நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

செடி காப்பாத்திடுச்சு...!!

Wednesday, 31 December 2014 6 கருத்துரைகள்


அனைவருக்குமான கொண்டாட்டமாக ஆங்கிலப் புத்தாண்டு துவக்கம்!

ஆன்மீக அன்பர்களுக்கோ வைகுண்ட ஏகாதசி!

எங்க வீடருகே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாள் வெகு உற்சாகமாக இருக்கிறார்.

புல் டோசர் வைத்து நிரவப்பட்ட தெருவின் புதுப் பொலிவு.

புது வண்ணத்தில் கோயில் சுவர்.

தெரு வியாபாரிகள் காலையில் இருந்தே தத்தமது கடை விரிக்க இடங்களை தயார் செய்தபடி இருக்கின்றனர். தின்பண்டங்கள், பெண் குழந்தைகளுக்கான அலங்காரப் பொருட்கள், அவல் பொரி கடலை தள்ளுவண்டிகள், பலவகைக் காய்கறிக் கடைகள், பூசை பொருட்கள், சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள்,   வண்ணக் கோலப் பொடிப் பொதிகள், என ஒரு தற்காலிக அங்காடி உருவாகிக் கொண்டிருக்கின்றது. 

அரை ஆண்டு விடுமுறையில் உடனிருக்கும் அவர்களின் பொடிசுகள் அங்குமிங்கும் ஓட்டம். ஒரு குட்டிப் பையன் பலூன்களை ஊதிக் கட்டிக் கொண்டிருந்த தன் தகப்பனிடம் வேண்டிப் பெற்ற ஒரு மஞ்சள் நிற பலூனை  நீளமானதொரு நூலில் பிணைத்து விளையாடுகிறான். காற்றின் ஓட்டத்தில் பலூனை கீழே விடாமல் தட்டி விளையாடுவதில் இருக்கிறது அவனது கவனம்.

அருகில் ஒரு தள்ளுவண்டியில் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் செய்யத் தேவையான பொருட்கள். காவலுக்கு இன்னொரு பொடியன். இரு பொடியன்களுக்கும் ஆனதொரு இனிய ஒப்பந்தப் படி சிப்ஸ் கடைப் பையனுக்கு  பலூன் விளையாட்டுக்கு வாய்ப்பு வருகிறது . (இவனது அப்பா சிப்ஸ் பொரிக்கத் தொடங்கியதும் தனக்குத் தின்னத் தரும்  சிப்ஸில் பலூன் பையனுக்கும் ஒரு பங்கு)

பலூன் பையன் தள்ளு வண்டியிடம் நின்றாலும் கண்களும் மனசும் தன் பலூன் மேல் தான்.

சிப்ஸ் காரர் பையன் விளையாடும் ஆர்வத்தில் பலூனை ஓங்கித் தட்ட உயர எழும்பிய பலூனை காற்றும் தன்பங்குக்கு அடித்து ஆடுகிறது. பின் தொடர்கிறான் சிறுவன். இரு பொடியன்களையும் திகைப்பூட்டி அருகாமை வேலி மேல் செல்கிறது பலூன். பதறி ஓடும் இருவரையும் ஆசுவாசப் படுத்தும்படி  வேலியினருகில் இருந்த குத்துச் செடியில் தவ்வியது முட்களுக்கு தப்பிய பலூன்.

தாவிப் பிடித்தவன் சொல்கிறான், 'செடி காப்பாத்திடுச்சு டா... செடி காப்பாத்திடுச்சு!'

நம்மையும் காப்பாற்ற இந்த பூமித் தாய் தன் மடி வளர்க்கும் தாவர இனங்கள் பலவற்றைப் பொதித்து  வர இருக்கின்றன இனிவரும் சில பதிவுகள். அவற்றின் தாத்பர்யம் உணவே மருந்தாக. மருந்தே உணவாக.

நலம் பெருக வருக புத்தாண்டே!

'விளையும் பயிர்'

Wednesday, 10 December 2014 10 கருத்துரைகள்
சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தேன். ஊரென்றால் பிறந்த ஊர். குறியாமங்கலம்.

அரசர்கள் காலத்தில் அந்தணர்களுக்கு தானமளிக்கப்பட்ட வகையில் (சதுர்வேதி மங்கலம்) 'குறிக்கப் படாமலே விடப்பட்ட ஊர்' என்ற பொருள் பொதிந்ததோ பெயர்க்காரணம்.... தெரியவில்லை.

புவனகிரியிலிருந்து ஐயப்பன் கோயிலை வளைந்து நெளிந்து சென்றால் இடைப்படும் பெரிய வாய்க்காலைப் பிடித்துக் கொண்டே செல்ல வேண்டியது தான்.  வலப் பக்கம் வாய்க்கால். இடப் பக்கம் வயல்வெளி. கரை புரளும் நீரோட்டமும் பச்சைப் பசேல் நெல் வயல்களும் பயணத்தை சுகமாக்கும்.

பொரி

Friday, 5 December 2014 4 கருத்துரைகள்ஒவ்வொரு பண்டிகைக்கும் நிவேதனம் செய்து உண்ண வேண்டியவை என்றொரு பட்டியல் நம்மிடம் உண்டு.

இன்றைய கார்த்திகை தீபத் திருவிழாவில் பிரதான இடம் வகிக்கிறது அவல் பொரி. அகல் விளக்குகளும் வண்ணக் கோல மாவுப் பொடிகளும் தெருவெங்கும் கூவிச் செல்லும் சிறு தெருவியாபாரிகள் ஓய்வெடுக்க இரவாகிவிடும். கையிருப்பை விற்குமட்டும் நாலு தெரு சுற்றியாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

கடைத்தெருவுக்கு சென்றாலும் நெற்பொரியும், அவல்பொரியும், வெல்லமும், வாழையிலையும், விதவிதமான வடிவங்களில் அகல் விளக்குகளும், வாழைத் தார்களும் தப்படிக்கு ஒன்றாக குவித்து வைக்கப் பட்டு மும்முரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. சரஸ்வதி பூஜையில் முன்னணியில் நின்ற அரிசிப் பொரி இன்று கேட்பாரற்று பட்டாணிக் கடைகளில் ஒரு ஓரமாக ஒதுங்கி இருக்கிறது. வருடமெல்லாம் தேவைப்படும் பூக்காரர்களுக்கும் தனிக் கொண்டாட்டம் தான்.

கெட்டி அவல் பக்குவமாய் தணலில் பொரிக்கப்பட்டு தன்னளவில் பெரிதாகி உள்ளுக்குள் கனமற்றிருப்பது, மனிதன் தன் ஆணவம் கண்மம் மாயை போன்றவற்றை அனுபவ அடுப்பில் அறிவெனும் பெருநெருப்பில் புடமிட்டு மனசும் உடம்பும் கனமற்று இருக்க விழைய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கிறது.

அந்தப் பொரியுடன்  வெல்லப்பாகு, தேங்காய், பொட்டுக்கடலை, ஏலக்காய், எள் எனப் பலவற்றையும் சேர்த்து சுவைகூட்டியபிறகே இறைவனுக்கு படைக்கிறோம். இத்தனையும் சேர்த்து உருண்டையாக்கி அதன் மதிப்பை கூட்டவும் முடிகிற நமக்கு ஒற்றுமையின் மகிமை புரிய வேண்டும். மனிதனும் சக உயிர்கள் மேல் அன்பு, கருணை, இரக்கம், ஈகை போன்றவற்றைக் கைக் கொண்டு உன்னத நிலையடைய முனைய வேண்டுமல்லவா!

தீப ஒளி பரவட்டும் உலகெங்கும் தீமையழித்து...!
தீப ஒளி பரவட்டும் மனசெங்கும் மேன்மையளித்து...!!உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar