நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

சாதனைப் பெண்களின் கிரீடம் எதுவரை?

Sunday, 10 August 2014 14 கருத்துரைகள்
        (பதினைந்து நாட்களுக்கு முந்தைய தமிழ்ப் பதிப்பு 'தி இந்து' நாளிதழில் பெப்சி இந்திராநூயி பற்றி தாமரை ஒரு பத்தி எழுதி இருந்தார். அதுபற்றிய வாசகர்களின் கருத்துக்களை வரவேற்றது 'தி இந்து'.
       நானும் பங்கேற்றேன். இன்றைய 'தி இந்து'வில் அக்கருத்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. எனக்குத் தோன்றியதை பகிர்ந்தேன். என் மின்னஞ்சலில் அவர்கள் வெட்டியதை  வண்ண எழுத்துக்களாய் நான் ஒட்டி இருக்கிறேன் இப்பதிவில். )

“உன் கிரீடத்தை வீட்டுக்குள் கொண்டு வராதே” - சில வார்த்தைகள்
(தி இந்து-தமிழ்ப்பதிப்பு-ஞாயிறு, ஜுலை-27, 2014, முன்வைத்து )

காலம்காலமாய் ‘வினையே ஆடவர்க்கு உயிர்' என்று கற்பிக்கப்பட்டு வந்ததொரு சமுதாயத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப் படுமளவு ஒரு பெண் முன்னேற்றம் சாத்தியப்பட்டிருக்கிறது என்பதை பெருமையுடன் பார்க்கும் அதே சமயம், ஒரு ஆணின் பரிபூரண சுதந்திரத்தை அடைய இன்னும் பல படிகள் கடக்க வேண்டியிருக்கிறது என்பதையும் ஆமோதிக்கவே வேண்டியிருக்கிறது.


  இச்சம்பவத்தில் இந்திராவின் அம்மா கூறுவது போல், எந்தவொரு பெண்ணும்  தனது இல்லறக் கடமைகளுக்கும் உறவுகளுக்கும் முக்கியத்துவம் குறைக்காமல் தான் இன்னபிற செயல்களில் ஈடுபட வேண்டியதும் அவசியமாகிறது.
இந்திராவின் அம்மாவுக்கு மருமகனிடம் வேலை சொல்வதை விட மகளிடம் உரிமையோடு கேட்க சவுகர்யமாய் இருந்திருக்கிறது. அவ்வளவுதான்.
9.30 வரை அலுவலகப் பணியாற்றும் பெண், ஒருநிமிடம் வாகனத்தில் சென்று வீட்டுக்கான தேவையை செய்ய மலைக்க மாட்டார். அவரின் ஆதங்கமெல்லாம் தன் பதவி உயர்வுக்கான மகிழ்வை வீட்டினரிடம் கண்டவுடனே பகிர்ந்து குதூகலிக்க முடியாமல் போனதாகவே இருக்கும்.

       இரவுப்பணிக்கு சென்று காலை ஏழு மணிக்கு மேல் பத்து கிலோமீட்டர் பயணித்து வீடு வரும் எனது கணவரை நான் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரும்போது ஒரு பாக்கெட் பால் வாங்கி வரப் பணித்திருக்கிறேன். தன் பதவியையோ அந்தஸ்தையோ கெளரவத்தையோ மனதில் கொள்ளாமல் அவரும் வாங்கி வருவது சர்வசாதாரணமாகவே நடப்பது.
ஒரு பெண்ணானவள் எந்நிலையிலும் அகந்தையோ கர்வமோ கொள்வது அவளது இயல்பு வாழ்வைப் பாதிப்புக்குள்ளாக்கும் என்ற கண்ணோட்டத்தில் ஒரு தாயாக மகளுக்கு கொடுக்கும் உபதேசமே ‘உன் கிரீடத்தை வீட்டுக்குள் கொண்டு வராதே'.

         எழுத்தாளர் அ.வெண்ணிலா சிலமாதங்களுக்கு முன் ‘தோழி' பத்திரிகையில் எழுதியதொரு கட்டுரையில் தன் வீட்டுக்கடமைகள் பெரும்பாலானவற்றை தன் தாயார் ஏற்றுக் கொள்வதால் தான் நினைத்த நேரங்களை எழுதுவதற்கும் இன்னபிற ஆக்கங்களுக்கும் உபயோகிக்க  முடிவதாக எழுதியதை வாசித்தேன். பெண்ணுக்கான குடும்பப் பொறுப்புகளின் விடுதலையும் இன்னொரு பெண்ணின் சுமையாகவே இருந்தாக வேண்டியிருக்கிறது என்பதையும் அதில் சுட்டியிருப்பார்.  நானும் நினைத்தேன், அது அவளின் அம்மாவாக இருக்கலாம்; பணிப்பெண்ணாக இருக்கலாம்; மாமியாராகக் கூட இருக்கலாம்!

         எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் வந்தும் இதயத்தின் வேலையை இதயமும், நுரையீரலின் வேலையை நுரையீரலுமே செய்துகொண்டிருக்கிறது! குடும்பம் உயிர்ப்போடிருக்க வேண்டும் என்றால் ஆணை விட பெண் அதிக பளு தூக்கத் தான் வேண்டும். அதற்கான வலுவும் பெற்றவள் தான் பெண்.

நன்றி: 10.08.2014 'தி இந்து' - பெண் இன்று .


இன்றைய நிம்மதி எதில்?

Wednesday, 6 August 2014 8 கருத்துரைகள்

       ‘சந்தால்' பழங்குடியினப் பெண் எழுதிய கவிதையொன்றை அம்பை மொழிபெயர்ப்பில் சமீபத்தில் வாசித்தேன். திருமண வயதை எட்டிய அப்பெண் தன் தந்தையிடம் எப்படிப்பட்ட மணமகனை தனக்காக தேட வேண்டும் என்று சொல்வதாக அமைந்திருக்கும் அந்தக் கவிதை. அம்பையின் வார்த்தைகளில் இதோ அந்தக் கவிதை...

அப்பா,
உன் ஆடுகளை விற்றுத்தான்
நீ என்னைப் பார்க்க வரமுடியும்
என்ற தொலைதூரத்தில்
என்னைக் கட்டிவைக்காதே!

மனிதர்கள் வாழாமல்
கடவுள்கள் மட்டும் வாழும் இடத்தில்
மணம் ஏற்பாடு செய்யாதே!

காடுகள், ஆறுகள், மலைகள் இல்லா ஊரில்
என் திருமணத்தை செய்யாதே!

நிச்சயமாக,  எண்ணங்களை விட வேகமாய்
கார்கள் பறக்கும் இடத்தில்...
உயர்கட்டடங்களும், பெரிய கடைகளும்
உள்ள இடத்தில் வேண்டாம்!

கோழி கூவி பொழுது புலராத,
முற்றமில்லாத வீட்டில்,
சூரியன் மலைகளில் அஸ்தமிப்பதை
கொல்லைப்புறத்திலிருந்து பார்க்க முடியாத வீட்டில்
மாப்பிள்ளை பார்க்காதே!

இதுவரை ஒரு மரம்கூட நடாத
ஒரு பயிர்கூட ஊன்றாத,
மற்றவர்களின் சுமைகளைத் தூக்காத,
‘கை' என்ற வார்த்தையைக் கூட எழுதத் தெரியாதவன்
கைகளில் என்னை ஒப்படைக்காதே!

எனக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்றால்,
நீ காலையில் வந்து அஸ்தமன நேரத்தில்
நடந்தே திரும்பக் கூடிய இடத்தில் செய்துவை!

இங்கே நான் ஆற்றங்கரையில் அழுதால்
அக்கரையில் உன் காதில் கேட்டு
நீ வர வேண்டும்!
________________

என்ன அழகான வீரியமான சிந்தனைகள் அப் பழங்குடியினப் பெண்ணுக்குள்!

(நண்பரின் மகள் வந்திருந்தாள் வீட்டுக்கு. நல்ல படிப்பு; கைநிறைய சம்பளம் வரும் வேலை. 24 வயது.
“அடுத்து, அப்பாவோட  வேலை உனக்கு வரன் பார்க்க வேண்டியது தானா?” என்றேன்.
“இல்ல, ரெண்டு மாசத்தில் வரப்போகும் இண்டர்வியூவில் செலக்ட் ஆகிடுவேன். ஒரு மூணு வருடமாவது அமெரிக்கா போய் சம்பாதித்து வீடு வாங்கிய பிறகுதான் கல்யாணமெல்லாம்...” என்கிறாள்! )

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar