந்தேன்.
                                                          -வளரும்...

இவற்றையும் வாசிக்கலாம்...

நம் சந்ததியினருக்கு நம்மாலானது...

Tuesday, 29 October 2013 5 கருத்துரைகள்
மரம் வளர்த்த மனிதனின் கதை

French cover


         ழான் கியானோ எழுதிய இந்த பிரெஞ்சு சிறுகதை (நூல் வெளியீடு: 1953) அனிமேஷன் படமாக்கப் பட்டு உலகெங்கும் பார்க்கப் படுகிறது. 


 இந்த படத்தின் நாயகர் எல்சியர்டு பூபியர். ஒருவேளை கற்பனையாகப் படைக்கப்பட்ட பாத்திரமாகவுமிருக்கலாம். ஆனாலும் ஒரு உயிரோட்டமுள்ள பாத்திரப்படைப்பாக உருத்தெரிந்தது மரம் நட்டு வளர்ப்பதையே தம் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டதால் தான். கனடியன் ஒலிபரப்புக் கழகம் ‘சொசைட்டி ரேடியோ கனடா' என்ற அமைப்பின் கீழ் 1987-ம் ஆண்டு 30 நிமிடங்கள் ஓடத்தக்க அனிமேஷன் படமாக (The Man who Planted Trees) வெளியிட்டது. 

       வாசிப்பவர்களை யோசிக்கச் செய்யத் தக்க மனதுக்கு நெருக்கமான வார்த்தைகளுடன் இச்சிறுகதையை பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்தில்-ழான் ராபர்ட்ஸ் மொழிபெயர்க்க,  ஆங்கிலத்திலிருந்து தமிழில் 


மரம் வளர்த்த மனிதனின் கதை 

என்ற தலைப்பில் நூலாக வெளியிடும் ஹாரிசன் மீடியா (4/1320, காந்தி நகர், தும்பல் (அஞ்சல்), சேலம்-636 114, தொடர்பு எண்: 9787143550, மின்னஞ்சல்: anto_slm@yahoo.com) பாராட்டுக்குரியது.


 தமிழில் மொழிபெயர்த்த 

திரு.இதயசீலன்  மற்றும் 

திரு.ஆண்ட்டோ 


போற்றுதலுக்குரியோர்.

 இனி கதை...

பல ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை ஆல்ப்ஸ் மலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த அறிமுகமுமில்லாத ஒரு சிகரத்தில் நடையுலா சென்றேன். பழமையான சிகரங்கள் சரிந்து இறங்கும் பாறைகள் கொண்ட மலைப்பகுதிகள் அது.

         கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 முதல் 1300 மீட்டர்கள் உயரமுள்ளது. நீண்ட அடர்த்தியாக மானாவாரியாக வாசனைமிகு லாவண்டர் செடிகள் வளர்ந்து கிடந்த பகுதியது.

         மூன்று நாள் மலையேற்றத்தின் பின் நான் ஒரு தரிசு நிலப் பகுதியில் நின்றேன். நான் நடந்து சென்ற அந்தப் பாதை மலைமேல் விரிந்து பர்ந்து கிடந்த ஒரு நிலப் பரப்பை நோக்கிச் சென்றது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலப்பகுதி அது.

          அன்றைய இரவைக் கழிக்க நான் அங்கு கூடாரமிட்டுத் தங்கினேன். அதற்கு பக்கத்தில் தான் ஆள் அரவமற்ற கிராமமொன்று இருந்தது.

         அன்றைய தினத்துக்கு முந்தைய நாள் என்னிடமிருந்த குடிநீர் தீர்ந்து போயிருந்தது. கொத்து கொத்தாக வீடுகள் இடிந்து போயிருந்தன. அவை பழைய குளவிக்கூட்டின் சாயலை ஒத்திருந்தன. அந்தப் பகுதியில் எங்காவது ஒரு நீரூற்றோ கிணறோ இருக்குமென்று நம்பினேன். நான் நினைத்தது போல் அங்கு ஒரு ஊற்று இருந்தது. ஆனால் நீர் தான் இல்லை.

        கூரையில்லாத வீடுகள் காற்றாலும் மழையாலும் அழிக்கப்பட்டிருந்தன. மாதாக்கோயிலும் மணிக்கூண்டும் சிதிலமடைந்து கிடந்தன. அந்தப் பகுதி ஒரு காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த பகுதியாகக் காட்சியளித்தது. ஆனால் தற்போது உயிர் நடமாட்டம் ஏதுமில்லாமலிருந்தது.

அது ஒரு ஜுன் மாதத்தின் மேகமற்ற வெப்பமான நாள். உயர்ந்த காலியான அந்த மேட்டு நிலங்களில் தடையற்ற வேகமான காற்று காலியான வீடுகளின் உள் நுழைந்து, கடும் உறுமலுடன் வெளிவந்தது.
தான் வேட்டையாடிய உணவை தின்று கொண்டிருக்கையில் மற்றொரு மிருகம் பங்கு கேட்க வந்தால் எப்படி உறுமுமோ அப்படி உறுமியது காற்று. இதனால் என் கூடாரத்தை வேறிடத்துக்கு மாற்ற வேண்டியதாயிற்று.

         மீண்டும் ஐந்து மணி நேரம் தொடர்ந்து நடந்தேன். இன்னும் குடிநீர் கிடைக்கவில்லை. எங்காவது கிடைக்கும் என்ற நம்பிக்கையுமில்லை. சென்ற எல்லா இடங்களிலும் அதே வறட்சி... தகிப்பு!
காய்ந்து சருகாகிப் போன புற்களும் புதர்களும் எங்கும் காணப்பட்டன.

        அங்கு தொலைதூரத்தில் ஏதோ ஒன்று கண்ணில் தென்பட்டது. மெல்லியதான கருமையான மரக்குச்சி போல் ஒரு உருவம் நின்று கொண்டிருந்தது. அந்த உருவத்தை நெருங்கிச் சென்றேன். ஒரு இடையர் அவர்.

      அவருக்கருகில் 30 செம்மறியாடுகள் வெக்கையான அந்த வெட்டவெளியில் படுத்துக் கிடந்தன. அவரை நெருங்கியதும் தன்னிடமிருந்த நீர்க்குடுவையை எனக்குக் குடிக்கக் கொடுத்தார். பின், தனது ஆட்டுப்பட்டிக்கு என்னை அழைத்துச் சென்றார்.

          இயற்கையாக தோண்டப்பட்ட அங்கிருந்த கிணற்றிலிருந்து எனக்கும், ஆடுகளுக்கும் நீரை இறைத்துக் கொடுத்தார். அருமையான குளிர்ந்த குடிநீர். அவர் மிகவும் குறைவாகவே பேசினார்.

        தன்னந்தனியாக வாழ்வோர் பலபேர் இப்படித்தான் கொஞ்சமாகப் பேசுவார்கள். தன்னிருப்பைப் பற்றிய நிச்சயத் தன்மையும் தன் வேலையைப் பற்றிய தெளிவும் அவரிடம் இருந்தன. 

        அந்த சிகரத்தின் வெட்ட வெளிகளில் கண்ணில் பட்டதெல்லாம் எனக்கு அதிசயமாகத் தோன்றியது.

       அவர் குடிசையில் அல்ல. நல்ல வீட்டில் குடியிருந்தார். அது கற்களால் கட்டப்பட்ட செளகரியமான வீடு. அவர் கைப்படப் பார்த்துப் பார்த்துக் கட்டியிருந்தது தெரிந்தது.

        ஒருமுறை இடிபாடுகளைச் சரிசெய்திருப்பதும் தெர்¢ந்தது. அவர் வீட்டுக் கூரை இறுக்கமாகவும் உறுதியாகவும் இருந்தது. அந்தக் கூரை மீது காற்று மோதும் போது கடற்கரையில் எழும் அலையின் ஓசையைப் போன்றிருந்தது.

வீட்டின் உள்ளே என்னை அழைத்துச் சென்றார். பாத்திரங்கள் கழுவப்பட்டு, தரை துடைக்கப்பட்டு திரி விளக்குகளில் எண்ணெய் நிரப்பப்பட்டு, தூய்மையும் ஒழுங்கும் ஒருசேர இருந்தன.

அவரது ‘சூப்' அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது.

          அவரைக் கவனித்தேன். பிசிறில்லாமல் மழிக்கப்பட்ட முகம். ஆடைகள் தூய்மையாகவும், பொத்தான்கள் சரியாகத் தைக்கப் பட்டும் அவரது நாகரீக மேனியைப் பறைசாற்றின.

அவர் தனது சூப்பை என்னுடன் பகிர்ந்து கொண்டார். நான் அவரிடம் என் புகையிலைப் பையைக் கொடுத்தேன். தான் புகைப்பதில்லை என்று தவிர்த்து விட்டார்.

        அவரது நாயும் அவரைப் போலவே அமைதியாக இருந்தது. என்னிடம் நட்பாகப் பழகியது. அன்றிரவு அவர் வீட்டில் நான் தங்குவதற்குச் சம்மதித்தார்.

         அருகிலுள்ள கிராமம் இரண்டு நாள் நடைப் பயண தூரத்திலிருந்தது. அந்தப் பகுதியிலிருந்த கிராமங்கள் எண்ணிக்கையில் குறைவாகவும், தொலை தூரத்திலும் இடைவெளி விட்டும் இருந்தன.

         அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒருவாறு நான் புரிந்து கொண்டேன்.

          நான்கு அல்லது ஐந்து குடும்பங்கள் அந்த மேட்டு நிலப்பகுதியின் சரிவுகளில் குடியிருந்தன.

         அவர்களிடம் மரத்திலான தள்ளு வண்டி இர்ந்தது. அவர்கள் மரங்களை வெட்டி எரித்து கரித்துண்டுகள் தயாரிப்பவர்கள்.

         ஆனாலும் வாழ்க்கையில் ஏழ்மை நிரம்பியவர்கள். கடும் கோடையிலும், மோசமான குளிரிலும் நெருக்கமாக அடைந்து கிடப்பார்கள். வாழ்க்கைக்கான போராட்டத்திலும் தனிமையாலும் முரடர்களாக மாறிப் போயிருந்தார்கள்.

எதிலும் நிறைவில்லை. நிம்மதியில்லை. இதிலிருந்து தப்பிக்க அவர்கள் ஏக்கத்துடன் முயற்சிப்பார்கள். அடைய முடியாத லட்சியம்; நிறைவேறாத கனவுகள்.

        முடிவில்லாமல் அவர்கள் மரக்கரி மூட்டைகளுடன் நகருக்குச் சென்று விற்றுத் திரும்புவார்கள்.

          தொடர்ச்சியான வறுமையின் தாக்கத்தால் மிகவும் நல்லொழுக்க சீலர்களிடம் கூட குணங்கள் விரிசல் கண்டுவிடும்.

          உழைக்கும் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளால் நிம்மதியற்று குமைந்து கொண்டிருப்பார்கள்.

        எதிலும் எல்லா இடங்களிலும் கோவிலில் கூட உட்கார அமர்விடங்களைப் பிடிப்பதில் போட்டி தான்.

        நல்லவர்களாக இருப்பதிலும் கெட்டவர்களாக இருப்பதிலும் கடும் போட்டி இருக்கும். நல்லவை தீயவைக்கான பெரும் போர் இடைவிடாது தொடர்ந்தபடி இருக்கும்.

        தற்கொலைகளும் மன நோய்களும் அதனால் கொலைகளும் நடந்தபடி இருக்கும்.

         இவைகளின் இடையே தொடர்ந்து வீசும் அந்தக் காற்று நரம்புகளைச் சுண்டி இழுக்கும்.

        புகைப்பிடிக்காத அந்த ஆட்டு இடையர் ஒரு துணிப்பையை எடுத்து வந்தார். மேசையில் வைத்து அதைப் பிரித்தார்.

                                            -வளரும்...
'உலகம் நாளை

உடைந்து சிதறுமென 

அறிய நேர்ந்தாலும் நடுவேன் என் 

ஆப்பிள் மரத்தை.'

-Martin Luther

('Even if I knew that tomorrow the world would

go to pieces, I would still plant my apple tree.')

நன்றி: திரு கே.பி. ஜனா...http://kbjana.blogspot.com/2013/11/22.html


அன்று சொன்னவை அர்த்தம் உள்ளவை

Monday, 7 October 2013 9 கருத்துரைகள்

பட்டி மன்றம்

பாட்டி செத்த பத்தாம் வினாடி
பெரிய குழப்பம்
பிணத்தை
எரிப்பதா புதைப்பதா என்று
உள்ளூர்ப் புலவர் ஓடி வந்தார்
பட்டிமன்றம் வைத்துப்
பார்த்தால் என்ன என்று.

நவயுகக் காதல்

உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்
வாசுதேவநல்லூர்...

நீயும் நானும்
ஒரே மதம்
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட...

உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்த ஊர்க்காரர்கள்
மைத்துனன்மார்கள்

எனவே
செம்புலப் பெயல்நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே.

இவ்விரண்டு கவிதைகளும் கவிஞர் மீராவை பரவலாக அறிந்தவர்களால் அடையாளப்படுத்தப்படுவது. இக்கவிதைகள் அடங்கிய ‘ஊசிகள்' தொகுப்பில் அடையாளம் காட்டாத பல அரசியல் கவிதைகள் கூட அடங்கியுள்ளன.1974-ல் முதற்பதிப்பு பெற்ற ‘ஊசிகள்' 2008-க்குள் எட்டு பதிப்பை எட்டியிருப்பதைக் காணும்போது இவை பரவலாக வாசிக்கப் பட்டிருக்கின்றன என்பது மட்டும் புரிகிறது.

“சமுதாயத்தின் நோய்க்கிருமிகளைப் பார்க்கும்போது சங்கடப்படுகிறேன். கோபமும் வருகிறது. ஒரு சுகாதாரமான சமுதாய ஆசைதான் இந்த ‘ஊசிகளை' உருவாக்கியது. என்னைப் பொறுத்தவரை இலக்கிய உப்பரிகையில் உலாவுவதை விடச் சமுதாய நடைபாதைகளைச் செப்பனிடுவதையே முக்கியமாகக் கருதுகிறேன்” எனும் மீராவின் விளக்கம் நல்ல துலக்கம் நமக்கெல்லாம்.

இந்நூலை அணிந்துரைத்த எஸ்.ஏ. பெருமாள் சொல்வது போல், கவிஞர் எதைப் பற்றி எழுதினார் என்பதுதான் முக்கியம். கவிதையை ஒரு கைவாளாய் பிரயோகித்தவர்கள் தமிழில் வெகு அபூர்வம். அவர்களில் மீராவுக்கு முக்கிய இடமுண்டு.

        கீழ்வரும் கவிதைகளும் ‘ஊசிகள்' தொகுப்பில் தான் உள்ளன. என்றென்றைக்குமாக.

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar