நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

'விதி'யாவது... மண்ணாங்கட்டியாவது...

Sunday, 24 May 2015 7 கருத்துரைகள்

அந்தி சாயும் நேரம்.

பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவின் ஒரு 'குளம்' வரை செல்லவிருக்கும் பேருந்து வெளியேறி வேகமெடுத்தது.

பேருந்துக்குள் பெரும்பான்மை மலையாள மொழிக் குரல்கள் அப்போதைக்கப்போது. வாக்மேன்களும், எஃப்.எம்.களும், மெலிதான சத்தத்தில் லேப்டாப் மற்றும் நவீன ரக போன்களில் ஓடும் படங்களும், நகைச்சுவைக் காட்சிகளும் என அவரவர் தீவில் அவரவர்...

பாண்டி எல்லை முடிந்து கடலூர் எல்லை துவக்கத்தில் ஒரு பரிசோதனைச் சாவடி. வண்டியை மறித்து திடுதிடுவென உள்நுழைந்தனர் இரு காவல்துறையினர். எல்லா மின்னணுச் சாதனங்களும் ஓய்ந்தன.

விரைப்பான உடுப்பு. மிடுக்காக இருக்கைகளுக்கு மேல் திணிக்கப் பட்டிருந்த பைகளை ஒவ்வொன்றாய் கவனமாகப் பரிசோதனை செய்யப் பட்டது கடமை தவறாத அவர்களால். பூட்டப் பட்டிருந்த ஒன்றிரண்டு பைகளை திறக்குமாறு உத்தரவு. வம்படியாக ஒரு இளைஞனின் பையைக் கொட்டிக் கவிழ்த்து அவன் வைத்திருந்த ஜூஸ் பாட்டிலை திறந்து முகர்ந்து ஏமாற்றமுடன் அவனிடமே தந்தனர்.(உருமயக்கம்)

விட்டேனா பார் என பின்னிருக்கைப் பயணியின் பையில் மூன்று சரக்கு பாட்டிலைப் பிடித்து விட்டனர். சாவடியில் நின்றபடி பேருந்து சாளரத்தையே பார்த்துக் கொண்டிருந்த  மற்றொரு காவலரும் வேகவேகமாக பேருந்துக்குள் வந்தார்.

'வா' என்ற அவர்களின் ஒற்றைச் சொல்லில் சற்று கூசிப் போய் மிரட்சியுடன் பின் தொடர்ந்த அந்த நவநாகரீகப் பயணியை 'இனம் இனத்தைக் காக்கும்' என்பதாக அடுத்திருந்த இருக்கைச் சேட்டன் தாழ்ந்த குரலில் தப்பிக்கும் மந்திரம் சொல்ல,  இறங்கும் வழியில் வைத்து நடந்த பரிமாற்றத்தில் பயணி திரும்பினார் இருக்கைக்கு.

கையும் பையும் நிறைத்து இறங்கிய அவர்களின் உடுப்பு விறைப்பு இழந்தது பயணிகள் பார்வையில்.

எல்லா மின்னணுச் சாதனங்களும் உயிர் பெற்றன. ஒன்று பாடியது...

"தப்பெல்லாம் தப்பே இல்லே, சரியெல்லாம் சரியே இல்லே... தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லே, தப்பு இல்லே..."

அடப் போங்கப்பா... இதெல்லாம் ஒரு பிழைப்பா...

ஆடுபுலி ஆட்டம்

Thursday, 7 May 2015 9 கருத்துரைகள்
மாலை நேரம்.

மருந்துக் கடையொன்றின் 'பத்துக்கு ஐந்து'  விஸ்தீரண உள்ளறை.
அறுபதைத் தாண்டிய பெண்மணியும் நடுத்தர வயதுப் பெண்ணும் கடை வாசலில் பெறப்பட்ட டோக்கன் சீட்டுடன் உள்ளே நுழைகின்றனர்.

மருத்துவர் (பலதுறைப் படிப்பாளி) நிமிர்ந்து 'சொல்லுங்க' என்கிறார்.

"இரண்டு மாசமா அடிக்கடி சளித் தொந்தரவு. ரெண்டு மூணு டாக்டர் கிட்ட காட்டி மருந்து சாப்பிட்டும் விட்டு விட்டு வருது. இப்ப காலையில எழுந்ததும் சில தும்மல்... விடியற நேரம் கொஞ்சம் வறட்டு இருமல்..."

எதிரில் அமர்ந்த பெரியம்மா சொல்ல, 'ம்...ம்...' என்றபடி ஸ்டெத்-தை தன் காதில் மாட்டி சோதிக்கிறார்.

"வேற ஏதாச்சும் தொந்தரவுக்கு மாத்திரை சாப்பிடுறீங்களா?"

"ஆமா. தினம் ஒரு சுகர் மாத்திரை கூட ஒரு பி.காம்ப்ளக்ஸ்..."

"சுகர் எவ்வளவு நாளா இருக்கு?"

"ஒரு இருபது வருஷமா... "

"சமீபமா எவ்வளவு இருக்குன்னு பார்த்தீங்களா?"

"ஒரு பத்து நாள் முன்னே... நூத்தி இருவது தான் இருக்கு."

மின்னலென உதவியாளர் உடனடி பரிசோதிக்கும் கருவியைக் கொண்டுவந்து பெரியம்மாவின் கைவிரலில் ஊசியால் கீ றி , சொட்டும் இரத்தத்தைக் கருவியில் தடவி பட்டன் அமுக்கி மருத்துவரிடம் காட்டுகிறார். கருவியின் திரையில் 141 என வரவும் மருந்துச் சீட்டில் குறித்துக் கொள்கிறார் மருத்துவர்.

"காலை நீட்டுங்க... வீங்கி இருக்கா? மரத்து போறது, எரிச்சல் ஏதாச்சும் இருக்கா ?"

"அதெல்லாம் இல்லே." கால்களை நீட்டி பாதத்தைக் காட்டியபடி பெரியம்மா.

"ஒன்னுக்கு ரெண்டுக்கு எல்லாம்..."

"ஒரு பிரச்சினையுமில்ல. இந்த தும்மலும் இருமலும் தான் கொஞ்ச நாளா..."

இரத்த அழுத்தப் பரிசோதனைக் கருவியை கையாள்கிறார் மருத்துவர்.

160/100 என சீட்டில் குறித்தபடி, "பிரஷர் கொஞ்சம் இருக்கு. மாத்திரை போடணும். எப்பவாச்சும் மயக்கம், தலைசுத்தல் வருதா?"

"இல்லையே"

" இன்னொரு நாள் இன்னொரு தடவை பார்த்துகிட்டு அப்புறம் மாத்திரை போடத் தொடங்கலாமா...? மத்தபடி ஆக்டிவா தான் இருக்காங்க..." உடன் வந்த பெண்மணி.

"இருவது வருஷமா சுகர் இருக்கறவங்க சுகர் டெஸ்ட் மட்டும் பார்த்துட்டு நல்லா இருக்கோம்னு இருந்துடக் கூடாதும்மா. இதெல்லாமும் அப்பப்ப பார்த்துக்கணும்"

ஒரு துண்டு சீட்டில் 1. E C G ,  2. A B I  என்றெழுதி "எதிர்ல இருக்குற லேப்ல எடுத்துட்டு வாங்க" என்றவர் அடுத்த நோயாளிக்காக மணியடிக்கிறார்.

நெஞ்சு வலியில்ல. மூச்சடைக்கலை. மயக்கம் கூட இல்லை. எதுக்கு ஈ சி ஜி? மிரள்கிறார் பெரியம்மா. அதென்ன ஏ பி ஐ?

பரிசோதிக்கும் பெண்ணிடம் கேட்டுப் பார்க்கிறார்.

"ஈ சி ஜி  நார்மல்.
ஏ பி ஐ ன்னா காலிலேயும் கையிலேயும் இரத்த ஓட்டம் எப்படியிருக்குன்னு பார்க்கறது பெரியம்மா. கொஞ்சம் தான் வித்தியாசம் காட்டுது. டாக்டர் சொல்லுவார் மேற்கொண்டு"

ரூபாய் 450/-ஐக் கட்டணமாகப் பெற்றுக் கொண்டு, ஏ பி ஐ டெஸ்ட் கவர் மூலையில் ரூ.300/- என்று குறித்து தந்துவிட்டு பரிசோதனைக் கூடப் பெண் அடுத்த சோதனைக்கு நிற்பவரிடம் போகிறார்.

மறுபடி டாக்டர்,

ஒரு ஐந்து நாளைக்கு மருந்து எழுதறேன். சுகர் மாத்திரை வேற எழுதியிருக்கேன். திரும்ப வாங்க.

"அப்ப ... இந்த தும்மல், இருமல்..."

"அலர்ஜிக்கும் ஒரு மாத்திரை எழுதியிருக்கேன்."

மருந்துக் கடைக்காரர் மாத்திரைகளை தந்துவிட்டு 550 தாங்க என்றார்.

"டாக்டர் பீசும் சேர்த்து தானே..."

"ஆமா... டாக்டருக்கு 130, சுகர் டெஸ்ட் 60, பாக்கி மாத்திரை."
வராத மயக்கம் வரும் இனி?!
உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar