நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

நவம்பர் மாத மழையில் ...

Saturday, 16 November 2013 8 கருத்துரைகள்
       நவம்பர் மாத மழை,  ஈரப் படுத்திக் கொண்டிருக்கிறது அப்பாவின் நினைவுகளை . தீராத்  துயரமாய் ஆண்டுக்காண்டு பொங்கிப் பெருகும்படியாக அவரது நினைவு நாள் நெருங்குகிறது. நம்மோடு இல்லை எனினும் நம்முள் நிறைந்திருக்கிறார் என அறிவுமனம் உணர்வுமனத்தை ஆற்றுவிக்கிறது. தோழமைக் கவிஞர் கண்மணி ராசா இராஜபாளையத்தில் இருந்து அனுப்பித் தந்த இந்த கவிதை ஒவ்வொரு அப்பாவின் மேன்மையையும் உரக்கப்  பறைசாற்றுகிறது. அப்பாவுக்கு மாற்றாய் வாழ்வில் பந்தப் பட்ட மாமனாரும் மற்றொரு நவம்பரில் தான் உயிர் துறந்தார் என்பதும் நவம்பரை கனப்படுத்துகிறது.

அப்பா

அப்பாவைப் போலொரு
அழகான வனத்தை
எப்போதும் கண்டதில்லை...
இப்போது நினைத்தாலும்
நிறைக்கிறார் மனத்தை
என்னுள்ளே காட்டு முல்லை.

காட்டாற்று வெள்ளம் தான்
அப்பாவின்ன் கால்கள்
எப்போதும் ஓய்ந்ததில்லை...
கரைகொண்ட மரம்தான்
அப்பாவின் தேகம்
எப்போதும் சாய்ந்ததில்லை...

உறைந்த நதிதான்
அப்பாவின் பாசம்
கண்களில் பட்டதில்லை...
ஒழுகும் வெயில்தான்
அப்பாவின் கோபம்
ஒருபோதும் சுட்டதில்லை...

ஊமத்தம் பூதான்
அப்பாவின் துயரம்
வெளியே மணத்ததில்லை...
ஒற்றை இதழ்தான்
அப்பாவின் ஆசை
சற்றேனும் கனத்ததில்லை...

உதிர்ந்த இலைதான்
அப்பாவின் மரணம்
ஒருபோதும் அழிவில்லை...
மண்ணோடு ஒன்றாய்
கலந்திருப்பார்...
மறுபடி எங்கோ
மலர்ந்திருப்பார்!

           -இராசை.கண்மணி ராசா
            இராஜபாளையம்.


மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி

Wednesday, 6 November 2013 3 கருத்துரைகள்
தொடக்கம்: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html

பகுதி-1: http://nilaamagal.blogspot.in/2013/10/1.html

பகுதி-2: http://nilaamagal.blogspot.in/2013/10/2.html

மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி

அந்த இடையர் தற்போது 20 கி.மீ.க்களுக்கு அப்பால் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். அவர் மரம் நட்டிருந்த பகுதிகள் நிலமேம்பாடு பற்றி ஆராய்ச்சி செய்வதற்கான பகுதியாக இருந்தது.
என் நண்பர் தான் பார்த்ததையெல்லாம் பாராட்டிக் கொண்டே வந்தார். இடையில் சிறிது உணவு இடைவேளைக்காகத் தங்கினோம். நான் கொண்டு வந்த அவித்த முட்டைகளை அவருடன் பகிர்ந்து கொண்டேன்.
பலமணி நேரங்கள் பேச்சின்றி அந்தக் காட்டைப் பார்த்தபடி கழித்தோம்.
நாங்கள் மேலேறிச் சென்ற மலை முகடுகளில் இருந்த மரங்கள் எங்களை விட 4 மடங்கு உயரத்தில் இருந்தன.
1913-ல் நான் உணர்ந்த தனிமை; ஆனால் அமைதி. தொடர்ச்சியான உழைப்பு, மலை உச்சியில் வீசும் சில்லென்ற குளிர்க்காற்று, ரம்யமான சூழல். அமைதியான சிந்தனை. எளிமையான வாழ்க்கை.  இதெல்லாம் சேர்ந்து தான் இவரை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

        இவர்தான் கடவுளின் தூதர்களில் ஒருவர்!

        இன்னும் எத்தனை மலை முகடுகள் பசுமையால் போர்த்தப் பட வேண்டும்!
நான் வியந்து நின்றென்.
நாங்கள் கிளம்பும் போது என் நண்பர் அந்த இடையரிடம் எந்த மண்ணுக்கு என்ன மரங்களை நட வேண்டும் என்று கேட்டார். ஆனால் வலியுறுத்தி நிறைய விபரங்களைக் கேட்கவில்லை.
காரணம் அவர் சொன்னார். இந்த மனிதர் என்னை விட மரங்களைப் பற்றி, பல்லுயிர் பெருக்கம் பற்றி நிறைய விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார். அது அவரது மூளையை ஆக்கிரமித்திருக்க வேண்டும்.
அப்போது ஒரு மணி நேரம் கடந்திருக்கும். நாங்கள் இன்னும் நடந்து கொண்டிருந்தோம்.
இந்த உலகில் பிற காரியங்களுக்கு மதிப்பளிக்காமல் மகிழ்ச்சியோடு வாழ்வதற்குரிய சரியான வழியை அவர் கண்டுபிடித்திருக்கிறார்.
அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்தக் காட்டிலாகா நண்பருக்கு நன்றி! காடுமட்டுமல்ல, எல்சியர்டு பூபியரின் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் காப்பாற்றப் பட்டது.
ஆனால், அது ரொம்ப நாட்களுக்கு நீடிக்கவில்லை.

        மீண்டும் இரண்டாம் உலகப் போர் மூலம் தீய விளைவுகள் உற்பத்தி செய்யப் பட்டன. மரங்களை வெட்டி மரக்கரித் துண்டுகளை எரித்து இயந்திரங்கள் இயக்கப் பட்டன.
மரக்கரி உற்பத்திக்கு விறகு தொடர்ந்து கிடைக்கவில்லை. 1910-ம் ஆண்டில் நடப்பட்ட ஓக் மரங்கள் வெட்டப்பட்டன. ஆனால், அவை சாலைகளைத் தாண்டி வெகு தூரத்தில் இருந்ததால் திட்டம் கைவிடப்பட்டது.
இடையருக்கு இவை எதுவும் தெரியாது. தற்போது 30 கி.மீ. அப்பால் வழக்கமான தனது வேலையில் ஈடுபட்டிருந்தார்.
முதலாம் உலகப் போரை அலட்சியம் செய்தது போலவே இரண்டாம் உலகப் போரையும் அவர் மனதளவில் ஒதுக்கித் தள்ளியிருந்தார்.
நான் இறுதியாக அவரை 1945 சூன் மாதத்தில் ஒருநாள் சந்தித்தேன்.
அப்போது அவருக்கு வயது 87. இப்போது எல்லா மலை முகட்களுக்கும் ‘டியுன்ஸ்' பள்ளத்தாக்கிலிருந்து ஒரு பேருந்து போய் வருகிறது.
நான் ஏற்கனவே வந்த அந்த மலையடிவார பொட்டல் வெளிக்கு பேருந்து வந்து நின்றது.
என் நடை உலா மூலம் கண்டறிந்து சென்ற பாதைகள் தற்போது காணாமல் போயிருந்தன. ஒவ்வொரு கிராமத்திற்கும் சாலைகளில் பெயர்ப்பலகைகள் நின்றன.
நான் வந்திருப்பது சரியான இடம் தானா என்று தீர்மானிப்பதற்குள் பேருந்து வேகமாக அந்தப் பகுதியை வந்தடைந்தது. ‘வெர்கான்ஸ்' என்ற சாலை முகட்டில் இறக்கி விடப்பட்டேன்.
1913-ம் வருடம் சிதிலமடைந்திருந்த அந்த 12 வீடுகளில் இப்போது 3 வீடுகளில் மட்டும் யாருமில்லை.
அப்போது நம்பிக்கையற்ற மனிதர்கள் வாழ்ந்தனர். அங்கு காட்டு விலங்குகளைப் போல் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் பல்வேறு தடுப்புகளை தங்களுக்குள் அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர்.
இப்போது எல்லாமே மாறிப்போயிருந்தது. வீசும் காற்றில் கூட வேறுபாடு. மெல்லிய வாசம் வீசும் பூங்காற்று. எங்கும் ரம்மியம்.
மலை உச்சியிலிருந்து நீர் தவழ்ந்து வரும் ஓசை. மென் காற்று இலைகளை உரசிக்கொண்டு இனிமையாய் சடசடக்கும் சப்தம்.
அதோடு ஆச்சர்யமாக இன்னொரு காரியம். அதுவும் தெளிந்த ஊற்று நீரின் சலசலக்கும் ஓசைதான்! இப்போது அந்தப் பகுதிவாழ் மக்களே சேர்ந்து உருவாக்கியுள்ள செயற்கை நீரூற்று. அதிலிருந்து நீர் வெளியேறி குதித்துக் குதித்து ஓடும் காட்சி!
அதற்கருகில் என் மனதை மிகவும் பாதித்த காட்சி. அந்த ஊற்றின் அருகில் யார்ரோ ஒருவர் ‘லிண்டென்' மரத்தை நட்டிருந்தார்கள்.
மறுபிறப்பின் சரியான அடையாளம் அது. மேலும் ‘வெர்கான்ஸ்' மனிதர்க்கள் உழைப்பின் பலனை உற்சாகமூட்டும் பயனை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
ஆம். நம்பிக்கை மீட்கப் பட்டிருந்தது. இடிபாடுகள் சீர்செய்யப் பட்டிருந்தன. சிதிலமடைந்திருந்த சுவர்கள் கட்டியெழுப்பப் பட்டிருந்தன. புதிய வீடுகள் மெருகு குலையாமல் சமையலறைத் தோட்டங்களோடு காட்சியளித்தன. பூக்களும் காய்கறிகளும் தனித்தனியாக ஒழுங்கமைவுடன் செழித்து வளர்ந்திருந்தன.
ரோஜாக்கள், முட்டைகோசுகள், ஸ்னாப் டிராகன்ஸ், லீக்ஸ், செலரி, அனிமோன்கள் எல்லாம் செழித்து வளர்ந்திருந்தன.
அந்தப் பகுதி எவரும் வந்து வாழ ஆசைப்படும் இடமாக மாறியிருந்தது.
அந்த இடத்திலிருந்து தான் நான் நடக்கத் தொடங்கினேன். இரண்டாம் உலகப் போரின் பேரழிவிலிருந்த் நாடு இன்னும் மீளவில்லை. முழுமையான நிறைவை எய்தவில்லை. ஆனால் லாசர் கல்லறையிலிருந்து எழுந்து விட்டார் போன்ற அற்புதம் இங்கே நடந்தேறியிருந்தது.
மலை முகட்டிலிருந்து மலைச் சரிவுகளைப் பார்க்கும் போது சின்னச்சின்ன வயல் புறங்களில் பார்லியும், ரையும் பயிரிடப் பட்டிருந்தன. இன்னும் கீழே குறுகிய பள்ளத்தாக்குகளும் புல்வெளிகளும் பசுமையாய்ப் பிரகாசிக்கின்றன. இவையெல்லாம் எட்டு ஆண்டுகளில் நடந்தேறிவிட்டன.
1913-ல் இடிபாடுகளையும் பேரழிவுகளையும் பார்த்திருந்த நான் தற்போது தூய்மையான சீரமைக்கப்பட்ட அழகான பண்ணை வீடுகளைப்  பார்க்கிறேன்.
நிறைவான வாழ்க்கையும் மகிழ்வின் சாட்சியங்களும் உலவுகின்றன. காய்ந்து கிடந்த ஊற்றுகளில் பனியும் மழையும் நிரம்பியுள்ளன. காடுகளில் சேமிக்கப் பட்ட நீர் இதோ வழிந்தோடுகிறது.
மலைச்சரிவுகளும் முகடுகளும் பச்சைப் போர்வைகளால் போர்த்தப் பட்டுள்ளன. பகுதி பகுதியாய் கிராமங்கள் புனரமைக்கப் பட்டுவிட்டன. மலைப்பகுதியிலிருந்து மக்கள் சமவெளிக்கு குடியேற வருகின்றனர்.
நிலங்களின் விலை அதிகமாகி வருகிறது. அவர்கள் வாழ்வின் இளமையையும் மகிழ்ச்சியான வாழ்வையும் சாதித்த உணர்வையும் கொண்டு வருகிறார்கள். சாலைகளில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அன்யோன்யமும் ஆரோக்கியமும் வெளிப்படுகிறது. இளைஞர்களும் யுவதிகளும் மகிழ்வுடன் தங்கள் இளமைக் காலத்தைக் கொண்டாடுகின்றனர்.
ஏற்கனவே இங்கு வாழ்ந்தவர்கள் தங்களின் சுற்றுப் புறச்சூழல் முற்றிலும் மாற்¢யிருப்பதை உணர்கிறார்கள். புதிதாகக் குடியேறுபவர்களுக்கும் அவ்விடம் சொர்க்கலோகம் போல் கனவுலகமாகத் தெரிகிறது.
கிட்டதட்ட 10,000 பேருக்கு மேல் அந்தப் பகுதிக்கு வந்து இடையரைச் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஒரு தனிமனிதன்...
ஒரு உடல்... ஒரு ஆன்மா மட்டுமே.
மனிதக் குறுக்கீடுகளால் பாலைவனமாக்கப் பட்ட இந்தப் பகுதியைச் சோலையாக்கிட முடியுமென்பதை உணர்கிறேன்.
அதே சமயம் அந்த மனிதனின் நம்பிக்கையான கனவு, தொடர்ச்சியான உழைப்பு, இடைவிடா முயற்சி எனக்கு பெருவியப்பாய் இருந்தது.
ஆனால், அந்த அமைதியான உறுதி, தோற்றுவிடாத இலட்சியப் பிடிப்பு, மனத்தின்மை தான் இந்த வரலாற்றுக்கு வெற்றி வாங்கித் தந்திருக்கிறது.
இதுதான் யாருக்கும் அறிமுகமில்லாத அந்த முதுமையான மரம் வளர்த்த மனிதனின் மீது  மதிப்பும் மரியாதையும் கூட்டுகிறது.

(எல்சியர் பூபியர் 1947-ம் ஆண்டு ‘பனான்' என்ற ஊரில் இயற்கை எய்தினார்.
ஒரு பெரிய வேலைத்திட்டத்தை, கடவுளோடு ஒப்பிடக் கூடிய ஒரு படைப்புப் பணியை...
சுற்றுச்சூழல் காப்புச்செயலை மிகச் சரியாக நிறைவேற்றியவரை நினைத்து நினைத்து மனது கொஞ்சம் நெகிழ்கிறது. உங்களுக்கும் அப்படித்தானே...)

நூல் பெயர்: மரம் வளர்த்த  மனிதனின் கதை
பிரெஞ்சு மூலம்: ழான் கியானோ
பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு: ழான் ராபர்ட்ஸ்
ஆங்கில வழி தமிழில்: இதயசீலன், ஆண்ட்டோ
வெளியீடு: ஹாரிசன் மீடியா, 4/1320, காந்தி நகர், தும்பல் (அஞ்சல்),
சேலம்-636 114.
மின்னஞ்சல்: anto_slm@yahoo.com
தொடர்பு எண்: 9787143550

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar