நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

சிரித்தெழு

Sunday, 18 October 2015 17 கருத்துரைகள்
"மரம் மாதிரி நிக்கிறியே
மடப்பயலே..."

கோபம் வந்தால் அப்பாவின் வாயிலிருந்து
கட்டாயம் புறப்படும் வசை இது.

பல்லைக் கடித்து கண்களை உருட்டி
தலையில் தலையில் அடித்துக் கொள்வார்.

காலம் போன காலத்தில்
நோய் தின்றது அப்பாவின் வலதுகாலை...

முதலில் சுண்டுவிரல்
தொடர்ந்து
அடியடியாய் அடியடியாய்
அறுத்துதெறிந்து
முடிவில் முழுக்காலும் ஆனது
ஒரு கட்டைக் காலாக.

சிலகாலம் சென்று
உயிர் கழிந்த உடம்பும் கட்டையாக.

எரியூட்டித் திரும்பிய முன்னிரவில்
விளக்கு மாட ஒளியில்
துக்கம் தூண்டியது அனைவருக்கும் ...
அவரது எரியூட்டப்படாத கட்டைக் கால்.

கரும காரியம் முடிந்தவுடன்
கட்டைக் காலில் மண் நிரப்பி
ஒரு பூச்செடி நட்டான்  மடப்பயல்
உயிர்த்துச் சிரித்தார் அப்பா.

மனவோடையில் துள்ளும் முத்தொள்ளாயிரக் காட்சி

Wednesday, 16 September 2015 14 கருத்துரைகள்


பெருந்தகை வளவ.துரையனார் அவர்கள் ‘வலையில் மீன்கள்' என்ற பெயரில் முத்தொள்ளாயிரப் பாடல்கள் சிலவற்றுக்கான தமது நவீன உரை நூலை எமக்கு அனுப்பி இரு மாதங்களுக்கும் மேலாகிறது. செளந்தர சுகனில் தொடர்ந்து இந்நூற்பொதிவுகளை  வாசித்திருக்கிறேன். வாழ்தலின் நெரிசல்களுக்கிடையே ஆசுவாசமடைந்திருக்கிறேன் அவ்வப்போது அதனுள் மூழ்கி.

       சேர-சோழ-பாண்டியர்கள் மூவருக்குமாக மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கியதெனக் கொள்ளப் படினும், நமக்குக் கிடைத்தது கடவுள் வாழ்த்தையும் சேர்த்து 130 பாடல்களே என்ற தகவல் வியப்பளிப்பதே. எழுதியவர், தொகுத்தவர் எதுவும் தெரியாவிடினும், பாடல்களின் நயமும், பொருட்செறிவும் சொல்லழகும் இன்னும் நிலைநிற்கப் போதுமானதாய்!
 
      பழந்தமிழ் இலக்கிய-இலக்கண நூல்களை இன்னமும் உயிர்ப்போடு நம்மிடையே உலா வரச் செய்யும் சிறப்பு உரையாசிரியர்களையே சார்வதாய் உள்ளது. திரு. துரையனாரினுள் ஒளிந்திருக்கும் ஓய்வு பெறாத தமிழாசிரியர் நெஞ்சம் நமக்கு இத்தகு அரிய நூலைக் கையளிக்க வல்லதாய் இருக்கிறது.

அவர்தம் உரைவீச்சை ரசித்து ரசித்துப் பொறாமல் இப்பகிர்வு!

        கிராமத்து அப்பிராணிப் பெண் ஒருத்தியின் ஒற்றைப் பாத்திரப் பேச்சில் நம்மை அவளின் உலகில் உலவச் செய்து, பாடலின் பொருளை உணர வைக்கும் நுட்பம் நூலின் இப்பகுதியை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டியது.  நூலின் முழுமையான  வாசிப்பனுபவத்தை இன்னொரு சமயம் பகிர்வேன்.

‘சன்னலே கண்கள்' என்ற தலைப்பிலான 23ம் மீனின் துள்ளல் (வலையில் மீன்கள் - பக்கம் 98-101)...

“ஏஞ்சாமி என்னையா என்னா ஊருன்னு கேக்குறீங்க?            நல்லப்பரெட்டிப்பாளையம் சாமி! அதுக்குள்ளாறயே மறந்துட்டீங்க, போன வாரம்தான் வந்துருந்தேன். அதான் சாமி, வெசாயக் கெழம, காலை பத்துமணி வண்டி போன ஒடனேயே ஓடி வந்தேனே! அன்னிக்கு இங்க யாரோ அதிகாரி வந்துருக்காங்கன்னு என்னைக் காக்க வெச்சீங்களே!
ஆமாங்க. இப்ப நாபகம் வருதா? எதுக்கு வந்தேன்னா கேட்டுபுட்டீங்க? அதாங்க, நாலாம் வகுப்புல புள்ளய சேர்க்க வந்தேனே... சின்னதா, குள்ளமா, சுருட்டை முடியா இருப்பானே, போய் கூட்டிகிட்டு வரட்டுங்களா? வாணாங்களா, சரி.
அவன் பேரா, முத்தழகுங்க. எங்க ஆத்தா ஊரு சேதாரப்பட்டுல மூணாம்ப்பு முடிச்சாங்க. நல்லாப் படிப்பாங்க. ஊட்டுக்கு வர கடுதாசி எல்லாம் படிச்சுப்புடுவாங்க. அதுசரி; இப்ப எதுக்கு வந்தேன்னு வெசாரிக்கிறீங்களா?
அதாங்க, சரோசா தெரியுமில்ல; ஒங்ககிட்ட அஞ்சுவருசம் முன்னாடி படிச்ச பொண்ணுங்க. என்னா சாமி, நீங்க அத கூட மறந்துட்டிங்க. ஒண்ணுமே ஞாபகம் இல்லீங்களா? பள்ளிக்கூடத்து வெழாவில டான்ஸ் ஆடிச்சே, மைக்குல நல்லா பேசுங்க. நெறய டப்பாலாம் பிரைஸ் குடுத்தீங்களே, ஆங்; அந்தப் பொண்ணுதாங்க. வெளையாட்டுல கூட முன்னாடி நிக்குங்க.
மேலயா, எங்க சாமி படிக்க வைக்கிறது? ஐஸ்கூலு போவணும்; அங்க போனா அப்பறம் காலேசு போணும்னு சொல்லும்; அப்புறம் அதுக்கேத்த புருசன தேடிக் கண்ணாலம் கட்டிக்கணும்; நமக்கு அதெல்லாம் கட்டுப்படியாகுமா?
இப்ப என்னா பண்ணுதுன்னா கேக்கறீங்க; அதையேன்சாமி கேக்கறீங்க; நடுவீரப்பட்டுல கெடக்குதுங்க. ஆமாங்க, புருசன் வூட்டுலதான். அதுக்குள்ளாறயா! நானா கட்டிக் குடுத்தேன்? அது பெரிய கதைங்க.
ஆறு மாசம் முன்னாடி ஆந்திராவுக்கு கரும்பு வெட்டப் போனமா! இந்தப் பொண்ணு சரோசாவை எங்கக் கூட்டிப் போறது? வயசுப் பொண்ணைக் கூட்டிப் போக முடியுமா? போற எடத்துல எங்க பொங்கணுமோ? எங்க தங்கணுமோ? ஆமாம் சாமி, நாங்க ரெண்டு பேரு போனா எப்படியிருந்தாலும் சமாளிச்சுக்கலாம்னு சரோசாவையும் அவ தம்பியையும் எங்க மூத்தாரு ஊட்லதான் உட்டுட்டுப் போனோம்.
அங்க எப்படியும் கரும்பு வெட்டறது ரெண்டு மூணு மாசம் தள்ளுங்க. என்னா ஆச்சுன்னா கேக்கறீங்க, நாங்க அங்க இருக்கறப்ப இங்க சரோசா அறுப்புக்குப் போயிருக்கு. போகுங்க. ஆமா; களை எடுக்கறது, நடவு நடறது எல்லா வேலயும் ஒப்பா செய்யுங்க; எங்க மூத்தாரு அவங்க சம்சாரம் எல்லார் கூடயும் தான் போகும்.
ஆமாம் சாமி; கண்ணுல தண்ணி கலங்குதுங்க; வேலைக்கிப் போகச்சே பண்ருட்டி பக்கத்திலேருந்து ஆளுங்க வேலக்கி வந்துருக்காங்க. அதுல ஒரு புள்ளயாம், காமராசுன்னு பேருங்க. என்னாங்க நீங்க, அதெல்லாம் அந்தக் காலம், மருமவன் பேரச் சொல்லாம இருக்கறது.
நேரமாகுதுங்களா, நானும் என் கொறயச் சொல்லணுங்க. கொஞ்சம் கேட்டுக்குங்க; பண்ருட்டி, நடுவீரப் பட்டு ஆளுங்க கூட எப்படியோ இவளுக்கு நெருங்கிப் பழக்கம் வந்திடுச்சு; அவங்க போறப்ப, ஒருநா இவளும் காமராசு கூடப் போயிட்டா; வெவரம் தெரிஞ்சு எங்க சனங்க போயிப் பார்க்கறச்சே ரெண்டு பேரும் கல்லாணமே கட்டிகிட்டாங்களாம்.
மூணு மாசம் கழிச்சு கரும்புவேல முடிச்சிட்டு நாங்க ரெண்டு பேரும் வந்தமா... ஊர்ப்பூரா ஒரே கதை கதையா சொல்லுது. சிறுக்கி மக இன்னா மாதிரி செஞ்சு புட்டாலும் பெத்த மனசு கேக்குதுங்களா!
மொதல்ல நான் மட்டும் போயி பார்த்துட்டு வந்தேன். அப்புறம் என் ஊட்டுக்காரரும் வந்தாரு. ரெண்டு பேரும் கால்லே உழுந்து மன்னிப்பு கேட்டாங்க. ஆமாங்க. எல்லாம் சரியா வர்ற மாதிரி தான் இருந்துச்சு. நாங்க மூணாவது தடவ போறச்சே கல்லாணந்தாம் முடிஞ்சு போச்சுன்னு கம்முகினு இருக்கீங்க. சீரு செனத்தில்லாம் எப்போன்னு கேக்குறாங்க. ஆமா, மருமவன், அவங்க அம்மாக்காரி, அத்தை எல்லாரும் தான்.
என்னான்னு கேட்டா ஏழு பவுனு நகையாம். சின்ன வண்டியாம், பீரோவாம் ... அடுக்கினே போறாங்க. நானும் என் ஊட்டுக்காரரும் சரிங்க, கொஞ்சம் கொஞ்சமா செய்யறோம்னு சொல்லிட்டு அடுத்த தபா போறச்சே மருமவனுக்கு ஒரு மோதிரம் ஒரு பவுனுல எடுத்துட்டு, சரோசாவுக்கு ரெண்டு பவுனிலே ஒரு சங்கிலியும் போட்டோம். ஒத்துகிட்டாங்களான்னு கேக்கறீங்களா? என்னா கூட்டம் அது? ஒரே ஆட்டம் ஆடிட்டாங்க.
எல்லாம் மொத்தமாத்தான் செய்யணும்; இதென்ன கொஞ்சம் கொஞ்சமா ரவோண்டுன்னு பாக்க உடலீங்க. மூஞ்சியில எறிஞ்சிட்டாங்க. பொண்ணையே பாக்க உடலீங்க. போன மாசம் திருவந்திபுரத்துல எங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு எல்லாரும் வந்திருந்தாங்க. பொண்ணை எங்க கூடப் பேசக் கூடாதுன்னு சட்டதிட்டம் பண்ணி வச்சிட்டாங்களாம். ஆனா என்னை ஆசையா வச்சிருக்காங்கன்னு சொல்லி  அனுப்பிச்சுடுச்சு. இப்ப முழுகாம வேற இருக்குங்க.
அழுவாம எப்படிங்க இருக்க முடியும்? நெனைச்சாலே பதறுதுங்க. எங்க ஊட்டுக்காரரைத் தேத்த முடியலிங்க. என் ரோசா என் ரோசான்னு அவரு உயிர விடறாருங்க. அதெல்லாம் சரி; இப்ப என்னா வெசயம்ன்னு கேக்கறீங்களா?
என்னமோ உதவிக்குழுவாம்; பேங்குல பணம் வாங்கப் போறாங்களாம்; அதுக்கு சரோசா படிச்ச சீட்டு வேணுமாம். எட்டாம் வகுப்பு படிச்ச சீட்டு வேணும் சாமி; அது எங்க சாமி வரும்? நான் தான் இவ்ளோ கதை சொல்றனே! எங்கிட்ட தரலாம்ல... அது கையெழுத்து போடணுமா? நானும் வாங்கலாமா! சரிசாமி! இந்தச் சாக்கிலாவது அதை நீங்க பார்த்து வெசாரிங்களேன்.
அடுத்த வாரம் எங்க ஊர்ல அம்மன் திருவிழாவுக்கு அவசியம் வரும்ங்க. காலையில கோயிலுக்கு வந்துட்டு சாயந்திரம் போயிடும். வெள்ளிக் கெழமைதான். நான் வரச் சொல்றேன். காலையில இங்க வந்து வாங்கிக்கச் சொல்றேன். கொஞ்சம் அன்னிக்கு தயவு பண்ணி குடுங்க சாமி! உங்களுக்குப் புண்ணியமாப் போவும்.
அப்புறம் இன்னொரு வெசயம் சாமி! அது வந்துச்சுன்னா எங்க ஊட்டுக்கு எல்லாம் அனுப்ப மாட்டாங்க. கோயிலுக்குப் போறச்சவோ இல்ல வரச்சவோ எங்க ஊட்டோரமா தெரு சன்னல் பக்கமா போகச் சொல்லுங்க சாமி; நான் பாத்துகிடுதேன். அதுபோதும் சாமி; கண்ணால பார்த்தாலே போதும். தம்பிகிட்ட சொல்லி ஒங்களுக்கு ஞாபகம் மூட்டச் சொல்றேன். வரட்டுங்களா! ஒங்களுக்குக் கோடி புண்ணியம்; நீங்க நல்லா யிருக்கணும்!"

துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப்
பிடியேயான் நின்னை இரப்பல் - கடிகமழ்ந்தார்ச்
சேலேக வண்ணனொடு சேரி புகுதலுமெம்
சாலேகம் சாரா நட
-முத்தொள்ளாயிரம் 50
(துடி- உடுக்கை; தோல்- கேடகம்; நாலுதல்- தொங்குதல்; தூங்குதல்- தொங்குதல்; சேலேகம்- செந்தூரம்; சாலேகம்- சன்னல்)

பாடலின் பொருள்: 

      மன்னன் உலா வரும் போது அவனைக் காண்பதற்காக அவனைத் தாங்கிய யானையிடம் நீ என் வீட்டுச் சன்னல் பக்கமாக நட என்று வேண்டல்.

நூற்பெயர்:      வலையில் மீன்கள்
உரைக்காரர்:  வளவ துரையன்/93676 31228
வெளியீடு:      அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்/94446 40986
பக்கங்கள்:       160
விலை:           ரூ. 100/-

 

சுழலும் 'சுழல்'

Thursday, 3 September 2015 4 கருத்துரைகள்
மதிப்புநிறை தோழர் அவர்களுக்கு,

வணக்கம்.

எனது ‘சுழல்' சிறுகதைத் தொகுப்பு கிருஷ்ணப்ரியா வழியாக ஒரு அருமையான வாசகரை எனக்கு கையளித்துள்ளது.

பசிக்குப் புசிப்பவராக மட்டுமின்றி ரசித்துப் புசிப்பவரென்பதையும் கண்டுகொண்டேன். (‘நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு') பாத்திரப் படைப்பின் காத்திரத்துக்காகவே கேள்விஞானத்தில் கருவாட்டுக் குழம்பைச் சேர்த்த சுத்த சைவம் நான் என்பதையும் அறியவும்.

//இந்தத் தொகுப்பு கதை எழுத மட்டும் நினைத்த நம் படைப்பாளியினுடையதல்ல//

எனது எழுத்தாசான் திரு.பாரதிக்குமாரின் தொடக்கப் பாடமே, ‘நம் படைப்பு சமூக உணர்வோடு, தனிமனித அறங்களை வலியுறுத்துவதாக அமைய வேண்டுமேயன்றி, வெற்றலங்கார ஒப்பனைகள், பயனற்ற சொல் விளையாட்டுகள், தேவையற்ற துதிபாடல்கள் ஆகியவற்றால் பத்தோடு பதினொன்றாக கலந்தழியக் கூடாது' என்பதே. பாடத்தை எந்தளவு என்னால் கைக்கொள்ள முடிந்திருக்கிறது என்பதை தங்களைப் போன்றோரின் கருத்துக்கள் காட்டி நிற்கின்றன.

//எல்லாக் கதைகளின் பாத்திரப் படைப்புகளும் ஒரு இலட்சியத்தோடு அல்லது ஆசையோடு//

இதற்கும் மேற்கண்ட பத்தியின் விளக்கம் பொருந்தும்.

 //தாம் சந்தித்த அல்லது எதிர்ப்பட்ட சூழலில் பெண்கள் என்னவானார்கள்//

தொகுப்புக்கு இது... இதுதான் மிகப் பொருத்தமான ‘ஒற்றை வரி' கணிப்பு!

//‘செளம்யாம்மாதான் நிலாமகளா?'//

இதை விலாவாரியாக சொல்லியாக வேண்டும் நான். படைப்பாளியின் எந்தவொரு படைப்பிலும் அவன் ஏதேனுமோர் பாத்திரத்தில் அல்லது எல்லாப் பாத்திரங்களிலும் ஏதேனுமோர் இடத்தில் ஒளிந்து கொண்டிருப்பது தவிர்க்கவியலாதது. நான் என்னவாக இருக்கிறேனோ அவ்வாறே என் படைப்புகளும் அமைந்து விடுகின்றன. நான் பார்த்ததை, கேட்டதை, உணர்ந்ததை, எனதியல்பைத் தாண்டி எதை எழுதிவிட முடியும் என்னால்? குருடன் யானையைத் தடவியது போல் அவரவர் அறிவுக்கு எட்டியதைக் கொண்டே அடுத்தவருக்கு சுட்டும் நிலை.

மட்டுமின்றி, கதை சொல்லலில் படைப்பாளன் ‘தன்மை'யில் இருப்பது பாத்திரப் படைப்புக்கு பெயரிடும் வேலை குறைவதுடன், வாசிப்பவர் மனதில் ஒரு நம்பகத் தன்மையையும் தரவல்லதாய் பல நேரங்களில் அமைகிறது. இன்னார் கதை என்பதை விட கதையில் நானுமோர் பாத்திரமென்பது வாசிப்பை சுலபமாக்குவதுடன், படைப்பின் கனமும் அதிகரிக்கிறது. எழுதுபவன் நடிகனைப்போல் பாத்திரத்தில் ஒன்றி விடுவதும், பாத்திரமாகவே ஆகி விடுவதும் கதையின் வீரியத்தை வாசிப்பவருள் விதைக்க ஏதுவாகிறது என்று தோன்றுகிறது எனக்கு.

‘செளம்யாம்மா' கதை எனது முதல் கதையும் கூட. ‘யயாதியின் மகள்' கதையில் இருக்கும் சரள நடையும் சொற்செட்டும் தெளிவும் அலைக்கழிப்பற்ற கதைக்கருவும்  கைவராத தொடக்க காலம். ‘பெண் எழுத்தாளர்களுக்கான' கோவை ஞானியின் போட்டிக்காக எழுதப்பட்டது.  (பெண்ணிய சிந்தனை இருக்க வேண்டுமென்ற விதிமுறைக்கு உட்பட்டு)

திரு. பாரதிக்குமார் தூண்டுதலில் எழுதத் துவங்கிய காலம். மனதைப் பாதித்த, நெடுங்காலம் மனதில் தங்கிய ஒரு நிகழ்வை கதைக் கருவாக எடுத்துக் கொள்ளச் சொன்னார். என் நெருங்கிய தோழியொருத்தி பொறியியல் படித்தும் தன் குடும்பத்தோடு ஒரு தலைமுறைக் காலம்  பேச்சுவார்த்தை நின்றுபோன அத்தை மகன் மேல் மையலாகி அவனை மணந்ததையே பெரும் சாதனையாக்கி, ஒரு பெண்குழந்தை பெற்று, மண்ணெண்ணெய் குளித்து மடிந்தும் போனாள்.

இதில் கல்யாணம் செய்தது வரை அறிந்த நான்,  ஊர்ப்பக்கம் போன ஒரு சமயம் அவளின் முடிவு கேள்விப்பட்டேன். அதிலிருந்து பல்லாயிரம் எண்ணச் சிதறல்கள் என் மனதைக் கூறு போட்டுக் கொண்டிருந்தன. அக்கதையில் இதுவொன்றே நிஜம். மீதியெல்லாம் சொந்தக் கற்பனையே. (2003ல்  என் பெண்ணுக்கு 8 வயசு தான்.)
சுகுணாவைக் கடைசியாக ஒருமுறை பார்க்கக் கூட வாய்க்காமல் காலம் கடந்து கேள்விப்பட்ட எனக்கு கதையில் அவளுடம்பை கேட்டுக் காத்திருந்த ‘கற்பனைப் பொழுது' ஒரு பிராயச்சித்தம்.

எல்லாம் தாண்டி, படைப்பினுள் படைப்பாளியைத் தேடுதல் என்பது தேவையா? ‘பயபுள்ள, நல்லாத்தான் எழுதியிருக்கான், யாருலே இவன்?' எனத் தேடுதல் நன்றே. அப்படித்தான் எடுத்துக் கொண்டேன் உங்க தேடலையும் நான். சரிதானே...

//கதைகேட்ட கதையை முன்னோட்டமாக//

இவ்வரிகளும் நிறைவளித்தன. ஏனெனில் பெரும்பாலோர் முன்னுரையை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. வண்ணதாசன் அடிப்பொடியான நாங்கள் நூல் தலைப்பிலிருந்து ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு எழுத்தும் கவனித்துப் படித்து பிறகே  படைப்பினுள் நுழைவது. எங்கள் புத்தகங்களிலும் படைப்பின் மீதான கவனம் போன்றே முன்னுரைக்கும் மெனக்கிட்டு எழுதுவது. நம்ம சாப்பாட்டு மொழியில் சொல்வதானால், நல்ல starters / soup / sweet அல்லது பருப்பு நெய் சாதம் போல். மேலும், ‘பதனிட்டு' என்ற உங்க வார்த்தையையும் (ஒவ்வொன்றையும் நிதானமாகப் பார்த்து மதிப்பிட்டு, பதிவிட்டு, பதனிட்டு,) ஆழ்ந்து புரிந்து மகிழ்ந்தேன்.

//‘எலேய்... திருந்தவே மாட்டீங்களாடா'ன்னு//

ஆண்டுக்காண்டு பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றிய கதைக்கரு தேடிய போது, அன்றும் இன்றும் என்றும் மாறா ஒரு சிக்கலாக திரும்பத் திரும்ப எதிர்கொள்ள வேண்டியதான தீராத தலைவலியாக முன் நின்றது. திருவள்ளுவரும் ‘பிறன்மனை விழையாமை' என்ற அதிகாரமெழுத அவசியமாயிருந்ததல்லவா.  இராமரைப் புகழும் ஒருமொழியல்லவா ‘பிறன்மனை நோக்காப் பேராண்மை'? சிறகை விரிக்கும் கூட்டுப் புழுக்களில் தலைமுறைகள் இடைவெளியில் பெண்கள் எதிர்கொண்ட விதம் பற்றியும் எளியவர்கள் எதையும் எளிதில் கடந்து விட முடிகிறதென்பதையும் தொட முடிந்தது.

சரியோ, தவறோ... எப்படி நிகழ்கிறது என யோசிக்கும் போது துளித்துளியாக பெருகியதுதான் ‘சுழல்'. அடியில் சேறும் சகதியும் வெகு ஆழம் பரவியிருந்தாலும், மேலோட்டமாக ஒரு குமிழாய் சுழன்று கொண்டிருக்கும் இப் புதைசேற்றில் இழுபட்டவர்கள் காரண காரியங்களை சப்பைக் கட்டுகளாக சொல்லிக் கொண்டே அமிழ்ந்தே அதில் அழிந்தே போக வேண்டியாகிறது பல சமயங்களில். முதல் இழுப்பில் சுதாரிப்பவர்கள் இலட்சத்தில் ஒருவராகத் தப்பிக்க வாய்க்கிறது.

முக்கியமாக, எதையும் சரி தவறு என்று அறுதியிட்டுக் கூற யாருக்கும் அதிகாரமில்லை. அவரவர் சந்தர்ப்ப சூழல்களே அதைத் தீர்மானிக்கும் காரணியாகின்றன. சம்பந்தப்பட்டவர்களின் மன அவஸ்தைகளைச் சித்தரிப்பதாகவே தொடர்புடைய இரு கதைகளும் அமைகின்றன.

ஆண்மை என்பது இதிலல்ல என்ற பெரியார் கருத்து ஆணித்தரம். இதை அந்தஸ்தாக, சலுகையாகப் பார்த்த காலமெல்லாம் மலையேறிவிட்டது.

படைப்பாளியின் சிந்தனை வீச்சின் தூரப் பரவல் எவ்வளவாயினும், கதைக் களமும் கதை மாந்தரியல்பும் அவர்தம் அனுபவ அளவேயாகிறது தவிர்க்கவியலாத ஒன்று. வாழ்வியல் பாதையில் மனதை நெருடியவற்றையே படைப்பில் இறக்கி ஆசுவாசப் படுத்திக் கொள்ள முடிகிறது. தான் இருக்கும் பாத்திரத்தின் வடிவைப் பெறும் தண்ணீர் போல.


நாம் நேரில் ஆற அமர பேசும் வாய்ப்பினை எல்லாம் வல்ல பிரபஞ்சப் பேராற்றல் விரைவில் தந்தருள பெருவிருப்போடு இந்தத் தாமதக்காரி இப்போதைக்கு முடிக்கிறேன்.

நன்றி!இன்னொரு அழைப்பு...

Wednesday, 26 August 2015 2 கருத்துரைகள்
நன்றி: நறுமுகை ஜெ ரா.,
              பேரா. வே. நெடுஞ்செழியன்.

எந்தப் பாத்திரம் இவரின் சொந்தப் பாத்திரம்?

Tuesday, 25 August 2015 4 கருத்துரைகள்
(தஞ்சையில் நிகழ்ந்த 'எழுத்தாளி - இரண்டாம் சந்திப்'பில் தோழர் குப்பு வீரமணியின் கடித விமர்சனம் ... 'சுழல்' சிறுகதைத் தொகுப்புக்கு...)

       'சுழல்' படித்தேன். சற்றும் படோபமில்லாமல், ஆற்றொழுக்கான நடையில் சமுதாயத்தைப் பகிர்கிறார் நிலாமகள் . அவர் கதை எழுதவேண்டுமென்று எழுதியதாக நான் உணரவில்லை. மாறாக தாம் சந்தித்த அல்லது எதிர்ப்பட்ட சூழலில் பெண்கள் என்னவானார்கள் என்பதையே சொல்கிறார்.

       கதைகேட்ட கதையை முன்னோட்டமாக சொல்லியிருப்பது, கதை சொல்லும் கலை கைவரப் பெற்றவர் என்பதற்கு பொருத்தமான பின்னணி. தேர்ந்த ரசனை, ஒவ்வொன்றையும் நிதானமாகப் பார்த்து மதிப்பிட்டு, பதிவிட்டு, பதனிட்டு, சுவைபட வழங்குகிறார்.

         ஞானியின் ‘சுடும் நிலவு' தொகுதியில் சிறகை விரிக்கும் கூட்டுப் புழுக்கள் படித்திருக்கிறேன். செம்பா, மஹிமா, பாட்டி... செம்பாவை விலாவாரியாகச் சொல்லி, மஹிமாவுக்கு டிட்டோ போட்டுட்டு... போகிறபோக்கில் பாட்டியின் பூர்வ கதையை ‘நச்'சுன்னு பதிவிட்டு... ‘எலேய்... திருந்தவே மாட்டீங்களாடா'ன்னு கேட்கத் தோணியது.

       ஆனால், தொகுப்பில், அந்த செம்பாவும் சீனிப்பயலும் - சுழலில் முன்கதைப் பாத்திரங்களாகிறார்கள். கொண்டாடி, துணைநின்று, வளர்த்தெடுத்து, வழிநடத்தினால்... ‘நாதியத்தவ'ன்னு சொல்லிடற அந்தத் திமிர்.. ‘ஆண்மை அழியவேண்டும்'னு பெரியார் சுட்டியது இதைத்தான். இன்னும் நிறைய,

        என்னைக் கவர்ந்த சமுதாய உணர்வு மிக்க, மனிதத்தின் மீது கொண்ட மாளாத காதல் கொண்ட படைப்புகளாகவே அடையாளம் காண்கிறேன். குழந்தை அடிமை(2) வேலைக்கு எதிராக வலிவு மிக்க குரல். ஆனால் இவ்வளவு இதமாக தவிர்க்கவே முடியாதபடி பதிவு செய்திருக்கிற நேர்த்திக்கு ஒரு சல்யூட்.

       எல்லாக் கதைகளின் பாத்திரப் படைப்புகளும் ஒரு இலட்சியத்தோடு அல்லது ஆசையோடு படைக்கப்பட்டுள்ளன. கேசவன் சார், பவழமல்லி சங்கரி, பெரியப்பா(சிங்கம்), யயாதியின் மகள் தனா( ரொம்ப சரியா யயாதியை அடையாளம் காட்டியிருக்காங்க; கூடவே ஒரு படிப்பினையும்)

       செளம்யாம்மாதான் நிலாமகளா?
“எல்லாப் பாடங்களையும் கசடறக் கற்றுத் தருகிற இன்றைய கல்வித் திட்டம் வாழ்க்கையின் சூட்சுமங்களை, சூத்திரங்களைப் பிரித்துப் போடவும் விடை காணவும் இளம்பிராயத்தினருக்குக் கற்றுத் தருகிறதா?” என்கிற பொறுப்பு மிக்க வினா.

        காதல் பற்றிய தமது கருத்தைத் தெளிவாக தாய்மைக்குரிய பரிவுடன் சுட்டும் பிறிதொரு படைப்பு ‘தவிப்பு'. விருந்தாளித் தாம்பூலமும் கூட படைப்பாளியின் பாத்திரமாகத் தான் இருக்க வேண்டும். பல இடங்களில் சுழலில் இந்தப் பாத்திரம் வருகிறது.

      கடைசிப் பாடம்... நல்ல பாடம். அவசியம். ட்ரையாம்பக்...  நிலாமகள் பாத்திரமாகப் பரிமளிக்கும் இடங்களாக நானுணர்ந்தவற்றில் இந்தப் பாத்திரமும் அடக்கம்.

       நினைவில் நிலைப்பட்டு விட்ட சிலவற்றைப் பகிர்ந்தேன். இந்தத் தொகுப்பு கதை எழுத மட்டும் நினைத்த நம் படைப்பாளியினுடையதல்ல. சமுதாயப் பற்று மிக்க பொறுப்புணர்வுடனான ஒரு பெண்ணின் எழுத்து. இத்தகைய பெண் எழுத்துக்களே இன்றைய தேவை. மற்றபடி கிராமத்தை அவர் காட்டுகிற விதம், ‘போதும் இங்க கிழிச்சது. புறப்படு கிராமத்துக்கு' என்ற மாதிரியிருந்தாலும், அவர் காட்டுற கிராமம்  சிரமம் தான். நேத்து வச்ச நெத்திலிக் கருவாட்டுக் குழம்பை சுடுசோற்றில் ஊற்றிப் பதமாகக் கலந்து பிசைந்து' என்றது போல ஒரு இடம் அடடா...

ட்ரையாம்பக்... ‘கைமீறிப் போன பலதுக்கும் தயாராய் விழியோரம் கட்டி இருக்கும் துளி ஈரம் மிச்ச மீதி மனிதத்தின் சிறு அடையாளமாய். ‘வேறென்ன கிழிக்க  முடியும்?' ‘ அறச்சீற்றம் எழும்பிக் கையாலாகாத் தனத்தின் மேல் ‘பொத்'தென விழுந்து மடிகிறது.

      இப்படி இடங்கள் அவரது படைப்பு ஆளுமை பளிச்சிடும் தருணங்கள். அவரைப் பாராட்டறதா, கொண்டாடறதா, தெரியல. ரொம்ப நாள் பழகினவங்க மாதிரி உணர்ந்தேன்.

நன்றி: ரொட்டேரியன் திரு. குப்பு வீரமணி, தஞ்சை.

வாய்ப்பிருந்தால் வருக... ! விமர்சன அரங்குக்கு!

Sunday, 16 August 2015 5 கருத்துரைகள்
அழைப்பு வடிவமைப்பு: QUENCH PROFESSIONALS
நன்றி: கிருஷ்ணப்ரியா


மொழியின் அடியாழங்களைத் துழாவியபடி...

Thursday, 13 August 2015 8 கருத்துரைகள்
நிலாமகள் கவிதைகள்
________________________
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

    ' இலகுவானதெல்லாம்  இலேசானதல்ல ' என்ற கவிதைத் தொகுப்பு நிலாமகளின் [ நெய்வேலி ] இரண்டாவது தொகுப்பு. இவர் தன்
சிறுகதைகளையும் தொகுப்பாகத் தந்துள்ளார். இவர் கவிதைகள் கல்கி , யுகமாயினி , காக்கைச் சிறகினிலே , அனுபவம் , நிவேதிதா ,
சங்கு , புதிய ' ' , போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.

   பெண் , தாய்மை அடைந்த பின் சந்திக்கும் கஷ்டத்தைக் கருக்பொருளாகக் கொண்டது 

       ' கொடுந்துயர் ' என்னும் கவிதை. இதில் பிரச்சனையின் வெப்பமே கவிதையை இயக்கும் சக்தியாகியுள்ளது. தாய்ப்பாலை மறக்கச் செய்வது எந்தப் பெண்ணுக்கும் கொடுந்துயரம்தான்.

     கன்றை இழந்த ஆனால் பால் தரும் செவலைப் பசுவின் நிலையும் , அதற்கு நேர் எதிரான தாயின் நிலையும் ஒப்பிடப்படும் தளம் நம்மைச்
சிந்திக்க வைக்கிறது.

கன்றிழந்த தாய்ப் பசுவுக்கு
பால் சுரப்பு நிற்க
மாத்திரை தேடுவதில்லையே நாம்...!
கிடைத்த வரை இலாபமென
உடல் நோவும்
உயிர் நோவும்
சக உயிர்க்கும் சமம் தானே...!
   
------- எல்லோருக்கும் ஒன்றை இக்கவிதை கவனப்படுத்துகிறது. அதுவே வாசகன் மனத்தைக் கனக்கச் செய்துவிடுகிறது.
   
       குழந்தை தூங்குவதே அழகு. அக்காட்சியை இன்னும் அழகுபடுத்துகிறார் நிலாமகள்.

அவள் கைகளுக்குள்
தலையணை உருவில் நான் !
   ------ என்ற வரிகளில் தாய்ப்பாசம் ததும்புகிறது.
    
     ' அசைதலின் பெருவலி ' - சோகத்தை அழுத்தமாப் பதிவு செய்துள்ளது.

தோட்டத்தில்
கிளை பரப்பி நிற்கும்
மாமரப் பொந்தில்
உச்சிப் பொழுதின்
வெம்மையடங்கக் கரையும்
ஒற்றைக் குயிலின் மென் சோகம்....
     
-------' கரையும் ' என்றாலே போதும். ' வெம்மையடங்க ' என்பதால் அணியழகு சேர்ந்துவிட்டது. கவிதையில் அடுத்து வரும் வரிகள் ,
சாவு வீட்டின் ஒற்றை விசும்பலைச் சொல்லி , அத்தோடு மற்றவரின் சோகத்தையும் இணைக்கிறது. அடுத்து வரும் முத்தாய்ப்பு
கவித்துவத்தை உருவாக்குகிறது.

அசைவற்ற மர இலைகளில்
கசிந்து பரவுகிறதென்
வன் சோகம்
    
 ---------- மனத்தின் சோகத்தை மர இலைகளில் இடமாற்றம் செய்வது அசாதாரண பொருட்செறிவை ஏற்படுத்துகிறது இத்தொகுப்பில் இது
முக்கியமானதொரு கவிதை. ' இலைகளால் பேசும் பெருமரம் ' என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளார் நிலாமகள். இயற்கை
நேசத்தில் இவர் லயிக்கும் புள்ளிகள் கவிதைகளாகின்றன
    
     ' செவிக்குணவு '  --- கவிதை , திருவிழாக் கூட்டத்தில் ஊதல் விற்பவனின் நிலை பற்றிப் பேசுகிறது. பிறர் காதுகளைப் பற்றிக்
கவலைப் படாமல் ஊதல் ஊதுவது குழந்தைகள் இயல்பு.

உயர்ந் தோங்கிய
அவனது குழலொலி
எட்டும் செவிகளைப்
பிரகாசமாக்குகிறது

' கேட்டவுடன் மகிழ்தல் ' என்பதைச் செவிகளில் ஏற்படும் பிரகாசம் என்பது வித்தியாசமான அழகான வெளிப்பாடு !
   
      ' திரிபு ' என்ற கவிதை வித்தியாசமான கருப்பொருள் கொண்டது. ஒரு வீடு தகர்த்துப் புதுப்பிக்கப்பட்டுவிட்டது. அவ்வீட்டில் பிறந்த
ஒருவர் அதைச் சென்று பார்க்கிறார். பசுமை நினைவுகள் மலர்கின்றன. அந்த நினைவுகள் யதார்த்தப் போக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அப்பதிவுகளில் காட்சிப்படுத்துதல் நன்றாக அமைந்துள்ளது.

நிலை வாசல் இருபுறமும்
உயர்ந்து பரந்திருக்கும் கல் திண்டு வைத்த
திண்ணைகள் மேல்
உட்கார்ந்தால் ஆடை மீறி ஊடுருவும் குளுமை
   
------ என்ற தொடக்கமே களை கட்டச் செய்துவிடுகிறது.

கொல்லைத் தாழ்வாரத்து
நெல் ஊற வைக்கும் தொட்டியருகே
அம்மாவிடமிருந்து முதன்முதல் நான்
தரை தொட்ட இடம் பார்க்க...
   
 ------ இப்படி வீட்டின் முக்கிய இடங்கள் சுட்டப்படுகின்றன.

தகர்த்துப் புதுப்பிக்கும்முன் 
மற்றுமொரு முறை போயிருக்கலாம்
    
------- என்ற ஏக்கத்தோடு கவிதை முடிகிறது. இது ஒரு நல்ல யதார்த்தக் கவிதையாகும்.
    
     ' பயணத்தடை '  -- பேச்சு நடையில் அமைந்துள்ளது. ஒரு  மூதாட்டியின் , மரணத்திற்காகக் காத்திருத்தல் பற்றிப் பேசுகிறது. மூதாட்டி தன் பிள்ளைகளைக் கவனிக்கச் சரியான ஆள் இல்லையே எனக் கண்ணீர் வடிக்கிறாள். உயிர் பிரிய மறுக்கிறது

      குழந்தையைத் தெய்வமாகப் பார்க்கும் செயல் ஒன்றைப் பதிவு செய்கிறது ' இங்குமிருக்கிறார்.. ' என்ற கவிதை ! கோயிலில் பக்தர்கள் வரிசையில் இது நடக்கிறது.

" அர்ச்சனை நமக்கெல்லாம் செய்ய மாட்டாங்களாம்மா ? " என்று கேட்கிறது ஒரு குழந்தை.

என் கையிலிருந்த பூக்களை
அந்த மழலையின் தலைமேல் தூவிவிட்டு
வரிசை விட்டு வெளியேறினேன்
திருப்தியுடன்
    
------- குழந்தைமையில் இறைமை தரிசனம் வித்தியாசமான அணுகுமுறை. நன்றாகவே இருக்கிறது.
   
     ' இருப்பு நிலைக் குறிப்பு ' கவிதையின் கருப்பொருள் என்ன்வென்று தெளிவாக இல்லை. ஒரு மருத்துவரிடம் ஒருவர் தன் அவஸ்தைகளைப் பட்டியலிடுகிறார். மருத்துவர் மௌனமாகிறார்.

துள்ளும் கன்றைக்
கயிறு கொண்டு கட்டுதல்போல்
எங்களிருவர் நாவை
இழுத்துக் கட்டியது
எல்லாவற்றையும் விஞ்சிய
இறைச் செயல்
     
-------- ' இறைச் செயல் ' என்று சுட்டப்படுவது எது ? நோய்மையா ? விடை தெரியவில்லை.
     
     படம் வரையும் ஆர்வமுள்ள ஒரு குறும்புக் குழந்தையைப் பற்றிப் பேசுகிறது ' குழந்தைகளெல்லாம் குழந்தைகளல்லகவிதை !

     நிலாமகள் கவிதைகள் சராசரிக்கு மேல் உள்ளன. கவிதைகளில் கருப்பொருள் தேர்வு நன்றாக இருக்கிறது. திருப்தியளிக்கிறது.
வெளியீட்டு முறையில் இன்னும் சில படிகள் முன்னேற்றம் தேவை. சிந்தனையைச் சற்றே தீவிரப்படுத்தினால் மொழியின் அடியாழங்களில்
படிந்து கிடக்கும் கவித்துவம் நிச்சயம் தட்டுப்படும். [ வெளியீடு : ஊருணி வாசகர் வட்டம் சென்னை - 600 092 பக்கங்கள் 80 விலை ரூ 70     
செல் 81 48 19 42 72 ]

[ இக்கட்டுரை திண்ணை.காம். இதழில் ஆகஸ்ட்-9, 2015 பிரசுரம் செய்யப் பட்டு உள்ளது. ] 

நன்றி:
திரு ஸ்ரீரங்கம் சௌரிராஜனுக்கும் 
திரு. ரிஷபனுக்கும்....


உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar